ஓதி நாமங்குளித்து உச்சி தன்னால்
ஓளி மாமலர் பாதம் நாளும் பணிவோம்
நமக்கே நலமாதலின் அதுதாரான் எனிலும் தரும்
அன்றியும் அன்பராய் போதும் மாதே
தொழுதும் அவன் மன்னு புல்லாண்ணியே
- (திருமங்கையாழ்வார்)
பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 96-வது தலம். ஆண்டாள், திருமிசையாழ்வார், குலசேகராழ்வார் சேதுவைப் பற்றி பாடியுள்ளனர்.
சேது அணைகட்டும் நோக்கத்தில் வருணனை நோக்கி கடற்கரையில் தர்ப்பைப் புல் மீது ராமர் ஒரு வாரம் சயனித்து இருந்ததாக இராமாயணம் கூறுகிறது. தர்ப்பைப் புல் மீது ராமர் பள்ளி கொண்டதால் இத்தலத்திற்கு புல்லணை என்று பெயர். மேலும் இதற்கு புல்லாரண்யம், ஆதிசேது, திருவணை தர்ப்பசயனம், நளசேது, இரத்தினகா க்ஷேத்திரம், சரணாகதி க்ஷேத்திரம், புல்லங்காடு என்ற பெயர்களும் உண்டு. இத்தலத்துப் பெருமாளை இராமர் பூஜித்ததால், இத்தலத்தை பெரிய பெருமாள் தலம் என்று பெயர்.
மூலவர் பெயர் : ஆதிஜெகன்நாதன்
தெற்கு சமுத்திர கரை ஓரத்தில் புல்லாரண்யம் என்ற தலத்தில் பெரிய வனம்(காடு) இருந்தது. இதில் மரங்களும், பூச்செடிகளும், விலங்குகளும் இருந்தன. இதில் உயிர்களிடத்தே கருணையும், ஈசனிடத்தில் பக்தியும் கொண்ட ‘புல்லர்’ என்னும் ஒரு ரிக்ஷி இருந்தார். அவர் தினமும் சக்கரதீர்த்தத்தில் நீராடி ஓம(ஹோமம்)ங்களை முடித்து சிரத்தையுடன் நாராயணனை வணங்கி ஆயிரத்து முன்னூறு வருடம் தவமிருந்தார். அவ்விடத்தில் அசுவத்த (அரசமரம்) விருக்ஷம் ஒன்று இருந்தது. புல்லரின் தவத்தை ஆசீர்வதிப்பது போல் சதுர்புஜங்கள், பஞ்சாயுதங்களுடன் தேவியர் மூவரோடு காட்சியளித்தார்.
நாராயணனைப் பார்த்ததும் அவர் பாதங்களில் விழுந்து வணங்கி ‘தங்களுடைய சேவையால் எனது ஜனனமரணங்கள் ஒழிந்தன. எனக்கு காட்டிய இப்பெருங்கருணையை தங்களை வணங்கும் எல்லோருக்கும் காட்சியளித்து, அவர்கள் ஜீவிக்கும் பொருட்டு இந்த விருக்ஷத்தடியில் எப்பொழுதும் எழுந்தருளி சேவை சாதிக்க வேண்டும்’ என வரத்தை வேண்டினார். அதன்படி நாராயணன் ஸ்ரீ ஜெகன்நாதன் பெயரில் ஸ்ரீபூமி, நீளாதேவிகளுடன் அரசமரத்தடியில் வீற்றிருந்து சேவை சாற்றி வருகிறார்.
கோவில் தொடர்புடைய புராணங்கள் ஏராளமாக இருக்கின்றன. கோவிலுக்கு வரும் போது தலபுராணங்களை தவறாமல் படியுஙகள்.
பிரகாரங்கள்
தேரோடும் வீதி, மாடவீதியை சேர்த்து ஐந்து பிரகாரங்கள். மூன்றாம் பிரகாரத்தில் ஸ்ரீ ஆதிஜகன்நாதன் துவஸ்தம்பமும் (கொடிமரம்) பலிபீடத்துடன் உள்ளார். கொடிமரம் பக்கத்தில் இருபக்கமும் பெரிய கற்கம்பங்களில் சில ஸ்தானிகளின் பதுமை வடிவங்களில் பெயர்களுடன் உள்ளன. வடக்கு சரகில் வாகன மண்டபம், தெற்கு பகுதியில் யாகசாலை வடக்கு பிரகாரம் தென் சரகில் வெளிப்பக்கம் பரமபதவாசல். இதன் கீழ்ப் பகுதியில் ஸ்ரீபட்டாபிராமர் சன்னதி.
