"அய்யாசாமி! நீ 165 பாயிண்ட், புல் தாங்காது. நான் 239 மஸ்ட். நீ வச்சு ஆடு என்ற சோமு வை, எனக்குத் தெரியும் நீ கார்டைப்போடு என்றார் அய்யாசாமி.
சீடை,முறுக்கு பண்ணியாயிடுத்து.. வெல்லச்சீடை முடிந்ததும் கூப்பிடறேன்..செத்த சீர்காழிக்குப்போய் அக்காவத்திலே கொடுத்துட்டு வாங்கோ..என்றாள் சத்தமாக ருக்கு.சரி..சரி...ஆகட்டும். என்று திண்ணையிலிருந்து குரலை மட்டும் அனுப்பினார்.
காலையிலேர்ந்து எண்ணெய்லே கிடந்து நானும் கொதிக்கிறனே
கொஞ்சம் உபகாரம் செஞ்சாத்தான் என்ன ? சீட்டாட்டம் என்ன வேண்டியிருக்கு? என்றது காதில் விழுந்தும், கையில் மூன்று ஜோக்கர் இருந்தும் ரம்மி இல்லையே எனக்கவலையில் இருந்தார் அய்யாசாமி.
அய்யாசாமி அவுட்... என சோமுவின் குரல் கேட்டதும்.. வெளியே வந்த ருக்கு,
"ஆவுட்டாயிடுத்தோனோ! “ செத்தவன் கையிலே வெத்தலயக் குடுத்தக் கணக்கா “..கார்டை ஒழுங்காப் பிடிக்கவே தெரியாது.. கிளம்புங்கோ சீர்காழிக்கு என கையில் பட்சணங்கள் அடங்கிய கூடையைக் கொடுத்தனுப்பினாள்.
காரை எடுத்துண்டு கிளம்பியதும், டிசல் போடணும் என இண்டிகேட்டர் ஞாபகப் படுத்தியது.வழியிலே உள்ள பங்கில் நுழைந்தார்.
ஆயிரம் ரூபாய் டீசல் போடும்மா.. என்று கார்டை நீட்டினார்.
நினைவு பூரா கைக்கு வராத குயின் ஆட்டீனும், ஆஸ் கிளாவரும் கண்முன் வந்துபோக, சே! சோமுகிட்டே இப்படி தோத்துட்டோமே! என வருத்தம் வந்துதாக்க டெபிட் கார்டை வாங்கிண்டு சீர்காழிக்குப் போய்ச்சேர்ந்தார்.
" ஏண்ணா அவசரத்திலே செல்லைக் கூட எடுத்துண்டுப்போகல,"
போய் சேர்ந்தேளான்னு கவலையாயிடுத்து நேக்கு.
“போய்ச் சேர்ந்தால் ஏன் கவலைப் படப்போற நீ ? நன்னாயிருப்பேடி என்றதும்”..இங்கேதானே வரணும் .. வாங்கோ..
“ பாங்க் மெஸெஜ் வந்தது.. டீசல் என்னத்துக்கு இரண்டாயிரத்திற்குப் போட்டேள் ? எடுக்காத வண்டிக்கு ஏன் இரண்டாயிரத்திற்கு டீசல் ? காசை கரியாக்கிறதே வேலை என சீடையாய்ப் மொபைலில் பொறிந்தாள் ருக்கு.
இரண்டாயிரமா? என வியந்தவர்,காட்டிக்கொள்ளாமல் மிஷின் ஆயிரந்தானே காட்டித்து.. அந்தப்பெண் பில் வேற கொடுக்கலையே, ஏமாந்துட்டோமே! சரி திரும்ப போகும்போது கேட்டு விடுவோம் என்று கிளம்பினார்.
சந்திரன் அஷ்டமத்திலே இருக்கானோ !?
காலையிலேர்ந்தே ஒன்றும் சரியில்லையே! எத்தனையோ பேர் இருக்க. என்னிடம் ஏன் ? "ஏமாளினு" எழுதி் ஒட்டியிருக்கா ? என கேட்கத்தோன்றியது அய்யாசாமிக்கு..
.
பெட்ரோல்பங்க் வந்து அந்தப்பெண்ணைத் தேடிய அய்யாசாமி அருகிலிருந்தவரை கேட்டார், அவங்களா ? சுதா ,
மதியம் லீவு எடுத்துகிட்டு கிளம்பிவிட்டதாக கூறவும்..
