ஆசியா
மத்திய கிழக்கு
உலகின் மிகப் பெரிய சூரிய சக்தி மின் நிலையம் அபுதாபியில் இருந்து 35 கி.மீ தூரத்தில் அமைகிறது.
இது பல மாதங்களாக தலைப்புச் செய்தியில் இருந்தாலும் இப்போது தான் இதற்கு நிதியுதவி முதலான விஷயங்கள் முடிவாகியிருக்கிறதாம்.
2022ல் இருந்து செயல் படத் துவங்கும் இந்த சூரிய சக்தி மின் நிலையம் 160,000 வீடுகளுக்கு மின்சார சப்ளை செய்ய முடியுமாம்.
சுத்தமான எரிசக்தி என்று சொல்லப்படும் இந்த சூரிய சக்தி மின் நிலையம் செயல்படும் போது கார்பன் எமிஷன் என்று சொல்லப்படும் காற்றின் மாசு குறையும். அதன் அளவை கணக்கிட்டால் சுமார் 4 லட்சத்து 70 ஆயிரம் கார்களை சாலைகளிலிருந்து அப்புறப்படுத்துவதற்கு சமமாம்.
இந்த மின்சக்தி நிலையத்தின் பொருளாதார உதவிகள் குறித்த இறுதி ஒப்பந்தம் இப்போது தான் போடப்பட்டிருக்கிறது. உலகிலேயே சல்லிசான விலையில் சூரிய மின் சக்தி இங்கே தான் உருவாக்கப்படவிருக்கிறது.
சூரிய சக்தி தான் வருங்காலத்தில் நம்மையெல்லாம் காப்பாற்றப் போகிறது. ஒவ்வொரு நாடும் அடிக்கும் வெயிலை வீணாக்காமல் அதை எரிசக்தியாக்குவதே ஒரே வழி.
லூதியானா செல்லும் போது சண்டிகரிலிருந்து செல்லும் நெடுஞ்சாலை அருகே வாய்க்கால் முழுவதும் சூரிய சக்தி பேனல்களால் மூடப்பட்டு மின் சக்தி உருவாக்குவதை கண்டிருக்கிறேன். அது ஒன்று தான் இந்தியா முழுமைக்கும் எரி சக்திக்கு சுளுவான ஒரே வழி.
இந்தோனேசியா
இந்தோனேஷியாவின் பாலி நகரம்.
கடற்கரைகள் சூழ்ந்த அழகான நகரம். இந்த ஊர் கடற்கரைகள் உலகப் பிரசித்தி.
ஏராளமான சுற்றுலா பயணிகள் வரும் கடற்கரைகள் இங்கே உண்டு.
சமீபத்தில் இங்குள்ள பிரச்சினை ஏராளமான பிளாஸ்டிக் குப்பைகள்.
குட்டா, லீஜியன், செமின்யாக் கடற்கரைகளில் இந்த வாரம் மட்டும் 90 டன் அதாவது 90 ஆயிரம் கிலோ பிளாஸ்டிக் குப்பைகள் எடுத்திருக்கிறார்கள்.
இதோடு முடிந்த பாடில்லை. தினமும் 30 ஆயிரம் கிலோ பிளாஸ்டிக் குப்பைகள் சேர்கிறதாம்.
யோசித்துப் பார்த்தால் பிளாஸ்டிக்கை 1869ல் கண்டுபிடித்த ஜான் வெஸ்லீ ஹயாட் தான் முதல் குற்றவாளி.
பில்லியர்ட்ஸ் விளையாட யானைத் தந்தங்களை கொண்டுவருவதில் சிக்கல் ஏற்பட 10,000 டாலர் பரிசு தொகை அதற்கு மாற்று கண்டுபிடிப்பவர்களுக்கு என்ற போட்டியில் வென்றவர் தான் ஜான் வெஸ்லீ ஹயாட்.
இயற்கை பொருட்கள் இல்லாமல் செயற்கை முறையில் ஒரு பொருளை தயாரிக்க முடியும் என்ற வகையில் அது ஒரு புரட்சியாக இருந்தது அன்று.
