வழுக்கை என்பது மூன்று வகைப்படும்.
அவை முறையே :---
1 )முன் வழுக்கை,
2 )பின் வழுக்கை,
3 )மொத்த வழுக்கை.
26 வயது வாசு இதில் மூன்றாவது பிரிவை சேர்ந்தவன். அன்பான அம்மா அப்பா சொந்த வீடு, கை நிறைய சம்பளம் நல்ல உத்தியோகம் என்று எல்லாம் இருந்தும் மண்டை மட்டும் மைதானமாக இருப்பது அவனுக்கும் பெற்றோர்களுக்கும் பெரிய மன உளைச்சலை ஏற்படுத்திக் கொண்டிருந்தது.
வாசு குழந்தையாக இருந்த போது அமேசான் காடு மாதிரி அவ்வளவு முடி இருக்கும். அப்பாவுக்கு உடம்பு சரியில்லை என்றாலும், அம்மாவுக்கு ஆபரேஷன் இல்லாமல் வயிற்று வலி குணமாக வேண்டும் என்றாலும், ஏதாவது லோன் சீக்கிரம் கிடைக்க வேண்டும் என்றாலும், வாசுவின் தலையே அடமானமாக வைக்கப்பட்டு முடி இறக்கப்படும்.
எதிர்காலத்தில் ஏளனத்துக்கு ஆளாக போகிறோம் என்பதை அறியாத சின்னஞ்சிறு பாலகன் வாசு ,மொட்டை தலையில் சந்தனம் தடவிக்கொண்டு ஜாலியாக வாழ்ந்து வந்தான்.
வாசுவுக்கு 18 வயதானபோது வலது காதுக்கு மேல் லேசாக ஒரு சொட்டை விழுந்தது. இளநரை மாதிரி இளம் சொட்டை என வாசு அதை சட்டை செய்யாமல் அசட்டையாக இருக்க ,சொட்டை மெல்ல மெல்ல தன் ராஜ்ஜியத்தை விஸ்தரித்து வழுக்கையில் கொண்டு போய் விட்டது.
வாசு வேலை பார்க்கும் ஐடி கம்பெனியில் இளம் வயது பெண்கள் அதிகம் .அவர்கள் வாசுவை பார்க்கும் போதெல்லாம், ஒரு மாதிரி சிரித்துக் கொண்டு போவார்கள். அது வாசுவுக்கு பெரிய தர்ம சங்கடமாகவே இருக்கும்.
ஒருமுறை ஆபீஸில் டூர் போவது என முடிவானபோது அந்த லிஸ்டில் வாசுவின் பெயர் மட்டும் இல்லை. வாசு பொறுக்க மாட்டாமல் மேனேஜரிடம் சண்டை போட்டான் .
" ஏன் சார் டூர் போற லிஸ்டில் என் பெயர் இல்லை? "
"வாசு டூர் போற இடம் குற்றாலம்!! அடர்த்தியா முடி இருக்கிறவன் அருவியில குளிச்சா அது ஆனந்தமா இருக்கும்.வேகமாக வர அருவி உன் தலையில கொட்டினா கபாலம் பொளந்துரும் இல்லையா? அதனாலதான் அவாய்ட் பண்ணினேன்" என்றார் . அந்த பயங்கரத்தை ஒரு நிமிடம் நினைத்துப் பார்த்த வாசு அதில் இருக்கும் நியாயத்தை உணர்ந்து வாயை திறக்காமல் அறையை விட்டு வெளியேறினான்.
அடுத்தவர் தலையில் கை வைத்து அழகாக ஆஸ்பத்திரி கட்டியவர் டாக்டர் குடும்ப ராவ். ஹேர் டிரான்ஸ்பிளான்ட் ஸ்பெஷலிஸ்ட். வாசு அவருடைய கிளினிக்கில் வருத்தமாக உட்கார்ந்து இருந்தான். மேலே மின்விசிறி சுற்றுவது வாசுவின் தலையில் துல்லியமாக தெரிந்தது.
" ஆண்ட்ரோ ஜெனிக் ஆலோ பிசியா" என்று டாக்டர் சொன்னதும் வாசு :-" டாக்டர்! என்ன சொல்றீங்க? டாக்டர் :- இளம் வயசுல விழற வழுக்கைக்கு இதான் பெயர்."
