கத கேளு கத கேளு தமிழோட கத கேளு 84 - பரணீதரன்
இந்த வாரம் மற்ற சித்திரக் கவியில் உள்ள வகைகள் பார்ப்போம் என்று பரணிதரன் மேலும் தொடர்கிறார்.
அடுத்ததாக அஷ்ட நாக பந்தம் என்று அழைக்கப்படுகின்ற அட்ட நாக பந்தத்தை பார்ப்போம். இதற்குரிய இலக்கணமாக - இந்த பந்தத்தின் இலக்கணம் கடினமாக இருக்கும் என்பதால் அவற்றை விளக்கமாக இங்கே கூறவில்லை. சில குறிப்பிட்ட எழுத்துக்கள் வெண்பாவில் பொதுவாக இருக்க வேண்டும் என்பது பொதுவான விதியாகும்.
இந்த பந்தத்தை இரண்டு வகையாக அமைக்கிறார்கள். ஒரு வெண்பாவையே எட்டு நாகங்களுக்கும் வருவதைப் போல உருவாக்குவது ஒருவகை. எட்டு வெண்பாக்களை வைத்து எட்டு நாகங்களை உருவாக்குவது இன்னொரு வகை. இதற்கான எடுத்துக்காட்டுகள் சிலவற்றை கீழே பார்ப்போம்.
முதலில் ஒரு வெண்பாவை வைத்து எட்டு நாகங்கள் உருவாக்கும் முறையை பார்ப்போம்.
ஆரார் சடைய னனற்க ணுறுசேயை
மாறா துறுவான மாமலை யாண்டியை
நாடிநினை யாமோச நாசரை யம்மசனி
கூடி மிடுமே குறை
- சிவதாசன், குறுக்குத்துறைக் கலம்பகம்: 27
நீர் பெருகி ஓடும் கங்கையை சடையில் அணிந்துள்ள சிவபெருமானுடைய பிள்ளையான முருகப்பெருமானை, என்றுமே மாறாமல் இருக்கின்ற பெரிய மலையில் உள்ள ஆண்டியை, மோசத்தை நாசம் செய்பவரை எப்பொழுதும் நாம் நாடி நினைக்க வேண்டும், அவர் நாம் செய்தால் நமக்கு வரக்கூடிய குறைகள் யாவற்றையும் அழித்து விடுவார் என்பதே இந்த பாடலின் பொருள்.
சீதரா மாலே திருவனந்த மாபுர
மாதவா மாயா வரதாதா - மோதரா
மூலனே வாழுமோர் மான்முத்தி யேதாநீ
வாலரா மஞ்ச வர
- அபிநவ காளமேகம் தென்திருப்பேரை அநந்தகிருஷ்ண ஐயங்கார்
இந்தச் செய்யுள் இன்றைய கேரளத்தில் உள்ள திருவனந்தபுரத்தில் பள்ளி கொண்டுள்ள அனந்த பத்மநாப சுவாமி பற்றிய செய்யுளாகும். இந்த செய்யுளின் பொருள், லக்ஷ்மி தேவியின் கணவனான திருமாலே, திருவனந்தபுரத்தில் வீற்றிருப்பவரே, மாதவனே, மாயையை தந்தருளி அருள் பாலிப்பவனே, இடுப்பிலே கயிறை கட்டி உள்ள தாமோதரனே, அனைத்திற்கும் மூலப் பொருளாக உள்ளவனே, வாழுகின்ற உயிர்களுக்கு முக்தியை நீ தர வேண்டும், பால ராமனாக வந்தவனே!
நகுலா புரமே நமதுதுறை கோல
நகுலேச கோனெமது நாத - னகுலா
புரநாக மீனப் புணரியுமே லாநாங்
கரிலா னகறு மினி
- மயில்வாகனப் புலவர், நகுலேச்சர விநோத விசித்திர கவிப்பூங்கொத்து
இது, இலங்கையில் கீரிமலையில் உள்ள நகுலேஸ்வரர் ஆகிய சிவபெருமான் மீது பாடப்பட்ட செய்யுளாகும். நகுலம் என்ற வடமொழிச் சொல்லுக்கு கீரி என்பது பொருளாகும். இந்த செய்யுளின் பொருள், நகுலாபுரம் என்று அழைக்கப்படுகின்ற இந்த ஊரே நாம் இருக்கக்கூடிய ஊராகும். அழகாக வீற்றிருக்கின்ற நகுலேசன் ஆகிய சிவபெருமானே எனது நாதன் ஆவான். நகுலாபுரத்து நாதனை நாத பந்தத்தில் கொண்டு வந்த நான் இனி நகுலாபுரத்தை விட்டு நீங்க மாட்டேன்.
