தொடர்கள்
அனுபவம்
கோவை பிரியாணி - மாலா ஶ்ரீ

20240731092126117.jpeg

கோவை ரயில்நிலையம் அருகே உபயோகமற்ற ரயில்பெட்டியை சீரமைத்து, கடந்த சில நாட்களுக்கு முன் போச்சோ ஃபுட் எக்ஸ்பிரஸ் எனும் பெயரில் துரித உணவகம் செயல்பட்டு வருகிறது. இதேபோல், சென்னை சென்ட்ரல் ரயில்நிலைய கார் பார்க்கிங் பகுதியில் முதன்முறையாக ரயில்பெட்டி உணவகம் துவங்கப்பட்டு உள்ளதாக படங்களுடன் செய்திகள் வெளியாகின. தற்போது அந்த உணவகம் வெற்றிகரமாக இயங்கி வருகிறது. இதைத் தொடர்ந்து மதுரை, கோவை, நெல்லை உள்பட பல்வேறு முக்கிய ரயில்நிலையங்களில் ரயில்பெட்டி உணவகங்கள் அமைக்கும் பணிகளும் துரிதகதியில் நடைபெற்று வருகின்றன.

ரயில்பெட்டி துரித உணவகத்தை விளம்பரப்படுத்தும் வகையில், கடந்த 28-ம் தேதி பிரியாணி பெல்லி போட்டி நடைபெற்றது. இதில், ‘அரைமணி நேரத்துக்குள் 6 பிளேட் பிரியாணி சாப்பிடுபவருக்கு முதல் பரிசாக ₹1 லட்சம், 4 பிளேட் சாப்பிடுபவருக்கு ₹50 ஆயிரம், 3 பிளேட் சாப்பிட்டால் ₹25 ஆயிரம் பரிசாக வழங்கப்படும். அனுமதி இலவசம்’ என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஒவ்வொரு பிளேட்டிலும் தலா 600 கிராம் எடையில் பிரியாணி இருந்தது.

இதுகுறித்து தகவலறிந்ததும் முண்டியடித்த ஏராளமான இளைஞர்கள், இளம்பெண்களுக்கு டோக்கன்கள் வழங்கி போட்டியில் பங்கேற்க வைக்கப்பட்டனர். பிரியாணி சாப்பிட பலமணி நேரம் மக்கள் திரண்டதால், 3 மணி நேரத்துக்கு மேல் போட்டி நீடித்தது. இதில் போட்டி சாப்பிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் 3 பிளேட்டுக்கு மேல் பிரியாணி சாப்பிட முடியாமல் திணறினர். அதற்குமேல் சாப்பிட்டவர்களில் ஒருசிலர் வாந்தி எடுத்து, போட்டியிலிருந்து பின்வாங்கினர்.

இதில் கால்டாக்சி டிரைவர் ஒருவர் 3 பிளேட் பிரியாணி சாப்பிட்டதும், 4வது பிளேட் சாப்பிட்டால்தான் 3வது பரிசு தொகை கிடைக்கும் என்று ஓட்டல் நிர்வாகத்தினர் கூறியுள்ளனர். இதில் அதிருப்தியான அவர் போட்டியிலிருந்து விலகிவிட்டார். அங்கு தனியார் நிறுவனத்தில் வேலைபார்க்கும் பெண்களில் சிலரும் பிரியாணி சாப்பிடும் போட்டியில் பங்கேற்றனர்.

எனினும், ஒருவராலும் அப்போட்டியில் 6 பிளேட், 4 பிளேட், 3 பிளேட் பிரியாணியை சாப்பிட்டு பரிசுத்தொகையை வெல்ல முடியவில்லை என்று ஓட்டல் நிர்வாகத் தரப்பில் கூறுகின்றனர். இப்போட்டியின்போது, அங்கு போக்குவரத்துக்கு இடையூறாக நின்றிருந்த 25 வாகனங்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர்.

இதனால் பிரியாணி சாப்பிடும் போட்டியில் பங்கேற்க வந்தவர்கள் பரிசுத்தொகையும் கிடைக்காமல் அபராதத் தொகை செலுத்த வேண்டியதாகி விட்டதே என்று பெருமூச்சுடன் கிளம்பி சென்றனர்.