தொடர்கள்
ஆன்மீகம்
ராமன் எனும் ஒற்றைச் சொல் - ஆர். சங்கரன்

20240019143616577.jpg

ராமன்! இந்த ஒற்றைச் சொல் பாரத்தின் பண்பாட்டைப் பழமையை என்றும் நிலைத்த நீதியைச் சொல்லும். ராவணன் என்ற பத்துத் தலைகொண்ட ஒருவனை அழிக்கப் பரம்பொருளே மனிதப் பிறவி எடுத்து வந்த கருணையே ராமன். அரக்கனே ஆனாலும் அவனுக்கு அளித்த வரத்தின் வரம்பு மீறாமல் அறத்தைக் காத்த அருமனிதன் ராமன்.

மதி மாறியதால் சபிக்கப் பட்டுப் பல்லாண்டுகாலம் கல்லாய்க் கிடந்த அகலிகையைப் புதுப்பித்து கௌதமருடன் சேர்த்துவைத்து வணங்கிய புனிதன் ராமன்.

தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்று எளிதாய் வந்த அரசாட்சியை புன்சிரிப்போடு உதறித் தள்ளிய தலைமகன் ராமன்

அறமும் தவமும் தழைக்கப் பதினான்காயிரம் அரக்கரொடு ஒற்றையாய்ப் பொருத அரச மகன் ராமன்

மறைந்திருந்து வாலியைக் கொன்ற பழியைத் தானே ஏற்று சுக்கிரீவனை அரசனாக்கிய அருமை நண்பன் ராமன்.

படகோட்டியும் குரங்கும் அரக்கனும் எனக்குத் தம்பிகள் என்று உறவின் உண்மை உருவைக் காட்டிய அண்ணன் ராமன்.

பறவையாம் கருடனுக்கும் பெருமூதாட்டி சபரிக்கும் வீடுபேறு அளித்த கருணை வள்ளல் ராமன்.

சீதையைக் கொத்திய காகாசுரனை அழிக்கப் புல்லையே பெரும் ஆயுதமாக்கிய வல்லவன் ராமன்.

பெரும் வரபலமும் உடல்பலமும் படைபலமும் கொண்ட பெரும் அரக்கர் படையை எதிர்க்க ராமனும் தம்பி இலக்குவனும் குரங்குப் படையும். தன்னம்பிக்கையும் அறவழியும் இருந்தால் வெற்றி நிச்சயம் என்று காட்டிய வீரன் ராமன்.

ஒரு இல் ஒரு சொல் ஒரு வில் என்று ஒழுக்கத்திற்கு முப்பரிமாணம் காட்டிய ஒப்பற்ற மனிதன் ராமன்.

தனக்கிழுக்கு வந்தாலும் தனது பதவிக்கு ஒரு இழுக்கு வரக் கூடாது என்று அருமை மனைவியைத் துறந்த துறவி ராமன்.

ஒரு அரக்கனை அழிக்க எடுத்த அவதாரமானாலும் உலகில் மனித வாழ்வின் அறத்தைத் தானே நீண்ட காலம் வாழ்ந்து காட்டி எடுத்துக் காட்டாய் விளங்கும் உத்தமன் ராமன்.

மனிதனாய்ப் பிறந்து மனிதனாய் வாழ்ந்து தானே பரம்பொருள் என்று எங்கும் எந்த வித அற்புதத்தையும் நிகழ்த்தாமல் மானுடத்தைச் சிறப்பித்த சீரிய வடிவம் ராமன்.

அவதாரம் முடிந்து வைகுந்தம் திரும்பும்போது அடியவர் எல்லரையும் தன்னுடன் அவ்விடம் அழைத்துச் சென்ற பக்த வத்ஸலன் ராமன்.

இப்படி ராமனைப் பற்றிச் சொல்லத் தொடங்கினால் அதற்கு எல்லையே இராது. இவன் போல் வாழ் என்று ஒருவனைச் சுட்டிக் காட்ட வேண்டுமானால் அது ராமன் ஒருவன் போதும்.

தனிமனிதனாக மட்டுமல்ல, ஒரு அரசனாகவும் அவன்போல் ஆண்டவர் இல்லை. அந்தணர் அச்சமின்றியும், சத்திரியர் வெற்றியுடனும், வணிகர் செல்வத்துடனும் தொழிலாளிகள் இன்பத்துடனும் இருந்தனர் என்று ராமாயணம் சொல்லும். ஒரு நாட்டில் எல்லாத் துறை மக்களும் மன நிறைவுடன் இருப்பது என்பது ஒரு கனவு. அதை நடத்திக் காட்டியவன் ராமன். அதனால்தான் இன்றும் ஒரு லட்சிய அரசு என்றால் அதை ராம ராஜ்ஜியம் என்று சொல்கிறோம்.

அவன் மட்டுமல்ல, அவனது நாமமும் பெரும் வலிமை உடையது. சொல்லப் போனால் அவனைவிட அவனது நாமத்திற்கு வலிமையும் பெருமையும் அதிகம்.

