அப்போதெல்லாம் மகர ஜோதி தரிசனத்துக்கு பதினாலு நாள் டூர் போடுவோம்.
முதல்நாள் கோவில் கோவிலாகச் சுற்றிவிட்டு எரிமேலி சென்று பெரியபாதையில் காட்டுவழி பயணம். அழுதையில் ஒரு நாள்; பம்பையில் மூன்று நாட்கள்; சன்னிதானத்தில் இரண்டு நாள்; திரும்பும் வழியில் மீண்டும் கோயிலோ கோயில்.
கிடைக்கிற இடத்தில் அடுப்பு, சமையல், குளியல், கூட்டு சரணம்.
பாலில்லாத கட்டன் காப்பி பழக எனக்கு மூன்று மலையாத்திரை ஆச்சு!
பெருவழியில் நடக்கையில் தலையில் இருமுடி, தோளில் துணிப்பை, முதுகில் கட்டிய பெரிய வாணலி, இடது கையில் இரண்டு மூன்று காத்திரமான கரண்டி/சட்டுவங்கள், வலது கையில் பெட்ரோமாக்ஸ்.
இளைய பிராயமென்பதால் சுமை தெரியவில்லை!
பெட்ரோமாக்ஸ் தான் வச்சிருக்கியே.. அப்ப பல்பு இருக்காதுன்னு தானே கேக்குறீங்க… பல்ப் இல்லாட்டி எப்படி?
சொல்றேன் … சொல்றேன்…
கோயில் கோயிலா பஸ்ஸில் சுற்றுவோம் என ஆரம்பத்தில் சொன்னேனல்லவா? அந்த பஸ் யாத்திரை முழுதுக்குமாக ஏற்பாடு செய்யப்பட்ட பஸ். அதனால் ஏதேனும் கோயிலில் நிறுத்திவிட்டு உம்மாச்சியை சேவிச்சுட்டு மீண்டும் அடுத்த கோவிலுக்குப் போவோம். தொடர் பிரயாணம் வில்லங்கம் ஏதும் இல்லாமல் இருக்க, ஒவ்வொரு முறையும் பஸ்ஸை கிளப்புகையில் ஜோராக ஒரு கூட்டு சரணம் போடுவோம்… சாமியேய் சரணமய்யப்பா… என் குரல் கணீர் என்று ஒலிக்கும்.
சபரிமலை யாத்திரை முடிந்து சென்னைக்கு வந்து சேர்ந்தேன். புகுமுக வகுப்பு மாணவன் அப்போது.
ஒரு நண்பனை பார்த்துவிட்டு மயிலைக்கு பல்லவன் பஸ்ஸில் ஏறினேன்.
நேற்று இந்த நேரம் ஐயப்ப சோதரர்களுடன் திரும்பிக் கொண்டிருந்தது ஞாபகம் வந்தது.
சற்று கண்ணை அமட்டியது.
அந்த சமயத்தில் பல்லவன் கிளம்ப, பழக்க தோஷத்தில் ‘சாமியே சரணமய்யப்பா!’ என்று கொஞ்சம் ஓவராகக் கூவிவிட்டேன் போலிருக்கிறது! கிளப்பிய பஸ்ஸை சடன்ப்ரேக் போட்டு டிரைவர் நிறுத்திவிட்டார். ‘
என்னாச்சு தம்பி?’,
‘ஏன்யா கூவுற?’, ‘சத்தம் போட்டு கொயந்தய எய்ப்பிட்டியேப்பா!’என்ற கேள்விக் கணைகள் பாய்ந்தன.
சே! என்ன காரியம் செய்து விட்டேன்?
சாரி… சாரி… என்று அசடு வழிய அமர்ந்திருந்தேன். கண்டட்டரு டபுள் விஸில் கொடுக்க பஸ் நகர்ந்தது.
இப்போதும் பஸ் புறப்படுகையில் ‘சரணம்’ வாய்ஸ் கொடுக்கறீங்களான்னு கேக்காதீங்க…
சில வருடங்களுக்கு அப்புறமா கல்யாணம் ஆச்சா?… அப்பவே பாதி வாய்ஸ் கம்மியாயிடுச்சு.
கொரானாவுல படுத்து எழுந்தேனா? ஸ்டெராய்ட்ஸ் போட்டதுல மீதி வாய்ஸும் புட்டுக்கிச்சி! இப்போது பஸ் கிளம்பும் போது சரணம் சொன்னால் ஏதோ மந்திரத்தை முணுமுணுப்பது போலத்தான் இருக்கும்!
சாமியேய்…. சரணமய்யப்பா!
Leave a comment
Upload