இரண்டாம் பிரகாரத்தில் தாயார் சன்னதி நுழைவு வாயிலின் தென்கிழக்கு மூலையில் மடப்பள்ளி. வெளிப்பக்கத்தில் உக்கிராண அறையும் ஆழ்வார் சன்னதியும் உள்ளன. ஆழ்வார் சன்னதியில் நம்மாழ்வார், திருப்பாணழ்வார், மதுரகவி ஆழ்வார், பொய்கை ஆழ்வார், பெரியாழ்வார் என பதினொரு ஆழ்வார்கள் இருந்தாலும் பெரியாழ்வார், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் என மூவருக்கு மட்டும் உற்சவர்கள் உள்ளனர். அதையொட்டி சிவகங்கை சமஸ்தான உக்கிராண அறைம், ஆதிஜெகன்நாத பெருமாளின் யாகசாலையும் உள்ளது. தெற்கு பிரகாரத்தில் தாயார் சன்னதி. இதில் ஸ்ரீபத்மாஸனித் தாயார் வரதாபய ஹஸ்தங்களுடன் சேவை சாற்றுகிறார். இதற்கு அடுத்து ஸ்தல விருட்சம் அரசமரம். வடமேற்கில் கோதை நாச்சியார் சன்னதியும், வடக்கு பிரகாரத்தில் பெருமாள் சன்னதி. வடகிழக்கே சயனராமர், பட்டாபிராமர் சன்னதிகள் உள்ளன.
முதலாம் பிரகாரம் பெருமாள் சன்னதிக்கு எதிரில் கருட மண்டபமும், வீற்றிருந்த நிலையில் பெரிய திருவடி(கருடன்) சன்னதி. மண்டபத்தின் வடக்கே ஏகாதசி மண்டபம். பின்பக்கம் உள்ள சன்னதியில் ஸ்ரீயோக நரசிம்மர் மூலவராகவும், உற்சவராகவும் காட்சியளிக்கிறார். தெற்கே தாயார் சன்னதி செல்லும் வாயில் உள்ளது.
பெருமாளின் கர்ப்பகிரகம். விமானத்தின் தென்பிரகாரத்தின் சற்று உயர்ந்த பகுதியில் ஸ்ரீலட்சுமி நரசிம்மர். வடக்குப் பகுதியில் ஸ்ரீவிக்ஷ்வக்சேனர் காட்சி தருகிறார்.
அர்த்த மண்டபத்திற்குள் ஸ்ரீஆதி ஜகன்நாதர் ஸ்ரீபூமி, நீளா தேவியர்களுடன் வீற்றிருக்கும் கோலத்தில் சேவை சாற்றுகிறார்.
இத்தலத்தில் நின்றும், இருந்தும் (அமர்ந்தநிலை) கிடந்தும் (படுத்தநிலை) என மூன்று வடிவங்களில் சேவை சாற்றுவது சிறப்புக்குரியது.
இத்தலத்தை தட்சிண ஜெகன்நாதம் என்று அழைக்கப்படுகிறது. ஓடிசா மாநிலம் பூரியில் உள்ள ஜகன்நாதர் உடலில் மேல் பாதியளவுடன் சேவை சாற்றுகிறார். ஆனால் இங்குள்ள ஜகன்நாதர் முழுவடிவில் சேவை சாற்றுகிறார்.
தர்ப்பசயன சன்னதிக்கு வடக்கே வெளிமண்டபத்தில் ஸ்ரீசந்தான கோபாலன் சன்னதி. எட்டு யானைகள், எட்டு நாகங்களுடன் கூர்ம(ஆமை)த்தை ஆசனமாகக் கொண்டுள்ள ஆதிசேக்ஷன் மீது கண்ணன் மூலவர் வடிவில் சேவை சாற்றுகிறார். இவரை பித்ருக்களின் மகிழ்ச்சிக்காகவும், புத்திர பாக்கியத்திற்காகவும், தசரதன் இங்கு பிரதிக்ஷ்டை செய்ததாக தலபுராணம் கூறுகிறது. இங்கு எம்பெருமானை வேண்டி நாகப்பிரதிக்ஷ்டை செய்தால். புத்திரப் பேரு இல்லாதவர்களுக்கு நல்ல புத்திரன் பிறப்பதுடன் ஏழு தலைமுறைக்கும் நல்ல புத்திரர்கள் பிறப்பார்களாம்.
