தொடர்கள்
கவர் ஸ்டோரி
நவராத்திரி ஆரம்பம் !! - ஆரூர் சுந்தரசேகர்.

நவராத்திரி வந்தாச்சு..!! கொலு வைக்கலாம் வாங்க…!!!

Navratri has arrived..!! Let's put kolu…!!!

நவராத்திரி பண்டிகை வந்துவிட்டால் போதும். பெண்களுக்கு ஒன்பது நாட்களும் கொண்டாட்டம்தான்.
வீடுகளில் பெண்கள் கொலு பொம்மைகளை அழகு படுத்துவதின் மூலம் அவர்களின் தனித்துவமும், பெரியவர்களை மதிக்கும் பண்பும் வளர்க்கப்படுகிறது. மேலும் பெண்கள் கொலு வைப்பதால் அவர்கள் தங்களின் கலைத் திறமையோடு கற்பனைத் திறனையும் வெளிப்படுத்துவார்கள். நவராத்திரி நாட்களில் வீட்டை அலங்கரித்து, கொலு வைத்து சுமங்கலிப் பெண்களையும், கன்னிப் பெண்களையும் வீட்டிற்கு அழைத்து அவர்களுக்குத் தாம்பூலம் கொடுத்து உபசரிப்பார்கள்.
இதைத்தவிர விகடகவி போன்ற பத்திரிகைகளில் வாசகர் போட்டிகளில் கலந்து கொள்ள ஆர்வமும் காட்டுவார்கள்.
இந்த ஆண்டு நவராத்திரி விழா அக்டோபர் 2 ம் தேதி துவங்குகிறது. அக்டோபர் 11 ம் தேதி சரஸ்வதி பூஜையும், அக்டோபர் 12 ம் தேதி விஜயதசமி விழாவும் கொண்டாடப்பட உள்ளது.

Navratri has arrived..!! Let's put kolu…!!!

மண்ணால் ஆன பொம்மை:
கொலு வைப்பது குறித்து பதினெட்டு புராணங்களில் ஒன்றான 'மார்க்கண்டேய புராணத்தில்" சுரதா என்ற மகாராஜா, தனது பகைவர்களை வெற்றி கொள்வதற்காக குரு சுமதாவிடம் ஆலோசனை கேட்கிறார். குருவும் அவருக்குத் தகுந்த ஆலோசனை வழங்குகிறார். குரு கூறியபடி, தூய்மையான ஆற்று மணலைக் கொண்டு காளி ரூபத்தைச் செய்கிறார் மகாராஜா சுரதா. அதைக் காளியாக அலங்கரித்து, பற்றுடன் உண்ணா நோன்பிருந்து மனதாலும் மெய்யாலும் வழிபடுகிறார். அம்பிகை அவரது வேண்டுதலை நிறைவேற்றி, அவர் விரும்பியபடி அரக்கர்களையும் பகைவர்களையும் அழித்து, பின்பு ஒரு புதிய யுகத்தையே உருவாக்குகிறார். மனம் மகிழ்ந்த மகாராஜா சுரதா, அம்பிகைக்கு நன்றி தெரிவிக்க, அம்பிகையும், “ஐம்பூதங்களில் ஒன்றான மண்ணால் செய்யப்பட்ட பொம்மையை வைத்து என்னைப் பூஜித்தால் நான் உனக்குச் சகல சுகங்களையும், சௌபாக்கியங்களையும் அளிப்பேன்” என்று அருள்பாலித்தாள் என்பதாகச் சொல்லப்பட்டுள்ளது. இதன் அடிபடையில் தான்
நவராத்திரி கொலுவில் அம்மனை வைத்து பூஜிக்கும் மரபு ஏற்பட்டது.

Navratri has arrived..!! Let's put kolu…!!!

