ஒரு தமிழ்பட வெளியீட்டு விழா இந்த வாரம் நடைப்பெற்றது.
“Bad girls“ என்ற அந்த திரைப்படத்தை வர்ஷா பரத் என்பவர் இயக்க, படத்தை பிரபல இயக்குநர்கள் வெற்றிமாறன் மற்றும் காஷ்யப் அனுராக் தயாரித்திருக்கிறார்கள்.
அந்த விழாவில் பட இயக்குநர் வர்ஷா பேசுகிறார். அவர் இளைஞி என்பதுடன் அவருக்கு இது தான் முதல் படம். “தமிழ் சினிமால பெண் என்றால் ஒரு பூ, ஒரு பத்தினி, ஒரு தெய்வம், ஒரு தாய், தூய்மை அப்படீனு சொல்றதை மாத்தவே இந்த படம் எடுத்துருக்கேன்” என்கிறார். அதை சிறு குழந்தை போல குதித்துக்கொண்டே பரவசத்துடன் பேசுகிறார். அவரது பேச்சைக்கேட்கும் மேடையில் அமர்ந்திருந்த இயக்குநர்கள் வெற்றிமாறன் மற்றும் மிஸ்கின் மட்டுமல்ல மேடையின் எதிரே அமர்ந்திருக்கும் பார்வையாளர்களும் சேர்ந்து சிரிக்கின்றார்கள்.
பத்தினி என்ற வார்த்தை இவர்களுக்கு சிரிப்பை மூட்டுகிறது. பெண்ணை தாயாக பார்க்காமல் கைத்தட்டி அழைத்தால் இளித்துக்கொண்டு கூப்பிட்டவரின் மடியில் எல்லா பெண்களும் வந்து உட்கார வேண்டும் என்கிறாரா இந்த பெண் இயக்குநர்? ஏற்கனவே முற்போக்கு பெண்ணியம் என்றால் குடிப்பது, சிகரெட்டு பிடிப்பது , கண்டவர்களுடன் கட்டற்ற பாலியியல் உறவில் இருப்பது என்று மாற்றி தமிழ் சமூகத்தை நாறடித்து வைத்திருக்கிறார்கள் சில பிரபல முற்போக்கு முகமுடி அணிந்த பெண்ணியவியாதிகள்.
சினிமாத்துறையும் இந்த சீரழிவுக்கு நன்றாகவே துணைபோய், முடிந்த அளவு சேதத்தை ஏற்படுத்தி வைத்திருப்பதை கண்கூடாக பார்க்க முடிகிறது. பெண் முன்னேற்றம் என்பது கல்விக்கற்றல், சொந்தகாலில் நின்று சம்பாதித்து சுய சார்புடன் மானத்துடன் சுயமரியாதையுடன் வாழ்தல் என சொன்னால் இனி நம்மை பூமர் என சொல்லி அடிக்க வருவார்கள் போல. “இந்த படத்தின் கதாநாயகியை கொண்டாடனும் என அவசியமில்லை.
ஆனால் பார்வையாளர்கள் அந்த கதாபாத்திரத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். பெண்கள் மனிதர்களாக இருக்கலாம்.
புனிதர்களாக இருக்க தேவையில்லை.இந்த படமே பெண்களுக்காக… !” என்கிறார் வர்ஷா. மனிதராக வாழவேண்டும் என்றாலே அது புனிதர் என்ற அர்த்தம் தான். அது கூட தெரியாமல் பேசுகிறார்.
“மனிதர்களாக இருக்கத்தேவையில்லை..மிருகங்களாக இருக்கலாம்” என சொல்லியிருந்தால் அவர் பேசிய சப்ஜெட்டுக்கு மிக பொருத்தமாக இருந்திருக்கும். “இதுவரை தமிழில் எடுக்கப்பட்ட படங்கள் எல்லாம் பெண்களுக்கு என்று எடுக்கப்படவில்லை. இந்த படம் பெண்களுக்கென விஷேஷமாக எடுக்கப்பட்டிருக்கிறது.
திரையரங்கத்திற்கு பெண்கள் வந்து எனது படத்தை பாருங்கள்” என அழைப்பு விடுவிக்கிறார். படத்தின் இரு நிமிட முன்னோட்ட காட்சிகளில் பள்ளியில் படிக்கும் பெண்குழந்தை கதாபாத்திரம் “நீ சொன்ன மாதிரி இருக்கனும், கேட்கனும்னு சொன்னா சூசைட் பண்ணிக்குவேன்” என்று தாயை பார்த்து மிரட்டுகிறது. “எனக்குப்பிடிச்ச மாதிரி இருப்பேன்” என்று அந்த பள்ளிச்சிறுமி கதாப்பாத்திரம் குடித்து விட்டு ஆண்நண்பருடன் பாலியல் உறவில் இருப்பது போன்ற காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளன.