பின்னர் 1907ல் லியோ பேக்லாண்ட் என்பவர் கண்டுபிடித்த பேக்லைட் தான் இன்றைய மனித குலத்திற்கும் கடல்வாழ் உயிரினங்களுக்கும் எமன்.
அங்கிருந்து துவங்கிய பிளாஸ்டிக் புரட்சி தான் இன்று நமக்கு எதிராக விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. ஒவ்வொரு இரசாயன கம்பெனியும் தங்களுக்கான பிளாஸ்டிக்கை வடிவமைக்க. மக்காத குப்பைகள் மலையாக குவியத் துவங்கியது.
பிளாஸ்டிக்கை இந்த நொடியிலிருந்து தவிர்க்கவில்லை என்றால் விளைவுகள் விபரீதமாகத் தான் இருக்கப் போகிறது.
சீனா
உலகிலேயே மிகப் பிரம்மாண்டமான ரேடியோ டெலஸ்கோப் சீனாவின் குய்ஜோ மாகாணத்தில் இருக்கிறது.
அதன் அகலம் சுமார் 640 அடி. அதன் பெயர் ஃபாஸ்ட் டெலஸ்கோப்.
இந்த வருடம் ஆகஸ்ட் முதல் இந்த ரேடியோ டெலஸ்கோப்பை வெளிநாட்டு விஞ்ஞானிகள் உபயோகப்படுத்திக் கொள்ளலாம் என்று முடிவெடுத்திருக்கிறது சீன அரசு.
இதற்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் 1 முதல் வரவேற்கப்படுகிறது.
சரி இந்த டெலஸ்கோப்பினால் என்ன நன்மை ??
அதாவது வேற்று கிரகங்களில் ஏதேனும் உயிரினம், நம்மை விட அல்லது நம்மைப் போல் புத்திசாலித்தனமாக இருக்கிறதா என்ற தேடலில் இந்த டெலஸ்கோப் உபயோகப்படுமாம்.
2019ல் இந்த டெலஸ்கோப்பை வைத்துக் கொண்டு ஒரு சோதனை செய்து பார்த்திருக்கிறார்கள்.
அதாவது பூமியை விட அளவில் மூன்று மடங்கு இருக்கும் GJ273B என்ற கிரகத்தை மையப்படுத்தி ஒரு ஐந்து நிமிடம் சோதனை நிகழ்த்தியிருக்கிறார்கள். அது ஒன்றும் அதிக தூரமில்லை. பூமியில் இருந்து 12 ஒளி வருட தூரத்தில் தான் இருக்கிறது.
ஒரு ஒளி வருடம் என்பது ஒளி ஒரு வருடத்தில் கடக்கும் தூரம்.
ஒரு கணக்குக்காக ஒரு ஒளி வருடம் என்பது 9.5 டிரில்லியன் கிலோ மீட்டர்கள்.
விண்வெளி மனிதர்கள் 70 கிகா வாட் ஆண்டனாவை வைத்துக் கொண்டு சமிஞ்ஞை அனுப்பினால் சீனாவின் ஃபாஸ்ட் டெலஸ்கோப் பிடித்து கொள்ளுமாம்.
மனிதர்களை விட கொடூரமாக ஏதேனும் ஒரு வேற்றுக் கிரக உயிரினத்தை உசுப்பி விட்டு விட்டு பின்னர் குத்துதே குடையுதே என்று வருத்தப்படாமல் இருந்தால் சரி. ஒரு வேளை அப்படியே கண்டுபிடித்தாலும் அவர்கள் இங்கே வருவதோ அல்லது நாம் அங்கே போவதோ கற்பனையில் கூட நினைத்துப் பார்க்க முடியாத சயன்ஸ் ஃபிக்ஷன். சாத்தியமே இல்லை. (அதாவது இன்றைய தேதிக்கு)
அமெரிக்கா
வாஷிங்டன்
அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு ஆதரவாக வாஷிங்டனிலுள்ள காபிடல் கட்டிடத்தில் ஆதரவாளர்கள் திரண்டிருக்கிறார்கள். அதோடு வன்முறையிலும் ஈடுபட்டுள்ளார்கள்.
