போருக்குச் சென்றாலோ அல்லது பொருள் திரட்ட சென்றாலோ , சென்ற காரியத்தில் வெற்றி அடைந்த பின் ஒரு காதலனுக்கு முதலில் தோன்றுவது காதலியின் நினைவு .
"வென்றிக்காலத்து விளங்கித் தோன்றும் " என்கிறது தொல்காப்பியம் .
நம் நற்றிணை நாயகன் ஒருவனுக்கும் அதே நிலைதான்.
அயலூருக்குச் சென்று , பணி முடித்து தன் தேரில் திரும்பிக் கொண்டு இருக்கிறான் காதலன்.
அவன் மனம் முழுவதும் காதலியின் நினைவால் நிரம்பி இருக்கிறது .
பழைய நினைவுகளில் அவன் உள்ளம் தளும்பிக் கொண்டு இருக்கிறது .
அந்த நினைவுகளின் கனத்தை யாரிடம் இறக்கி வைப்பது??
அந்நேரத்தில் அவனுடன் இருப்பது அத்தேரை ஓட்டும் சாரதி மட்டுமே .
தேரோட்டுவதில் முழு கவனத்தையும் செலுத்திக் கொண்டிருக்கும் அவனை அழைத்து, உற்ற தோழனிடம் சொல்வதைப் தன் நினைவுகளைப் பகிர்ந்துக் கொள்கிறான் அந்தக் காதலன் .\
" பாகனே கேள் ! முன்னொரு நாள் நான் இன்று போலவே வினை முடித்துத் திரும்பிக் கொண்டு இருந்தேன் . அப்போது விரைந்து வரும் என் தேரின் ஒலியை என் தலைவியால் கேட்க முடியவில்லை .
ஏன் என்று சொல்கிறேன் கேள் !
பலநாட்கள் மழை இன்றி கோடையில் வறட்சி அடைந்த இந்நிலத்தில் அங்கங்கே பள்ளங்கள் இருந்தன . அச்சமயத்தில் பல்லுயிரும் தம் தொழிலை செய்யும் வண்ணம் பெருமழை பெய்தது .
அந்த பள்ளங்களில் புதிய நீர் நிரம்பி அங்கே தவளைகள் குதித்து பெரும் சப்தத்தை ஏற்படுத்திக் கொண்டு இருந்தன,
அந்த தவளைகள் எழுப்பிய ஒலியில் தேர்மணிகள் ஒலிக்க என் தேர் வரும் ஓசை தலைவியின் காதுகளுக்கு எட்டவில்லை .
எனவே நான் ஏவலரை அழைத்து ," நீங்கள் முன்னே சென்று ,நான் வரும் செய்தியை என் தலைவிக்குத் தெரிவியுங்கள் " என்றேன் .
என் ஏவலரும் விரைந்து என் இல்லம் சென்று என் வரவை அறிவித்தனர் .
தலைவி அகமகிழ்ந்தாள்
உடனே எழுந்து, நீராட்டாத தன் கூந்தலைக் கழுவினாள்.
சில மலர்களை எடுத்து தன் அடர்ந்தக் கூந்தலில் சூடிக் கொண்டாள் .
அந்நேரத்தில் நான் உள்ளே நுழைந்தேன்.
நான் வருவதைக் கண்டவள் , ஓடி வந்து தன்னுடல் நடுங்க என்னை அணைத்துக் கொண்டாள் .
அப்போது அவளது அழகிய கூந்தல் கலைந்து விழுந்தது .
அத்தகைய மென்மையான தலைவி என் வரவைக் கொண்டாடிய விதம் என்னால் மறக்க முடியவில்லை " என்றான்
மறத்தற்கு அரிதால்- பாக! பல் நாள்
அறத்தொடு வருந்திய அல்கு தொழில் கொளீஇய
பழ மழை பொழிந்த புது நீர் அவல
நா நவில் பல் கிளை கறங்க, மாண் வினை
மணி ஒலி கேளாள், வாணுதல்; அதனால்,
5
'ஏகுமின்' என்ற இளையர் வல்லே
இல் புக்கு அறியுநராக, மெல்லென
மண்ணாக் கூந்தல் மாசு அறக் கழீஇ,
சில் போது கொண்டு பல் குரல் அழுத்திய
அந் நிலை புகுதலின், மெய் வருத்துறாஅ
அவிழ் பூ முடியினள் கவைஇய
மட மா அரிவை மகிழ்ந்து அயர் நிலையே.
(நற்றிணை பாடல் 42)
இப்பாடலை எழுதியவர் புலவர் கீரத்தனார் .
முல்லைத் திணைக்குரிய பாடல் இது .
ஒரு அழகான காட்சியமைப்பை கவிச்சித்திரமாக தீட்டியுள்ளதை நம்மால் உணர முடிகிறது. அந்த தலைவன் மேல் நமக்கு அனுதாபம் ஏற்படுகிறது .
காதலன் முன்பு நடந்த நிகழ்ச்சியை விவரித்து "இப்போதும் நான் அதே நிலையில் தான் இருக்கிறேன், நீ விரைந்து தேரை ஓட்டு என்றுசொல்லாமல் சொல்லும் 'பிறிது மொழிதல் அணியில்' எழுதப்பட்ட பாடல் இது
பாடலைப் படிக்கும் நாமும் ,"தேரினை விரைந்து ஓட்டுங்கள் " என்று சொல்கிறோம் , அந்த தலைவனோடு சேர்ந்து .
தொடரும்
Leave a comment
Upload