தொடர்கள்
கவர் ஸ்டோரி
ஹாங்காங்கில் நடந்து கொண்டிருக்கும் ஒரு கொடூர சவால் ! விகடகவி நேரடி ரிப்போர்ட்.

20250101080502981.jpeg

கொஞ்சம் சினிமா.

20250101081330720.jpeg

சமீபத்தில் ஹாங்காங்கில் Four Trails என்ற ஒரு ஆவணப் படம் ரிலீசாகி ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த ஆவணப் படம் சொல்லும் கதை, ஹாங்காங்கில் இருக்கும் நான்கு மலைத் தொடர்களையும் 72 மணி நேரத்தில் அதாவது 298 கி.மீட்டர்களை 72 மணி நேரத்தில் ஏறி இறங்கி வெற்றி வாகை சூடும் டிரையில் ரன்னர்கள் (மலைப்பாதையில் ஓடுபவர்கள்) பற்றிய கதை.

நான்கு டிரைல்களையும் 60 மணி நேரத்தில் ஓடி முடித்தால் நீங்கள் ஃபினிஷர். 72 மணி நேரத்திற்குள் முடித்தால் “சர்வைவர்”. அதற்கு மேல் ஆனால் நீங்கள் அவுட்.

2021ல் இந்த ஓட்டப் பந்தயத்தில் ஓடியவர்களின் கதை தற்போது ஹாங்காங் திரையரங்குகளில் சினிமாவாக ஓடிக் கொண்டிருக்கிறது. நம்மூரில் யாரும் இந்த மாதிரி படத்தை காசு கொடுத்து பார்க்க மாட்டார்கள்.

இங்கே மலையேறுவதை பொழுது போக்காக கொண்ட மக்கள் இருக்க, பல திரையரங்குகளில் இந்தப் படம் ஓடிக் கொண்டிருக்கிறது.

படத்தின் டிரைலர் இங்கே

இந்த படத்தை இயக்கியவர் ராபின் லீ.

அதென்ன நான்கு டிரைல்கள்.....

கொஞ்சம் பூகோளம்

ஹாங்காங் கான்கிரீட் காடல்ல இயற்கை சூழ்ந்தது என்று பல முறை விகடகவியிலேயே எழுதி விட்டோம்.

இங்கு டிரெக்கிங் எனப்படும் மலையேற்றம் படு பிரபலம். பல உள்ளூர் மக்களின் வார இறுதிகள் மலைசிகரங்களிலேயே கழியும்.

சுருக்கமாக சொல்வதென்றால், ஹாங்காங்கில் முக்கியமான நான்கு மலைத் தொடர் பாதைகள் இருக்கின்றன.

20250101080715786.jpg

20250101080951995.jpeg

மெக்லிஹாஸ் மலைப் பாதை - 100 கி.மீ. 4500 மீட்டர் ( மலைத் தொடர்கள் ஏற்ற இறக்கம்.)

20250101081050542.jpg

வில்சன் மலைப் பாதை - 78 கி.மீ. 3800 மீட்டர்

20250101081110383.jpg

ஹாங்காங் மலைப் பாதை - 50 கி.மீ. 1200 மீட்டர்

20250101081154659.jpeg

லாண்டாவ் மலைப் பாதை - 70 கி.மீ. 3700 மீட்டர்

எல்லா மலைப் பாதையிலும் படிகள் கிடையாது. கரடுமுரடான கற்களும், பாறைகளும் இண்டு இடுக்கில் புகுந்து புறப்படும் மலைப் பாதைகள். படிகள் இருக்கும் மலைகளும் உண்டு. ஆனால் அது கரடுமுரடை விட கடினம்.

இந்த மலைப் பாதைகளில் சாதாரணமாக நடக்கையில் இயல்பாக இருக்கும் மனிதர்களுக்கு, ஒரு மணி நேரத்திற்கு இரண்டு அல்லது மூன்று கிலோமீட்டர்கள் தான் அதிகபட்சம் ஏற முடியும். அதாவது மெக்லிஹாஸ் 100 கி.மீ கடக்க முப்பது மணி நேரத்திற்கும் மேல் ஆகும். இதில் ஓய்வு எடுக்க உணவு உட்கொள்ள என்பதையெல்லாம் சேர்த்தால் 60 மணி நேரமாவது ஆகும். இது ஒரே மூச்சில் நடந்தால். ??

