திருநீர்மலையை குறிக்கும் திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி பாடல்கள்
பெரிய திருமொழி
ஆறாம் பத்து - எட்டாம் திருமொழி - பாடல் 4 (1521)
ஓடாவரியா யிரணியின் யூனிடந்த
சேடார் பொழில் சூழ் திருநீர் மலையானை
வாடா மலர்த்துழாய் மாலை முடியானை
நாடோறும் நாடி நறையூரில் கண்டனே.
பகைவர்களுக்கு அச்சத்தை உண்டுபண்ணும் நரசிம்மராக வடிவெடுத்து இரணயனிது உடலைக் கிழித்தவன்; என்றும் அழியாமல் மணம் தரவல்ல திருத்துழாய் மாலை அணிசெய்யும் திருமுடியை உடையவன்; இளமை ததும்பும் சோலைகள் மிகுந்துள்ள திருநீர்மலையில் எழுந்தருளியிருப்பவன்; இத்தகைய பெருமைகளைப் பெற்றவனைத் திளமும் தேடியலைந்து திருநறையூர் எனும் திருத்தலத்தில் தரிசித்தேன்.
திருநீர்மலை திருக்கோயில்
பெரியதிருமொழி
ஏழாம்பத்து, முதல் திருமொழி பாடல் 7 (1554)
"கதியேயில்லை நின்னருளல்ல தெனக்கு
நீதியே! திருநீர்மலை நித்திலத் தொத்தே!
பதியே! பரவித்தொழும் தொண்டர் தமக்குக்
கதியே! உன்னைக் கண்டு கொண்டுய்ந் தொழிந்தேனே".
உனது கருணையைத் தவிர வேறு உபாயம் எனக்கு இல்லை. செல்வம்போல அனுபவிப்பதற்கு இனிமை யானவனே! முத்தாரம் போல் அழகானவே! உனது திரு வடியைப் பற்றியவர்களுக்கு வாழ்வு அளிப்பவனே! துதி செய்து தொழும் அன்பர்களுக்குப் புகலிடமாக உள்ளவனே! திருநீர்மலையில் எழுந்தருளியிருப்பவனே! உனது தரிசனத்தைப் பெற்று உய்வடைந்தேன்.
பெரிய திருமொழி
எட்டாம் பத்து, முதல் திருமொழி. பாடல் 3 (1660)
அருவிசேர் வேங்கடம் நீர்மலையென்று வாய்
வெருவினாள் மெய்யம் வினவி யிருக்கின்றாள்
பெருகுசீர்க் கண்ணபுரமென்று பேசினாள்
உருகினாள் உள்மெலிந்ததாளிது வென்கோலோ?
திருமால் மீது தீராக்காதல் கொண்டு உருகுகின்ற தலைவியின் நிலையைத் தாய் வெளிப்படுத்துவதாக இப் பாடல் அமைந்துள்ளது. என் மகள் காதல் நோயால் தாக்கப்பட்டு நீர்போல உருகி நின்றார். நெஞ்சம் மெலிவுறத் துன்புற்றாள். திருமால் எழுந்தருளியுள்ள திருப்பதிகள் மீது ஆசைகொண்டு அவற்றையே நினைத்துப் புலம்பினாள்; மலையருவிகள் பாய்ந்து வளமூட்டும் திருவேங்கடம், திருநீர்மலை, திருமெய்யம் அதிக அளவில் வெள்ளம் மென்மேலும் பெருகி வளமூட்டும் திருக்கண்ணபுரம் ஆகிய தலங்களின் பெயர்களைத் தன்னை யறியாமலேயே அரற்றினாள். அவள் படும் துன்பத்தைக் கண்டு என்னால் தாங்கிக் கொள்ள இயலவில்லை.
(தொடரும்)
Leave a comment
Upload