கொடூரமான வேட்டைக் காரனாக இருந்த ரத்னாகரனை பெரும் முனிவனாக மகாகவியாக ஆக்கியது ராம நாமம்.

ஒரே தாவாகக் கடலைத் தாண்ட முற்பட்ட அனுமனுக்குத் துணையாக் இருந்தது ராம நாமம்

சீதையைக் காணாமல் மனம் துவண்ட அனுமனுக்கு உற்சாகம் கொடுத்து சீதைக் காட்டியது ராம நாமம்

கொடும் அரக்கர்களையும் போரில் எதிர்க்கும் சக்தியை குரங்குகளுக்குக் கொடுத்தது ராம நாமம்.

இன்றும் காசியில் மரணிக்கும் மனிதர்களுக்கு முக்தியை அளிக்க ஈசன் அவர்கள் காதில் ஓதுவது ராம நாமம்.

அதனாலேயே அதற்குப் பெயர் தாரக நாமம், பிறவிப் பெருங்கடலைக் கடக்க உதவும் நாமம் ராம நாமம்.


இலக்கியம் ஓவியம் சிற்பம் கலை இசை நாட்டியம் என்று பாரத நாட்டில் வாழ்வின் எல்லாத் துறைகளிலும் இணைந்து இசைந்து நிற்பவன் ராமன் அவன் நாமம்

அவன் பிறந்த இடம் அயோத்தி. அன்னை கோசலையும் மற்ற இருவரும் பிறந்த வீட்டிற்குச் செல்லாமல் புகுந்த வீட்டிலேயே தத்தம் மதலைகளை ஈன்றனர். மனித வாழ்க்கைக்கு இலக்கணம் வகுத்து அதனை வாழ்ந்து காட்டி இலக்கியம் படைத்த ராமன் பிறந்த இடம் அயோத்தி. உலகமெல்லாம் அவனை ரகு ராமனாக, சீதா ராமனாக, கோதண்ட ராமனாக, ஜயராமனாக அலங்கரித்து வணங்கினாலும் தான் பரம்பொருள் என்பதை மறந்து மறைத்து ஒரு சராரரி மனிதக் குழந்தையாக அன்னையின் கருவில் பத்து மாதம் தங்கி வளர்ந்து சித்திரையில் உதித்த அந்த பத்தரை மாற்றுத் தங்கம் பிறந்த இடத்தில் வணங்கும் இன்பம் தனிதானே.

கடல்போல் பரந்து பெருகிப் ப்ரவாகமாய் வரும் கங்கையில் எங்கு குளித்தாலும் புண்ணியம்தான். ஆனாலும் அது தோன்றும் இடத்தில் சென்று ஒரு கை நீரைத் தலைமேல் தெளித்துக் கொள்ளும்போது ஒரு தனி சிலிர்ப்பு வருவது உண்மைதானே. என் பிறந்த நாடு, என் பிறந்த ஊர், என் பிறந்த மண் என்று ஒவ்வொருவரும் நினைத்து மகிழும்போது எல்லாம் வல்ல பரம்பொருள் மனிதனாக வாழத் தீர்மானித்து அவ்விதம் பிறந்த ஊர், பிறந்த இடம் நமக்குக் கோயிலைவிடவும் பெரிதுதானே.

அயோத்தி ராம ஜன்ம பூமி நம் ஆத்மாராமன் பிறந்த இடம் மட்டுமல்ல. அண்ணன் தம்பிகள் நால்வரும் இணைந்து விளையாடிய இடமும் அதுவே. விசுவாமித்திரன் வந்து ராமனைத் தா என்று கேட்டுப் பெற்ற இடமும் அதுவே. சீதை மணமுடித்து புக்ககம் என்று புகுந்ததும் அதுவே. கைகேயி வரம் கேட்டது, தயரதன் உயிர் துறந்ததுமான சோகம் நிகழ்ந்தது அங்கேயே. வனவாசம் முடிந்து சீதாராமன் பட்டாபிராமனாகப் பரிமளித்ததும் அந்த இடமே. தர்மத்தின் உருவான ராமனுடைய ஒவ்வொரு பெரும் காதையும் அந்த இடத்தோடு நெருங்கிய தொடர்புடையது.

பாரதத்தின் ஆன்மாவில் கலந்தது ராமாயணம் அதன் நாயகன் ராமன் அவன் பிறந்து வளர்ந்து தர்மத்தின் வழி வாழ்ந்து காட்டியது ராம ஜன்ம பூமி. ‘எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே’ என்று பாடினான் பாரதி. அப்படியானால் எந்தையும் தாயும் அவர்தம் முந்தையர் ஆயிரமாயிரம் ஆண்டுகள் முன்பு வணங்கி மகிழ்ந்த ராம ஜன்ம பூமி அதிலும் சிறப்பல்லவா. எவனை நினைத்தால் பாவம் நீங்கி புண்ணியம் சேருமோ அவன் பிறந்த இடமல்லவா எனக்கு மோட்சத்தின் ஊற்று. அதை ‘ஜய் ஸ்ரீராம் ஜய் ஸீதாராம்’ என்று வணங்கேனோ !!!!