தொடர்கள்
கதை
தாயுமானவன்‌ - நாபா மீரா

20240109224130697.jpeg

காலையில்‌ பேரனின்‌ இரண்டாவது பிறந்தநாளையொட்டி சேவாலயா ஆசிரமத்திற்குச்‌ சென்று வந்ததிலிருந்தே சீனிவாசனின்‌ மனம்‌ ஒரு நிலையில்‌ இல்லை.

“ஒருவேளை அவளுக்கு என்னை அடையாளம்‌ தெரியலையோ, எங்கயோ நல்லா இருப்பான்னுதானே நெனச்சோம்‌, எப்படி இந்த மாதிரி அநாதையா....”

தன்னிச்சையாக அவர்‌ மனம்‌ முப்பது வருடங்கள்‌ பின்னோக்கிச்‌ சென்றது.

“சீனி! ஒனக்கு நம்ம தூரத்து சொந்தத்துலே பொண்ணு பார்த்திருக்கேண்டா” அம்மா சரோஜா சொன்னாள்‌.

“இப்பத்தான்‌ வேலையில்‌ சேர்ந்திருக்கேன்‌

இருவத்தஞ்சு வயசுதானே! கொஞ்சம்‌ வருஷம்‌ போகட்டுமே”

“நா ஆரோக்கியமா இருக்கப்பவே நம்ம சந்ததியப்‌ பாக்கனும்னு

ஆசப்படறேம்பா”

“சரிம்மா! உன்‌ இஷ்டம்‌”.

அனுஷாவுடன்‌ இல்லறம்‌ தொடங்கி வாழ்க்கை சீராகத்தான்‌ போய்க்‌ கொண்டிருந்தது. ஒரு வருடம்‌ கழித்து அனுஷா கருத்தரித்தாள்‌.

மருமகளைத்‌ தலைமேல்‌ வைத்துத்‌ தாங்கினாள்‌ சரோஜா. அடிக்கடி தாய்‌வீடு சென்று வந்த மருமகளின்‌ நடவடிக்கையில்‌ மாற்றங்கள்‌ தெரிந்தது.

“அம்மா!, அனுஷா கண்ணு! ஒரே எடத்துல ஒக்காந்திருக்காம கொஞ்சம்‌ காலாற நடந்துவிட்டு வாம்மா... குனிஞ்சு, நிமிந்து சின்ன சின்ன வேலையெல்லா செய்தா சுகப்பிரவசம்‌ ஆகும்‌”.

“எல்லாம்‌ எங்களுக்குத்‌ தெரியும்‌, நீங்க ஒங்க வேலையைப்‌ பாத்துட்டுப்‌ போங்க”.

நாட்கள்‌ உருண்டோட அனுஷாவின்‌ அலட்சியப்‌ போக்கு அதிகரித்தது.

நன்கு உணர்ந்தாலும்‌ மகனுக்காகச்‌ சகித்துக்‌ கொண்டாள்‌ அந்தத்‌ தாய்‌.

கணவன்‌ தன்னிடம்‌ பிரியமாக இருப்பதைச்‌ சாதகமாக்கிக்‌ கொள்ள நினைத்து, "எனக்கு இந்த வீடே பிடிக்கலங்க. நாம எங்கம்மா வீட்டுப்‌ பக்கமாப்‌ போயிடலாமா”.

“அனும்மா இந்த மாதிரி சமயத்துல வீடு மாறக்‌ கூடாதுன்னு சொல்வாங்க. பிரசவத்துக்கு அப்புறம்‌ எங்கம்மாகிட்ட பக்குவமா எடுத்துச்‌ சொல்லி வேற வீடு மாறிடலாம்மா. ஏன்னா அவங்க பல வருஷமா இங்க இருந்து பழகிட்டாங்க”. மனமே இல்லாமல்‌ தலையசைத்தாள்‌.

பிரசவம்‌ நாளும்‌ நெருங்கியது. அறுவை சிகிச்சையினால்‌ பிரசவித்த அனுஷா பலவீமாக இருந்தாள்‌. குழந்தையைக்‌ தொட்டிலில்‌ இட்டு ரதி என்று பெயரிட்டனர்‌. குழந்தைப்‌ பராமரிப்பில்‌ மாதங்கள்‌ உருண்டோடின.