அமெரிக்கா என்பது நாகரீகத்தின் உச்சம் என்ற பிம்பம் அங்கு வெள்ளம் வந்த போது, கரோனோ காலத்தில் பொருளாதார பஞ்சம் வந்த போது எப்போதோ உடைந்து போன ஒரு விஷயம். வெள்ளையா இருக்கறவன் பொய் சொல்ல மாட்டான் என்று நம்மூரில் சொல்வது போல, வெள்ளையா இருக்கறவன் அக்கிரமம் பண்ண மாட்டான் என்பதும் பொய்தான். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பிடனை பேசாமல் பதவியில் வைத்து விட்டு விலகாமல், டிரம்ப் செய்யும் அழிச்சாட்டியங்களில் இது முதன்மையானது.
அவரது ஆதரவாளர்களை அவரே தூண்டிவிட்டு விட்டு, இப்போது வன்முறை கைமீறிப் போனதும் கையை பிசைந்து கொண்டு இருப்பது உலக மக்கள் முன்னிலையில் அமெரிக்காவிற்கு தலை குனிவுதான். லோகல் கவுண்சிலர் தேர்தல் கூட இதை விடகொஞ்சம் நாகரீகமாக நடக்கும். 130 கோடி பேர் கொண்ட இந்தியாவில் கூட இப்படிப்பட்ட கூத்து நடப்பதில்லை.
இந்த களேபரத்தில் முன்னாள் விமானப்படையைச் சேர்ந்த ஒரு பெண் மார்பில் குண்டு பாய்ந்து இறந்து போயிருக்கிறார். அவர் டிரம்பின் ஆதரவாளராம். திங்கட்கிழமை கூட அவர் தன்னுடைய டிவீட்டில் எல்லோரும் வாஷிங்டன் வாருங்கள். சூறாவளி அங்கு வந்து கொண்டிருக்கிறது என்று டிவீட்டியிருக்கிறார்.
டிரம்பின் டிவிட்டர் கணக்கும் முகநூல் கணக்கும் தற்காலிகமாக முடக்கப்பட்டிருக்கிறது.
பிடன் டிரம்பை அழைத்து உங்கள் ஆதரவாளர்களை திரும்பப் போகச் சொல்லுங்கள் என்று சொல்லியிருக்கிறார்.
அனேகமாக சிறைக்கு செல்ல டிரம்ப் தனக்குத் தானே ஆப்பு வைத்துக் கொள்ளும் முயற்சி தான் இது என்கிறார்கள் அமெரிக்க அரசியல் பார்வையாளர்கள்.
சோமர்சட் நகரம்.
மாசஷுட்ஸ் மாகாணம். சோமர் சட் நகரம்
திடீரெனெ போலீஸ் அதிகாரி மாட் லிமாவுக்கு ஒரு தொலைபேசி வந்தது.
அங்கிருக்கும் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் இரண்டு பெண்கள் கடையிலிருந்து திருடுவதாக.
உடனே விரைந்தார் மாட் லிமா.
அங்கு போய் விசாரித்ததில் அந்தப் பெண்கள் கரோனா காலத்தில் தங்கள் குடும்ப கஷ்டத்தை சொல்லி அழுதிருக்கார்கள்.அவர்கள் திருடியதாக சொல்லப்பட்ட அத்தனை சாதனங்களையும் பார்த்ததில் அது எல்லாம் சாப்பாடு சமாச்சாரங்கள்.
அந்தப் பெண்கள் சொல்கையில் கிருஸ்துமஸுக்கு ஒரு வேளை நல்ல சாப்பாடு தங்கள் குழந்தைகளுக்கு கொடுப்பதற்காகத்தான் இது போல திருட வேண்டி வந்தது என்று சொல்லி உருகியிருக்கிறார்கள்.
