பா வகைகளை தொடர்ந்து விவரிக்கத் தொடங்குகிறார் பரணீதரன்.
பொதுவாக நாட்டுப்புற இலக்கியங்களுக்கு இலக்கணங்கள் கிடையாது என்று பலர் கூறுவார்கள். சந்தம் பாட்டிற்கு சொந்தம் என்ற சொலவடைக்கு ஏற்ப நாட்டுப்புற இலக்கியங்களுக்கும் இலக்கணமும் இசையும் உண்டு. பிறந்த குழந்தைக்கு பாடப்படும் தாலாட்டில் ஆரம்பித்து, இறந்தவர்களுக்காக பாடப்படும் ஒப்பாரி வரை அனைத்திலும் இலக்கணமும் இசையும் உண்டு. நாம் பார்த்த குறவஞ்சி குறிஞ்சி நிலத்தின் நாட்டுப்புறப்பாடல். அதேபோல நாம் பார்த்த பள்ளு மருத நிலத்தின் நாட்டுப்புறப்பாடல். இன்றும் கூட நெய்தல் நிலம் என்று கூறப்படும் கடலும் கடல் சார்ந்த இடமும் ஆகிய கடல் பகுதிகளில் வலையை இழுப்பதற்கும், தோனியை தள்ளுவதற்கும், தூணியை ஓட்டுவதற்கும், படகை துடுப்பு போடுவதற்கும் ஓட்டுவதற்கும் ஒரு வகையான நாட்டுப்புற பாடலை பாடுவார்கள். பொதுவாக நாம் அதை ஏலேலோ ஐலசா என்று கூறுவோம். இப்படிப்பட்டதான வேலைகளில் சிலவற்றின் முழு பாடல் கீழே உள்ளது. இவற்றில் எத்தனை தொடை நயம் மற்றும் இசை நயம் உள்ளது என்று நீங்களே பாருங்களேன்.
வலை இழுப்போர் பாடல் - கீழை கடல் மக்கள் பாடல்
ஏலேலோ ஐலசா
வானமுட்ட ஏலேலோ நிற்கிறானே ஐலசா
ஓடி ஓடி ஏலேலோ இழுக்கவேணும் ஐலசா
மண்ணநம்பி ஏலேலோ மரமிருக்க ஐலசா
மரத்த நம்பி ஏலேலோ கிளையிருக்க ஐலசா
கிளைய நம்பி ஏலேலோ இலையிருக்க ஐலசா
இலைய நம்பி ஏலேலோ பூவிருக்க ஐலசா
பூவநம்பி ஏலேலோ பிஞ்சிருக்க ஐலசா
பிஞ்சை நம்பி ஏலேலோ காயிருக்க ஐலசா
காய நம்பி ஏலேலோ பழமிருக்க ஐலசா
பழத்த நம்பி ஏலேலோ நானிருக்கேன் ஐலசா
உன்ன நம்பி ஏலேலோ நானிருக்கேன் ஐலசா
உச்சி வெயிலில் ஏலேலோ உருகிறேனே ஐலசா
உள்ளம் மட்டும் ஏலேலோ உன்னிடமே ஐலசா
கப்பல் பாடல்
வினையரிசி தினையரிசி வேலம்ப நாட்டில்
வேலம்ப நாட்டிலொரு வெள்ளாட்டுக் குட்டி
வெள்ளாட்டுக் குட்டியொரு ஆறுமுக சாமி
ஆறுமுக சாமியைக் கயிறாய்த் திரித்து
பன்னிரண்டு கப்பலுக்குப் பாய்மரம் நாட்டி
நெஞ்சுக் கடாஷத்தால் சீனிப்பாய் தூக்கி
அக்காளுந் தங்காளும் சுக்கான் பிடிக்க
ஆனதோர் வள்ளியம்மை அஞ்சான் இழுக்க
பொக்குவாய்ச் சின்னக்குட்டி பீரங்கி போட
அம்பட்டச் சிதம்பரி பாய்விரித்தோட
ஏலஏலோ தத்தெய்தாம் ஏலஏலோ
இதே போல இன்றும் வயல்வெளிகளில் களையெடுக்கும் பொழுது களைப்பு தெரியாமல் இருப்பதற்கு பாடப்படும் பாடலில் கீழே கொடுத்துள்ளேன். அவற்றிலும் இலக்கண நயமும் சந்தமும் மிகுதியாக உள்ளது.
