தொடர்கள்
வலையங்கம்
வலையங்கம்

20220810074033844.jpg

விவசாயிகளை கொச்சை படுத்தாதீர்கள்

இலவசங்கள் பற்றிய உச்சநீதிமன்ற வழக்கு நாடு முழுக்க மிகப்பெரிய விவாதத்தை கிளப்பியிருக்கிறது. இலவசம் என்பது பொருளாதார சறுக்கல். மறைமுக வரி சுமை, அரசு கஜானாவில் இருந்து விலை கொடுத்து வாங்கப்படும் பொருள் எப்படி இலவசமாகும் என்ற கேள்விகளெல்லாம் வரத் தொடங்கியிருக்கின்றன.

ஆனாலும் அரசியல் கட்சிகள் இலவச அறிவிப்புகளை இப்போதும் தொடர்ந்து செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். அதுவும் குறிப்பாக அரசியல் கட்சிகள் விவசாயிகள் மீது அவர்கள் காட்டும் கரிசனம், சமீபத்தில் குஜராத் வந்த ராகுல் காந்தி விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் நாங்கள் ஆட்சி அமைத்தால் வழங்குவோம் என்று அறிவித்தார். சில வாரங்களுக்கு முன்பு குஜராத் போன டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவோம் என்று அறிவித்தார். தெலுங்கானா முதல்வர் இன்னும் ஒரு படி மேலே போய் மத்தியில் பாரதிய ஜனதா இல்லாத ஆட்சி அமைத்தால் இந்தியா முழுவதும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் என்று அறிவித்தார். இவை எல்லாமே விவசாயிகள் மீது உள்ள கரிசனத்தோடு அல்லது அக்கறையோடு அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் அல்ல எல்லாமே வாக்கு வங்கி அரசியல் தவிர வேறு ஒன்றும் இல்லை

சமீபத்தில் நெல்லுக்கு குறைந்த விலை அறிவிப்பு மத்திய அரசு வெளியிட்ட போது அது தங்களுக்கு கட்டுப்படியாகும் விலையில் இல்லை என்று விவசாயிகள் சொன்னபோது மத்திய அரசோ மாநில அரசோ அக்கறையுடன் கேட்டுக் கொள்ளவில்லை, இதே நிலைதான் கரும்புக்கு கோதுமைக்கும் அரசு நிர்ணயம் செய்யும் எந்த விலையும் வேளாண் பயிருக்கு கட்டுப்படியான விலை இல்லை என்பதுதான் ஒட்டுமொத்த விவசாயிகளின் ஆதங்கம்.

தேர்தல் நேரத்தில் இது போன்ற இலவச அறிவிப்புகளை வெளியிட்டு விவசாயிகளை கொச்சைப்படுத்தாதீர்கள். அவர்களுக்கு எந்த இலவசம் வேண்டாம் அவர்களின் உற்பத்தி வேளாண் பொருட்களுக்கு நியாயமான விலையை தாருங்கள் அது போதும்.