போலீஸ் அதிகாரி லிமா அவர்களுக்கு திருட்டு வழக்கு பதியாமல் உத்தரவின்றி உள்ளே நுழைந்ததாக ஒரு கேஸ் போட்டு அனுப்பினார். அதோடு அந்த கடையில் 250 டாலர்களுக்கு அவர்களுக்கு பரிசு கார்டு வாங்கி வேண்டும் உணவுப் பொருட்கள் வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டு நகர்ந்தார்.
அந்த இரண்டு பெண்களையும் அவர்கள் குழந்தைகளையும் நினைக்கையில் என்னுடைய குழந்தைகள் நினைவுக்கு வந்தனர். அவர்களுக்கு உடனே உதவ எண்ணினேன் என்று சொல்லியிருக்கிறார் லிமா.
உள்ளூர் தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுத்த லிமா இது என்னைப் பற்றி பெரிய விஷயம் இல்லை. ஆனால் நான் அவர்கள் நிலையில் இருந்து யோசித்துப் பார்த்தேன். இவ்வளவு தான் என்னால் செய்ய முடிந்தது என்றிருக்கிறார்.
துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்கள் என்றே பழி சொல்லி கேட்டு அலுத்துப் போன அமெரிக்கன் போலீசில் இப்படி ஒரு மனிதத்தன்மை மிக்க அதிகாரிகளும் இருக்கிறார்கள் என்பதே பெரிய ஆறுதல்.
அதிகாரி மாட் லிமாவுக்கு வலைதளத்தில் பாராட்டு குவிகிறது.
தென்னமெரிக்கா
டொமினிகன் ரிபப்ளிக்
2020 முடிவில் டொமினிகன் ரிபப்ளிக்கில் குழந்தை திருமணம் ஒரு வழியாக தடை செய்யப்பட்டது.
ஆச்சரியமாக இருந்தது இந்த செய்தியைப் பார்த்ததும். இந்த நூற்றாண்டில் இப்படியா ??
டொ.ரிபப்ளிக்கில் 15 வயது முதலே திருமணங்கள் சர்வ சாதாரணமாம். இது வரை.
36 சதவிகிதம் பெண்கள் பதினெட்டு வயதுக்கு முன் திருமணம் புரிந்து கொள்கிறார்கள் அல்லது சேர்ந்து வாழத் துவங்குகிறார்கள்.
இன்னும் 12 சதவிகிதம் பேர்கள் பதினைந்து வயதுக்கும் குறைவானவர்கள். இது மிகப் பெரும் அதிர்ச்சியூட்டும் தகவல்.
டொமினிகன் ரிபப்ளிக்கின் அதிபர் லூயிஸ் அபினாடர் சொல்கையில் லாடின் அமெரிக்காவில் இந்த குழந்தை விவாகத்தில் நம் நாடு தான் முதலில் இருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்ளவே முடியாது என்று தலை குனிந்திருக்கிறார்.
அடப்பாவிகளா. எங்க நாட்டில் ராஜா ராம் மோகன் ராய் நூறு வருசத்துக்கும் முன்னாடியே இந்த வேலையை துவங்கி விட்டார். நீங்க இப்பத் தானா ??? டொ.ரி. சாரி ரொம்ப லேட்டு.
ஆஸ்திரேலியா
நாத்தீகராக இருக்க ஒரு மதம் அனுமதிக்கிறதா ?? இந்து மதத்தில் பிறந்தால் அந்த சுதந்திரம் உண்டு.
ஆனால் ஆஸ்திரேலியாவில் இஸ்லாமியராகப் பிறந்த ஜாரா கே அந்த மத நம்பிக்கையை விட்டு வெளியே வந்து பெண்ணுரிமைக்காக போராடுபவர்.
2018ல் இஸ்லாம் மதத்தை விட்டு வெளியே வந்த பெண்களுக்கு ஆதரவாக ஒரு இயக்கம் துவங்கினார்.
