தொடர்கள்
ஒலிம்பிக்ஸ்
பாரீஸின் சென் நதிக்கரையில் 2024 ஒலிம்பிக் போட்டிகளின் துவக்கம்-தில்லைக்கரசிசம்பத்

20240626190148153.jpg

மாவீரன் நெப்போலியன் சொன்னாராம் “ நான் இறந்த பின்,என் அன்புக்குரிய ஃப்ரென்ச் மக்கள் வாழும் இவ்விடத்தின் மத்தியில் இந்த சென் நதிக்கரையோரம் என் உடலை புதையுங்கள் “ என்று..

கிமு 56 ல் ஜூலியஸ் சீசரின் ரோம சாம்ராஜ்ஜியத்தின் சாட்சியாக இன்றும் ஃபிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரத்தில் சலசலத்து ஓடிக்கொண்டிருக்கும் வரலாற்று சிறப்பு மிக்க சென் நதியில்,

20240626190827992.jpeg

நூறு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாரீஸ் நகரில் ...2024 ஒலிம்பிக் போட்டியின் துவக்க விழா ஜூலை 26 அன்று இந்திய நேரப்படி இரவு 11:30 மணி அளவில் தொடங்கியது.

மொத்தம் 94 படகுகள்,அதில் நூற்றுக்கணக்கான விளையாட்டு வீரர்களுடன் சுமார் 4 மைல் தூரம் சென் நதியில் வலம் வரும் நிகழ்ச்சியோடு ஒலிம்பிக் விழா துவங்கியது.

10,500 விளையாட்டு வீரர்கள், 206 தேசிய ஒலிம்பிக் குழுக்களின் சார்பில் போட்டிகளில் பங்கு பெறுகிறார்கள்.

20240626191236319.jpeg

கடந்த 2020 ஒலிம்பிக் போட்டி ஜப்பானின் டோக்கியோவில் நடைப்பெற்றது. கடந்த ஒலிம்பிக் போட்டிகளின் துவக்க விழா, கொரோனா கொடுமையால் டோக்கியோவில் காலி மைதானத்தில் நடைப்பெற்றது நினைவிருக்கலாம்.

பாரீஸ் 2024 ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 26 அன்று தொடங்கி ஆகஸ்ட் 11 ல் முடிவடைகிறது.

வில் வித்தை, கால்பந்து, ரக்பி போன்ற சில போட்டிகள் ஜூலை 24 அன்றே தொடங்கி விட்டன. பாரம்பரிய வழக்கப்படி எப்போதும் போல மாரத்தான் போட்டிகள் ஒலிம்பிக் போட்டிகளின் கடைசி விளையாட்டாக இடம் பெற்றிருக்கிறது.

20240626190227394.jpg

நமது இந்தியாவின் சார்பில் 117 விளையாட்டு வீரர்கள் பங்கு பெறுகிறார்கள். ஏற்கனவே நடந்த ஒலிம்பிக் மற்றும் இதர சர்வதேச போட்டிகளில் பதக்கங்களை வென்ற ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, பாட்மிண்டன் இரட்டையர்கள் சாத்விக்சாய்ராஜ் ரான்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி, குத்துசண்டை வீராங்கனை நிகத் ஜரீன், மல்யுத்த வீராங்கனையான ஆன்டிம் பங்கல் போன்ற இந்திய விளையாட்டு வீரர்கள் இம்முறையும் பதக்கங்களை வெல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே உள்ளது.

20240626191532448.jpeg

டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி வெண்கலம் வென்றது. இம்முறை நிச்சயம் தங்கம் வெல்லும் என்ற நம்பிக்கையுடன் களம் இறங்குகிறது இந்திய ஆடவர் ஹாக்கி அணி.

நடுவில் எதிர்பாரா வண்ணம் வெள்ளியன்று வந்த செய்திகளின்படி பாரிஸ் நகரில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக் போட்டிகளை சீர்குலைக்கும் வகையில் அதிவேக ஃப்ரான்ஸ் ரயில் சேவை மீதுதாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் 8 லட்சம் பிரயாணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கிய நாளன்று இத்தாக்குதல்கள் நடப்பது போட்டிகளை சீர்குலைக்கும் வேலை என்று அஞ்சப்படுகிறது.

ஒலிம்பிக் போட்டிகள் நடைப்பெறும் சென் நதிக்கரை , பல வரலாற்று உண்மைகளை தன்னகத்தே புதைத்து வைத்திருப்பது சுவாரசியமானது.

20240626191806385.jpeg

கிபி 1431 ல் ஃபிரான்ஸுக்கும் இங்கிலாந்துக்கும் நடந்த சண்டையின் போது , போர் புரிய ஒரு பெண் வருவதா? என ஆங்கிலேயர்கள் ஆத்திரப்பட்டு “சூனியக்காரி” என்று உயிரோடு எரித்துக்கொல்லப்பட்ட ஃபிரான்ஸின் போர் வீராங்கனை “ஜோன் ஆஃப் ஆர்க்”கின் சாம்பல் இதோ, இதே சென் நதியில் தான் கலக்கப்பட்டது. அத்தகைய இடத்தில் இன்று ஆண்களுடன் சேர்ந்து பெண்களும் விளையாட்டு வீராங்கனைகளாக பங்கெடுப்பது காலம் எவ்வளவு தூரம் முன்னேறியுள்ளது என்பதை உலகிற்கு காட்டுகிறது.

20240626192353183.jpeg

உலக நாடுகளிடையே போர், வன்முறை, ஆக்ரமிப்பு, சர்வாதிகாரம் என பல நாடுகள், யார் சக்திவாய்ந்தவர்கள் என காண்பிக்க போட்டிகள் போடுகிறார்கள். ஆனால் அத்தகையப் போட்டிகள் ஆரோக்கியமான விளையாட்டுகளுக்கு மட்டும் இருந்தாலே மனித குலம் நன்மைப்பெறும் என்பதில் சந்தேகமில்லை.