சீதரா பாற்கரா சீல நிறையாளா
சேது பதியான சீரைய - போதப்
பகவனக லாதமா பாங்கினக நேய
சகல பயனுந்தா தா.
- சிவசம்புப் புலவர், சிவசம்புப் புலவர் பிரபந்தத் திரட்டு
இந்தச் செய்யுள் சேதுபதி என்று அழைக்கப்படுகின்ற இன்றைய ராமநாதபுர மாவட்டத்தை ஆண்ட பாஸ்கர சேதுபதி அரசரை பற்றிய பாடல் ஆகும். இந்த செய்யுளின் பொருள், செல்வ செழிப்போடு விளங்குகின்ற பாஸ்கரரே, ஒழுக்கம் நிறைந்தவரே, இராம சேதுவிற்கு காவலரே, புகழ் பெற்றவரே, இறைவனின் அருள் ஒருபோதும் நீங்காதவரே, அடியேனுக்கு அனைத்து விதமான பயன்களையும் தாருங்கள்.
இந்தப் பாடலை திருப்புல்லாணியில் பள்ளி கொண்டுள்ள ராமனாகிய திருமாலைப் பற்றிய பாடல் ஆகவும் எடுத்துக் கொள்ளலாம்.
அடுத்ததாக ராமாயணத்தை நாக பந்தத்தில் உருவாக்கியுள்ள பாங்கினை பார்ப்போம். இது எட்டு செய்யுள்களை வைத்து எட்டு நாகங்களை உருவாக்கிய வகையாகும். இந்த வகைக்கு நிறைய பாட்டுக்கள் அல்லது செய்யுள்கள் கிடைக்கவில்லை. கிடைத்த ஒரு செய்யுளை இங்கே கொடுத்துள்ளேன். இந்த முறையில் செய்யுள் இயற்றுவது சற்று கடினமான விஷயம்தான்.
மாரா சவிலீலை மன்னோடக் கோதேவா
வாராய்கோ வுன்பாத மாகோர - மாராபா
தூபாலா கோலவிசீ தூபாலை போதமே
பாபாமா நாதவதி பா
சீரா புவிமேலை தேன்பாட பூகோல
வாராரா மாகோனின் பாதாமே - கோராமா
பூபாதா பாங்கோ புவிமாதூ மாலைபத
கோபாலா மாந்தரதி கோ
பாலா ரவிவேலை பன்மாட மேகோலி
வாலாராக் கோபன் மதலாகோன் - மாலாபா
தூபாத கோசவிபூ தூமாலை நாதமே
பாபாமா போதபதி யே
பாலா குவிசோலை பன்னட னாகோபி
வாலாரா மேகோலன் மாதற்கோர் - மாலேபா
மீபாயா கோதை விதுதா முலைமாத
ரேபார்மா லீதனிதி யே
சேயா யவிமாலை சென்றாட வேகோபி
வாயாரா கூகோவென் றோதக்கோன் - மாயாபா
சீபாலா கோலேவி தீதூவே லைநீத
மோபாய்மா மோதவிதி யோ
மாயா கவிகாலை மன்றாட வேகோல
வாயாரா மாகோகான் மாதர்கோர் - மாயாபா
தூபாதா கோசவிபூ தூமாலை மாதவா
பாபாமா வேதனதி பா
மாமா தவிமாலை மன்சூட பூகோதை
வாமாரா பூகோகொன் மாதங்கோ - ராமா
விபாவுபா ரோகோமா வித்தூவா லைத்தன்
அபாவுமா வேதனிதி தா
ராமா கவிமாலை நான்சூட வாகோமா
வாமாராக் கோமான் வதனாகோ - தாமா
சுபாசபாக் கோசவிபூ தூமாலை நாதா
தபாதமா பாதகதி தா
- ப.வெ பழனிமலை நாயனார், ஸ்ரீமத் இராமாயணம், ப. 24
கீழே மற்றொரு அட்ட நாக பந்த படத்தை கொடுத்துள்ளேன். இன்று நிறைய படங்களும் விளக்கங்களும் பார்த்து உள்ளதால், கீழே உள்ள படமும் அது போல தான் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
மற்ற சித்திரக் கவிகளை வரும் வாரம் பார்ப்போம் என்று கூறி விடை பெற்றார்.
Leave a comment
Upload