மாமியாரின்‌ மீதான அனுஷாவின்‌ அலட்சியப்‌ போக்கு அதிகரித்ததே ஒழியக்‌ குறையவில்லை.

சகித்துக்‌ கொண்டாள்‌ சரோஜா அன்று மகனுக்காக ..... இன்று பேத்திக்காக...

“என்னங்க மறந்த மாதிரியே இருக்கீங்க வேற வீடு மாறணும்னு சொல்லி கிட்டத்தட்ட ஒரு வருஷம்‌ முடியப்‌ போவுது”.

“மறக்கலம்மா, சீக்கிரமே ஏற்பாடு செய்றேன்‌. இப்ப மொகத்தக்‌ தூக்கி வச்சிக்காம ரதிக்குட்டியோட பொறந்த நாள்‌ ஏற்பாட்டக்‌ கவனிம்மா”.

ரதிக்குட்டியின்‌ ஒரு வயதுப்‌ பூர்த்தியை தடபுடலாகக் கொண்டாடினார்கள்‌.

ஒரு வாரம்‌ தாய்வீட்டில்‌ இருந்துவிட்டு வருவதாகச்‌ சொல்லிக்‌ கிளம்பினாள் அனுஷா.

அன்று மாலையே புரோக்கர்‌ மூலமாக ஒரு வீடு பற்றித்‌ தகவல்‌ வர ஆபிஸிலிருந்து நேராக மாமியார்‌ வீடு சென்று மனைவியுடன்‌ வீட்டைப்‌ பார்த்து வரலாம்‌ என்று சற்று சீக்கிரமாகவே கிளம்பினான்‌ சீனிவாசன்‌.

வீட்டு வாசலில்‌ செருப்பைக்‌ கழட்டும்போதே மாமியார்‌ மனைவி உரையாடலில்‌ தன்‌ தாய்‌ பெயர்‌ அடிபடுவதைக்‌ கேட்டு சற்றே தாமதித்தவன்‌ அவர்கள்‌ உரையாடலைக்‌ கேட்டு மனக்‌ கொந்தளிப்புடன்‌ வந்த அரவமே தெரியாமல்‌ வெளியேறினான்‌.

“ஏம்பா சீனி, ஒரு மாதிரி இருக்கே ஆபிஸ்ல ஏதாவது பிரச்சினையா? மகன்‌ கையில்‌ காபியைக் கொடுத்தபடியே கேட்டாள்‌ சரோஜா.

என்ன சொல்வான்‌?

“கொஞ்சம்‌ தலைபாரமாக இருக்கும்மா!”, சமாளித்துவிட்டு முட்டிக்கொண்டு வந்த கண்ணீரைத்‌ தாய்‌ அறியாமல்‌ மறைத்தான்‌.

குழந்தையுடன்‌ கணவன்‌ வீடு திரும்பிய அனுஷா, வந்ததும்‌ வராததுமாக,

“என்னங்க வீடு விஷயம்‌..”.

முடிக்க விடவில்லை அவளை, கட்டுக்கடங்காத ஆத்திரத்தில்‌ வெடித்தான்‌ அவன்‌.

“என்னடி நெனச்சிருக்கீங்க நீயும்‌ ஒங்கம்மாவும்‌, எங்கம்மாவை ஒதுக்கி வச்சுட்டு ஒன்னோட தனிக்குடித்தனம்‌ வரணும்னா அப்படி ஒரு வாழ்க்கை எனக்குத்‌ தேவையேயில்ல, இனியும்‌ ஒன்னோட குடும்பம் நடத்த நான்‌ தயாராயில்லை. இத்தனை நாள்‌ என்னோட இருந்ததுக்கு மொத்தமா செட்டில்‌ பண்ணிடறேன்‌, எம்‌ மொகத்துலேயே முழிக்காத போயிரு”.

மகனை ஓங்கி அறைந்தாள்‌ சரோஜா.

“என்ன பேச்சு பேசுற, கட்டினவள அசிங்கப்படுத்துற ஒன்னைய எம்‌ மவன்னு சொல்லிக்கவே கேவலமா இருக்கு”.

