வரலாற்றுச்சிறப்பு வாய்ந்த சிங்கிரிகுடி ஶ்ரீ லட்சுமி நரசிம்மர் கோயில் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம், புதுச்சேரி அருகே அபிஷேகப்பாக்கத்தின் அருகே அமைந்துள்ளது. இந்த ஊருக்கு சிங்கர்குடி, சிங்கிரிகுடி, கிருஷ்ணாரண்ய க்ஷேத்திரம் என்னும் புராணப் பெயர்கள் உள்ளன. மக்கள் இதை சிங்கர்கோயில் என்றும் அழைக்கின்றனர்.
சிங்கிரிகுடி ஶ்ரீ லட்சுமி நரசிம்மர் கோயில் அஷ்ட (எட்டு) நரசிம்ம ஸ்தலங்களில் ஒன்று. இந்த கோயில் விஷ்ணுவின் அவதாரமான நரசிம்மருக்குப் பல்லவ வம்சத்தால் கி.பி 7 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது.
இங்கு நரசிம்மர் பதினாறு திருக்கரங்களுடன் இரணியனை சம்ஹாரம் செய்த நிலையில் உக்கிரமாக அருள் பாலிக்கிறார். இவ்வாறு நரசிம்மர் பதினாறு திருக்கரங்களுடன் தோன்றும் இடங்கள் இரண்டு. ஒன்று சிங்கிரிகுடி மற்றொரு தலம் இராஜஸ்தானில் உள்ளது.
சிங்கிரிகுடியில் உள்ள நரசிம்மர் பூவரசங்குப்பம், பரிக்கல் ஆகிய இடங்களில் உள்ள நரசிம்மர் கோவில்களை நோக்கி மேற்கு திசையில் காட்சியளிக்கிறார்.
இந்த மூன்று கோவில்களையும் ஒரே நாளில் தரிசிப்பது மிகவும் புண்ணியமாகக் கருதப்படுகிறது.
ஸ்தல புராணம்:
புராணத்தின் படி, சூரிய வம்சத்தைச் சேர்ந்த நிமி சக்ரவர்த்தி அதிக சக்திகளைப் பெற யாகம் செய்ய நினைத்தார். இந்திரனை விட அதிக சக்திகளைப் பெறுவதற்காக வசிஷ்ட முனிவரிடம் யாகம் செய்யுமாறு வேண்டினார். வசிஷ்ட முனிவர் யாகம் செய்ய இயலாமையை வெளிப்படுத்தினார். ஆனால், யாகம் செய்வதில் உறுதியாக இருந்த நிமி சக்ரவர்த்தி கௌஷிக முனிவரின் உதவியுடன் யாகத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்த பிறகு, ஓய்வெடுக்க விரும்பி, தனது அரண்மனைக்குச் சென்றார். தன்னைச் சந்திக்க யாரையும் அனுமதிக்கக் கூடாது என்று தன் காவலர்களுக்குக் கட்டளையிட்டான். இத்தருணத்தில் வசிஷ்ட முனிவர், அரசனுடன் சந்திப்பை மேற்கொள்ள விரும்பி, அவரை அரண்மனைக்குள் அனுமதிக்குமாறு காவலர்களிடம் கேட்டுக் கொண்டார். காவலர்கள் அனுமதி மறுத்தனர். இந்தச் செயலைக் கண்டு கோபமடைந்த வசிஷ்ட முனிவர், நிமி சக்ரவர்த்தி தன் அடையாளத்தை இழந்து, உடல் இல்லாமல் வளிமண்டலத்தில் அலையும்படி சபித்தார். யாகத்தின் மூலம் பலம் பெற்ற நிமி சக்ரவர்த்தியும் வசிஷ்ட மகரிஷியின் உடலையும் ஆன்மாவையும் பிரிக்கும்படி சபித்தார். இவ்வாறு வசிஷ்ட முனிவரும், நிமி சக்ரவர்த்தி வளிமண்டலத்தில் இலக்கின்றி உடலில்லாமல் சுற்றிக் கொண்டிருந்தனர். நிமி சக்ரவர்த்தி தனது ஆன்மாவை உடலிலிருந்து பிரித்ததால், தன் வாழ்க்கையை இனி உயிர்ப்பிக்கத் தேவையில்லை என்று உணர்ந்தார், மேலும் பக்தர்கள் மூலம் இறைவனைத் தரிசனம் செய்ய வேண்டும் என்று தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார்.