தற்போது ஜாரா கே டான்சானியாவில் கைது செய்யப்படுள்ளார். பெண்ணுரிமை போராளி என்பது ஒரு புறம் இருக்க, போதும் போததாதற்கு டான்சானியா அதிபர் கோவிட்-19 ஐ சரியாக கையாளவில்லை என்ற அவரது சமூக வலைதள பதிவும் இதற்கு காரணம்.
ஜாரா கேவுக்கு ஆதரவாக செயல்படுபவர்கள் டான்சானியா மதச்சார்ப்பற்ற நாடு. உடனடியாக ஜாராவை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.
ஆப்பிரிக்கா
இப்போது தான் கரோனா களேபரம் தடுப்பூசி வந்து ஓரளவு முடிவது போல இருக்க, கோவிட்-19 புதுவடிவம் எடுத்து இன்னொரு பரிமாணம் எடுத்து வலம் வந்து கொண்டிருக்கும் வேளையில், கொடுமை லிஸ்ட் போதாது என்பது போல மலேரியாவும் புதிய வடிவம் எடுத்து வந்துள்ளது ஆப்பிரிக்காவில்.
இன்று பல நாடுகளில் மலேரியா ஒழிக்கப்பட்டு விட்டது. ஆனால் மலேரியாவால் நிகழும் மரணங்களில் 90 விழுக்காடு ஆப்பிரிக்காவில் தான் நடக்கிறது.
ருவாண்டாவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் புதுவிதமான புதுப் பரிமாண மலேரியா வைரசை கண்டுபிடித்திருக்கிறார்கள்.
சாதாரண மலேரியா மருந்துகள் ஓரளவு இதை எதிர்த்து வேலை செய்யும் என்றாலும், மருந்தின் வீரியம் அரைகுறையாக கொடுத்தால் ஆளை கொன்று விடுமாம்.
கரோனாவிற்கு எடுத்துக் கொண்ட எச்சரிக்கைகள் போலவே இந்த புது வகை மலேரியாவுக்கும் நிறைய எச்சரிக்கைகள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
கண்ணுக்கு தெரியாத கரோனா தான் படுத்துகிறது என்றால் தாயா புள்ளையா பழகிய கொசுவுமா ???
ஐரோப்பா
பெல்ஜியம்
பெல்ஜியத்தில் ஒரு முதியோர் இல்லத்தில் இருக்கும் வயதானவர்களை மகிழ்விக்க வந்த கிருஸ்துமஸ் தாத்தா உருவில் அவர்களுக்கு முடிவு வரும் என்று யாருக்குத் தெரியும் ??
ஆங்கில நாடுகளில் அது சாண்டா கிளாஸ். பெல்ஜியத்தில் மட்டும் அது சிண்டர்கிளாஸ்.
சாண்டா கிளாஸ் உருவத்தில் வந்து முதியோர்களுக்கு வாழ்த்து தெரிவிக்க வந்தவருக்கு கரோனா தொற்று இருக்க அந்த முதியோர் இல்லத்தில் இருக்கும் வயதானவர்கள் இது வரை 26 பேர் இறந்து போயுள்ளனர்.
மேலும் 85 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு வேலை செய்யும் 40 பேருக்கும் கரோனா தொற்று தான்.
ஒரேயொரு மனிதன் கரோனா தொற்றுடன் வந்து ஒரே ஒரு முதியோர் இல்லத்தில் இப்படி ஒரு அசம்பாவிதம் ஏற்படுத்த முடியும் என்றால், நூறு சதவிகித இருக்கைகளுடன் மூன்று மணி நேரம் குளிரூட்டப்பட்ட ஒரு சினிமா தியேட்டருக்குள் கரோனா தொற்று இருக்கும் பலர் எத்தகைய விளைவை ஏற்படுத்த முடியும் ????
விளைவுகள் விபரீதமாக இருக்கப் போவது உண்மை.
ராம்
Leave a comment
Upload