தொடர்கள்
Daily Articles
மாண்புமிகு மனிதர்கள்...!. - ஜாசன் (மூத்த பத்திரிகையாளர்)

2021000516510306.jpeg

உயிரோட்டமான உறவுகள்...

நம் வாழ்க்கை முறை நிச்சயம் உறவு முறை சார்ந்தே இருந்து வருகிறது. நாம் மேலைநாட்டு நாகரீகத்தை காப்பியடித்து வாழ்ந்தாலும், உறவுகள் இன்றும் உயிர்ப்புடன் தான் இருக்கிறது. ஆனால் இந்தத் தலைமுறையில், சற்று சந்தேக நிழல் தெரிய ஆரம்பித்திருக்கிறது என்பதும் உண்மை. உறவுமுறை என்பது நமக்கு தேவைப்படுகிறது, ஏன்... கட்டாயம் என்று கூட சொல்லத் தோன்றுகிறது.

என்னுடைய வாழ்க்கை பெரிய வட்டத்தில் இன்றுவரை சுழன்று வருகிறது. எனக்கு மொத்தம் ஐந்து மாமாக்கள். அவர்கள் என் குடும்பத்தை தாங்கு தாங்கு என்று தாங்கினார்கள். அதில் ஒரு மாமா என் சகோதரியை திருமணம் செய்து கொண்டார். எனக்கு எல்லா மாமாக்களையும்பிடிக்கும். அதற்கு ஒவ்வொரு காரணம் இருக்கும், என் கடைசி மாமா படித்துக் கொண்டிருந்தார். அவர் எங்களுக்கு வேர்கடலை, பனை நுங்கு, நாகப்பழம், கமர்கட், பால்கோவா என்று வாங்கித் தந்து குஷி படுத்துவார். அவர் போட்டு வேண்டாம் என்று ஒதுக்கிய சட்டையெல்லாம் எனக்குத்தான். இதேபோல் பேனா, பென்சில், ரப்பர் இப்படிப் பலப்பல... ஏன், அவர் செருப்பு கூட நான் போட்டு பழகியிருக்கிறேன்.

என் இரண்டாவது மாமா... பெரும்பாலும் எங்களையெல்லாம் பள்ளிக்கூடத்தில் சேர்த்தது, அவராகத்தான் இருக்கும். என் பெரிய அண்ணனுக்கு வெள்ளிப் பூண் போட்ட கரும்பலகை வாங்கித் தந்தார். இதை இன்று வரை என் அண்ணன் பெருமையாக சொல்வான். புத்தகம், சணலில் தைத்த அ,ஆ,இ,ஈ எழுதிய பை, பலப்பம் என்று எல்லாம் அவர் தான் வாங்கித் தருவார். நெய்வேலியில் ஒரு மாமா இருந்தார். எனக்கும் என் சகோதரிக்கும் அதுதான் வேடந்தாங்கள். அதற்கு காரணம் உண்டு. வேளாவேளைக்கு நல்ல சாப்பாடு. லீவு முடிந்து வீடு திரும்பும்போது, எனக்கும் என் சகோதரிக்கும் புதிய ஆடை வாங்கித் தருவார், என் அம்மாவிற்கு பணம் தருவார். என்னுடைய எல்லா மாமாக்களும் என் அம்மாவிற்கு பொருளாதார ரீதியாக உதவுவார்கள். என் சகோதரியை திருமணம் செய்த நான்காவது மாமா தான் என் பைனான்சியர். நான் கேட்ட போதெல்லாம் எனக்கு உதவி செய்வார். அதுமட்டுமல்ல... சென்னையில் சபா நாடகங்கள், லைட் மியூசிக், சினிமா இவையெல்லாம் அவர்தான் எனக்கு அறிமுகப்படுத்தினார். நல்ல.. நல்ல ஹோட்டல்களுக்கு எல்லாம் அழைத்து போவார். என் மாமாக்களின் உதவி எல்லாம் பாசத்தின் வெளிப்பாடுகளே தவிர, வேறு ஒன்றும் இல்லை. எந்த மாமாவும், அவர்கள் செய்த உதவியை பெரிதாக பேச மாட்டார்கள். அவர்கள் எங்களுக்கு ஒரு பெரிய பக்கபலம் என்றுதான் சொல்ல வேண்டும்.

எனது இரண்டாவது மாமா, என் பெரிய அண்ணன் ஒரு முறை பாதாம் மரத்தில் ஏறி கையை உடைத்துக் கொண்டு விட்டான்... தூக்கிப் போட்டுக்கொண்டு, பதட்டத்துடன் அவர் ஆஸ்பத்திரிக்கு ஓடியது இப்போதும் என் கண் முன்னால் நிற்கிறது.

இந்தத் தலைமுறை இந்த உறவுகளை எப்படி கொண்டாடுகிறார்கள் என்று என்னால் சொல்ல முடியவில்லை. என்னுடன் தினந்தோறும் ரயிலில் பயணித்த ஒருவர், ஆன்மீகத்தில் அதிக நாட்டம் உடையவர். தனது இரண்டு மகள், மகன் இருவரையும் நன்கு ஆளாக்கினார். திடீரென அவர் இறந்து விட்டார். அதன் பிறகு, இரண்டு சகோதரிகளும் சேர்ந்து அவரது தம்பியை ஒதுக்கி விட்டார்கள். அந்தத் தம்பி, நீங்களும் வேண்டாம் உங்கள் சொத்தும் வேண்டாம் என்று ஒதுங்கிவிட்டார். இப்படியும் சில குடும்ப உறவுகள் இருக்கிறது.