படபடப்புடன்‌ பேசிய அவள்‌ மூர்ச்சையானாள்‌.

தாயின்‌ கதை முடிந்தது.

ஈமச்சடங்குக்கு வந்திருந்த தாயுடன்‌ குழந்தையை எடுத்துக்கொண்டு புறப்பட்டவளைத்‌ தடுத்தான்‌.

“உன்னோட நா வாழ்றதா இல்ல, ஒங்க வீட்ல என்‌ பொண்ணு வளர்றத நா விரும்பலே நேத்தைக்கே சொன்ன மாதிரி ஒனக்கு பணத்த செட்டில்‌ பண்றேன்‌ போயிரு”.

அது அவள்‌ தன்மானத்தை வெகுவாகச்‌ சீண்டியது. ஏதோ பேச வந்த தாயைத் தடுத்துவிட்டு திரும்பிப்‌ பாராமல்‌ நடந்தாள்‌ அனுஷா.

தனி ஆளாக பல நடைமுறைச்‌ சங்கடங்களுடன்‌ ரதியை வளர்த்து ஆளாக்கி நல்ல இடத்தில்‌ திருமணமும்‌ செய்து கொடுத்துவிட்டான்‌ சீனிவாசன்‌.

ஆனாலும்‌, இன்று அந்த ஆசிரமத்தில்‌ தன் மனைவியைப்‌ பார்த்ததில்‌ இருந்து இனம்‌ புரியாத குற்ற உணர்வு அவரை ஆக்கிரமித்திருந்தது.

“என்னப்பா, ஏன்‌ டல்லா இருக்கீங்க, உடம்பு கிடம்பு சரியில்லையா, டாக்டர்ட்ட போலாமா”

“அதல்லாம்‌ ஒண்ணுமில்லம்மா, நா என்‌ அறைல போய்‌ ஓய்வெடுக்கறேன்‌”.

“அவ்ளோதூரம்‌ போய்ட்டு வந்தது அலுப்பா இருக்கோ, என்னவோ, அவர்‌ போய்‌ தூங்கட்டும்‌ விடும்மா, மாமியார்‌ மரகதம்‌ சொல்ல சற்றே சமாதானமானாள்‌ ரதி.

திருமணம்‌ முடிந்த கையோடு அப்பாவைக்‌ தன்னுடனேயே அழைத்து வந்து விட்டாள்‌ ரதி. அந்தக்‌ குடும்பம்‌ காட்டிய பாசத்தில்‌ தயக்கம்‌ மறைந்து அவர்களுடன்‌ ஒன்றிவிட்டார்‌ அவர்‌.

அடுத்த நாள்‌ ஞாயிற்றுக்கிழமை.

“ரதிம்மா வெளில கொஞ்சம்‌ வேல இருக்கு, நா வர லேட்டாகும்” எனக் கிளம்பினான் ரவி. “அந்த அம்மா என்னைய எதுக்காக வரச்‌ சொல்லியிருப்பாங்க....”

“அந்தப்‌ பையன்‌ வருவானா?” அனுஷாவின்‌ மனம்‌ தன்‌ வாழ்வில்‌ கடந்து வந்த கசப்பான அனுபவங்களை அசைபோடத்‌ தொடங்கியது.

“எனக்கு என்னமோ ரோஷத்த விட்டுவிட்டு உன்‌ புருஷன்‌ கொடுக்றேன்னு சொன்ன பணத்தை நீ வாங்கியிருக்கலாமுன்னு தோணுது அனு, ரோஷமா சோறு போடப்‌ போகுது?”

ஏற்கனவே கணவனின்‌ பேச்சால்‌ கடும்‌ மன உளைச்சளுக்கு ஆளாகியிருந்த அனுஷா தன்‌ தாயின்‌ பேச்சில்‌ வெளிப்பட்ட அப்பட்டமான சுயநலத்தில்‌ வெறுத்தே போனாள்‌.

மறுநாள்‌ விடியலில்‌ தன்‌ வாழ்வின்‌ விடியலைத்‌ தேடிப்‌ பயணித்து இந்த சேவாலயத்தில்‌ சரண்‌ புகுந்தாள்‌.

