தொடர்கள்
ஆன்மீகம்
அயோத்தியில் ஓர் அற்புதம். -முனைவர் எம்.ஏ.வெங்கடகிருஷ்ணன்

20240019150523380.jpeg


சென்ற நூற்றாண்டில் சென்னை திருவல்லிக்கேணியில் வாழ்ந்தவரான ஸ்ரீ உ.வே. யோகி பார்த்தஸாரதி ஐயங்கார் ஸ்வாமியின் கனவில் இராமபிரான் தோன்றி தன்னுடைய ஜந்மபூமியான அயோத்தியில் தனக்கு ஒரு கோயில் கட்ட வேண்டும் என்று நியமித்தான். அதற்காக ஸரயூ நதிக்கரையில் (கோலாகாட் என்ற இடத்தில்) நிலத்தை வாங்கி கோயில் கட்டத் தொடங்கினார். அங்கு பிரதிஷ்டை செய்வதற்கு ப்ராசீனத் திருக்கோயிலின் மூர்த்தி (விக்ரகம்) ஏதேனும் கிடைக்குமா என்று தேடிக் கொண்டிருந்தபோது, திருப்புல்லாணியில் ஸ்ரீஜகந்தாதப் பெருமாள் ஸந்நிதியில் திருவுண்ணாழி ப்ரதக்ஷிணத்தில் தளவரிசை செய்யும் போது மேரு உத்தரபாகத்தில் சார்வரி வருஷம் புரட்டாசி மாதம் புனர்வசு நக்ஷத்ரத்தில் பத்து நாழிகையில் பூமியிலிருந்து ஸ்ரீராமபிரான் விக்ரகம் கிடைத்ததாக ஸ்ரீயோகி ஸ்வாமிக்கு பெருமாள் ஸ்வப்னம் சாதிக்க உடனே அவர் ஸ்ரீபார்த்தஸாரதிப் பெருமாள் அனுமதியைப் பெற்றுக் கொண்டு திருப்புல்லாணிக்கு எழுந்தருளி அக்கோயில் நிர்வாகியும் ஸ்ரீராமநாதபுரத்திற்கு ராஜாவுமான பாஸ்கர சேதுபதியைக் கண்டு அவருக்கு ஹிதோபதேசம் பண்ணி பின் திருஅயோத்திக்கு திருப்புல்லாணியில் அவதரித்த ஸ்ரீராமபிரான் விக்ரகத்தை எழுந்தருளப் பண்ணிக் கொடுக்க வேண்டுமென்று கேட்க, ராஜாவும் தனக்கும் பெருமாள் கனவில் வந்து அப்படியே கூறியதாகக் கூறி அப்படியே எழுந்தருளப் பண்ணிக் கொடுத்தார்.

நாலுநாள் நாலாயிர திவ்யப்ரபந்தத்தை ஸேவித்துக் கொண்டு `வருக வருக வருக இங்கே காகுத்த நம்பீ வருக' என்று ப்ரார்த்திக்க அதற்கு பெருமாள் திருவுள்ளம் உகந்தருளினார். ஸ்ரீயோகிஸ்வாமி பயணகதியில் திருவல்லிக்கேணிக்குப் புறப்பட்டு ஸ்ரீராமபிரான் மூர்த்தியை எழுந்தருளப் பண்ணிக் கொண்டு திருவயோத்திக்கு எழுந்தருளினார். ப்ராசீனமாக அயோத்தி என்று வழங்கி வரும் இடத்தில் ஸரயு நதி ஸமீபத்தில் (கோலாகாட் என்ற இடத்தில்), ஸ்ரீராமபிரான் ஸ்ரீரங்கநாதனை ஆராதித்ததாகக் கூறப்படுமிடத்தில் பூமியை வாங்கி அதில் கட்டங்களைக் கட்டிவைத்து 1904ம் வருஷம் ஸ்ரீராமபிரான், ஸ்ரீரங்கநாதன் ஆகியோரையும், நம்மாழவார், திருமங்கையாழ்வார், உடையவர், மணவாளமாமுனிகள் ஆகியோரையும் பிரதிஷ்டை செய்வித்தார்.

20240019150544335.jpeg

திருக்கோயில் நிர்மாணம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தபோது 1907ம் வருடம் அவர் வைகுண்டம் அடைந்துவிட்டார். அதற்குப் பிறகு அவருடைய மனைவியான யோகி சிங்கம்மா தொடர்ந்து கோயில் திருப்பணிகளை மேற்கொண்டு 1934ம் வருடம் ஸம்ப்ரோக்ஷணமும் நடத்தினார். திருப்புல்லாணியிலிருந்து எழுந்தருளிய எம்பெருமான் அத்திருக்கோயிலில் எழுந்தருளியுள்ளபடியால் அத்திருக்கோயில் `திவ்யதேஷ்’ என்றும் `ஸேதுராம் மந்திர்’ என்றும் வழங்கப் பெற்றது. தமது 93ம் வயது வரை திருக்கோயில் நிர்வாகத்தைச் செய்து வந்த ஸ்ரீமதி யோகி சிங்கம்மா 1943ம் வருடம் பரமபதித்தார். 35 வருடங்களுக்குமேல் அவருடைய நிர்வாத்தின்கீழ் அத்திருக்கோயில் இருந்தபடியால், அது `அம்மாஜி மந்திர்’ என்றே அங்குள்ளவர்களால் அழைக்கப்பெறலாயிற்று.