களை பறிப்பு பாடல்
ஆத்துக்குள்ளே ஏலேலோ
அத்திமரம் - அகிலகிலா
அத்திமரம் - அகிலகிலா
அளவு பாத்து ஏலேலோ
அறுக்கித் தள்ளு - அகிலகிலா
அறுக்கித் தள்ளு - அகிலகிலா
குளத்துக்குள்ளே ஏலேலோ
கொய்யாமரம் - அகிலகிலா
கொத்தித் தள்ளு - அகிலகிலா
சேத்துக்குள்ளே ஏலேலோ
செம்பகப்பூ - அகிலகிலா
செம்பகப்பூ - அகிலகிலா
செம்மையாக ஏலேலோ
சேத்தெடுக்க - அகிலகிலா
சேத்தெடுக்க - அகிலகிலா
நாத்துக்குள்ளே ஏலேலோ
நச்சுப் புல்லு - அகிலகிலா
நச்சுப் புல்லு - அகிலகிலா
நச்சுப் புல்லை ஏலேலோ
நறுக்கித் தள்ளு - அகிலகிலா
நறுக்கித் தள்ளு - அகிலகிலா
இதேபோல நம்முடைய தாலாட்டு பாடல்களில் உள்ள இலக்கண நயமும் சந்த நயத்தையும் பாருங்கள்.
தாலாட்டு பாடல்
ஆராரோ ஆரிராரோ ஆரிரரோ ஆராரிரோ
ஆரிரரோ ஆராரிரோ ஆராரிரோ ஆராரோ
ஆத்தா நீ அழுத கண்ணீர்
ஆறாகப்பெருகி
ஆனைகுளித்தேறி
குளமாகத்தேங்கி
குதிரை குளித்தேறி
வாய்க்காலாய் ஓடி
வழிப்போக்கர் வாய் கழுவி
இஞ்சிக்கு பாஞ்சு
எலுமிச்சை வேரோடி
மஞ்சளுக்கு பாஞ்சு
மருதானி வேரோடி
தாழைக்கு பாய்கையிலே
தளும்பியதாம் கண்ணீரும்!
வாழைக்கு பாய்கையிலேயே
வத்தியதாம் கண்ணீரும்!
யாரடிச்சு நீ அழர அஞ்சனகண் மை கரய
அடிச்சாரை சொல்லி அழு ஆக்கினைகள் செய்திடுவோம்
தொட்டாரை சொல்லி அழு தோல் விலங்கு மாட்டிடுவோம்
மாமன் அடிச்சானோ மல்லிகைப்பூ செண்டாலே
அத்தை அடிச்சாளோ அரளிப்பூ செண்டாலே (அம்மா வீட்டில் பாடினால்) :)
அத்தை அடிச்சாளோ அரவணைக்கும் கையாலே (அப்பா வீட்டில் பாடினால்) :)
தாத்தா அடிச்சாரோ தாம்பு கயத்தாலே
பாட்டி அடிச்சாளோ பால் போட்டும் சங்காலே
(பாடல் மிகப்பெரியது என்பதால் பாடலை முழுவதுமாக போடவில்லை)
அம்மாவிற்கு தன்னுடைய அண்ணன் தம்பிகளை (மாமன்) எந்த அளவுக்கு பிடிக்கும் என்பதை இந்த பாடலில் பார்க்கலாம். பொதுவாக மல்லிகைப்பூ, நன்றாக தூக்கத்தை கொடுப்பதற்கு பயன்படுத்தக்கூடிய ஒரு மருந்து. அந்த காலத்தில் மல்லிகைப்பூ மிகவும் அரிதாகவே கிடைக்கும். அதனால் அதனுடைய விலையும் மிகவும் அதிகம். மாமன் அடிப்பதற்கு கூட மிக உயர்ந்த விலை