தொடர்கள்
கதை
துணையும், தொழும் தெய்வமும்… சத்யபாமா ஒப்பிலி

20231108234342335.jpeg

மழை நிற்கவே இல்லை. அம்மாவின் படுக்கையை விட்டு நகராமல் அமர்ந்திருந்தான்
அவன். சில சமயம் அவளுக்கு நினைவு தப்புகிறது, சில சமயம் கூப்பிட்டால்
என்ன என்பது போல தலையை மட்டும் ஆட்டினாள். பயமாக இருந்தது அவனுக்கு. என்ன
செய்வது என்று புரியவில்லை. ஆரம்பத்திலிருந்தே அவனுக்கு இதைப்போல
சூழ்நிலைகளை கையாளத் தெரியாது. அம்மா தானாகவே தான் மருத்துவமனைக்குச்
செல்வாள். பக்கத்து வீட்டு விமலா அக்கா சில சமயம் கூடே செல்வாள். இந்த
மழையில் யாரைக் கூப்பிடுவது. அம்மாவிற்கு என்ன ஆகி கொண்டிருக்கிறது என்று
அவனுக்கு புரியவில்லை. காலையிலிருந்து மின்சாரம் இல்லை. அம்மாவை விட்டு
விட்டு விமலா அக்காவை போய் கூப்பிட தோன்றவில்லை. மாலை 4 மணி தான் ஆகி
இருந்தது. மிக லேசாக த் தான் வெளிச்சம். அவன் கீழே இருந்து எழுந்து
அம்மாவின் அருகில் அமர்ந்தான்.

அவனுக்கு அழுகை வந்தது. ஒரு சிறு மெழுவர்த்தி மட்டும் ஏற்றி வைத்து
விட்டு அமர்ந்திருந்தான். கை கால்கள் வெல வெல என்று ஆகியது அவனுக்கு.

நாற்பது வயதாகிறது. திருமணம் செய்து கொள்ள வில்லை. அவன் தாயும் எத்தனையோ
முயற்சி செய்தாலும் நடக்க வில்லை. ஒரு இசைக் குழுவில் பாடிக்
கொண்டிருக்கிறான். இசை அமைப்பான், எல்லா வாதியங்களும் வாசிப்பான். ஆனால்
அதைத் தவிர வேறு தெரியாது.

மனதுக்குள் எதோ பாட்டின் மெட்டு ஓடிக்கொண்டிருந்தது அசந்தர்ப்பமாக. தலையை
சிலிர்த்துக் கொண்டான். அம்மா கையை லேசாக தடவிக் கொடுத்தான். அந்த
ஆள்காட்டிவிரலைப் பிடித்துக்கொண்டு மூன்று வயதில் நுழைந்த முதல் பாட்டு
வகுப்பு நியாபகம் வந்தது. கண்ணை மூடிக் கொண்டான், ஸ்வரங்கள் எல்லாம்
ஒன்றாக தலைக்குள் பிரவாகமாக பாய்ந்தது. மெதுவாக கையை கீழே வைத்து விட்டு,
தரையில் இறங்கி படுத்துக் கொண்டான்.

