மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்.
ஆனால் வீட்டு வேலை செய்பவர் அமைவது யார் கொடுக்கும் வரம்??
சொல்வீர்களா?
கவிஞர்களும், கவிதைப் பிரியர்களும், தவளைகளை அடுத்து, வாயால் கெடும் ரகம். எனக்குத் திருமணமான புதிதில், புதுமனைவியை அசத்த, நான் படித்து ரசித்த கவிதைகளைச் சொல்லிய என் மேதாவிலாசத்தில் இருந்த வில்லங்கத்தை அப்போது நான் உணரவில்லை.
ஒருநாள், வேலைக்காரியை பற்றிய கல்யாண்ஜியின் ஆச்சரியமான கவிதையை அவளுக்குச் சொன்னேன். இதோ அந்தக் கவிதை:-
இடப்பெயர்ச்சி
கருப்பு வளையல்
கையுடன் ஒருத்தி
குனிந்து
வளைந்து
பெருக்கிப் போனாள்
வாசல் சுத்தமாச்சு.
மனசு குப்பையாச்சு.
அன்றைக்குப் பிடித்தது சனி...... என் மனைவியின் வேலையாள் ரெக்ரூட்மண்ட் பாலிசியே மாறிப் போனது.
முதல் தகுதியே வீட்டு வேலைக்கு வரும் வயதான பெண்மணியாக இருக்க வேண்டும்.!
மணிரத்தினத்தின் ‘ரோஜா’வில் வருவது போல் எத்தனை கிழவிகள் கும்மியடித்திருக்கிறார்கள் என் வீட்டில்?
இப்போது சொல்ல வந்தது ஏதோ ‘மனசு-குப்பை’ விஷயம் என்று நினைத்து விடாதீர்கள்.
கவிதை நெய்கின்ற மனதில் களங்கம் இருக்குமோ சொந்தங்களே?
தற்போது நான் வசிக்கும் தெலுங்கும் உருதுவும் கூறும் நல்லுலகான ஹைதராபாதில், எங்கள் வீட்டு வேலைக்காக வரும் தாயும், அவளுக்கு உதவியாக வரும் மகளும் தான் இன்றைய என் தலைப்புச் செய்தி !
இருவரும் சேர்ந்தே வருவார்கள்.
பதினெட்டு வயது மகளின் நாமகரணம் ‘மங்கா.’
தாயாரின் பெயர் தெரியாததாலும், அவள் மங்காவின் ஆத்தா ஆதலாலும் ‘மங்காத்தா’ என அறிக....
அவர்களிருவரும் வேலை தொடங்குவதைப் பார்த்தால் WWF ஜோடி குஸ்தி வீரர்கள் ஒருவருக்கொருவர் உள்ளங்கைகளைத் தட்டிக் கொண்டு களமிறங்கி எதிரிகளை துவம்சம் செய்ய “வீடு” கட்டுவது போல் இருக்கும்.. அத்தனை சுருக்கு!
இருவர் வேலையும் நறுவிசாகவும் பளிச்சென்றும் இருக்கும். கை சுத்தமும் ரொம்பவே. பின்னே பிரச்னை என்ன என்கிறீர்களா?
எங்கள் மங்காவின் கோரிக்கைப் பட்டியல் தினமும் நீண்டு கொண்டே போகும்.
“அந்த ரூமில் மடக்குக் கட்டிலைச் சாய்த்தே தானே வைத்திருக்கிறீர்கள்? நானாவது உபயோகிப்பேன். இஸ்தாரா, ஐ மீன் தர்றீங்களா?’
‘ஒவ்வொரு ரூமிலும் சுவர்க் கடிகாரம் இருக்கு. அதில் ரெண்டு பாட்டரி போடாமல் நின்று போய் விட்டது. எனக்கு அதில் ஒன்றைக் கொடுங்களேன்”
“அக்கா, நீங்கள் இருப்பது ரெண்டே பேர்... அண்ணன்களும் வெளியூரில் இருக்காங்க பின்னே எதுக்கு மூணு குக்கர்? எங்களுக்கு ஒண்ணு தரலாமில்லே?”
இதுதான் என்றில்லை... கேட்பது அவள் கடமை போல் கேட்பதும், மறுப்புச் சொல்ல வார்த்தைகள் தேடும் மனைவியின் சங்கடமும் வாரத்தில் இரண்டு நாளாவது என் காதுக்கு வரும்.
தாயார்க்காரியோ, ‘சின்ன பொண்ணு தான் ஆசைப் படுது. குடுத்து தான் விடேன்’ என்னும் மத்தியஸ்த நிலையெடுத்து வழிமொழிவாள்.
