தொடர்கள்
ஆன்மீகம்
ராம ராஜ்யம் என்றால் ?? - சத்யபாமா ஒப்பிலி

20240019115821607.jpeg

இராமராஜ்யம். சிறு வயதிலிருந்தே கேட்டு வளர்ந்த வார்த்தை. ஒரு அப்பழுக்கற்ற அரசாட்சி தான் அது என்பது வரை புரியும்.

ஒரு அரசன் மக்களின் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும் என்பதை மட்டுமே கருத்தில் கொண்டு அரசு புரிந்தவர் என்பது வரையில் புரிந்திருந்தது. ஆனால் எல்லோரும் புகழும் அந்த அரசாளுமைக்கு நிறைய பரிணாமங்கள் இருக்கும் என உணர்ந்து தேடிய போது கிடைத்தது தான், ராம ,பரத சம்பாஷனை. இது அயோத்தியா காண்டத்தில் நூறாவது சர்கத்தில் இருக்கிறது.

தந்தையின் கட்டளையை ஏற்று கானகம் செல்கிறார் ராம பிரான். எந்த தவறும் செய்யாத போதும் ஊர் பழிக்கு ஆளாகி நிற்கிற பரதன், அண்ணனை தேடி கானகம் செல்கிறார். தான் அழைத்தால் வந்து விடுவாரென்று நம்பி. அங்கே அவர்களுக்கு இந்த சம்பாஷனை நடக்கிறது. ராம பிரான் தன் தமயனிடம் 75 கேள்வி கேட்கிறாராம். அத்தனையும் ராஜ்ய பரிபாலனம் சம்மந்தப்பட்டது. தனக்கு உரிமை இல்லாத நாடு என்று ஆனபின்னும் தன் பிரஜைகள் மேல் ராமபிரானின் அக்கறை இந்த கேள்விகளின் மூலம் நமக்கு புலப்படும். ஆயிரம் ராமர்களுக்கு சமானம் என்று பாராட்டு பெற்ற பரதனின் அருமை ராமருக்கு தெரியாத என்ன? இருப்பினும் அந்த கேள்விகள் அவசியம். பரதன் மூலமாக உலகிற்கு சொல்ல வேண்டும். அந்த கேள்விகள் கேள்விகளாக இல்லாமல் உன்னை நான் நம்புகிறேன் என்பதை வலியுறுத்தும் வாக்கியங்களாகவே இருக்கும்.

அமைச்சரவை எவ்வாறு இருக்கவேண்டும், படைகள் எவ்வாறு இயங்க வேண்டும், தூதுவர்களும், ஒற்றர்களும் எவ்வாறு இருக்கவேண்டும், யாரை எல்லாம் ஆதரிக்க வேண்டும், யாருக்கெல்லாம் மரியாதை செலுத்தவேண்டும், தண்டனை எவ்வாறு இருத்தல் வேண்டும் மேலும் சிலவற்றையும் அவைக்குண்டான கோட்பாடுகளையும் முன் வைக்கிறார். இதில் ஒரு மன்னன் உறங்க வேண்டும் சமயமும், அவன் உணவு முறையும், அவன் ஆடை உடுத்தும் நேர்த்தியும் சொல்லப்பட்டிருக்கிறது.