கொலுப் படிகள்:
நவராத்திரியின் தனிச் சிறப்பு கொலு பொம்மைகள் வைத்துக் கொண்டாடுவது. இப்பண்டிகையின் நோக்கமே இக, பர வாழ்வின் உயர்வுதான். அந்த உயர்வைப் படிகள் மூலம் விளக்குவதே கொலுவின் முக்கிய அம்சம். மனிதன் படிப்படியாக ஆன்மீக சிந்தனைகளை வளர்த்துக் கொண்டு, இறுதியாக இறைவனுடன் கலக்க வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்துவதற்காகவே, கொலுவில் படிகள் அமைக்கப்பட்டு, அதில் பொம்மைகள் அடுக்கி வைக்கப்படுகின்றன. இந்தப் படிகள் ஒற்றைப் படையில் அமைந்திருக்க வேண்டும். அவை ஒன்று, மூன்று, ஐந்து, ஏழு, மற்றும் ஒன்பது. அவரவர்களின் இடம், பொருள் ஆகியவற்றின் வசதியைப் பொறுத்து இந்த படிகளை அமைக்கலாம். பொதுவாக, பண்டைய பெரும்பாலானவர்களின் வீடுகளில் ஏழு படிகள் அல்லது ஒன்பது படிகள் வைத்துத் தான் கொலு வைப்பார்கள். இதில் மரப்பாச்சி பொம்மைகள் முக்கிய இடம் வகித்தது. தற்பொழுது இடமின்மை அல்லது வேறு சில காரணங்களால் ஐந்து படிகள், மூன்று படிகள் என்று வைப்பவர்களும் இருக்கின்றனர். எத்தனை படிகள் வைத்தாலும், படிகளின் எண்ணிக்கையைக் கீழிருந்து மேலாக, ஒன்று, இரண்டு என்று எண்ண வேண்டும். மேலும் கொலு வைக்கும் இல்லங்களில் படிகளுக்குக் கீழே பூங்கா அமைப்பது உண்டு.
ஒன்றாம் படி
ஓரறிவு உயிர்களான புல், செடி, கொடி போன்ற தாவரங்களின் பொம்மைகளை வைக்க வேண்டும்.
இரண்டாம் படி
ஈரறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகளை வைக்கலாம். மற்றும் சோழிகளால் செய்யப்பட்ட பொம்மைகளையும் வைக்கலாம்.
மூன்றாம் படி
மூன்றறிவு உயிர்களான கரையான், எறும்பு, சிறு பூச்சிகள், மண் புழு ஆகியவற்றின் பொம்மைகள்.
நான்காம் படி
நான்கறிவு உயிர்களான நண்டு, வண்டு, பட்டாம்பூச்சி ஆகியவற்றின் பொம்மைகளை வைப்பது சிறப்பு.
ஐந்தாம் படி
ஐந்தறிவு உள்ள மிருகங்கள், பறவைகள் ஆகியவற்றின் பொம்மைகளை அழகுற வைக்கலாம்.
ஆறாம் படி
ஆறறிவு மனிதர்களின் பொம்மைகள், குறிப்பாகத் தலைவர்கள், சாதனையாளர்கள் ஆகியோரின் உருவங்களை வைப்பதால், இல்லத்துக்கு வரும் விருந்தாளிகள் அச்சிலைகளில் உள்ளவர் களின் சாதனைகளை நினைவு கூறமுடியும்.
ஏழாம் படி
மனித நிலையிலிருந்து உயர் நிலையை அடைந்த சித்தர்கள், ரிஷிகள், மகான்கள் ஆன ஷீர்டி சாயிபாபா, இராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், ரமணர், வள்ளலார், காஞ்சி மகா பெரியவர் போன்றவர்களின் பொம்மைகளை வைக்கலாம்.
எட்டாம் படி
பகவானின் அவதாரங்களான தசாவதாரம், நவகிரகங்கள், அஷ்டலட்சுமிகளின் பொம்மைகள் வைக்கலாம்.
ஒன்பதாம் படி
பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவபெருமான் ஆகியோரது பொம்மைகளை அவரவர் தேவிகளுடன் இருக்குமாறு வைக்க வேண்டும். மேலும், விநாயகர், முருகப்பெருமான் உள்ளிட்ட தெய்வங்களின் பொம்மைகளும் வைக்கலாம். இங்கே பூரண கும்பத்தையும் வைத்து நிறைவு செய்யவேண்டும்.
இவ்வாறு வாழ்க்கையின் தத்துவத்தைப் படிப்படியாக விளக்கும் நவராத்திரியில் கொலு பொம்மைகளை வைத்து வழிபட்டு நவகிரக நாயகியின் அருளைப் பெறுவோம்.

Navratri has arrived..!! Let's put kolu…!!!

நவராத்திரி பண்டிகை வழிபாட்டுப் பலன்கள்:
நவராத்திரி பத்து தினங்களும் மாலை வேளையில் வண்ண நிறக் கோலங்கள் போட்டு, குத்து விளக்கேற்றி, சக்தி தேவியின் ஸ்தோத்திரப் பாடல்களைப் பாடி மகிழ்வார்கள். கொலு வைத்துள்ள வீட்டிற்கு, உற்றார் உறவினர்கள் தினமும் மாலையில் வருகை புரிந்து பக்திப் பாடல்களைப் பாடுவதும், புராணங்கள் வாசிப்பதும் நடைபெறும்.
நவராத்திரி தினங்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தானியங்களால் அம்பாளுக்கு நைவேத்தியம் செய்த சுண்டலை வீட்டிற்கு வந்தவருக்குக் கொடுத்து உபசரிப்பார்கள்.சுமங்கலிப் பெண்களுக்குச் சுண்டல் பிரசாதத்துடன் பூ, தாம்பூலம், இரவிக்கைத்துணி, வளையல் போன்ற மங்கலப் பொருள்களைக் கொடுத்து மரியாதை செய்வது இன்றும் வழக்கமாக உள்ளது.
நவராத்திரி நாளில், வீடுகளில் கொலு வைத்து வழிபடுவதால் சர்வ மங்கலமும் பொங்கும் என்பது ஐதீகம். கொலு வைக்கும் பழக்கம் இல்லாதவர்கள், கொலு வைக்க நினைத்து சில காரணங்களால் வைக்க முடியாதவர்களும் கூட சாதாரணமாக நாம் வழிபடக்கூடிய தெய்வங்களுக்கு பூ அலங்காரங்கள் செய்து வழிபடுவதோடு, நவராத்திரி விழாவின் ஒன்பது நாட்களிலும், ஒவ்வொரு தானியங்களால் செய்த சுண்டலை அம்பாளுக்கு நைவேத்தியம் செய்து, அதை அருகில் உள்ளவர்களுக்குக் கொடுப்பது மிகவும் சிறப்பு. நவராத்திரி நாள்களில் வருபவர்களுக்குத் தாம்பூலம் கொடுத்து, அவர்களை மகிழ்ச்சியாக, அன்பாக அனுப்புவதால், மகாலட்சுமியின் அருளையும் பெறலாம். நவராத்திரி கொலுவை வழிபடுவதால் கன்னிப் பெண்கள் திருமண பாக்கியம் பெறுவர். சுமங்கலிப் பெண்கள் மாங்கல்ய பலம் பெறுவர். மூத்த சுமங்கலிப் பெண்கள் மகிழ்ச்சி, மன நிறைவு, திருப்தி அடைவர்.

“வீட்டையே கோயிலாக்கும் இந்த உன்னதமான நவராத்திரி பண்டிகையை நாமும் கொண்டாடி இந்நாளில் அம்பாளின் பரிபூரண அருளைப் பெறுவோம்!!”