ஆனால் அதற்கு வாய்ப்பேயில்லை. எல்லோராலும் இப்படி தொடர்ச்சியாக ஏறி இறங்கி ஏற முடியாது.

நான்கு மலைப் பாதைகளிலும் இது தான் நிலைமை. இதில் பல சிகரங்கள் முழங்காலை பதம் பார்த்து விடும். அத்தனை கஷ்டம். (ஒரு சின்ன உதாரணத்திற்கு 28 கி.மீ நடந்து கடப்பதற்கு எங்கள் குழுவிற்கு 5 மணி நேரம் ஆனது.)

இனி அந்த அசுர சவால்….

ஒவ்வொரு ஆண்டும் சீனப் புத்தாண்டின் போது மூன்று நாட்கள் நடக்கும் இந்த அசுர சவால் இந்த வருடம் சினிமா வந்த புண்ணியத்தில் ஹாங்காங் மக்கள் அனைவரின் எதிர்பார்ப்போடு நடந்து வருகிறது.

விகடகவியில் சனிக்கிழமை காலை இந்த கட்டுரை வலையேறும் போது இன்னமும் இந்த சவாலில் மலையோட்டப் பந்தய வீரர்கள் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். மொத்தம் 15 பேர். அதில் சிலர் முடியவில்லை என்று விலகி விட்டனர்.

20250101081710839.jpeg

ஓட்டம் துவங்கும் அன்று வியாழக்கிழமை 9.44 மணி இரவு விகடகவிக்காக நேரடியாக பந்தயம் துவங்கும் இடத்திற்கு ஆஜரானோம்.

20250101081841447.jpeg

(சவால் துவங்குமுன் சில வீரர்களோடு... நட்ட நடுவில் இருப்பவர் தான் நூகோ யமனந்த் லிம்போ. ஏழாம் எண் தாங்கிய நேபாளத்தை சேர்ந்த வீரர். முதலில் வந்து கொண்டிருக்கிறார்.)

அதென்ன 9.44 இரவு துவக்கம். ஏன் காலையில் இல்லை ??

இந்த பந்தயத்தை நடத்தும் ஆண்ட்ரேவிடம் பேசினோம்.

20250101082127223.jpeg

கே : அதென்ன 9.44 மணி இரவு துவக்கம் ??

பதில் : அதாவது சென்ற ஆண்டு வரை ஓட்டப்பந்தயம் எத்தனை மணிக்கு துவங்கும் என்று 12 மணி நேரம் முன்பு சொல்லுவோம். இந்த ஆண்டு அதை ஆறு மணி நேரமாக மாற்றி விட்டோம். அதாவது வீரர்கள் எந்த நேரத்திற்கும் தயாராக இருக்க வேண்டும் என்ற சவால் தான். ஒரு வித்தயாசத்திற்காக சென்ற ஆண்டு போட்டி 9.44 காலை துவங்கியது. இந்த முறை இரவு. சிறப்பு காரணங்கள் எதுவும் இல்லை.

கே: வேறென்ன விதிமுறைகள் ??

பதில்: எந்த விதமான ஃபிட்னஸ் வாட்சும் கட்டக் கூடாது. ஏனெனில் அது நேரத்தை தவிர தேவையில்லாத விஷயங்களை தான் தருகிறது. அது போலவே தான் மியூசிக் கேட்பது. இது வீரர்களின் பாதுகாப்பை கருதி தான். எந்த வித இசையும் கேட்காமல் தான் மலையோட்டம் இருக்க வேண்டும். அது போலவே வெளியாட்கள் யாரும் வீரர்களுக்கு உதவி செய்யக் கூடாது. அவர்களுடன் ஓடக் கூடாது. தனியே தான் ஓட வேண்டும். முதலில் துவங்கும் மெக்லிஹாஸ் மலைப் பாதையை முடிக்க 18 மணி நேரம் கெடு. இப்படி பல விதிகள் இருக்கிறது.