படிக்கும் வயதில் வாழ்க்கையை தொலைத்தால் சாகும் வரை கஷ்டத்தில் உழலவேண்டும். இளமையில் படிப்பை இழந்தவர்களிடம் கேளுங்கள் அவர்கள் சொல்வார்கள் வாழ்வின் துயரங்களை கதைகதையாய்.. சீனாவில் இளைய தலைமுறையினர் “Deepseek” போன்ற ஏஐ களை உருவாக்கி அமெரிக்காவையே அலறவிட்டுக்கொண்டிருக்கும் நேரத்தில் நம் தமிழ் திரையின் அரைவேக்காடுகள் இளம்தலைமுறைக்கு குடிக்க, கட்டற்ற பாலுறவில் இருக்க அழைப்பு விடுவித்து கொண்டிருக்கிறார்கள். உங்களால் நல்லது செய்ய முடியாவிட்டாலும் கூட தயவு செய்து யாரையும் கெடுக்காதீர்கள்.
ஏற்கனவே பெண்களுக்கு தமிழ்நாட்டையும் சேர்த்து இந்தியா முழுமைக்கும் பாதுகாப்பான சூழல் இல்லை. படத்தில் வருகிற இம்மாதிரி பெண் கதாபாத்திரங்களை பார்க்கிறவர்கள், பள்ளி செல்லும் சிறு பெண்குழந்தைகளையும் இதே பார்வையில் பார்த்து தவறாக நடக்க முயல்வார்கள்.
அது போலவே இப்படத்தை பார்க்கும் சிறு பெண்குழந்தைகளும் இது போல் நாமும் இருந்தால் தவறில்லை என தடம் மாறுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. கடந்த 4 தினங்களுக்கு முன்பு சென்னையில் 12,14 வயதுடைய பள்ளியில் படிக்கும் 3 பெண்குழந்தைகள், தோழியின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு செல்வதாக வீடுகளில் பொய் சொல்லிவிட்டு, 2 ஆண் நண்பர்களுடன் வீட்டிற்கு தெரியாமல் ஓடிவிட, அந்த இளைஞர்கள் இந்த சிறுமிகளுக்கு சாராயத்தை குடிக்க வைத்து, அவர்களது நண்பர்கள் நால்வரை வரவழைத்து கூட்டாக அந்த சிறுமிகளை அரை மயக்க நிலையில் சீரழித்திருக்கிறார்கள். அந்த இளைஞர்களில் 3 பேர்களின் மேல் ஏற்கனவே இது போன்ற குற்றச்செயல்கள் செய்ததாக பதிவாகியிருக்கின்றன.
பெற்றோர்களின் புகாரையடுத்து, சிறுமிகளை அவர்களின் செல்ஃபோன் கடைசியாக பயன்படுத்தப்பட்ட தடயத்தை வைத்து , இருப்பிடத்தை கண்டறிந்த தமிழக காவல்துறை, பெரம்பூர் அரசு நூலகம் ஒன்றின் பின்னால் இருந்த பாழடைந்த கட்டிடத்தில் இருந்த அந்த 6 இளைஞர்களை போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்திருக்கிறார்கள். வயிற்றெரிச்சல் என்னவென்றால் காவல்துறை அங்கே அதிரடியாக நுழைந்தபோது கட்டிடத்தின் வெளியே இருவர் காவலுக்கு நிற்க, உள்ளே மற்ற நால்வரும் அச்சிறுமிகளை பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கியிருந்திருக்கிறார்கள்.
இரவு முழுவதும் இது நடந்திருக்கிறது. கட்டிடத்தின் உள்ளே, உடை எதுவும் அணியாமல் வெறும் ஒரு போர்வையை அரைக்குறையாய் போர்த்தியபடி அரை மயக்கத்தில் சிறுமிகள் படுத்திருக்க, பக்கத்தில் சாராய பாட்டில்களும் சிகரெட்டு துண்டுகளுமாய் இருந்த காட்சிகளை கண்டு காவல்துறை அதிகாரிகளே கடும்அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.