பக்தர்கள் சர்ப்பசாந்தி, சர்ப்ப ஹோமம் செய்கின்றனர். இங்கு பிரதிக்ஷ்டை செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான நாகப்பாம்பு சிலைகள் தல விருட்சமான அரசமர பக்கத்தில் வைக்கப்பட்டுள்ளன.
புல்லவர், கண்ணுவர், காலவர் முதலிய முனிவர்கள் இத்தல பெருமாளை வணங்கி பேரு பெற்றவர்கள். பெரிய நம்பிகள், புல்லங்காடார் (பதிணென் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான கைக்கிளைப் பாடியவர்) இத்தலத்தில் அரிச்சந்திர நாடகத்தை அரங்கேற்றியவர் வீர ஆசு கவிராயர் என்பவர்.
தாயாருக்கு புடவை சாத்தி, பெருமாளுக்கு துளசிமாலை அணிவித்து ஆராதனை செய்து பக்தர்களுக்கு அன்னதானம் செய்தால் பலன் கிடைக்கும். இத்தலத்தில் இங்கு வந்து தக்க ஒருவருக்கு அன்னதானம் அளித்தால் கயை க்ஷேத்திரத்தில் ஒரு லட்சம் பேருக்கு அன்னதானம் அளிப்பதும், காசியில் இரண்டு லட்சம் பேர்களுக்கு அன்னதானம் செய்வதும், பிரயாகையில் ஏழு லட்சம் பேர்களுக்கு அன்னதானம் செய்வதை விட அதிகப் பலனைத் தரவல்லது என பெருமாளே சீதையிடம் சொன்னார் என தலபுராணம் கூறுகிறது.
சேது சமுத்திரத்தில் நீராடினால் நம் முன்ஜென்ம பாவங்கள் விலகுவதுடன் கிரக தோக்ஷங்களும் விலகும் என்பது ஐதீகம்.
தமிழ்நாடு அரசு வெளியிடப்பட்ட கல்வெட்டுப் பதிப்பில் நெ.392 முதல் 403 வரை 12 பிரிவுகள் கொண்ட கல்வெட்டுகள் கோயில், தலம் பற்றிய விவரங்களுடன் சேதுபதி பரம்பரையினரால் வழங்கப்பட்ட தாமிர பட்டயங்கள், ஓலைச்சுவடிகள் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளன. இக்கோயில் இராமநாதபுரம் அரச பரம்பரையினர்களுக்கு ஆதீனமான இராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தான நிர்வாகத்திலும் தமிழ்நாடு அரசு இந்து அறநிலைய மேற்பார்வையிலும் உள்ளது.
திருவிழாக்கள் :
பங்குனி - ஸ்ரீஆதிஜகன்நாத பெருமாள் உற்சவம் ; சித்திரை - ஸ்ரீபட்டாபிராமர் பிரமோற்சவம் ; ஆடி - சூடி கொடுத்த நாச்சியார் உற்சவம் ; ஆவணி – திருப்பவித்திரோத்ஸவம் ; மார்கழி - பகல்பத்து உற்சவங்கள் ; புரட்டாசி - ஸ்ரீதாயார் நவராத்திரி உற்சவம் விஜயதசமி மற்றும் ஆழ்வார், ஆசார்யர்கள் திருநட்சத்திர உற்சவங்கள்.
தினமும் காலை, உச்சிகாலம், சாயரட்சை, அர்த்தஜாமம் என நான்கு கால பூஜைகளும், தென்கலை சம்பிராதயப்படி வைகானஸ, ஆகம பூஜைகள் நடைபெறுகின்றன.
தினமும் காலை 6.30 மணி முதல் 12.30 மணி வரையிலும்; பிற்பகல் 3.30 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் கோயில் திறந்திருக்கும்.
இராமநாதபுரத்திற்கு தெற்கில் 8 கி.மீட்டர் தூரத்தில் திருப்புல்லாணி. இத்தலத்திலிருந்து 2 கி.மீட்டர் தொலைவில் ஆதிசேது (கடல்) உள்ளது.
Leave a comment
Upload