புகார் பண்ணிடலாமா? வேண்டாம், நாம புகார் பண்ணி அவளுக்கு வேலை போயிடுத்துன்னா, பாவம். பேசுவோம், சரியான பதில் வரலைனா நிர்வாகத்திலே புகார் செய்துக்கலாம் என்ற முடிவில் அவளது வீடு எங்கியிருக்கு என கேட்டுப்பெற்றுக் கொண்டார் அய்யாசாமி.
“இதான் சார் சுதாவின் குடிசை, புருசன் ஓடிட்டான், குழந்தையை ஒன்னாப்பு சேர்த்திருக்கு..அவன் படிப்பிற்காகதான் உசிரை வச்சுகிட்டிருக்கு.” என்ன சார் விசயம்? வூட்டு வேலைக்கு ஆள் கீள் ஏதும் வேணுமா ? கேட்டாள் ஒருவர் இல்லை, ஆமாம் ஆமாம் பார்க்த்தான் வந்தேன். என்றார் அய்யாசாமி.
தெரு முனையிலே உள்ள ஸ்க்கூலுக்குதான் போயிருக்கு என்றாள் பக்கத்து குடிசைவாசி.
தனியார் தொடக்கப் பள்ளியில் மாணவர்கள் கூட்டமாக
அமர்ந்திருந்தனர். எதிரே கோபியர்கள் போல சிலர் அலங்கரித்துக் கொண்டு அமர்ந்திருந்தனர். கிருஷ்ணர் தனது சகாக்களுடன் வெண்ணெய் திருடும் காட்சியை நடித்துக்காட்டிக் கொண்டிருந்தனர் குழந்தைகள்.
பானையிலிருந்த வெண்ணெயை எடுத்து தானும் உண்டு அனைவரின் வாயிலும் திணித்து,முகத்திலும் பூசி சிரித்தபடி குழந்தை அம்மாவைப் பார்க்க,எல்லோரும் மகிழ்ச்சி கடலில் மூழ்கி கைதட்டினர்.
ஆனந்தக் கண்ணீரோடு குழந்தையை அம்மா பார்த்ததும்,குழந்தை அம்மாவிற்கும் வெண்ணையை எடுத்து நீட்டியபடி நின்றது..
போங்க.. வாங்குங்க.. என அங்குள்ளவர்கள் அம்மாவை அழைத்தனர். குழந்தையிடம் சென்று வெண்ணெய் வாங்கித் திரும்பும்போது அய்யாசாமியைப் பார்த்துவிட்டாள் சுதா.
“சார் என்னை மன்னிச்சிடுங்க..கையிலே சுத்தமா காசு இல்ல சார்... ஸ்கூல்ல வேற, மகனுக்கு கிருஷ்ணர் வேசம்போட்டு ஒரு கிலோ வெண்ணை வாங்கிவானு சொல்லிட்டாங்க..
"அவனோட சந்தோசத்திற்கு முன் எதுவும் தப்பாகத்தெரியல சார்" " திருப்பிக் கொடுத்திடறேன் சார் இரண்டுமாசத்திலே" என்னை மன்னிச்சிடுங்க..என்றாள் சுதா.
அமைதியாக இருந்த அய்யாசாமி, "எனக்கும் கொஞ்சம் வெண்ணைய் கொடுக்கச் சொல்லு அவன் கையால" அது ..போதும். என்று ஆசையாய் கேட்டுச் சாப்பிட்டுவிட்டு புறப்பட்டார்.
குழந்தையின் கால்களை கோலமிட்டு,பலகையில் பால கிருஷணனை அலங்கரித்து பூஜைக்கு தயாராக இருந்த ருக்கு , வாங்கோ தீபாரதணை பண்ணலாம் என்று கூப்பிட, ஏற்கனவே 'நைவேத்யம்' ஆகி சாப்பிட்ட வெண்ணெய் அவனது வாயின் ஓரத்தில் தெரிந்தது அய்யாசாமிக்கு.
உங்க முகத்திலே ஒரு 'பொலிவு' தெரியறதே இன்றைக்கு ? - கேட்டாள் ருக்கு.
மனத்திற்குள் 'ரசவாதம்' நடந்துக் கொண்டிருந்தது.அய்யாசாமிக்கு.
Leave a comment
Upload