வசிஷ்ட முனிவர் சாப விமோசனம் பெறப் பிரம்மாவின் உதவியை நாடினார். பிரம்மாவின் கட்டளையின்படி, இருவரும் சிங்கிரி குடியின் கிருஷ்ணரண்ய க்ஷேத்திரத்தில் தவம் மேற்கொண்டார். நிமி சக்ரவர்த்தியின் பக்தியில் மகிழ்ந்த நரசிம்மர் அவருக்குத் தரிசனம் அளித்தார். வசிஷ்ட முனிவர் இத்தலத்தில் சாப விமோசனம் பெற்றார்.
வசிஷ்ட முனிவர் சாப விமோசனம் பெற்ற ஸ்தலமாக இந்த க்ஷேத்திரத்தை விவரிக்கும் ஒரு குறிப்பு உள்ளது. இந்த க்ஷேத்திரத்தில் உள்ள உக்கிர நரசிம்ம ஸ்வாமியின் ஆசீர்வாதத்தைப் பெறுவதற்காக பிரகலாதன் சிங்கிரிகுடிக்கு வந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன.
ஸ்தல வரலாறு:
16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த முழுமையடையாத கல்வெட்டு ஒன்று கோயில் தூணில் கண்டறியப்பட்டுள்ளது. இங்குள்ள கருவறை மட்டும் பழமையானது என்று தெரியவருகிறது. தாயார் சன்னதி, ஆண்டாள் சன்னதி போன்றவை பிற்காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம். இக்கோவில் நரசிம்ம மந்திரத்தில் உள்ள எழுத்துக்களைக் கொண்டது என்பதைச் சிறப்பாகச் சொல்கிறார்கள். இந்தக்கோவில் ஆறாம் நூற்றாண்டில் பல்லவர்களால் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதன் பிறகு 10- ம் நூற்றாண்டில் இராஜராஜசோழன், 16-ம் நூற்றாண்டில் கிருஷ்ணதேவராயரால் கோவில் திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன. இராஜராஜசோழன், விஜயநகர மன்னர் கிருஷ்ணதேவராயர் ஆகியோர் கோவில் திருப்பணிகள் பல செய்துள்ளனர். ஆற்காடு நவாப் மற்றும் பிரெஞ்சு அதிகாரிகள் நரசிம்மருக்கு அணிகலன்கள் அளித்துள்ளனர். இத்திருக்கோவில் சோழர் காலமான கி.பி. 1051ம் ஆண்டில் அரியூர் ஆழ்வார் சிங்கவேள் குன்றம் என்று குறிக்கப்பட்டுள்ளது.
ஸ்தல அமைப்பு:
இந்த கோயில் மேற்கு திசை நோக்கிய ஐந்து நிலை இராஜகோபுரத்துடன் அமைந்துள்ளது. கோபுர வாயிலைக் கடந்து சென்றால் இடது புறம் வேப்ப மரத்தடியில் சிறிய விஷ்ணு துர்க்கை சந்நிதியும் வலதுபுறம் நாகர் சந்நிதியும் உள்ளன.
இந்த சந்நிதிக்கு அருகில் ஒரு தீர்த்தக்குளம் அமைந்துள்ளது. அடுத்து கிழக்கு திசை நோக்கியவாறு நாமத்துடன் தும்பிக்கை ஆழ்வார்(விநாயகர்)வீற்றிருக்கிறார். இவரை வழிபட்டு உள்ளே சென்றால் த்வஜஸ்தம்பம், பலிபீடம் மற்றும் தனி மண்டபத்தில்
கருடாழ்வார் காட்சி தருகிறார். கோயிலின் வடக்கு வெளிச் சுற்றில் ஆண்டாள் தனிச்சந்நிதியிலும், தெற்குச் சுற்றில் கிழக்கு திசை நோக்கியவாறு கனகவல்லித் தாயாரின் சந்நிதியும் உள்ளன. தாயார் சந்நிதிக்கு அருகிலேயே தெற்கு நோக்கியபடி
ஐம்பொன் சிலைகளான சீதா, இராமர், லட்சு மணர், ஆஞ்சநேயரைத் தனி சந்நிதியில் தரிசிக்கலாம். உள் பிரகாரத்தில் விஷ்வக்சேனர், பன்னிரண்டு ஆழ்வார்கள், மணவாள மாமுனிகள் ஆகியோர் வீற்றிருக்கின்றனர். இந்த கோயிலில் ஒரே கருவறையில் மூன்று நரசிம்மர்கள் அருள்பாலிக்கிறார்கள்.