" டாக்டர் எனக்கு பேர் முக்கியம் இல்ல ! என் தலையில முளைக்க போற ஹேர் தான் முக்கியம் அதுக்கு என்ன வழி சொல்லுங்க" ."
"
"கவலைப்படாதீங்க வாசு! 15 நாள் ட்ரீட்மெண்ட் வாங்க கம்ப்ளீட்டா சரி பண்ணிடலாம். செவுத்துக்கு நடுவுல செடி முளைக்கிற மாதிரி முடி முளைக்க ஆரம்பிக்கும். போகப்போக அடர்த்தியாக வளரும்", என்றதும் வாசுவுக்கு ஒரு நம்பிக்கை வந்தது. ஆனால் டாக்டர் சொன்ன தொகையை கேட்டதும் மிரண்டு போய் எதுவும் சொல்லாமல் கிளினிக்கை விட்டு கிளம்பி விட்டான்.
வாசுவின் பக்கத்து வீட்டுக்காரர் பாலகிருஷ்ணன், 60 வயது. பல காலம் கிராமத்தில் இருந்தவர். கொஞ்சம் கை வைத்தியம் தெரியும் என்று சொல்லிக் கொள்பவர். வாசுவின் அப்பா அம்மாவிடம் பேசினார்:-
" சார் நான் சொன்ன வைத்தியத்தை யோசிச்சு பாருங்க !எங்க ஊர்ல நாலஞ்சு பேருக்கு பலன் கிடைச்சிருக்கு"
" கரெக்ட் சார் வாசு இதுக்கு ஒத்துக்கணுமே ?"அப்பா கவலைப்பட்டார்.
" இதுல பயப்பட தேவையே இல்லை சார் .ரொம்ப செலவும் இல்ல. என்ன சொல்றீங்க?"
வாசுவின் அம்மா கண்கலங்கி சொன்னாள்," ராத்திரியிலதூக்கம் வராம அவன் தவிக்கிறது என்னால பாத்துட்டு சும்மா இருக்க முடியல. அன்னைக்கு டிபன் இட்லி கொடுத்தேன். அதுல ஒரு தலைமுடி இருந்தது. கடவுளே இட்லில கூட முடி இருக்கு என் தலையில இல்லையே! அப்படின்னு வருத்தமா சாப்பிடாம போயிட்டான். என்ன வைத்தியம் இருந்தாலும் செஞ்சு பார்த்துடலாம்" என்றாள்.
இதனிடையே:--
வாசுவின் நண்பன் ரகு ,வாசுவின் தலை அளவுக்கு ஏற்ப ஒரு அழகான விகை ஏற்பாடு செய்து வாசுவுக்கு கொடுத்தான். வாசு அதை தலையில் மாட்டிக் கொண்டு கண்ணாடியில் பார்த்தபோது அவனாலேயே அவனை நம்ப முடியவில்லை. அவ்வளவு அழகாக இருந்தது. தன் பிரச்சனை தீர்ந்தது என்று வாசு, ரகுவை கட்டிப்பிடித்து சந்தோஷப்பட்டான்.
வீட்டுக்குள் நுழைந்த வாசுவை அப்பா அம்மாவால் கூட அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை.
" யார் வேணும் உங்களுக்கு? வாசுவோட ஃப்ரெண்டா? அவன் இன்னும் ஆபீஸ்ல இருந்து வரலையே?" என அம்மா வெள்ளந்தியாக சொல்ல,
" .அம்மா நான்தாம்மா", என்று வாசு விக்கை எடுத்ததும்
" வாசு "!! என்று குரல் தழுதழுக்க--,
முகத்தில் மச்சத்துடன் வந்த ஹீரோவை அடையாளம் தெரிந்து கொள்ளாமல், மச்சத்தை எடுத்ததும்" மகனே "! என்று நெகிழ்ந்து போகிற பண்டரி பாய் மாதிரி ஆனந்த கண்ணீர் வழிய நின்றாள் அம்மா.
வாசு விவரத்தை சொன்னதும் அம்மா ",வாசு ! கண்டிப்பா உனக்கு தலையில் முடி முளைக்கும். பக்கத்து வீட்டு பாலகிருஷ்ணன் ஒரு ஐடியா சொன்னார்".
" என்ன ஐடியா"?
அம்மா சொல்ல ஆரம்பிக்கும் போது வாசலில் ஒரு லாரியின் ஹாரன் சத்தம் அவர்கள் வீட்டை கடந்து போக, அதற்குள் அப்பாவும் அம்மாவும் வாசுவிடம் சொல்லி முடித்து இருந்தார்கள்.