மதிப்புடைய மருந்தாகிய மல்லிகை பூவை வாங்கி அதில் சென்று செய்ததுதான் அடிப்பான் என்று இதில் குழந்தையின் அம்மா பாடுகிறார். அதே போல வீட்டில் உள்ள உக்கட்சி பூசலையும் (அத்தை) ஜாடை மாடையாக இந்த பாடலில் வெளிப்படுத்துகிறார். அரளிப்பூ மிகவும் இயல்பாக கிடைக்கக் கூடியது. எங்கு தேடினாலும் கிடைக்கும். அதனால் அதற்கு காசு பணம் தேவையில்லை. அதே போல அது மிகவும் விஷம் நிரம்பியது. அவற்றால் அடித்தால் குழந்தைக்கு பல்வேறு விதமான நோய்கள் வரக்கூடும். அப்படிப்பட்டவள் அத்தை என்று அம்மா பாடுகிறார். அதே அப்பா வீட்டில் உள்ள பாட்டி பாடும் பொழுது, தன்னுடைய பெண்ணை (அத்தை) உயர்த்தி பாடுவதற்காக அரவணைக்கும் கை என்று கூறுகிறார். அந்த கால குடும்ப சூழ்நிலையை இந்த பாடல் மூலமாக நம்மால் தெரிந்து கொள்ள முடிகிறது.
அடுத்ததாக முளைப்பாரி நாற்று போன்றவைகளை உற்பத்தி செய்யும் பொழுதோ அல்லது அவை வளர்ந்த பிறகோ அல்லது மாரியம்மன் கோவில் திருவிழாவிலோ பாடக்கூடிய கும்மி பாடலை பார்ப்போம்.
முளைப்பாரி நாற்று கும்மி பாடல்
தன்னா னன்னே னானே தன
தானே னன்னே னானே
ஒண்ணாந்தான் நாளையிலே
ஒசந்த செவ்வா கிழமையிலே
ஓலைக்கொட்டான் இரண்டெடுத்து
ஓடும் பிள்ளை தொண்டலிட்டு
வாங்கியாந்த முத்துகளை
வாளியிலே ஊற வச்சி
கம்மந்தட்டை இரண்டெடுத்து
கணுக்கணுவா முறிச்சி வச்சி
சோளத்தட்டை இரண்டெடுத்து
சொளை சொளையா முறிச்சி வச்சி
மாட்டாந்தொழு தெறந்து
மாட்டெருவு அள்ளி வந்து
ஆட்டாந்தொழு தெறந்து
ஆட்டெருவு அள்ளி வந்து
கடுகுலயுஞ் சிறுபயிறு
காராமணிப் பயிறு
மிளகுளயுஞ் சிறுபயிறு
முத்தான மணிப்பயிறு
மொள போட்ட ஒண்ணா நாளு
ஓரெலையாம் முளைப்பாரி
ஓரலைக்குங் காப்புக்கட்டி
ஒரு பானை பொங்கலிட்டு
முளைப்பாரி போடுங்கம்மா
தன்னா னன்னே போடுங்கம்மா
தையலரே ஒரு குலவை
(பாடல் மிகப்பெரியது என்பதால் பாடலை முழுவதுமாக போடவில்லை)
அடுத்த வாரம் வேறு ஒரு சிற்றிலக்கிய வகையை எடுத்து அதன் தொடைகளை விரிவாக பார்ப்போம் என்றே விடை பெற்றுக் கொண்டார் நமது நண்பர் பரணீதரன்.
Leave a comment
Upload