தொடர்கள்
ஆன்மீகம்
ஏழு ஜென்ம பாவம் போக்கும் ரத சப்தமி…!! - ஆரூர் சுந்தரசேகர்.

20250101105851207.jpeg

உலகில் தோன்றிய ஆதி வழிபாடுகளில் ஒன்று சூரிய வழிபாடு. ரத சப்தமி சூரியனின் பிறப்பைக் குறிப்பதால் சூரிய ஜெயந்தி என்றும் அழைக்கப்படுகிறது. சூரிய பகவான் 7 குதிரைகள் பூட்டிய 12 சக்கரங்கள் கொண்ட ரதத்தில் சஞ்சாரம் செய்வதாக ஐதீகம். ஏழு குதிரைகள் சூரியக் கடவுள் சூரியனின் நாளான ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வாரத்தின் ஏழு நாட்களைக் குறிக்கும் என்று கூறப்படுகிறது. தேரில் உள்ள 12 சக்கரங்கள் 12 ராசிகளைக் குறிக்கிறது.
சூரியன் தன் (தட்சிணாயனம்) தெற்கு நோக்கிய பயணத்தை முடித்துக்கொண்டு, வடக்கு நோக்கிய (உத்தராயணம்) பயணத்தைத் துவங்கும் நாளே ‘ரத சப்தமி’ ஆகும். ரத சப்தமி தை அமாவாசை நாளை அடுத்த ஏழாவது நாளில் அனுஷ்டிக்கப்படுகிறது.

Ratha Saptami, which removes the sin of seven births...!!


அர்க்கம் என்றாலே சூரியன் என்று பொருள். சூரியனின் சாரம் எருக்க இலையில் உள்ளது. சந்திரனைத் தலையில் சூடிக் கொண்ட சிவ பெருமான், சூரியனாக உருவகம் ஆன எருக்க இலையையும் இதன் காரணமாகவே சூடிக் கொண்டிருக்கிறார். சூரிய ஜெயந்தியான ரத சப்தமி நாளில் ஏழு எருக்க இலைகளைத் தலையில் வைத்து நீராட வேண்டும் என்று புராணங்கள் கூறுகின்றன.
சூரிய பகவானை, ரத சப்தமி நன்னாளில் பூஜித்து வழிபட்டால், ஏழு ஜென்ம பாவமும் விலகிவிடும். அடுத்த ஏழு தலைமுறையினரும் சீரும் சிறப்புமாக வாழ்வார்கள் என்கிறார்கள் ஆன்றோர்கள்.

ரதசப்தமியும்,பீஷ்மரும்:

Ratha Saptami, which removes the sin of seven births...!!

மகாபாரதப் போரில் அர்ஜுனனின் அம்பால் வீழ்த்தப் பட்ட பீஷ்மர் நினைத்த நேரத்தில் உயிர் விடலாம் என்ற வரத்தினால் உத்தராயணத்தில் உயிர் விட அம்புப் படுக்கையில் காத்திருந்தார். உத்தராயணம் வந்த பிறகும் உயிர் பிரியவில்லை. அப்பொழுது அவரைப் பார்க்க வந்தார் வேதவியாசர். அவரிடம், “என்ன பாவம் செய்தேன்? ஏன் இன்னும் என் உயிர் பிரியவில்லை?” என்று வேதவியாசரிடம் பீஷ்மர் கேட்டார்..
"பீஷ்மா! ஒருவர், தன் மனம், மொழி, மெய்யால் தீமை புரியாவிட்டாலும், பிறர் செய்யும் தீமைகளைத் தடுக்காமல் இருப்பதும் கூடப் பாவம் தான். அதற்கான தண்டனையை அனுபவித்தே தீரவேண்டும்" என்றார். பீஷ்மருக்கு வேதவியாசர் சொன்ன உண்மை புரிந்தது. துரியோதனன் அவையில், சபை நடுவே பாஞ்சாலியின் உடையைத் துச்சாதனன் பறித்து அவமானம் செய்தபோது, அதைத் தடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தது தான் செய்த மிகப்பெரிய தவறு எனப் பீஷ்மர் உணர்ந்து, இதற்கு என்ன பாப விமோசனம் என்று வியாசரிடம் கேட்க...
"பீஷ்மா எப்பொழுது உன் தவற்றை உணர்ந்து வருந்துகிறாயோ, அப்போது அகன்று விட்டாலும் அனைத்தையும் கண்டும் காணாமல் இருந்த கண்கள், செவி, வாய், தோள், கைகள், புத்தி உள்ள தலை ஆகியவை தண்டனை அனுபவிக்க வேண்டும்" என்றார் வியாசர். உடனே சூரியனின் நெருப்பைக் கொண்டு தன்னைச் சுட்டு எரிக்க வேண்டினார் பீஷ்மர்.

