தொடர்கள்
கதை
திடீர் ம.போ. சுப்புதாத்தா…!   புதுவை  ரா. ரஜனி

2022922012817876.jpg

புதுவை ரா.ரஜினி பாக்கியம் ராமசாமியின் ரசிகர். அவரது தாக்கம் அவரது சுப்புத்தாத்தா கோமுப்பாட்டி சீரீசில் தெரியும்.


2022922013352741.jpg

(ஓவியம் மணி ஶ்ரீகாந்தன், இலங்கை)

போர்வைக்குள் குப்புறப்படுத்துத் தூங்கும் கணவரிடமிருந்து சிலபல ஒலிகள் வந்ததை கோமுபாட்டி கவனித்தாள்.

அது -

நாஸில் பிரச்சினை குறட்டை ஒலியல்ல; ஏதோ செய்தி சொல்லுவதுபோல... உற்றுக் கவனித்தாள்.

"தான் இன்னதுதான் பாவம் செய்கிறோம் என்று அறியாமல் பாவம் செய்யும்

இந்த மகளுக்கு உம் பெலனை அளியும் தகப்பனே...!" - கண்களை மூடி மூடித் திறந்தார் சுப்புதாத்தா.

"உன்னை அப்பான்னு கூப்பிடவா...இல்ல

அம்மான்னு கூப்பிடவா...?" - இப்போது ஆலன்பால் தம்பதியர் தேவகானம் ஒலித்தது.

"லி மரம் பூத்திருக்கிறது; உம் இருதயத்தைப் போலவே...! ஆக இப்படியாக..” - இது சகோதரி கிரேஸியா டால்டன் மாடுலேஷன்!

தூங்கும் பொதியை உலுக்கினாள் பாட்டி.

"அறியாமல் அடியேனை உலுக்கும் இந்த உலுத்தியை உய்விக்க வேண்டும் ஆண்டவரே...!"

சரேலென உறுவினாள் துப்பட்டியை.

"வாட் ஹேப்பண் டு யூ…? எனக்குத் தெரியாமல் ஏதாவது லூட் பண்ணிவிட்டு, மரைகழண்ட நட்ஸ் மாதிரி நடிக்கிறீங்களோ...?"

படுக்கையில் மண்டிப்போட்டு, கைகளை தலைக்குமேல் விரித்து...

"இந்தக் கிழவியை ரட்சிப்பீர் பிதாவே...!" என்று வேண்டியதைப் பார்த்ததும், கோமு

சற்று கலவரமானாள்.

கல்யாணமே இல்லாமல் அனுஷ்கா ஷெட்டி இருக்கலாம்! பிளாஷ் பேக்கின்றி சுப்பு தாத்தா ஏது?

அருள்மிகு மாரியம்மனையே உலுக்கி எழுப்பிவிடும் ஈஸ்வரி பாட்டுகள் சுப்புதாத்தாவுக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், அவள் விடியற்காலைநாலரை மணிக்கே பாடுவது அறவே பிடிக்காது. அந்த மாதிரி மார்கழி மாத விடியல் ஒன்றில் எழுப்பப்பட்ட அவர், காலாற நடந்து...புதிதாகக்கொட்டகைப் போட்டு எழும்பியிருந்த அந்த தேவாலயத்தினுள் நுழைந்து விட்டார். இப்படி அவ்வப்போது சில ஆலயங்களுக்கு அவர்செல்வதுண்டு. பக்தி மார்க்கத்திற்காக அல்ல; பாதிரியார்கள் உபதேசம் செய்வதைக் கேட்பதற்காகவும் அல்ல; சுண்டலும்கொடுப்பதில்லை...அதற்காகவும் அல்ல. இப்படி விட்ட தூக்கத்தை… அமைதியான பிரசங்க ஓசைகளுக்கிடையே தலை தொங்கத் தொடரவேசுப்புதாத்தாவின் விஜயம்!