அவன் கண்களின் ஓரத்தில் அவனை அறியாமல் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.
திடுமென எழுந்து அம்மாவின் மூக்கில் கை வைத்தான். லேசாக மூச்சு இருந்தது.
மறுபடியும் படுத்துக் கொண்டான். எதோ அந்தாஷரி விளையாடுவது போல ஒன்று
மாற்றி ஒன்று பாடல் வந்து கொண்டே இருந்தது. இத்தனை காலத்தில் இசையை
இரைசலாய் நினத்ததே இல்லை அவன். பேய் காற்று வெளியிலும், இசையின் இரைச்சல்
உள்ளேயும் அவனால் சமாளிக்க முடியவில்லை. வேகமாக எழுந்து அமர்ந்தான்.
மேலும் கீழும் நடக்க ஆரம்பித்தான். தீடிரென்று நின்று, தான் அணிந்திருந்த
சட்டையின் நுனியை பிடித்துக் கொண்டு, எதிரில் இருந்த புத்தர் சிலையை
துடைத்தான். அம்மாவை மறுபடியும் பார்த்தான். வெளியில் இரைச்சல் அதிகரிக்க
தலையிலும் இரைச்சல் அதிகரித்தது. அம்மாவின் அருகில் போய் அமர்ந்தான். போன
வாரம் தானே சொன்னாள், " எனக்கு உடம்பு சரி இல்லை டா. நீ தனியா இருக்க
பழகிக்கோ". ஒரு பத்து நாளாகவே காய்ச்சல் இருந்தது. அட்மிட் ஆகிடலாமா
என்று விமலா கேட்டதற்கு மறுத்து விட்டாள். " ஒன்னும் இல்ல விடு, பையன்
தனியா இருக்க மாட்டான்" என்று கூறி விட்டாள். விமலா இவனிடம்
சொல்லும்போது, " அம்மாக்கு தெரியும் அக்கா" என்று கூறி விட்டான். அவனால்
சில விஷயங்கள் யோசிக்கவே முடியாது. நேற்று தான் கொஞ்சம் கொஞ்சமாய்
காய்ச்சல் கூட, மழையும் பிடிக்க அம்மாவின் அருகில் அமரும் போது எதோ சரி
இல்லை என்று தோன்றியது. சமையல் எல்லாம் விமலா அக்கா தான். இரெண்டு நாள்
மழை அவளாலும் வர முடியவில்லை. இருப்பதை வைத்துக் கொண்டு சாப்பிட்டு
கொண்டிருந்தான். அம்மாவுக்கு கஞ்சி குடு என்று ஃபோனில் சொன்னாள். சிறிது
சிறிதாக கஞ்சியைக் குடுத்தான். காலையில் வரை விமலா அக்கா அவ்வப்போது
பேசிக் கொண்டிருந்தாள். இப்பொழுது அவனின் கைபேசியில் சார்ஜ் இல்லை. உள்ளே
இருந்து கஞ்சியை எடுத்து வந்தான். அம்மாவின் அருகில் அமர்ந்து கொஞ்சம்
தேக்கரண்டியில் எடுத்து வாயின் அருகே கொண்டு போனான். உதடுகள் உலர்ந்து
போய் இருந்தன.

பட படவென்று கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. திடுகிட்டு எழுந்தான்.
அம்மாவின் மேல் கொஞ்சம் கஞ்சி சிந்தியது. தன் சட்டையை வைத்து துடைத்து
விட்டு, கதவை திறக்க போனான்.

விமலா அக்கா முழுக்க ரெயின் கோட்டில் மறைந்து இருந்தாள். இவன் கதவைத்
திறந்தவுடன், அவனைத் தள்ளி விட்டு வேகமாக அம்மாவின் அருகே வந்தாள்.
"எப்படி இருக்காங்க அம்மா என்று கேட்க ஆரம்பித்து பாதியிலேயே
நிறுத்திவிட்டு மூக்கின் கீழே காய் வைத்து பார்த்தாள். அவனிடம் எதுவும்
கேட்காமல், தன கைபேசியில் அருகில் இருக்கும் மருத்துவ மனைக்கு பேசினாள்.
புயல் , மழை யாரேனும் வருவார்களா என்று தெரியவில்லை. அவனைத் திரும்பி
பார்த்தாள். விட்டத்தை வெறித்தது பார்த்துக்கொண்டிருந்தான். பின் வேகமாக
உள்ளெ சென்று டார்ச் லைட் எடுத்து வந்தாள். இன்னும் ஒரு மூன்று
மெழுகுவர்த்தியை ஏத்தி அருகில் வைத்தாள்

"இங்கேயே இரு. அம்புலன்ஸ் வரும், அம்மாவை ஆஸ்பத்திரிக்கு கூட்டிகிட்டு
போகணும்" என்றாள்.

" சரி" என்று சொல்லிவிட்டு ஒரு ஓரமாய் போய் அமர்ந்தான்.

