தலைவி அழகானவள்..
எழிலான மேனியும் , நிலவை ஒத்த முகமும், ஒளி பொருந்திய கண்களும் அவள் அழகுக்கு அழகு சேர்த்தன. தலைவியைப் பார்க்கும் எவரும் அவள் அழகை வியந்து பாராட்டுவர்..
தோழிக்குத் தன் தலைவியின் அழகில் அதிக பெருமிதம் உண்டு .
ஆனால் எப்போதும் மகிழ்ச்சி பொங்கும் தலைவியின் முகம் பொலிவிழந்ததை தோழி கண்டு பிடித்து விட்டாள். "தலைவியின் வாட்டத்துக்கு காரணத்தை என்னவென்று அவள் திகைத்தாள் .அது பற்றி தலைவியிடமே கேட்க , தலைவி உண்மையைக் கூறுகிறாள்.
நற்சேந்தனர் எழுதிய நற்றிணைப் பாடலில் இந்த நிகழ்ச்சி ஒரு அழகோவியமாக தீட்டப்பட்டுள்ளது .
தோழி தலைவியிடம் ," நுண்ணிய வேலைப்பாடுகள் கொண்ட நகைகளை அணிந்த தலைவியே, எப்போதும் அழகு குன்றாத உன் மேனி பகலில் ஏற்றி வைத்த விளக்கைப் போல ஒளி குறைந்து காணப்படுகிறது .
ராகு என்னும் பாம்பு மறைத்தலால் மங்கிய நிலவைப் போல உன் நெற்றியில் துலங்கும் ஒளி குன்றி விட்டது.
இதற்கான காரணத்தை இன்னும் என்னிடம் கூறவில்லை. ஈருடல் ,ஓருயிர் போல உன்னுடன் நட்பு கொண்டவள் நான் அல்லவா ?
உன் மன வாட்டத்தை நீ என்னிடம் கூறா விட்டாலும் நான் அறிவேன் " என்று கூறுகிறாள்.
தோழி வைக்கும் குற்றச்சாட்டு தலைவியைத் தடுமாற வைக்கிறது .தான் இருக்கும் நிலையைக் கண்டு பிடித்து விட்டாளே என்று அவள் அதிர்ந்தாலும் , உணமையான காரணத்தை உயிர் தோழியிடம் பகிர்ந்துக் கொள்கிறாள், வெளிப்படையாக .
"தோழி , உன்னிடம் மறைத்தேன் என்று நினைக்காதே , இதுதான் நடந்தது .
அன்றொரு நாள் கதிர்கள் முற்றி தலை சாய்ந்த தினைப்புனத்துக்கு காவல் காக்க சென்றேன்.
அப்போது மலர்கள் சூடி , கழல் அணிந்து,மாலை அணிந்த காளை ஒருவன் வந்தான் . என் பின்புறமாக வந்து, குளிர் தென்றலென என் முதுகைத் தழுவிக் கொண்டான்..நான் மெய் மறந்து நின்றேன்..
அந்த நிகழ்ச்சி பற்றியே நான் நினைத்துக் கொண்டு இருக்கிறேன்.அதனால் நான் நோயுற்றவளைப் போல் ஆனேன்.' என்றாள்
தலைவியைப் பற்றி பலவாறாக சிந்தித்துக் கொண்டு குழப்பத்தில் இருக்கும் தோழி தெளிவு பெற்றாள் .
நற்றிணை நடத்தும் இக்குறு நாடகத்தை உள்ளடக்கிய பாடல் இது .
பகல் எரி சுடரின் மேனி சாயவும்
பாம்பு ஊர் மதியின் நுதல் ஒளி கரப்பவும்
எனக்கு நீ உரையாய் ஆயினை நினக்கு யான்
உயிர் பகுத்தன்ன மாண்பினேன் ஆகலின்
அது கண்டிசினால் யானே என்று நனி
அழுதல் ஆன்றிசின் ஆயிழை ஒலி குரல்
ஏனல் காவலின் இடை உற்று ஒருவன்
கண்ணியன் கழலன் தாரன் தண்ணெனச்
சிறு புறம் கவையினனாக அதற்கொண்டு
அதே நினைந்த நெஞ்சமொடு
இது ஆகின்று யான் உற்ற நோயே
(நற்றிணை 128)
இந்த அழகான குறிஞ்சித் திணைப்பாடல் ராகு ,கேது என்னும் பாம்புகள் பற்றுவதால் நிலவில் கிரகணம் ஏற்படுவதாக அந்நாளில் மக்கள் நம்பி இருந்ததைக் காட்டுகிறது .
இன்னுமொரு நல்ல பாடலுடன் அடுத்த வாரம் சந்திப்போம்.
தொடரும்
Leave a comment
Upload