பள்ளிக்கூடங்களில் சில மக்குப் பயல்கள் ஒரே கிளாஸில் மூன்று வருடங்கள் படிப்பது உண்டே... மூன்று வருடங்களும் ஒரே பாடங்களைக்கேட்டதால், சில சமயம் வாத்தியார் நடத்தும்போதே பாடத்தைச் சொல்லும் மாணவர்கள் உண்டு. அதுபோல நாளொரு சுப்புவும் பொழுதொருபிரசங்கமும் தொடர்ந்து நடைபெற்றதால், தான்

அதிகம் கேட்ட பிரசங்கத்தால், அதிகப் பிரசங்கியாகி...பலசமயம் பாதிரியார் வாக்கியங்களை முடிக்கும் முன்னரே சுப்புதாத்தாவே அந்த வாக்கியங்களைச் சொல்லி, சபையோரை ஆச்சரியப்பட வைத்தார்!

என்றாவது ஒயினில் நனைத்த சில அப்பங்களை (வெண்மையான வட்ட நிலா வேபர்!) தாமும் பெற மாட்டோமா என்ற 'அப்பாசையால்' (அப்ப + ஆசை = அப்பாசை) தாத்தா பிரசங்கங்களை ஏறக்குறைய கற்றுக்கொண்டே விட்டார். அதைவிட, பாதிரியார் சபையை நடத்தும் பாங்கும்அவருக்கு அத்துப்படியாயிற்று.

வெண் தலை, உருட்டும் விழிகள், நீண்ட மூக்கு, ஜிப்பா-வேட்டி...

பார்ப்பதற்கு, ஜெருசலேமிலிருந்து இறக்குமதியான தோற்றம் கொண்டிருந்த தாத்தாவை, ஆலய நிர்வாகிகளுக்கும் மிகவும் பிடித்து விட்டது.

"இதுதான் தேவனின் ஆசீர்வாதம் என்பது. வேற்று மதத்து மனிதரையும் தம்மோடு ஐக்கியப்படுத்திவிடும் மகிமை, தேவனுக்கே உண்டு...!" ஒருதடவை சிறப்பு விருந்தினராக வந்திருந்த ஒரு கிழப் பாதிரியார் சுப்பு தாத்தா முகவாயைத் தடவியவாறே நெகிழ்ந்தார்!

யாருக்குப் பிடித்ததோ இல்லையோ, ஆலயத்திலிருந்த கன்னிகா பரமேஸ்வரிகளுக்கு...மன்னிக்கவும் கன்னிகாஸ்திரிகளுக்குப் பிடித்து விட்டது,பிரதர் சுப்புவை!

"அதிலே பாரூ, எஸ்தர்...நான் சின்ன வயசிலே என் தோஸ்துகளோட அமிஞ்சிகரையிலே பட்டம் விட்டப்போ..." என்று படு காஷுவலாக தாத்தாசகோதரிகளிடம் ஐக்கியமாகிவிட்டார்.

அவர்களுக்கும் ஒரே வானம்...ஒரே பூமி என்பதுபோல ஒரே ஆலயம், ஒரே பாதிரியார், ஒரே சட்டத்திட்டம் என்று போரடித்து விட்டிருந்ததை,சுப்புதாத்தா

என்ற மனிதர் மாற்றோ மாற்று என்று மாற்றிவிட்டிருந்தார்.

ன்று ஒரு நாள் ஆலயத்துள் நுழைந்த பாதிரியார் அதிர்ந்து போனார்!

சுப்பு தாத்தா, சகோதரிகளிடம் தரையில் கோடுகள்போட்டு, ஆடு புலி ஆட்டம் ஆடிக்கொண்டிருந்தார். தாத்தாவைத் தவிர, அனைவரும்திடுக்கிட்டு எழுந்தனர்.

சுப்பு, "பிரதர் நீங்களும் ஒரு கை போடுங்க...!" என்றார்.

கைமீறிப் போய்விட்ட இடத்தில் தானும் சங்கமிப்பதே உசிதம் என்று தீர்மானித்த சாமியார், தானும் கீழே அமர்ந்து ஆடத் தொடங்கிவிட்டார்.

இப்பொழுதெல்லாம் சகோதரிகள் மிகவும் சுறுசுறுப்பாக இயங்குவதை அவரால் மறுக்க முடியவில்லை.

சுப்புதாத்தா, தன் தோஸ்துகள் குண்டுராஜா, ஹாப்பிளேடு கருணா, அப்பாராவ் மற்றும் அவனது பூனையை அனைவருக்கும் அறிமுகப்படுத்திவைத்தார்.

