திருவள்ளூர் மாவட்டத்தில் அடங்கிய பொன்னேரி, மீஞ்சூர், பழவேற்காடு, கும்மிடிப்பூண்டி, பெரியபாளையம், ஊத்துக்கோட்டை, திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை, சோழவரம், செங்குன்றம் உள்பட சிறு நகரங்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமப் பகுதிகளில் அரசு மற்றும் மாநகர பேருந்துகளின் சேவைகள், போதிய வருமானம் இல்லாத காரணத்தை மையமாக வைத்து வெகுவாக குறைக்கப்பட்டு விட்டன. தற்போது பெரும்பாலான கிராமப் பகுதிகளில் நேரடி சேவைக்கு பதிலாக, ஒன்றிரண்டு மட்டுமே இணைப்பு பேருந்துகள் ஆக இயக்கப்படுகின்றன.
குறிப்பாக பெரியபாளையம் பேருந்து நிலையத்துக்கு சென்னை கோயம்பேடு, திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, ஆவடி, செங்குன்றம் ஆகிய பகுதிகளுக்கு சென்னை மாநகர போக்குவரத்து பணிமனைகளில் குறைந்த எண்ணிக்கையில் மாநகர பேருந்துகள் இயக்கப்படுகிறது. மேலும் பெரியபாளையத்தில் இருந்து ஆத்துப்பாக்கம், அரியப்பாக்கம், தண்டலம், தும்பாக்கம், சூளைமேனி ஆகிய கிராமப் பகுதிகளுக்கு சென்று வரும் அரசு பேருந்துகளை அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இவர்கள் அனைவரும் தமிழக அரசு வழங்கிய இலவச பஸ் பாஸ்களை மட்டுமே நம்பியுள்ளனர்.
இதுபோன்ற கிராமப்புற பகுதிகளில் இருந்து இயக்கப்படும் ஓரிரு அரசு பேருந்துகளும் காலை, மாலை வேளைகளில் குறிப்பிட்ட நேரத்துக்கு முறையாக இயக்கப்படுவதில்லை. இதனால் கிராமப்புற மாணவர்கள் பிரதான நெடுஞ்சாலைக்கு பல கிமீ தூரம் நடந்து வந்து, அவ்வழியே செல்லும் அரசு பேருந்தில் அபாயகர நிலையில் தொற்றிக் கொண்டோ, ஒரு காலை பேருந்து படிக்கட்டில் வைத்து, மறுகாலை சாலையில் தேய்த்தபடி சென்று வருகின்றனர். இதே அவலநிலைதான் கிராமப் பகுதிகளில் இருந்து சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரப் பகுதிகளில் கூலிவேலைக்குச் சென்று வருபவர்களுக்கும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
பேருந்து படிக்கட்டுகளில் கால்வைக்க இடம் கிடைக்காத பள்ளி மாணவர்கள், பக்கவாட்டு ஜன்னல்களில் துருப்பிடித்த இரும்புக் கம்பிகளைப் பிடித்துக்கொண்டு தொங்கியபடியோ அல்லது ஜன்னல் கம்பியில் கால்வைத்து மேலேறி நின்று, அரசு பேருந்தின் மேற்கூரை பக்கவாட்டு கம்பி வளையங்களை பிடித்தபடி அபாயகர நிலையில் சாகசப் பயணமாக பள்ளிகளுக்கு சென்று வரும் அவலநிலை நீடித்து வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன் திருத்தணி பகுதியில் அரசு பேருந்தில் பள்ளி மாணவர்கள் அபாயகர நிலையில் பேருந்தின் மேற்கூரை மற்றும் பக்கவாட்டு ஜன்னல் கம்பியை பிடித்தபடி அபாயகர நிலையில் சாகசப் பயணம் செய்வது குறித்து நாளேடுகளில் படத்துடன் செய்தி வெளியானது. மறுநாளே திருத்தணி போலீசார், அரசு பேருந்தில் அபாயகர நிலையில் சென்ற பள்ளி மாணவர்களை பிடித்து அறிவுரை கூறி, விழிப்புணர்வு ஏற்படுத்தி அனுப்பி வைத்தனர்.
ஓசியில் பஸ் பாஸ் கொடுக்கவும் வேண்டாம் பஸ் இல்லாமல் மக்களை அவதிப்படுத்தவும் வேண்டாம்.
அதே சமயம் மாணவர்கள் தங்கள் உயிரைப் பற்றிய கவலையில்லாமல் பயணிப்பது பெற்றோர்களுக்கு புளியைக் கரைக்கிறது.
என்ன தான் தீர்வு ??
Leave a comment
Upload