ஸ்ரீஅஹோபில மடத்தில் 4வது தலைமை பீடாதிபதியின் பிருந்தாவனமும் இங்குள்ளது. இங்கு ஆஞ்சநேயர் பக்த ஆஞ்சநேயர் அருள்பாலிக்கின்றார்.
கருவறையில் மூன்று மூலவர்கள்:
நரசிம்மர் தனது பக்தன் பிரகலாதனுக்காக இரண்யகசிபுவை வதம் செய்தது போலவே, உக்கிர தோற்றத்தில் இறைவன் காட்சியளிக்கும் இடங்களில் ஒன்றுதான் சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவில். இக்கோயிலில் உக்கிர தோற்றத்தில் நரசிம்மர் மேற்கு திசை பார்த்த வண்ணம் அருள்பாலிக்கிறார். அவர் வீற்றிருக்கும் கருவறை விமானம், பாவன விமானம் என்று அழைக்கப்படுகிறது.
மூலவர் லட்சுமி நரசிம்மர் (உக்கிர நரசிம்மர்):
இந்த நரசிம்மர் சிங்க முகத்துடனும், மனித உடலில் பதினாறு கரங்களுடனும் கம்பீரமாகக் காட்சியளிக்கிறார். ஸ்ரீநரசிம்மர் தன் கண்களை உருட்டுவது போன்றும், அடர்ந்த மீசையை உடையவராகவும், அந்த மீசையை முறுக்குவது போலவும், தம் கோரைப் பற்களைக் காண்பிப்பது போன்றும் காட்சியளிக்கிறார். பதினாறு கரங்களில், ஐந்து கரங்கள் ஹிரண்யகசிபுவை கொல்வது போன்றும், மூன்று கரங்கள் பக்தர்களைக் காப்பது போலவும் அருள்பாலிக்கின்றார். அவருடைய இடது கரம் அந்த அரக்கனுடைய தலையை தம் மடி மீது அழுத்துவது போன்றும், மற்றொரு வலது கரம் அசுரனுடைய தொடையை அழுத்துவது போன்றும், மற்ற கரங்களினால் அரக்கனுடைய கால்களை நன்றாக அழுத்தி மடித்திருப்பது போன்றும், மற்ற இரு கரங்களினால் இரண்யனுடைய மார்பைக் கிழித்து கொல்வது போலவும் அமைந்துள்ளது. மேல்கை அபய முத்திரையாகவும், தன்னுடைய பக்தர்களைக் காப்பது போன்றும், இடது மேல்கை அவருடைய அவதார ரூபத்தை உணர்த்துவதாகவும் அமைந்துள்ளது. வலது திருக்கரத்தால் அவருடைய அன்பிற்குரிய குழந்தை பிரகலாதனை ஆசீர்வதிப்பது போலவும், மற்ற கரங்களால் பலவிதமான ஆயுதங்களை ஏந்தியிருப்பது போலவும் காட்சி தருகின்றார். மூலவருக்குக் கீழே இடது புறம் வதம் செய்யப்பட இரணியன் மனைவி நீலாவதியும் வலப்புறம் பிரகலாதன், வசிஷ்டர், சுக்கிரன் மற்றும் மூன்று அசுரர்களும் காட்சி தருகிறார்கள். இங்கே இருக்கும் உற்சவ மூர்த்தி ஸ்ரீதேவி, பூதேவி சமேத லட்சுமி நரசிம்மர் என்று அழைக்கப்படுகிறார்.
மூலவர் யோக நரசிம்மர், பாலநரசிம்மர்:
அதே, கருவறையில் யோக நரசிம்மர், பாலநரசிம்மர் சிறிய வடிவில் வடக்கு நோக்கி காட்சி தருகிறார்கள்.
ஸ்தல விருட்சம் : வில்வ மரம்.
ஸ்தல தீர்த்தங்கள் : ஜமதக்னி, இந்திரா, ப்ருகு, வாமன மற்றும் கருட தீர்த்தங்கள் ஆகும்.