'அனுபவம் என்ற ஒயினை பேரல் பேரல்களாக அருந்தியதைப்போன்று இந்த வயதான அனுபவசாலிக்குத்தான் எத்தனை வகை வகையானநண்பர்கள்!' என்று ஆலயமே ஆச்சரியப்பட்டது!

கோமுபாட்டிக்கு நீண்ட நாளாக ஓர் ஆசை!

சமூக நல்லிணக்கம், தொண்டு, இலவச வைத்தியம், ஆலோசனை

அதே சமயம் மதத்தின் வளர்ச்சியில் மக்களோடு மக்களாக இணைந்து பணியாற்றுவதில் பேர்பெற்று பங்கு வகிப்பதில் இந்த மதம்தான் என்றும்காட்சியளிக்கிறது.

எங்கோ ஓர் அயல் தேசத்திலிருந்து இந்த அமைப்புக்கு, முறையான திட்டம், தொகை வந்துசேர்கிறது. இவற்றை ஒருங்கிணைத்துசமூகப்பணியாற்றுவது அனைவருக்கும் வந்து விடாது.

‘ஐ கேன் ஸ்மெல் எ நைஸ் சிஸ்டம்...ஏன் ‘பாட்டிகள் முன்னேற்றக் கழகம்' இதுபோன்ற அமைப்புகளில் இணைந்து... உதவி செய்யவும் உதவிபெறவும் கூடாது? இப் எவ்ரிதிங் கோஸ் வெல், புவர் ஓல்ட் லேடீஸ் மே கெட் பண உதவி ப்ரம் தோஸ் பாரின் கன்ட்றீஸ்...! எனது தலைமையில்இது நடந்தால்...ஐ மே பீல் பிரவுட்...!'

தங்கள் பிளாட்டுக்கு மிக அருகாமையில்...திடீரென்று உருவான சர்க்கஸ் கூடாரம்போன்று, ஓர் ஆலயமே உருவானது கோமுபாட்டிக்கு

ஆச்சரியத்தை வரவழைத்தது. இருபது, இருபத்திரண்டு பேர் அடிக்கடி திரண்டு, வானத்திலிருந்து தேவனை அழைக்க... வான தூரத்துக்குகூக்குரலிட்டது அவளுக்கு வேடிக்கையாய்ப் படவில்லை.

தெய்வ பக்தி என்பது வரையறை இல்லாதது. பியூபிள் வாண்ட் டு கெட் சம் மிரகிள்...அதற்காக எதை வேண்டுமானலும் செய்யத் தயார்!

ஒருவாரமாக அந்த இடம் நூறு...இருநூறு பக்தர்களைகொண்டு நிரம்பி வழிந்தது. ஆனால், அதற்கு முழுக் காரணம் சுப்புதாத்தா என்பதைஅந்தப் பேதை அறியாள்!

"ராமரோ, கிருஷ்ணரோ, அல்லாவோ, இயேசுவோ...எல்லாரும் சொன்னது என்ன? ரொம்ப்ப சிம்பிள், ஆனா ரொம்ப பெரிய காரியம். அதைசெலுத்துவதுதான் ரொம்ப கஷ்டம். அதான், அன்பு...லவ்வு, பியார்...!” என்று பிரசங்கத்தை சுலபமாகச் செய்தார் சுப்புதாத்தா. அவர் பிரசங்கம்பண்ணும்போது ஒரு துடுக்குக் குழந்தை ரொம்ப அடம் செய்து கொண்டிருந்ததை தாத்தா விரும்பவில்லை. அந்தக் குழந்தையை அருகில்அழைத்து, காதை மிருதுவாக அதே சமயம் வலிக்குமாறு திருகி அழ வைத்தார். பின்னர், ஒரு பாதாம் மிட்டாயை அதற்குக் கொடுத்துஅனுப்பினார்.

"நீங்கள் பலன்...அதாவது பெலன் அடைய ஓரே வழி...கடவுளை மனமுறுக வேண்டுவதுதான். அது எந்தக் கடவுள் என்பது முக்கியமில்லை....!" - இப்போது ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி ஒருவள், ‘வீட்டுக்குப்போய் என்ன சமைப்பது?’ என்று யோசிக்கவே தாத்தாவின் அமுத மொழிகளைச்செவிமடுக்கவில்லை. அவள் பக்கத்திலிருந்த இன்னொரு பெண்ணைவிட்டு குட்டு போட வைத்தார்.