கே: எப்படி தேர்ந்தெடுக்கிறீர்கள் வீரர்களை ??

பதில்: இதற்காக விண்ணப்பிப்பவர்களை தேர்ந்தெடுக்க ஒரு சிஸ்டம் வைத்திருக்கிறோம். அவர்களது மலையோட்ட ரிக்கார்டுகளைப் பார்க்கிறோம். நிறைய பேர் விண்ணப்பித்தாலும் 18 பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

கே: இதை பெரிய அளவில் விளம்பரப்படுத்துவதில்லையே ஏன் ??

பதில் : இதை கமரிஷியலாக நடக்கும் ஓட்டப்பந்தயம் போல இல்லை. இது இயற்கையை ரசிக்க, அதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு பந்தயம். சவால். இது சாதாரணமான ஆட்களுக்கானது அல்ல. இதை ஒரு ப்ரொஃபஷனல் ஓட்டப் பந்தய வீரர்களுக்கானது. இவர்களின் கேரக்டர் தனி. இதை பெரிய அளவு விளம்பரப்படுத்தி, மக்களை கூட்டி இதன் புனிதத்துவத்தை கலைக்க கூடாது என்பது தான் எங்கள் எண்ணம். அதை அப்படியே தான் தொடர்ந்து நடத்தவிருக்கிறோம்.

சினிமாவில் வந்தது போலத்தான்.

இந்த பதினைந்து வீரர்களும் வியாழக்கிழமை மாலை 9.44 மணிக்கு ஓடத் துவங்கி 60 மணி நேரத்தில் லாண்டாவ் மலைப்பாதையில் ஓடி முடித்தால் வெற்றி பெற்றவர்கள். 72 மணி நேரத்தில் முடித்தால் சர்வைவர்கள் என்ற பட்டம் கிடைக்கும். அதையும் தாண்டினால் ஒன்றும் கிடைக்காது.

ஒவ்வொரு மலைப்பாதையும் அருகருகே இல்லை. அந்த இடைப்பட்ட தூரத்தை மெட்ரோ ரயிலில் கடக்க வேண்டும். அது போலவே லாண்டாவ் என்பது ஒரு தீவு. அங்கு செல்ல சென்ட்ரல் என்ற இடத்திலிருந்து படகில் சென்று ஓட்டத்தை துவக்க வேண்டும். இடையிடையே தூங்கினால் அதுவும் இந்த 72 மணி நேர கெடுவில் தான் சேரும்.

நிம்மதியாக தூங்க முடியாது.

வீரர்கள் ஓட்டத்தை துவங்கும் முன் அவர்கள் நண்பர்கள், குடும்பத்தினர் மட்டுமே இருந்தார்கள். அவர்களுடன் உற்சாகப்படுத்த நாமும் கலந்து கொண்டோம்.

20250101082445517.jpeg

அது போல அடுத்த நாள் நண்பகல் நாகு யமனந்த் லிம்போ என்ற நேபாள வீரர் 9.44 மணிக்கு மெக்லிஹாஸ் மலைப்பாதை ஓடத் துவங்கி அதை முடித்து வில்சன் மலைபாதையில் வரும் போது மூச்சுப் பிடிக்க மலையேறி அவரை சில விநாடிகளே எங்களால் உற்சாகப்படுத்த முடிந்தது.

இந்த மலையோட்டம் நம்மை போன்ற சாதாரண மனிதர்களால் முடியாத விஷயம். அசுரத்தனமான யத்தனம் தேவைப்படும். தூங்காமல் தொடர்ந்து ஓடிக் கொண்டே இருக்க வேண்டும். சாதாரண ஓட்டம் அல்ல. சுமார் 14000 மீட்டர்கள் ஏறி இறங்க வேண்டும். இது எவரெஸ்ட் மலையை இரண்டு முறை ஏறுவதற்கு சமம். என்ன ஒன்று அந்த பனி இருக்காது. வானிலை கொஞ்சம் சாதகமாக இருக்கும்.