12 வயது பெண் குழந்தை.. நினைத்துப்பாருங்கள். இப்படிப்பட்ட சம்பவங்கள் பெரும் அளவில் தமிழகத்தில் நடக்க வேண்டும் என தமிழ்திரையுலகம் ஆசைப்படுகிறதா? பள்ளி, கல்லூரி, பணியிடம் என வீட்டை விட்டு வெளியே செல்லும் பெண்கள் எல்லாம் வீடு திரும்பும் வரை வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டு காத்திருக்கிறார்கள் பெற்றவர்கள். ஏற்கனவே ஒரு குறிப்பிட்ட சிறிய அளவில் இளைஞர்கள் சமூகம் ஆண் பெண் பேதமின்றி இப்படத்தின் முன்னோட்டத்தில் காட்டப்படுவது போன்ற சீரழிவான வாழ்க்கை முறையில் இருக்கிறார்கள் என்பது உண்மையே.
அதற்காக சமூகம் முழுமையும் இளம்தலைமுறையினர் இவ்வாறே இருக்கிறார்கள் என சித்தரிக்க முயல்வது எப்பேற்பட்ட கயவாளித்தனம்?! கொஞ்சம் கூட மனசாட்சி , சமூக பொறுப்பு இல்லாமல் இந்த ஒழுங்கீனங்கள், பொறுக்கித்தனங்கள், சமுதாய சீர்கேடுகள் போன்றவற்றை சமூகத்தின் சகஜமான ஒன்றாக மாற்ற முயலாதீர்கள். தனி மனித ஒழுக்கம் என்பது அவரவர் உரிமை என்று உச்சநீதிமன்றமும் சொல்கிறது.
விழாவில் கூட இயக்குநர் வர்ஷா பேசும் போது “ யாருக்கும் அறிவுரை சொல்ற அளவுக்கு எனக்கு தகுதியில்லை. ஏன்னா அவ்வளவு horrible வாழ்க்கை நான் வாழ்ந்திருக்கேன்” என சொல்லும் போது கேட்கும் நமக்கு திக் என்று இருக்கிறது. இதை யோசிக்கும் போது வர்ஷா பரத் கொடூரமான வாழ்க்கை வாழ்ந்தது அவர் தேர்ந்தெடுத்த மோசமான பாதை காரணமாக இருந்திருக்கலாம். அது அவரது உரிமை. ஆனால் “எப்படியும் வாழலாம் , அது தப்பில்லை அது நமது விருப்பம், அது தான் முற்போக்கு பெண்ணியம்” என்று ஒரு சமூகத்திற்கே வகுப்பெடுப்பது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். சாதிகளிடையே வெறுப்புணர்வை வளர்ப்பது, குறிப்பிட்ட சில சமூகத்தினரை மோசமாக சித்தரிப்பது, இஸ்லாமியர் என்றாலே தீவிரவாதிகளாக காட்டுவது,
மதுரை என்றாலே அருவாளை தூக்கிக்கொண்டு ஓடுவது, கதாநாயகிகள் எப்போதும் நாயகனை சுற்றி விரகதாபத்தோடு அலைவது, மலையாளி என்றாலே வசிப்பது சென்னை என்றாலும் கூட வெறும் ரவிக்கை, பாவாடையோடு நிற்கவைப்பது, வடசென்னை என்றால் வாயை திறந்தாலே காதுகூசும் கெட்ட வார்த்தைகளை பேசும் நாகரீகமற்றவர்களாக காட்டுவது, என தமிழ்சினிமாவில் சில இயக்குநர்கள் செய்கிற அட்டகாசங்கள் கொஞ்சநஞ்சம் இல்லை.
அங்கே இங்கே என கையை வைத்து கடைசியில் தமிழ்சமூகத்து பெண்குழந்தைகள்,இளம்பெண்கள் எப்படி வாழவேண்டும் என்பதனை சொல்லித்தர இப்போது வந்துவிட்டார்கள். பத்தினி, தாய் , தூய்மை என வாழ்ந்தால் அவ்வளவு நக்கல் நையாண்டி இவர்களுக்கு?!
தமிழ் சமூகத்தில் பத்தினி,தாய்மை, தூய்மைக்கு இன்னும் மதிப்பு இருக்கிறது. இம்மாதிரியான படங்களையும், இயக்குநர்களையும் ஆதரிக்கும் அளவிற்கு மொத்த தமிழ் சமூகமே இங்கே தறிக்கெட்டு, மானங்கெட்டு போய்விடவில்லை. அப்படி காட்ட முற்படுபவர்களை கட்டம் கட்டி ஒதுக்கி வைக்கும் அளவுக்கு, வள்ளுவன் வழி வந்த , பண்பாடுடைய தமிழ்சமூகத்திற்கு அறிவு உள்ளதால் கேவலமான திரைப்படங்களை எடுக்கத்துணியும் பண்பாடற்ற தற்குறி ஜென்மங்களை, பின்னங்கால் பிடறியில் பட ஓட விடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.
Leave a comment
Upload