“அனுஷாம்மா, உங்களைத் தேடி நேத்து வந்த தம்பி வந்திருக்கும்மா”, ஆசிரமச்‌ சிப்பந்தியின்‌ குரலில்‌ மீண்டாள்‌.

“வணக்கம்மா”, எழுந்து கை கூப்பி வணங்கினான்‌ விருந்தினர்‌ அறையில்‌ காத்திருந்த ரவி.

“ஒரே தாள்ல, புருஷன்‌, குழந்தைன்னு எல்லா சொந்தத்தையும்‌ எழந்தேன்”‌.

“தம்பி!, தாய்‌ மாதிரி அரவணைச்ச ஒரு பெரிய மனுசிய ஒதுக்க நெனச்ச பாவம்‌,என்னைய ஒதுக்கி அநாதையாக்கிருச்சு”, தன்‌ கதையைக்‌ கூறிய அனுஷா விழிகளில்‌ நீர்‌ பெருகியது.

“அழாதீங்கம்மா”.

“நேத்து வந்ததுல என்‌ புருஷன்‌ மட்டும்தான்‌ எனக்கு அடையாளம்‌ தெரிஞ்சுது, அவர்கிட்ட பேச எனக்கு தகுதியில்ல. அவர்‌ பக்கத்துல இருந்தது எம்‌ பொண்ணுதானான்னு தெரிஞ்சிக்கத்தான்‌ உங்கள வரவழைச்சேன்‌, சிரமத்துக்கு மன்னிக்கணும்‌”,

“சிரமம்லாம்‌ இல்லம்மா, ரதி உங்க பொண்ணுதான்‌, என்‌ மனைவி. உங்க பேரன்‌ நிதீஷ்‌ பொறந்தநாளக்‌ கொண்டாடத்தான்‌ நேத்து இங்க வந்திருந்தோம்”‌.

“நா.... நான்‌ உங்கள ‘மாப்பிள்ளை’ன்னு கூப்பிடலாமா? தம்பி”.

“தாராளமா அத்தை, விவரம்‌ சொல்லி ரதியக்‌ கூட்டிட்டு வர்றேன்‌, நீங்க எங்க கூடவே வந்துடலாம்‌”.

“அவர்‌ முகத்துல முழிக்கிற தகுதி எனக்கில்ல மாப்பிள்ளை”, கைக் கூப்பினாள்‌ அனுஷா.

இரவுச்‌ சாப்பாட்டை முடித்து தங்கள்‌ அறைக்குச்‌ செல்லத்‌ திரும்பிய ரவியிடம்‌ தயக்கமாக, “என்னங்க நேத்துலேருந்து அப்பா மொகமே சரியில்லைங்க..”

“மாமாகிட்ட நா பேசறேன்‌ ரதிம்மா”, அவளை அணைத்துத்‌ தேற்றிய கையோடு மாமாவின்‌ ரூமூக்குச்‌ சென்றான்‌.

“மாமா! உள்ளே வரலாமா”, கதவு தட்டி அனுமதி பெற்று உள்ளே சென்றான்‌ ரவி.

“வா.... வாங்க மாப்ளை”.

“என்னாச்சு மாமா ஒடம்புக்கு சொகமில்லையா?”

“உடம்புக்கென்ன மாப்ள, மனசுதான்”‌... சற்றே தயங்கினார்‌.

“எங்கிட்ட ஒங்க மன சுமையை இறக்கி வெச்சா உங்க பாரம்‌ கொறையும்னா சொல்லுங்க மாமா, நா உங்க புள்ள மாதிரி”.

“நேத்து ஆசிரமத்துல உங்ககிட்ட வந்து ஏதோ பேசிட்டுப்‌ போனாங்களே ஒரு அம்மா, அவங்க நம்ம ரதியோடா அம்மாதான்‌. முப்பது வருஷம்‌ ஓடிப்போச்சு”.

“இவ்ளோ அழகான குடும்பம்‌ இருந்தும்‌ அவ அநாதையா நிக்கறாளே. நா பாவி மாப்ள”, குற்ற உணர்வில்‌ வார்த்தைகள்‌ குழற, தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தார் சீனிவாசன்.