அர்த்த ஜாமத்தில் எழுந்து அரசு பரிபாலனம் செய்வதைப் பற்றி யோசிக்கிறாயா? என்று வினவுகிறார். படை வீரர்களுக்கு மானியம் சரியான நேரத்திற்கு செல்கிறதா என்று கவனிப்பாய் என்று நம்புகிறேன் என்று கூறுகிறார். அவர்களை திருப்தி படுத்தவில்லை என்றால் நாட்டின் பாதுகாப்பிற்கு பங்கம் விளையும் என்று அறிவுறுத்துகிறார். முக்கியமான விஷயங்கள் நான்கு காதுகளுக்கு மட்டுமே முதலில் சேரும் படி பேசுகிறாய் தானே என்று வினவுகிறார். கையூட்டும், ஊழலும் கடினமாக தண்டிக்கப்படவேண்டும் என்று உணர்த்துகிறார். ஒரு அரசு முடிவு எடுக்கும்போது எண்ணிக்கையில் அதிகமாக இருக்கும் சபையில் முடிவு எடுக்கிறாயா அல்லது குறைவாக எண்ணிக்கை இருந்தாலும் அறிவுசார் சான்றோர்கள் மத்தியில் முடிவு எடுக்கிறாயா என்றும் கேட்கிறார். தன் நாட்டின் ரகசியம் தானாக தெரிவிக்கும் முன் அயல் நாடுகளுக்கு தெரிவதில்லயே என்று கேள்வி மூலம் நாட்டின் ரகசிய பாதுகாப்பை வலியுறுத்துகிறார். வேலையை பகிர்ந்தளிக்கும் பொழுது அவர் அவர்கள் தகுதியை கணித்து பொறுப்புகள் கொடுக்கிறாய் அல்லவா என்கிறார். அதிகார துஷ்பிரயோகத்தால் மக்கள் பீதியுடன் இருக்கிறார்களா என்பதை கவனிப்பாய் என்று நம்புகிறேன் என்கிறார். ஒரு நாட்டின் பொருளாதார சம்மந்தமான சிந்தனையும் முன் வைக்கிறார். குறைந்த காலம் மற்றும் பொருள் செலவில் மிகுந்த லாபம் ஈட்டும் நற்காரியத்தை மேற்கொள்கிறாய் தானே என்று வினவுகிறார். யானைகள் நிரம்பிய வனத்தைப் பாதுகாக்கும் அவசியமும், பெண்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையும் வலியுறுத்தப் படுகிறது. அயோத்தி எப்படி இருக்க வேண்டும் என்றும் கூறுகிறார். தங்கள் மூதாதையர்கள் அலங்கரித்த அயோத்தி என்றும் செல்வச்சிறப்புடனும், நன் மக்களுடனும், எல்லா வளங்களும் கொண்டு, திருவிழா கோலத்துடன் மகிழ்ச்சியான ஆண் பெண்களுடன், தேசாந்த்ரிகளுக்கு அங்கங்கே தண்ணீர் பந்தல்களுடனும் எந்த குறையுமில்லாமல் சிறப்புடனும் விளங்கும் என்று நம்புவதாக கூறுகிறார்.

இப்படி பல கேள்விகள், விளக்கங்கள். ஒவ்வொன்றிலும் ஆயிரம் அர்த்தங்கள். இன்றைய மேலாண்மைக்கும் பொருந்தும் கருத்துகள்.

படிக்கப் படிக்க ராமனின் ராஜ்ய பரிபாலனம் சிலிர்ப்பையூட்டுகிறது. ஒரு மன்னனுக்கு வேண்டிய வீரம், கருணை, கோபம், மதிநுட்பம், அடக்கம், ஆளுமை, கருணை அத்தனையும் இந்த உரையாடலில் உரைந்திருக்கிறது.

தமையனின் அறிவுரைகளை அறிவில் சுமந்து, பழியுடன் கடத்தப் போகும் நாட்களை மனதில் சுமந்து, எதையும் கடக்கலாம் என்னும் தைரியம் சொல்லும்.பாதுகையை தலையில் சுமந்து அயோத்திக்கு அருகில் இருக்கும் நந்திகிராமதிற்கு சென்று அரியணையில் பாதுகையை வைத்து அரசாட்சி ஆரம்பிக்கிறான் பரதன். ராமர் பாதம் படும் வரை அவரின் பாதுகையே ஆண்டது அயோத்தியை. ராமராஜ்யம் ராமருடன் நிற்பது அல்ல.

நெறி பிழறாமல், சுயநலமில்லாமல், பொது சேவையை மனதில் கொண்டு அமையும் எந்த ஆட்சியும் ராமராஜ்யமே.