விமலாவிற்கு கவலை அதிகரித்தது. மூச்சு லேசாக இருக்கிறது. ஆம்புலன்ஸ் இந்த
மழையில் வந்தாலும் எப்படி தூக்கிக் கொண்டு போகப்போகிறோம் என்று
புரியவில்லை.

அவனைப் பார்த்தாள் மறுபடியும். கண்மூடி அமர்ந்திருந்தான். கைகள் தாளம்
போட்டுக்கொண்டிருந்தன. இசையும் அம்மாவையும் தவிர வேறு எதுவும் தெரியாது.
அம்மாவிற்கு ஏதாவது ஆகி விட்டால் இவன் என்ன செய்வானென்று யோசித்துத்தாள்.

மெதுவாக அவனிடம் போய் அமர்ந்தாள்.

"என்னடா பயமா இருக்கா என்றாள்" விமலாவும் அவனும் கிட்டத்தட்ட ஒரே வயதாக
இருக்கும். அவள் திருமணம் ஆகி வந்ததிலிருந்து இந்த குடும்பத்துடன் நட்பு.



பதில் எதுவும் சொல்லாமல், தலையை மட்டும் மெதுவாக ஆட்டினான். ஆம்புலன்ஸ்
சத்தம் கேட்டது. விமலா சென்று கதவை திறந்தாள். சிறிது நேரத்தில்,
இரெண்டு செவிலியர்களும் ஒரு ஆம்புலன்ஸ் ஓட்டுனரும் வந்து நின்றனர். அம்மா
படுத்திருந்த கட்டில் ஹாலில் தான் இருந்தது. அம்மாவை சோதித்துவிட்டு
உடனே ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லவேண்டும் என்று சொன்னார்கள். புயலும்,
மழையும் விட்டபாடில்லை. விமலாவிற்கு என்ன செய்வதென்று புரியவில்லை. அவன்
பேசாமல் அமர்திருந்தான். கைகள் தாளம் போடவில்லை. "ஸ்ட்ரெச்சரில்
வைத்தாலும் மழையில் நனைந்து விடுவாங்களே, அடிக்கற காத்துக்கு எப்படி
கூட்டிகிட்டு போக!" படபடப்புடன் என்ன செய்வது என்று ஆலோசித்துக்
கொண்டிருந்தனர்.

அவன் மனதுக்குள், அம்மாவின் ஆட்காட்டி விரலை பிடித்துக்கொண்டு நடக்கும்
ஒரு மூன்று வயது சிறுவனின் கைகள் மட்டுமே தெரிந்து கொண்டிருந்தது.

திடீரென்று எழுந்து வேகமாக உள்ளெ சென்றான். தான் ஒரு ரெயின் கோட்டை
அணிந்து கொண்டு, மற்றொன்றை எடுத்து வந்தான். வேகமாக அம்மாவின் உடம்பில்
போர்த்தி விட்டு, இரு கைகளாலும் அப்படியே தூக்கிக் கொண்டான். அம்மா
கொஞ்சம் பருத்த உடம்பு தான். யாராலும் தூக்குவது கடினம் தான். விமலா
பதறிப் போய் வெளியே ஓடி கதவை திறந்து வைத்தாள். ஆம்புலன்ஸ் ஓட்டுநர்
வேகமாக ஓடிப் போய் வண்டியின் கதவை திறந்து வைக்க, அம்மாவின் முகத்தின்
மேல் தன முகத்தை வைத்து மறைத்த படி வேகமாய் ஓடிப் போய் வேனின் வெளியே
நிற்க, அதற்குள் ஓட்டுநர் உள்ளே குதித்து அம்மாவை ஏற்றினார்.
ஸ்ட்ரெச்சரில் கிடத்திய பின், செவிலியர் தங்கள் வேலையை ஆரம்பிக்க, விமலா
கதவை சாத்திவிட்டு குடை பிடித்துக் கொண்டு ஓடி வர, ஓட்டுநர் ஆம்புலன்ஐ
எடுக்க, அவன் தன அம்மாவின் ஆட்காட்டி விரலை பிடித்துக் கொண்டு அமைதியாக
அமர்ந்திருந்தான். இன்னொரு கை தாளம் போட்டுக் கொண்டிருந்தது.