ஆலய சாமியார் அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்று விட்டார்.

ஆனால், சபை தாத்தாவின் நியாயத்தை உணர்ந்து பாராட்டியது.

"இப்பொழுது அனைவருக்குமான பாடல். அமர்ந்துகொண்டே பாடலாம்...!"

அனைவரும் சபை கவிஞர்களும் இசை வல்லுநர்களும் மகிமையோடே உருவாக்கிய தெய்வீகப்பாடல் தோத்திரங்கள் புத்தகத்தை விரிக்க...தாத்தா பாடத் தொடங்கிவிட்டார்:

"புத்தன், இயேசு, காந்தி பிறந்தது

பூமியில் எதற்காக...தோழா

ஏழை நமக்காக...!"

மயங்கி விழுந்த ஆலய பாதிரியாரை யாரோ தண்ணீர் தெளித்து தூக்கிக்கொண்டு போனார்கள்!

அந்த ஆலயத்தை தரிசனம் செய்ய வந்த கோமுபாட்டி திடுக்கிட்டு நின்றாள்.

தேவாலயத்திலிருந்து சினிமா பாட்டுகள்...அதுவும் பழக்கப்பட்ட எங்கேயோ கேட்ட குரல்!

இப்போது நேயர் விருப்பத்தின்படி சுப்புதாத்தா,

"தேவனே என்னைப் பாருங்கள்...

என் பாவங்கள் தம்மை

வாங்கிக் கொள்ளுங்கள்...!" என்று பாடிக் கொண்டிருந்தார்.

'ஆலயக் கொட்டகையை, சினிமாக்கொட்டகையாக மாற்றும் அந்த ஆத்மா...அதுவா...? அதுவேதானா...தட் ஓல்ட் மேன்...?' அறியும் ஆவலில்கோமு உள்ளே நுழைந்து, நடுவே நடந்துவர... சுப்பு அவளைக் கவனித்து விட்டார்.

பாடலை நிறுத்த, “கூட்டம் ஒன்ஸ் மோர்...ஒன்ஸ் மோர்!’ என்றது.

"யாரடி நீ மோகினி...கூறடி என் கண்மணீ...!" தாத்தா ரசிகர்களின் உற்சாகப் பெருக்கால், பொதுவான பாட்டைப் பாட ஆரம்பித்தார், பாட்டியை வரவேற்கும் பொருட்டு.

காட்டுப்பாதையில் கவ்வும் கன்னி வெடியைப் பார்த்தால், எப்படி நடை மாறுமோ, அதுபோல மெல்ல அடியெடுத்துவைத்து, நடுவே கார்னர்நாற்காலியில் அமர்ந்து கொண்டாள் பாட்டி.

தாத்தாவுக்கு உற்சாகம் தொற்றிக் கொண்டது.

'அடியேய் கிழவி, பார்த்தாயா. ஐயாவின் மகுடிக்கு மக்கள் கூட்டம் எப்படி மயங்குகிறது? உனக்காகவே ஒரு பிரத்யேக பிரசங்கம் இப்போது...' என்று

லைட் மியூசிக் ஆர்கெஸ்ட்ரா நடுவே நடந்துகொண்டே இருக்கும் கங்கை அமரன்போல பிரசங்க மேடையில் இரண்டு நடைபோட்டு...மைக்கைப்பிடித்தார்.

“என் அன்பானவர்களே இப்பொழுது ஒரு மனைவியானவள், தொட்டுத் தாலி கட்டிய, மோதிரம் மாட்டிய புருஷனிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று பார்ப்போமா?”