என்னுடன் பணிபுரிந்த சக ஊழியர் ஒருவர், அவர் எந்த முடிவை எடுப்பதற்கு முன்பும், தனது அண்ணனிடம் ஆலோசனை கேட்பார். அவர் சொல்வது சரியா தவறா என்றெல்லாம் யோசிக்க மாட்டார், அண்ணன் சொல்லிவிட்டார் என்று அதன்படி நடப்பார். அதற்கு அவர் சொன்ன காரணம், ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தது. எனது அண்ணனுக்கு, என்னைவிட அனுபவம் கூடுதலாக இருக்கும். எனவே அவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்பது அவர் முடிவு. ஒரு முறை அவர் அண்ணனிடம் ஆலோசனை கேட்க போனபோது, அவருடன் நானும் போனேன். என் நண்பருக்கு மாற்றல் உத்தரவு வந்து விட்டது. இவருடைய மேலதிகாரி, அண்ணனுக்கு வேண்டியவர். ஏற்கனவே இரண்டு முறை மாற்றல் உத்தரவு வந்தபோது, அண்ணனிடம் சொல்லி தான் ரத்து செய்ய வைத்தார். இந்த முறையும் அந்த மாற்றல் உத்தரவை ரத்து செய்யத்தான் அவரிடம் போனார்... அப்போது அவருடைய அண்ணன்... “இல்ல மணி.. இந்த முறை, நீ போய் ஜாயின் பண்ணு.. அதுதான் சரி. ஒவ்வொரு முறையும் மாற்றல் உத்தரவை ரத்து செய்தால், உனது சர்வீஸ் ரெக்கார்டில் அது பதிவாகும். அதாவது, நீ உத்தரவை மதிக்க மாட்டாய் என்று அந்த ரெக்கார்டே ஆதாரமாகிவிடும், நாளை அது உன் பதவி உயர்வை பாதிக்கும்” என்று சொல்லி அனுப்பினார். எனக்கும் அது சரியான முடிவாக தான் பட்டது. என் நண்பன் எதுவும் பேசாமல், அப்படியே செய்கிறேன் என்று எழுந்து வந்தான். வெளியே வந்ததும், அவனிடம் “உன் அண்ணன் சொல்வது சரிதான்” என்றேன். அவனும், அதற்குத்தான் என் அண்ணனிடம் ஆலோசனை கேட்டேன். நானும் அதுதான் சரியென்று முடிவு செய்துவிட்டேன் என்று மாற்றல் உத்தரவை ஏற்று, போய் சேர்ந்தான். சில வருடங்கள் கழித்து பதவி உயர்வு பெற்றான்.

சில சமயம், நாம் எடுக்கும் முடிவுகள் தவறாக இருக்கும். எனவே நம் சொந்தங்கள் அல்லது நண்பர்களிடம் ஆலோசனை கேட்கலாம், அது தவறில்லை. என்னுடைய சின்ன அண்ணன் எதுவாக இருந்தாலும், என்னிடம் பேசுவான். அதற்குக் காரணம், எனக்கு எல்லோரையும் தெரியும் என்பதுதான். இதில் ஈகோவிற்கெல்லாம் வேலை இல்லை. தயக்கம் என்பது நம் முன்னேற்றத்திற்கான முக்கிய தடை. சரியோ, தவறோ நாம் பேசுவது நல்லது. உறவுகளிடம் பேசினால் அது நம் உரிமை என்றாகி விடும். எனவே அங்கு எந்த சங்கடத்திற்கும் வாய்ப்பில்லாமல் போய்விடும். என் சின்ன அண்ணனின் பெரிய மகன் என்னிடம் பேசுவான், என் மனைவியிடம் இன்னும் அதிகமாக பேசுவான். இதேபோல் என் சகோதரிகளின் மகள்கள், என்னிடமும் என் மனைவியிடமும் நிறைய பேசுவார்கள். எனக்கு இரண்டு சகோதரிகள்.. அவர்கள் வீட்டிற்கு போன் செய்தால், பெரும்பாலும் அவர்கள் குழந்தைகள் தான் செல்பேசி எடுப்பார்கள்.. “எப்படி இருக்கீங்க மாமா” என்று முதலில் நலம் விசாரித்துவிட்டு, அதற்குப்பிறகு என் சகோதரியிடம் தருவார்கள். இதை நான் எல்லா முறையும் தொடர்ந்து கவனித்து இருக்கிறேன். இரண்டு சகோதரிகளின் வாரிசுகளும் இந்த நலம் விசாரிப்பு தொடர்வார்கள், இதுதான் உறவுகளின் ஆத்மார்த்தமான வழிபாடு. அது இந்த தலைமுறையில் எத்தனை பேருக்கு இருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை. அதே சமயம் இன்றைய தலைமுறை, நம்மை விட அறிவாளிகள். அவர்களுக்கு எது சரி என்றும் முடிவு எடுக்கச் தெரியும் என்ற நம்பிக்கையும் எனக்கு நிறைய உண்டு.