பல வருஷங்களா பிரிஞ்சு வாழற இவங்க இரண்டு பேரிடத்திலதான்‌ ஒருத்தர ஒருத்தரு விட்டுக்‌ கொடுக்காத அளவு அன்னியோன்யம்‌, மனதிற்குள்‌ வியந்தவாறே,

“இதுவும்‌ கடந்து போகும்‌ மாமா”

ஒரு வாரம்‌ அமைதியாகக்‌ கழிந்தது.

“மாமா, உங்களுக்குக்‌ குடியிருக்க வீடு பேசியிருக்கேன்‌, நாளைக்கு பால்‌ காய்ச்சறோம்‌, காலையில்‌ சீக்கிரமே ரெடியாயிடுங்க”.

“ஒரு வேள கட்டினவளத்‌ தவிக்க விட்டவர நம்ம வீட்ல தங்க வைக்கக்‌கூடாதுன்னு, மாப்ள நெனைக்கிறாரோ?”, அந்த அன்புக்‌ கூட்டிலிருந்து பிரியப்போவதை நினைக்க நினைக்க அவர்‌ குற்ற உணர்ச்சி மேலும்‌ பெருகியது.

குடும்பத்தினரிடம்‌ ரவி ஏற்கனவே கலந்தாலோசித்து செய்த ஏற்பாடுதான்‌ இது என்பது அவருக்குத்‌ தெரிய வாய்ப்பில்லையே பாவம்‌.

“உள்ள வாங்க மாமா, நல்லநேரம்‌ முடியறதுக்குள்ள பால்‌ காய்ச்சி சாமி கும்பிடலாம்”‌.

உள்ளே சென்றவர்‌ அதிர்ந்தார்‌.

அனுஷா ஓடிவந்து அவர்‌ காலில்‌ விழுந்து, “என்னைய மன்னிச்சிடுங்க” என அழுதாள்‌.

“நீதாம்மா என்னைய மன்னிக்கனும்‌ கண்மூடித்தனமா ஆத்திரத்துல பேசி ஒன்ன ரொம்பவே புண்படுத்திவிட்டேன்‌”.

இருவரும்‌ மாறி மாறி கண்ணீரில்‌ கரைந்தனர்‌.

“அம்மா”, என்று ஓடி வந்து கட்டிக்கொண்ட ரதியின்‌ அணைப்பில்‌ அந்தத்‌ தாய்மையின்‌ தவிப்பு மறைந்தது.

விழிகளில்‌ மாப்பிள்ளையிடம்‌ தங்கள்‌ நன்றியைப்‌ பிரதிபலித்தனர்‌ அனுஷாவும்‌ சீனிவாசனும்‌.

“உங்க செகண்ட்‌ இன்னிங்க்ஸை சந்தோஷமாத்‌ தொடங்குங்க மாமா, தாயுமானவனா இருந்து ஒரு பொம்பளப்‌ பிள்ளைய பொறுப்பா வளர்த்து எனக்குக்‌ கொடுத்திருக்கீங்க, இதவிட வேற என்ன பரிசா நா உங்களுக்கு செஞ்சிற முடியும்‌?. ரதிம்மா!, நா....சொல்றது சரிதான”.

“நிச்சயமாங்க, உங்கள நெனச்சா எனக்கு ரொம்பப்‌ பெருமையாயிருக்கு" என்றவள் தனது தந்தை பக்கமாகத் திரும்பி, "தாயுமானவரா இருந்து எங்கம்மா இத்தன வருஷம்‌ பட்ட கஷ்டத்தையெல்லாம்‌ மறக்க வெச்சுட்டீங்கப்பா, அது போதும்”‌, எனத் தாயின்‌ கரங்களை எடுத்து தந்தையின்‌ கைகளில்‌ சேர்த்தாள்‌.

மகனையும்‌, மருமகளையும்‌ பெருமிதம் பொங்க நோக்கிய ரவியின்‌ தாய்‌, “நீங்க மூணுபேரும்‌ சேர்ந்து அவங்க கால்ல விழுந்து ஆசிர்வாதம்‌ வாங்கிக்கங்கப்பா”.

இனி எல்லாம்‌ சுகமே!.