ஸ்தல சிறப்புகள் :
ஒரே கருவறையில் மூன்று நரசிம்மர் அருள்பாலிப்பதைக் காண்பது அரிது. இதனால் இத்திருக்கோயில் மற்ற நரசிம்மர் ஸ்தலங்களை விடச் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
ஸ்ரீவைகாசன ஆகமவிதிகளின் படியும், ஸ்ரீநரசிம்ம சாமியின் அனுஷ்டான விதிகளின் படியும் இக்கோவிலில் பூஜைகள் நடைபெறுகின்றன.
திருவிழாக்கள்:
இக்கோயிலில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் சிறப்பாக நடைபெறும்.
சித்திரை வைகாசி பிரம்மோத்ஸவம் (10நாட்கள்) கொண்டாடப்படுகின்றன. நரசிம்ம ஜெயந்தி நாளில் தேர் திருவிழா,
ஐப்பசியில் பவித்ர உற்சவம்,
வைகுண்ட ஏகாதசியன்று காலையில் சொர்க்க வாசல் திறப்பு, மாலையில் கருட சேவை,
மாசி மகத்தன்று புதுச்சேரி கடலில் தீர்த்தவாரி (பெருமாள் உற்சவமூர்த்தி பாண்டிச்சேரி கடற்கரைக்கு ஊர்வலமாகப் புறப்பாடு )
ஜனவரி மாதம் மாட்டுப்பொங்கலன்று தீர்த்தவாரி. மற்றும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் நடைபெறும் முக்கிய விழாக்கள்.
பிரார்த்தனை, நேர்த்திக்கடன்:
நவக்கிரக தோஷ நிவர்த்தியாகும் ஸ்தலம் இது என்று சொல்லப்படுகிறது. மன நிலை பாதிப்பு, கடன் தொல்லை, திருமணத்தடை, குழந்தை பாக்கியம், எதிரிகளால் தொந்தரவு, கிரக தோஷம் உள்ளவர்கள் இங்குப் பிரார்த்தனை செய்கிறார்கள். வேண்டுதல் நிறைவேறச் செவ்வாய்க் கிழமைகளில் நெய்விளக்கு ஏற்றி, துளசி அர்ச்சனை செய்கிறார்கள்.
வேண்டுதல் நிறைவேறியதும், நரசிம்மருக்கும் தாயாருக்கும் திருமஞ்சனம் செய்து புது வஸ்திரம் சாற்றுகிறார்கள். பக்தர்களுக்கு அன்னதானம் செய்வது தலத்தின் முக்கிய நேர்த்திக்கடனாக உள்ளது.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
இந்த கோயில் தினசரி காலை 7.00 மணி முதல் மதியம் 12.00 வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 9.00 மணி வரையில் கோயில் திறந்திருக்கும். கோவில் திருவிழா மற்றும் விசேஷ
நாட்களிலும் கோயில் திறந்திருக்கும் நேரத்தில் மாற்றங்கள் இருக்கும்.
கோயிலுக்குச் செல்லும் வழி:
புதுச்சேரியிலிருந்து கடலூர் செல்லும் சாலையில் 11 கி.மீ தொலைவிலும், கடலூரிலிருந்து புதுச்சேரிக்குச் செல்லும் வழியில் 14 கி.மீ தொலைவிலும் உள்ள தவளக்குப்பம் வழியாக மேற்கு நோக்கிச் செல்லும் வழியில் 1 கி.மீ தொலைவில் சிங்கிரிகுடி (அபிஷேகப்பாக்கம்) லட்சுமி நரசிம்மர் கோவில் அமைந்துள்ளது. பாண்டிச்சேரி-கடலூர்-பாண்டிச்சேரி பேருந்து வசதி உள்ளது. (தவளை குப்பத்தில் இறங்கவும்)
சிறப்பான வாழ்வைத் தந்தருளும் சிங்கிரிகுடி ஶ்ரீ லட்சுமி நரசிம்மரைத் தரிசித்து அவரது அருளினைப் பெறுவோம்!!
https://youtu.be/NnzGXgLlw2g?si=TL-6N_51nxppGFkp
அடுத்த வாரம்
பதவி உயர்வு தரும் பரிக்கல் ஶ்ரீ லட்சுமி நரசிம்மர் கோயில்!!
Leave a comment
Upload