மற்றபடி மெக்லிஹாஸ் மலைப்பாதையை 11 மணி நேரத்திற்குள் அல்லது 13 மணி நேரத்திற்குள் ஏறுவது என்பது வாயில் நுரை தப்பும் செயல். செம ஃபிட்டாக இருக்கும் பேர்வழிகள் மட்டும் தான் இந்த ஆட்டைக்குள் நுழைய முடியும்.

இந்தியர்கள் யாரும் இந்த வருடம் இந்த பந்தயத்தில் இல்லை. சென்ற பந்தயங்களில் இருந்திருக்கிறார்கள். விசாரித்து ஒரு விசை எழுதுவோம்.

20250101082701248.jpeg

லிம்போவை வில்சன் மலைப்பாதையில் பார்த்தது போல, கிம்மி லூங் ஹாங் என்ற வீராங்கனையும் உற்சாகப்படுத்த ஹாங்காங் மலைப்பாதையில் காத்திருந்தோம். ஒரு சமயம் சந்தேகம் வந்து விட்டது. அது கிம்மி தானா என்று. ஏனெனில் சுமார் 210 கி.மீ ஓடி விட்டு வந்து கொண்டிருந்த கிம்மியைப் பார்த்தால் அத்தனை ஃபிரெஷ்ஷாக இருந்தார்.

20250101082944248.jpeg

இந்த மலைப் பாதை ஓட்ட சவாலின் போது அவர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொள்வதோ அல்லது அவர்களை தொந்தரவு செய்வதோ, அவர்களுக்கு குளிர்பானம் அல்லது பழங்கள் கொடுப்பதோ அவர்களை ஆட்டத்திலிருந்து தகுதி நீக்கம் செய்ய விழையும் அளவு தவறான செயல்.

(வீரர்களின் நிலையை லைவ்வாக இந்த வரைபடத்தில் காணலாம். இதை உள்ளூர் மக்கள் பார்த்துக் கொண்டே அவர்களை ஆங்காங்கே உற்சாகப்படுத்தியது நெகிழ்ச்சியான கணங்கள்)

20250101083344121.jpeg

கூட நின்று கை தட்டலாம். அவ்வளவு தான்.

இந்த இதழ் வலையேறும் போது யார் யார் முடித்திருப்பார்கள் அல்லது விலகியிருப்பார்கள் என்று தெரிய வரும்.

(சனிக்கிழமை காலை எட்டு மணி நிலவரப்படி)

20250101083634666.jpeg

இது ஒரு சாதாரண நிகழ்வாக தோன்றலாம். ஆனால் தொடர்ந்து மலையேறுபவர்களுக்கு தெரியும் இது எத்தனை சவாலான செயல் என்று.

இந்த அசுர சவாலை நேரடியாக களத்திலிருந்து பார்ப்பதே ஒரு பரவச நிலை. யாருக்கேனும் இந்த சவாலை சந்திக்க தைரியம் இருந்தால் அடுத்த வருட சீனப் புத்தாண்டில் சந்திக்கலாம்……

பரிசு ?? ஒரு மெடல் கூட கிடையாது. ஆனால் இந்த போட்டியின் முடிவில் இருக்கும் ஒரு வெற்றிக் களிப்பு அதை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே புரியும்.

இன்று மாலை ரிசல்ட் அப்டேட் பார்க்க இங்கு வரவும்.

நேரடி ரிப்போர்ட் ஒரு சின்ன வீடியோ

20250101082445517.jpeg

நூகோ யமனந்த் லிம்போ 60 மணி நேரம் 49 நிமிடங்கள் 28 விநாடிகளில் 298 கி.மீ மலை ஓட்டம் முடித்து முதல் ஆளாக வந்திருக்கிறார். ஆனால் அவர் "சர்வைவர்" தான். ஃபினிஷர் என்ற பட்டம் வராது.

ஹாங்காங்கில் 11.45 மணி நிலவரப்படி இன்னமும் வீரர்கள் இலக்கை நோக்கி ஓடி வந்து கொண்டிருக்கின்றனர்.