20240019150605330.jpeg
மூலவர், உத்ஸவர், விமானம், துவஜஸ்தம்பம் முதலியவைகளுடன் தென்னிந்தியப் பாணியில் திகழும் திருக்கோயில் அயோத்தியில் இது ஒன்றேயாகும். `ஸஹபத்ந்யா விசாலாக்ஷ்யா நாராயணம் உபாகமத்’ என்று வால்மீகிராமாயணத்தில் கூறியுள்ளபடி ஸ்ரீரங்கநாதனை இராமபிரான் (விபவத்தில்) ஆராதித்த இடம் இது என்று கொண்டுள்ளபடியால் இங்கு ஸ்ரீரங்கநாதனுடைய திருமேனியும் அமைந்துள்ளது. நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், உடையவர், மணவாளமாமுனிகள் ஆகியோரும் இத்திருக்கோயிலில் எழுந்தருளியுள்ளனர். ஸ்ரீ யோகி ஸ்வாமியால் திருவல்லிக்கேணியில் நிறுவப்பட்ட ஸ்ரீஸரஸ்வதீ பண்டாரம் கமிட்டி என்ற ஸ்தாபனத்தால் இத்திருக்கோயில் இன்றும் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. தென்னாட்டிலிருந்து யாத்திரை செய்பவர்கள் அனைவரும் இத்திருக்கோயிலுக்கு வந்து ஸ்ரீராமபிரானை தரிசிக்காமல் செல்வதில்லை. ஸ்ரீராமஜந்மஸ்தானத்திற்கு இரண்டு கி.மீ. தொலைவிற்குள் இத்தலம் அமைந்துள்ளது.

2024001915063259.jpeg
ஒவ்வொரு வருடமும் ஸ்ரீராமநவமியின்போது ஸ்ரீராமபிரானுக்கு உத்ஸவம் விமரிசையாக நடைபெறுகிறது. சேஷவாஹனம் கருட வாஹனம் அனுமந்த வாஹனம் யானை வாகனம் முதலிய வாகனங்களில் பெருமாள் வீதிப்புறப்பாடு எழுந்தருள்கிறார். அப்போது திரளான மக்கள் வந்து பெருமாளை தரிசித்துச் செல்கிறார்கள். இந்துக்கள் இஸ்லாமியர்கள் என்ற வேற்றுமை இல்லாமல் அனைவரும் வந்து ஸ்ரீராமபிரானை ஸேவித்துப் பிரசாதங்கள் பெற்றுக் கொண்டு செல்வது கண்கொள்ளாக் காட்சியாகும்.
1934ம் வருடத்திற்குப் பிறகு இத்திருக்கோயில் ஜீர்ணோத்தாரணம் செய்யப்படாமலிருந்ததைக் கருத்தில் கொண்டு மேற்படி கமிட்டி அங்கத்தினர்கள் இத்திருக்கோயிலை முழுவதும் ஜீர்ணோத்தாரணம் செய்வது என்று முடிவு செய்தனர்.

20240019150705413.jpeg

அனைத்து ஸன்னிதிகள், விமானம் முதலியவற்றை நன்கு செப்பனிட்டு புதிய துவஜஸ்தம்பத்தையும் நிறுவி ஏறக்குறைய ஒரு கோடி ரூபாய் செலவில் ஜீர்ணோத்தாரணம் மிகச் சிறப்பான முறையில் செய்யப்பட்டு, 28-8-2022 முதல் 1-9-2022 வரை ஐந்து நாள்கள் மிக மிகச் சிறப்பாக ஸம்ப்ரோக்ஷணம் நடைபெற்றது. கோயில், திருமலை, பெருமாள்கோயில், திருநாராயணபுரம், திருவல்லிக்கேணி, ஸ்ரீவில்லிபுத்தூர், ஆழ்வார் திருநகரி முதலிய பல திவ்யதேசத்து அத்யாபகர்கள் எழுந்தருளி நாலாயிர திவ்யப்பிரபந்த ஸேவாகாலம் செய்தனர். ருக்வேதம், யஜுர்வேதம், ஸாமவேதம், அதர்வண வேதம் ஆகிய நான்கு வேதபாராயணமும், ஸ்ரீராமாயணம் கிரந்த பாராயணமும் நடைபெற்றது.
சூர்யோதயத்திற்கு முன்னர் நடைபெறும் அருணோதயம் போல் ஸ்ரீராமஜன்மபூமியில் கோயில் பிரதிஷ்டை நடைபெறுவதற்கு முன்னர் இத்திருக்கோயிலில் விசேஷஸம்ப்ரோக்ஷணம் நடைபெற்றது குறிப்பிடத் தக்கது.