கருத்தில் கனல், பேச்சில் அனல், கவிதையில் தணல் என என்றைக்கும் மங்காத பாரதியென்ற சுடர் இன்று உதித்த நன்னாள்.
ஆம் இன்று சுபதினம், டிசம்பர் 11.
மூன்று வருடங்களுக்குமுன் ‘எஸ்.எஸ்.எம் கல்விக்குழுமம்’ ஒருங்கிணைத்த பன்னாட்டு தமிழ் ஆய்வுக் கருத்தரங்கத்தில் வழங்கப்பட்ட ஆய்வுகளின் கோவையாக, ‘தமிழ்ச் சுடர்களைப் போற்றுவோம் -பாரதியார் 100‘ என்ற தொகுப்பு மிக நேர்த்தியாக வெளிவந்தது.
இந்த நூலில் எனது கட்டுரை ஒன்றும் ‘ஒரு சிறுவனின் நோக்கில் பாரதி’ என்று சேர்க்கப் பட்டிருந்தது.
இனி கட்டுரை:-
அன்றொரு நாள் மொட்டை மாடியில் படுத்திருந்தேன் பனிரெண்டு வயது பாலகனாக. மங்கியதோர் நிலவினிலே நான் கண்ட கனவு இன்னும் மங்காது நினைவில் இருக்கிறது.
இன்று உங்களுக்கும் அந்தத் திரட்டுப்பால்:-
பாரதியும் திரட்டுப்பாலும்
"நீங்க பாரதியார் தானே?"
நான் தான் கேட்டேன்.
நுணா மரத்தடியில், தன் முழங்கால்களைக் கட்டிக்கொண்டு, முன்னும்பின்னுமாய் உடம்பை ஆட்டியபடி அமர்ந்திருந்தது மஹாகவியே தான்.
அவர் கண்கள் தூரத்து மலைமுகடுகளைத் துழாவியபடி இருந்தன.
"வாடா மோகனம்!" என்று தலையைத் திருப்பாமலே மெல்ல அசைத்து அருகே அழைத்தார்.
அவரை நெருங்குகிறேன்.
என் அம்மா படிய வாரிவிட்ட தலைமுடியை கோதிக் கொள்கிறேன். என் பூப்போட்ட சட்டையின் மூன்றாம் பித்தான் போனவார சண்டையில் தெறித்து விட்டிருந்தது. ஒரு ஊக்கையேனும் குத்திக் கொண்டு வந்திருக்கலாம். வெறும் கால்கள் தான். என் குதியாட்டத்திற்கும் ஓட்டத்திற்கும் செருப்பு சரிப்படாது.
"உட்கார்!"
இடது கையால் அவர் எதிரே தரையைச் சுட்டினார். புலிக் கண்கள்.
"இன்று பள்ளிக்கூடம் போகவில்லையா?"
"இல்லை பாட்டா! பள்ளிக்கூட பெரிய சாமியாருக்கு இன்று பிறந்த நாள். மிட்டாய் கொடுத்து, விடுமுறையும் தந்து விட்டார்கள். ரொம்ப நாளாக இந்த மலைப்பக்கம் வரவேணும் என நினைத்திருந்தேன். இன்று வந்தே விட்டேன்."
"தனியாக ஏன் வந்தாய்? நண்பர்கள் இல்லையா?"
"இருக்கிறார்கள் பாட்டா!
ஆனாலும், சில சமயங்கள் தனியே இருக்கவே பிரியம். எதையேனும் எண்ணிக்கொண்டே மனசுக்குள்ளே மிதக்கிறேன். அது பிடித்திருக்கிறது.
உன் பாடல் சிலவற்றையும் நெட்டுரு போட்டிருக்கிறேன். ' சீதக் களபச் செந்தாமரை' பாட்டும் நீதான் எழுதினாயா பாட்டா?"
பெரிதாக சிரித்துக் கொண்டே இடது கையால் என் தலையைக் கலைத்தார் .
''மக்கு! அது ஔவைப் பாட்டி எழுதின அகவல்."
"அதெல்லாம் எனக்குத் தெரியாது. நல்லாயிருப்பதெல்லாம் உன் பாட்டு தான். எங்கள் வீட்டில் உன் படம் கூட இருக்கிறது. எப்போதும் ஏன் முறைத்துக் கொண்டேயிருக்கிறாய் பாட்டா?"
பாரதி பதில் சொல்லவில்லை. ஏதோ சிந்தனையில் கண்மூடியிருந்தார்.
"போன வருஷம் பாடபுத்தகத்தில் கோயில் யானை தூக்கிப் போட்டதால் செத்துப் போய்விட்டாய் என்று போட்டிருந்ததே? நீயானால் இங்கே குத்துக்கால் போட்டு உட்கார்ந்திருக்கிறாய்!"
"கோயில் யானை என்னோடு விளையாடியது மோகனம்.
“பிறந்தால் இறப்பும் ஒருநாள் வரத்தானே செய்யும்? இருக்கும் நாளில் ஏதேனும் இயன்றதை செய்துவிட்டுப் போவதுதான் நம் பிறப்புக்கே அர்த்தம். இன்று உன்னைப் பார்க்கத்தான் வந்தேன்."