புடவை, நைட்டி, சோப்பு, கிரீம் இத்யாதிகளை அவ்வப்போது ஆறுதல் பரிசாக என் மனைவி தந்தாலும் ரோதனை என்னவோ தொடர் கதை தான்.
இன்று காலை, ஞாயிற்றுக்கிழமைக்கேயான சோம்பலுடன் படுக்கையில் நான். அடுக்களையில் மனைவி.... அடுத்த கோரிக்கையுடன் மங்கா.....
“அக்கா! என் வெயிட்டே குறையலக்கா?
“தினம் ஸ்கிப்பிங் ஆடு”.
‘எங்க வீட்டில் கூரை ரொம்ப கம்மி உயரத்தில்.. அது முடியாதுக்கா’.
‘அப்போ சாப்பாட்டைக் குறை. சாயங்காலம் வாக்கிங் போ’
‘கஷ்டப் படுறதே சாப்பிடத் தானே அக்கா? வாக்கிங்குக்கு ஏது எனக்கு நேரம்? அதுவும் இந்த ஹைதராபாத் டிராபிக்குல’
‘அதுக்கு என்ன தான் பண்ணலாம்?’ இது என் மனைவியின் சலிப்பு.
‘அக்கா! நானும் வந்த நாள் முதலா பாக்குறேன். அந்த நடக்குற மிஷின் (ட்ரெட்மில்)மேல அய்யாவோட டவலும், டீ ஷர்ட்டும், வேட்டியும் தான் தொங்குது. நான் வேணா தினமும் அதுல அரை மணி நடக்கட்டுமா? 'ஈ டி.வி 'விளம்பரத்துல பொண்ணுங்க இதுல நடந்து ஒல்லியா ஆகுறத காட்டுராங்க அக்கா’
இன்று என்னவளின் பொறுமை எல்லை கடந்து விட்டது போலும்.
‘ஏண்டி. அத உபயோகப்படுத்தல. இத உபயோகபடுத்தல. குடு குடுன்னா எப்பிடி? உங்க அய்யாவால கூடத்தான் இங்க ஒரு உபயோகமும் இல்ல. உதவியா ஒரு வேலையும் வீட்டுல செய்யமாட்டரு. அப்போ அய்யாவை ஒங்க வீட்டுக்குக் கூட்டிகிட்டு போயிடேன்?”.
மங்கா விழுந்து விழுந்து சிரிக்கிறாள். அவங்கள கூட்டிகிட்டுப் போய் என்ன செய்யிறதுக்கா? எப்போப் பாரு எதாவது படிக்கிறாங்க.. இல்லன்னா சின்ன டி வில (என் லேப் டாப் தான் அது) ஏதோ கொடஞ்சுக்கிட்டு இருப்பாங்க. கரண்ட்டு தான் வேஸ்ட்டு.’
மேற்கொண்டு, அவர்கள் சம்பாஷனையில் என் மனம் ஈடுபட வில்லை.
எனக்கு குக்கருக்கு இருக்கும் மதிப்பு கூட இல்லையா?
என்னைத் 'தூக்கி குடுக்கறேன்'னு சொன்ன என் “தர்ம”பத்தினி பெட்ரூமில் நுழைய, ஏதும் காதில் விழாததுபோல் என் அறிதுயில் நீடிக்க...
இந்தப் பதிவை ஏன் லேட்டா எழுதினேன்னு பாக்குறீங்களா?
பின்னே. இன்னிக்கு ஒரு மணி நேரம் இல்லே, ட்ரெட்மில்லில் நடந்தேன்!!
சின்ன வயதில் 'சாப்பிடலேன்னா பூச்சாண்டிகிட்ட புடிச்சிக் குடுத்துடுவேன்' என்ற என் அம்மாவின் பயமுறுத்தல் நினைவுக்கு வந்தது.
நான் வேல ஒண்ணும் செய்யறதில்லயாமே? ஒருவேளை என்னை...
‘அம்மாடி! ஏதும் காய் நறுக்கணுமா?’
அதிசயமாய் என்னைப் பார்த்தவள் சொன்னாள். ‘சமையலே முடிஞ்சிடுச்சு. சாப்புடுறீங்களா?’
‘உம்’
பரிமாறியவாறே சொன்னாள்.. ‘இன்னிக்கு மங்கா என்ன கேட்டா தெரியுமா?’
‘அவ பாவம் சின்ன பொண்ணு. அப்பிடித்தான் ஏதாவது கேட்பா... உன்னால முடிஞ்சா குடு. இல்லன்னா விடு. இப்போ எனக்கு கொஞ்சம் ரசத்தைப் ஊத்து .’....
Leave a comment
Upload