குணசாலியான ஸ்திரீ தன் புருஷனுக்குக் கிரீடமாயிருக்கிறாள்; இலச்சை உண்டுபண்ணுகிறவளோ அவனுக்கு எலும்புருக்கியாயிருக்கிறாள்என்கிறது

நீதிமொழிகள் 12:4…”

மனைவிகளே, கடமைப்படி உங்கள் புருஷர்களுக்கு

ஆண்டவருக்குள் கீழ்ப்படிந்திருங்கள்…!’ - என்கிறது இன்னொரு நீதிமொழி. ஆனால், உலகத்தில் நடப்பது என்ன? புருஷர்களுக்குமனைவிகளிடத்தில் நீதி கிடையாது; நிதியும் - பாக்கெட் மணியும் - ஹ...ஹ...(சிரிக்கிறார்.) கிடையாது. பின்னே எப்படி கடவுள் நம்மிடையேவருவார்? குமரியோ...கிழவியோ...அடக்கம் அமரருள் உய்க்கும்; அடங்காமை...?" என்று நிறுத்தி ஜனங்களைப் பார்க்க, அவர்கள்...

"ஆரிருள் உய்த்துவிடும்...!" என்று கோரஸாகச் சொன்னார்கள்.

உள்ளே - சற்று மயக்கம் தெளிந்த பாதிரியார், திடீரென்று சபையில் திருக்குறள் கேட்டதால், மறுபடியும் மூர்ச்சையானார்!

"நடந்தால் இரண்டடி

இருந்தால் நான்கடி

படுத்தால் ஆறடி போதும்

இந்த நிலமும்

அந்த வானமும்

அது எல்லோர்க்கும் சொந்தம்

அடீ சொல்லடி ஞானப்பெண்ணே...

உண்மை சொல்லடீ ஞானப்பெண்ணே...!" - என்று கிழப் பிரசாந்தாய் மாறிய சுப்புதாத்தா, பாடினார்!

விடுவிடுவென கோமுபாட்டி, ஆலயத்தைவிட்டு வெளியே வந்தாள். மொபைலில் யாரையோ அழைத்தாள்.

“யெஸ்...சர்டென்லி. ஒரு ஆலயத்தையோ, ஒரு மதத்தையோ அந்த கோட்பாடுகளைமீறி வழி நடத்துவது நாகரீகமல்ல; இட் ஈஸ் அன்அட்ரோஷியஸ் திங் ஆல்ஸோ அபவுட் டூ மேக் கம்யூனல் க்ரைஸிஸ் ஜீ…”

“……………………………………..”

“யெஸ் ஐ ஹாவ் எவிடென்ஸஸ். எல்லாவற்றையும் என் மொபைலில் ஆடியோவாகவும் வீடியோவாகவும் போட்டோவாகவும் ரெகார்ட்செய்திருக்கிறேன். அல்ரெடி அட்டாச் செய்து உங்களுக்கு அனுப்பியுள்ளேன் கமிஷனர்ஜி...!”

அடுத்த பத்தாவது நிமிடத்தில், இரண்டு அறநிலையத்துறை அதிகாரிகள், லோக்கல் போலீஸ் ஸ்டேஷனிலிருந்து இன்ஸ்பெக்டர், கான்ஸ்டபிள்கள்சகிதம் ஆலயத்துக்குள் ஆஜராகி, தாத்தாவை நெட்டித்தள்ளாத குறையாக அழைத்து வந்தனர்.

"சர்ச்சிலே சினிமா பாட்டு பாடின ஒரே மன்சன் நீதான்யா...!

பெரீவரே, ஸ்டேஷனுக்கு வந்து ஒரு லெட்டர் எழுதிக் கொடுத்துட்டுப் போங்க...கேஸெல்லாம் போடமாட்டோம். ஏட்டய்யா, பெர்சை நாலைஞ்சுதட்டு தட்டிடாதீங்க...!”

ஜீப் ஓரமாக நின்றிருந்த, கோமுபாட்டிக்கு அதிகாரிகள் சல்யூட் வைத்தனர். கமிஷனரின் முன்னாள் மாஜிஸ்திரேட்டு தோழியல்லவா, அவள்!

தாத்தா, பாட்டியைப் பார்த்து கிழப் பனிக்கரடிமாதிரி உறுமினார்.

"உன் வேலைதானா இது?"

"இன்ஸ்பெக்டர் லிஸன். ‘தேவாலயத்தில் நுழைந்து கலாட்டா செய்த பயித்தியம்’ அது இதுன்னு நியூஸ் வந்துடாம பார்த்துக்குங்க, ப்ளீஸ்...!" என்றாள் கோமுபாட்டி.

The End