​ Ratha Saptami, which removes the sin of seven births...!!


வேதவியாசர் முன்கூட்டியே தான் கொண்டு வந்திருந்த எருக்கன் இலைகளைப் பீஷ்மரிடம் காண்பித்து, “பீஷ்மா, இந்த எருக்கன் இலைகள் சூரியனுக்கு உகந்தது. இதன் பெயர் அர்க்கபத்ரம். அர்க்கம் என்றால் சூரியன் என்றே பொருள். சூரியனின் முழுச் சக்தியும் இதில் உள்ளது. ஆகவே இந்த இலைகளால் உன்னுடைய அங்கங்களை அலங்கரிக்கப் போகிறேன். அவை உன்னைப் புனிதப்படுத்தும்” என்றவர், அதன்படியே பீஷ்மரின் அங்கங்களை, எருக்கன் இலைகளால் அலங்கரித்தார் வியாசர். அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மன அமைதியடைந்தார் பீஷ்மர். அப்படியே தியானத்தில் ஆழ்ந்தார். தியான நிலையிலேயே மறுநாள் அஷ்டமி திதியன்று முக்தியும் அடைந்தார். இந்த அஷ்டமி திதி பீஷ்மாஷ்டமி என்று அழைக்கப்படுகிறது. அன்று புனித நீர் நிலைக்குச் சென்று பீஷ்மருக்கான தர்ப்பணமும், மற்றும் நம்மில் வாழ்ந்த முன்னோர்களுக்காக பித்ரு பூஜையும் செய்தால், சுகமான வாழ்வு நிரந்தரமாகக் கிட்டும்.

Ratha Saptami, which removes the sin of seven births...!!


மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் இந்த உலகில் பாவம் செய்து கொண்டிருக்கிறான். பாவத்தை நம்முடைய கண்கள், காதுகள், கைகள், கால்கள், திமிறிய தோள்கள், வாய், மெய் என்று அனைத்தும் அறிந்தும், அறியாமல் செய்த பாவத்திற்கான தண்டனையை இந்த ஜென்மத்திலேயே பல கஷ்டங்களை அனுபவித்துத் தீர்த்துக் கொண்டிருப்போம். அதனால் தான் நாம் இன்றும் ரத ரதசப்தமி அன்று பாபங்கள் தீர எருக்க இலையைத் தலையில் வைத்து ஸ்நானம் செய்கிறோம்.

ரத சப்தமி நாளில் ஸ்நானமும், வழிபாடும்:

​ Ratha Saptami, which removes the sin of seven births...!!


ஏழு எருக்கம் இலைகளைக் கால்களில் இரண்டு, கைகளில் இரண்டு, தோள் பட்டைகளில் இரண்டு, தலையில் ஒன்றை வைத்து நீர் ஊற்ற வேண்டும். தலையில் வைக்கும் இலையில் பெண்கள் மஞ்சள் பொடி மற்றும் அட்சதையும், ஆண்கள் அட்சதை மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதால் வாழ்வில் ஆரோக்கியமும்,அனைத்து செல்வங்களும் கிடைக்கும். தந்தை இல்லாத ஆண்கள், கணவரை இழந்த பெண்கள், ஏழு எருக்கம் இலைகளுடன் பச்சரிசி, கருப்பு எள், தலையில் வைத்து நீராட வேண்டும்.
ஸ்நானம் செய்யும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்...
ஸப்த ஸப்திப்ரியே தேவி ஸப்த லோகைக பூஜிதே!
ஸப்த ஜன்மார்ஜிதம் பாபம் ஹர ஸப்தமி !
ஸத்வரம் யத் யத் கர்ம க்ருதம் பாபம் மயா ஸப்தஸு ஜன்மஸு
தன்மே ரோகம் ச மாகரீ ஹந்து ஸப்தமீ நெளமி ஸப்தமி!
தேவி! த்வாம் ஸப்த லோகைக மாதரம்
ஸப்தா(அ)ர்க்க பத்ர ஸ்நானேன
மம பாபம் வ்யபோஹய !