" நோ ".....என்று வாசு அலறி ,"என்ன அநியாயம் இது? வழுக்கை தலைய பசுமாடு நக்கி கொடுத்தா தலையில் முடி முளைக்குமா? எந்த காலத்தில் இருக்கீங்க?" என்று பயங்கரமாக சத்தம் போட அப்பாவும் அம்மாவும் கதறி அழுது அவன் கையைப் பிடித்து கெஞ்சி, கூத்தாடினார்கள்.
அழும் போதும், கூத்தாடும் போதும், அப்பா அம்மாவின் முகம் பார்க்க சகிக்கவில்லை என்கிற ஒரே காரணத்துக்காக வாசு கடைசியில் அவர்கள் சொன்ன வைத்தியத்துக்கு சம்மதித்தான்.
அடுத்த வெள்ளிக்கிழமை:-- பாலகிருஷ்ணன் வழிகாட்ட பால்கார முனியன், ஓங்கி உயர்ந்து வளர்ந்த தன் அழகான பசுமாட்டுடன் வீட்டு வாசலுக்கு வந்தான்.. "கிரகப்பிரவேசத்திற்கு கூட்டிட்டு வந்திருக்காங்களா? வாசல்ல வாழைமரம் தோரணம் எதுவும் காணுமே" என்று தனக்குள்ளே பசுமாடு நினைத்துக் கொண்டு, வீட்டுக்குள் வந்தது.
வீட்டில் நடு முற்றத்தில் வாசு ஒரு நாற்காலியில் கவலையுடன் உட்கார்ந்து இருந்தான் .பெண் பார்க்க வந்த வீட்டில் பெண்ணை ஓரக்கண்ணால் பார்க்கிற மாதிரி பசுமாட்டை பார்த்தான். அந்த நேரம் பார்த்து அது தன் நாக்கை வெளியே நீட்டி இடது வலது என ஒரு சுழட்டு சுழற்றிக் கொண்டது. வாசுவுக்கு வயிற்றை கலக்கியது முனியன் மாட்டை வாசுவின் தலை அருகே கொண்டு வந்தான் .அம்மா ஸ்லோகம் சொல்லியபடி இருந்தாள்.
வாசுவின் தலையை பார்த்துவிட்டு "அம்மா!!!" என பசு ஓலமிட்டது .இது வரை அந்த மாதிரி ,முனியனின் பசு, கொடூரமாக ஓலமிட்டதே கிடையாது. பிறகு வேறு வழி எதுவும் இல்லை என வாசுவின் தலையை பரபரவென நக்கியது. ஏழு எட்டு முறை நக்கிவிட்டு" நான் பெத்த கன்னுகுட்டியை கூட இப்படி பாசமா நக்கிக் கொடுத்ததில்லை ", என்று வருத்தமாக MIND VOICE இல் சொல்லிக்கொண்டு,வாசலை நோக்கி நடந்தது .அதன் கண் கலங்கி இருந்தது. திடீரென,வாசல் படி அருகிலேயே தடுமாறி ,மயங்கி கீழே விழுந்தது. வாயில் நுரை தள்ள, மூச்சிரைக்க, அங்கேயே படுத்து விட்டது.
அலறி அடித்துக் கொண்டு வாசு படுக்கையில் இருந்து எழுந்தான். "கனவு !!! --
மாடு வந்தது ,தலையை நக்கி கொடுத்தது, இவ்வளவும் கனவா? நல்லவேளை! என்னுடைய சுயநலத்துக்காக அனாவசியமாக ஒரு பசு மாட்டை பலி கொடுக்க இருந்தேனே ? ச்சே ! தலைக்கு வெளியே இருப்பது முக்கியமில்லை. தலைக்கு உள்ளே இருப்பது தான் முக்கியம் "என்கிற மிகப்பெரிய தத்துவத்தை தானே கண்டுபிடித்தவனாக உணர்ந்து கொண்டு வாசலுக்கு வந்து நின்றான்.
அவனை ஆசீர்வதிப்பது போல்
மழை தூரல்கள் விழ ஆரம்பித்தது. ஆனால் ஒரு பொட்டு தண்ணீர் கூட அவன் தலையில் தங்க வில்லை. அவன் தலை - ஒரு தாமரை இலை
Leave a comment
Upload