"நான் உன்னைப் பார்த்தேன் என்றால் யாரும் நம்ப மாட்டார்கள். பைத்தியம் போல் உளறுகிறேன் என்பார்களே பாட்டா?"
"மக்கு! நான் இருந்த நாளெல்லாம் பைத்தியம் என்று என்னை ஏகடியம் செய்தவர்களே அதிகம். அதெல்லாம் ஒரு பொருட்டா? என்னைப் பார்த்ததாகச் சொல்லி உனக்கு என்ன ஆகப் போகிறது? உன் தொடர்புகளும் அறிவும் உன் வளர்ச்சிக்காக தெய்வம் தருவது. அதை ஊரெல்லாம் சொல்லி என்ன தேடிக் கொள்ளப் போகிறாய்? இப்படி செய்தாயானால், அப்புறம் உன்னைப் பார்க்க வரவே மாட்டேன்."
"இல்லை பாட்டா! நீ சொன்னபடியே செய்கிறேன். நீ பட்டினியெல்லாம் கிடந்தாயா பாட்டா? அம்மாடியோவ்... என்னால் பட்டினியை நினைத்துப் பார்க்க முடியாது. பசி தாங்காது. ரகளை பண்ணிவிடுவேன். தமிழ்சார், “நீ பட்டினி கிடந்ததாய்” என்று சொன்னபோது ரொம்ப மனசு கஷ்டப் பட்டேன். அடுத்தமுறை உனக்கு ஏதேனும் தின்பதற்கு கொண்டு வரவா?"
"மக்கு! நான் ஒரு சித்தனடா! பசியும் பயமும் எனக்கில்லை. நீ படிக்க நிறையவே எழுதி வைத்திருக்கிறேன். படி! எல்லாவற்றையும் படி! உனக்காக உண்மையாக இரு. ஊருக்காக நல்லதை நினை. முடிந்தால் செய்! போய் வா மோகனம்!"
"எனக்குப் போகவே மனசில்லை பாட்டா! நீ ஏன் என்னோடு வந்து இருக்கக் கூடாது? என் அம்மா சமையலை சாப்பிட்டால் வேறெங்கும் போகவே மாட்டாய். அவ்வளவு ருசியாக சமைப்பாள்.
தாத்தாவோ எவ்வளவோ கதைகள் சொல்வார். வந்துவிடேன் பாட்டா! உன் பாட்டையெல்லாம் மனப்பாடம் செய்து உன்னிடம் தினம் சொல்கிறேன்?"
"நான் வருகிறேன் பிறிதொரு சமயம். இப்போது ஒரு பாட்டைப் பாடிவிட்டு ஓடு!"
'வெள்ளிப் பனிமலை மீதுலாவுவோம். அடி
மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம்..... 'பாடினேன் கீச்கீச்சென்று...
"சபாஷ்! கேட்டதெல்லாம் கிடைக்கும் புண்ணிய பாரதம் இது.
கேள்! நிறைய கேள்! கிடைத்துக் கொண்டே இருக்கும். வெய்யிலேறுகிறது... பாதம் சுடும். வீட்டுக்கு ஓடு. உன் அம்மா உனக்காகத் திரட்டுப்பால் கிளறிக் கொண்டிருக்கிறாள். ஓடு!"
வீட்டுக்கு ஓடினேன். உண்மை தான்! அம்மா திரட்டுப்பால் தான் செய்து வைத்திருக்கிறாள்.
"அம்மா! உனக்கு ஒண்ணு சொல்லவா? இப்போது நான் பாரதியாரைப் பார்த்துவிட்டு வருகிறேன்."
"போடா பித்துக்குளி! பாரதியாரைப் பார்த்தேன்... பிள்ளையாரோடப் பேசினேன்னு கதையடிக்கிறதே உனக்கு வேலையாப் போச்சு. வம்புக்காரத் தொம்பை! இந்தா. சூடா இருக்கு. நிதானமா சாப்பிடு"
அம்மா உள்ளே போனாள்.
'’இந்தா! நீயும் சாப்பிடு பாட்டா!" பாரதி படத்தை நோக்கி திரட்டுப்பாலோடு கைநீட்டினேன். படத்தில் முறைத்துக் கொண்டிருந்த பாரதியோ சாப்பிடவில்லை.
"பாட்டா! நீ சாப்பிடாவிட்டால் என்ன? நீயாகி நானே சாப்பிடுவேன்"
என் முதுகு நிமிர்ந்தது. இல்லாத மீசையை முறுக்கி, கட்டாத தலைப்பாகையையும் சரிசெய்து கொண்டேன். வாயிலிட்ட திரட்டுப்பால் கரைந்தது.
அம்மா இன்னமும் கொஞ்சம் எடுத்துக் கொண்டு வந்தாள்.
"அடி ருக்மணி! இன்று உன் கைவண்ணம் அமிர்தமடீ! மிக ரசித்தோம்! தீர்க்காயுசாக இரு!"
"படவா! என் பேரையா சொல்லிக் கூப்பிடுறே? இன்னமே உனக்கு திரட்டுப் பால் கிடையாது" என்று பொய்க்கோபம் காட்டினாள்.
அவளுக்கு என் பாரதியின் குரல் தெரியாது!
Leave a comment
Upload