அன்றைய தினம் வாசலில் தேர்க்கோலமிட்டு சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்ய வேண்டும்.

Ratha Saptami, which removes the sin of seven births...!!

ரதசப்தமி நாளில் செய்யப்படும் தர்மத்திற்குப் பலமடங்கு புண்ணியம் உண்டு. இந்த நாளில் தொடங்கும் தொழில் பெருகும். பெண்கள் உயர்நிலையை அடைவர் இந்த நாள் தியானம், யோகா செய்யச் சிறந்தது. சூரிய உதயத்தின் போது குளித்து விரதம் அனுஷ்டித்தால் செல்வந்தர் ஆக உயர்வார்கள் என்கின்றது புராணம்..

திருப்பதி திருமலையில் ரத சப்தமி:

Ratha Saptami, which removes the sin of seven births...!!

ரத சப்தமி அன்று தஞ்சை, சூரியனார் கோவில், ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் ஆலயத்திலும் ரத சப்தமி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. திருப்பதி திருமலையில் ரதசப்தமி அன்று ஒரு நாள் பிரம்மோற்சவம் நடைபெறும்.
இந்தாண்டு ரதசப்தமி விழா வரும் பிப். 4ம்தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் திருமலையில் ஸ்ரீனிவாசப் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் ஏழு வாகனங்களில் நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்குக் காட்சியளிக்கிறார். இதனை "சிறிய பிரம்மோற்சவம்" என்று அழைக்கின்றனர்.

Ratha Saptami, which removes the sin of seven births...!!

அன்றைய தினம் அதிகாலை 5.30 மணிக்குச் சூரிய பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி மாடவீதியில் வலம் வந்து வடமேற்கு மாட வீதியில் காலை சூரிய உதயமாகும் 6.44 வரை காத்திருப்பார். சூரிய கதிர்கள் சுவாமி மீது பட்டவுடன் ஆரத்தி காட்டப்படும். பின், சுவாமி ஊர்வலமாகக் கோயிலுக்குச் செல்வார். காலை 9 மணி முதல் 10 மணி வரை சிறிய சேஷ வாகனத்திலும், 11 மணி முதல் பகல் 12 மணி வரை கருட வாகனத்திலும், மதியம் 1 மணி முதல் 2 மணி வரை அனுமந்த வாகனத்திலும், பிற்பகல் 2 முதல் 3 மணி வரை சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெறும். மாலை 4 முதல் 5 மணி வரை கற்பக விருட்ச வாகனத்திலும், மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை சர்வ பூபாள வாகனத்திலும், இரவு 8 முதல் 9 மணி வரை சந்திரப் பிரபை வாகனத்தில் மலையப்பசுவாமி வலம் வந்து அருள்பாலிக்க உள்ளார். வருடாந்திர பத்து நாட்கள் நடக்கும் பிரம்மோற்சவ வீதி உலாவைக் காண முடியாத பக்தர்கள் இன்றைய தினத்தில் ஒரேநாளில் கண்டு தரிசனம் செய்வார்கள்.

Ratha Saptami, which removes the sin of seven births...!!

இந்த வருடம் (2025) பிப்ரவரி 4 ஆம் தேதி ரதசப்தமி வருகின்றது..!
இந்த நன்னாளில் ஏழு ஜென்ம பாவம் போக்கி வாழ்வில் வளம் பெறுவோம்!!