தொடர்கள்
ஆன்மீகம்
ஆழ்வார்களின் ராமன் - திருமலை விஞ்சமூர் வேங்கடேஷ்

20240019142957705.jpg

ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ராமோ விக்ரஹவான் தர்ம:
ரமயதி இதி ராம:
ரமே ராமே மனோரமே

மேலும் பல சொல்லிக்கொண்டே போகலாம்.

இராமனைக் கண்டு, கேட்டு, உற்று, மோந்து, உண்டு, உழலும் ஆழ்வார்கள் அவனிடம் ஆழங்காற்பட்டிருந்தனர் என்பது திண்ணம்.

"கற்பார், இராமபிரானை அல்லால், மற்றும் கற்பாரோ" என்று ஸ்வாமி நம்மாழ்வார் தம் திருவாய்மொழியில், கல்வெட்டாக எழுதிப் போந்தார். மேலே சொன்னபடி, "தர்மத்தின் மொத்த உருவம் ஸ்ரீராமன்" ஆகையால் "ராமோ விக்ரஹவான் தர்ம:". இது கொண்டே தர்மத்தில் நிற்க விழைவோர், இராமனைத் தவிர வேறு ஒன்றும் கற்கத் தேவையில்லை என்கிறார்.

20240020120447618.jpeg

ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில், "பெருமாள்" என்றாலே ஸ்ரீராமனைத் தான் குறிக்கும். "பெருமாள் திருமொழி" என்ற திவ்யமான ப்ரபந்தத்தில், ஸ்ரீ குலசேகர ஆழ்வார், தசரத மஹாராஜனாகத் தன்னை பாவித்துக் கொண்டு, "வன் தாளின் இணை வணங்கி..." என்று தொடங்கும் பத்துப் பாசுரங்களிலே, இராமன் அடைந்த துன்பங்களுக்குத் தானே காரணம் என்று புலம்புகிறார். "... வனமே மேவி....எவ்வாறு நடந்தனை எம் இராமா!!" என்றும், " மெல்லணை மேல் முன் துயின்றாய்....கல்லணை மேல் கண் துயிலக் கற்றனையோ?" என்றும், "இன்று பெரும் பாவியேன் மகனே போகின்றாய், கேகயர்கோன் மகளாய்ப் பெற்ற அரும்பாவி (கைகேயி) சொற்கேட்ட அருவினையேன் என் செய்கேன்?" என்றும் புலம்புகிறார். இராமனிம் தாக்கம் அப்படி. இன்னும் ஒரு படி மேலே போய், இராமாயண கதை சொன்ன பண்டிதர், இராமன் தன் தம்பியை மட்டும் துணை கொண்டு, விஸ்வாமித்திரரின் யாகத்தைக் கெடுக்க வந்த அசுரர்களை எதிர்த்து நின்றான் என்று சொல்லக் கேட்டுத் தன் படைகளை இராமனுக்குத் துணையாக அனுப்ப உத்தரவிட்ட வைபவமும், இராமனின் தாக்கத்தை நன்கு வெளிப்படுத்தும்.

அப்படி என்ன இராமனிடம் விசேஷம்! " ரமயதி இதி ராம: " இனிமையின் மறுபெயர் இராமன் அல்லவா? பரமேஸ்வரனும் " ரமே ராமே மனோரமே " என்று மனத்திற்கு இதத்தை அளிப்பவன் இராமன் என்றார் அன்றோ! அவன் அழகை வர்ணிக்கப் புகுந்த திருமங்கை மன்னனும், தம் திருநெடுந்தாண்டகம் என்கிற திவ்யமான ப்ரபந்தத்தில், " கைவண்ணம் - தாமரை, வாய் - கமலம் போலும், கண் இணையும் ( இரு கண்களும் என்று பொருள்) - அரவிந்தம், அடியும் (திருவடியும்) - அஃதே ( அதாவது, தாமரையே என்றபடி) " என்று சூரியகுல திலகனான இராமனின் அழகை,
அன்றலர்ந்த அழகிய தாமரைக்கு ஒப்பாக வர்ணிக்கிறார்.

இராமனின் இவ்வழகில் விழுந்த கம்பநாட்டாழ்வானும், " தோள் கண்டார் தோளே கண்டார் " என்கிறார். இன்று இராமனை முற்றப் பருக வேண்டும் என்று நினைத்தவர், அவனது ஒவ்வொரு அங்கத்தின் அழகிலும் மயங்கி நின்றாராம். தோளின் அழகைக் கண்டவர், அதிலிருந்து மீளவே இல்லையாம். ஆக அவனது அழகை முற்றப் பருகியவரும் உண்டோ!

புறத்தோற்றத்தின் அழகு மட்டுமா இராமனின் மீது மையல் கொள்ளச் செய்தது! இல்லை. தர்மத்தின் மொத்த உருவம் என்று போற்றப் படும் அவன், " ஏழை, ஏதலன், கீழ்மகன் என்னாது இரங்கி " என்று பெரிய திருமொழியிலே திருமங்கை மன்னன் சாதித்தது போல், தன் மீது பக்தி கொண்டை அனைவரையும் ஆதரித்து, வாழ்வித்தான் அன்றோ! அதனால் தானே " விக்ரஹவான் தர்ம:" என்றாயிற்று!

பரமேஸ்வரனாரின் "மனோரமே" என்ற வாக்கை பைந்தமிழில் "மனத்துக்கினியான்" என்கிறாள் ஆண்டாள் நாச்சியாரும். அவள் மையல் கொண்டிருந்ததோ க்ருஷ்ணாவதாரத்திலே. ஆனால் மனத்துக்கினயனாய்ச் சொன்னதோ இராமனை. " தென்னிலங்கைக் கோமானைச் செற்ற மனத்துக்கினியான் என்கிறாள். ஒரு பெண்ணுக்கு, தன்னைக் காப்பவனே மனத்துக்கினியவன். அவள் விரும்பும் கண்ணனோ " தீமை செய்யும் சிரீதரன் ". ஆம் அவன் ஆய்ச்சியர்களைத் தன் பிரிவால் வருத்தினானன்றோ! ஆனால் நம்மிராமனோ, பிராட்டியை மீட்க, எவரும் துணியாத, சமுத்திரத்தின் மீது "மலையதனால் அணைகட்டி மதிளிலங்கை அழித்து" பிராட்டியை மீட்டதை நினைவு கூர்ந்து, மனத்துக்கினியானாய் வரிக்கிறாள்.

சரி, இவர்களெல்லாம் இராமன் பால் காதல் என்னும் பக்தி கொண்டவர்கள். ஒருவர் பால் காதல் மிகுந்தால், அவர்கள் செய்யும் அனைத்தும் உகந்தது தான். ஆனால் இராமனோ, தன் பகைவனும் போற்றும் சீலம் கொண்டவனன்றோ! இதையே ஆண்டாள் தன் திருப்பாவையில், "கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா!" என்கிறாள். விபீடணன், கும்பகர்ணன் முதலானோர், எத்தனைச் சொல்லியும் கேளாமல், இராமனுடன் (நட்பு) கூடாமல் இருந்த இராவணனும், செருவில் (போரில்) ஆயுதங்களின்றி நின்ற பொழுது, " இன்று போய் நாளை வா" என்று தர்ம பரிபாலனம் செய்தவனன்றோ! அது கொண்டே இராவணனையும் தன் செயலால் வென்றான். இதை விடவும் அவனது ஏற்றத்திற்கு உதாரணம் வேண்டுமோ!

ஆனால், அவன் பட்ட துயரமோ சொல்லொணாதது. 14 வருடங்கள் வனவாசத்தில், தன் இணையான சீதாபிராட்டியைத் தொலைத்து, அவளை மீட்கப் பெரும்பாடு பட்டு, அத்துன்பத்திலும், தனக்குதவிய சடாயுவுக்கு மோக்ஷத்தை நல்கி தர்ம பரிபாலனம் செய்தவனன்றோ அவன். அதைக் காட்டிலும் பெருந்துயரமாய் சுமார் 500 வருடங்களுக்கு முன், தன் பிறப்பிடத்தை இழந்து, இன்று 500 வருடங்களுக்குப் பின்னே எழுந்தருளவிருக்கிறான். 1323ம் ஆண்டு உலுக் கான் படையெடுப்பின் பொழுது, திருவரங்கத்தை விட்டு வெளியேறிய ஸ்ரீ ரங்கநாதனின் 48 வருட உலாவைக் கேட்டோர் நெஞ்சு பதறும். ஆனால் அத்திருவரங்கனையே தன் திருவாராதன மூர்த்தியாக வழிபட்ட நம்மிராமனின் 500வருட அரசியல் வனவாசம்....... ஒன்றும் சொல்வதற்கில்லை.

மீண்டும் இராம இராஜ்ஜியத்தை நிலைநாட்ட நம் பெருமாள் ஸ்ரீ ராமன் எழுந்தருள இருக்கும் இச்சுபதினத்திலே, ஸ்ரீ குலசேகர ஆழ்வாரின் ஈரச்சொற்கொண்டு அவனைத் துதிப்போம்.

" அன்று சராசரங்களை வைகுந்தத்தேற்றி, அடலரவப்பகையேறி ( அரவம் - பாம்பு, அரவப்பகை - பக்ஷிராஜனான கருடன் மீது ஏறி என்றபடி) அசுரர் தம்மை வென்று, இலங்கு மணி நெடுந்தோள் நான்கும் தோன்ற, விண் முழுதும் எதிர்வர, தன் தாமம் ( இருப்பிடமான ஸ்ரீ வைகுண்டம்) மேவி, சென்று இனிது வீற்றிருந்த அம்மானான" ஸ்ரீ ஸீதாராமனின் அரவிந்தம் போன்ற திருவடித்தாமரைகளில் நம்மைச் சமர்பிப்போம்.

மங்களம் கோசலேந்திராய மஹநீய குணாத்மனே |
சக்ரவர்த்தி தநூஜாய ஸார்வபௌமாய மங்களம் ||

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

2024001915494695.jpeg