வணக்கம்.
பத்மா டாக்ஸ் (Padma Talks) என்ற யூடியூப் வளைதளத்தில், வுமன் எம்பவர்மென்ட் (Women Empowerment) பற்றி,
பல தகவல்களைப் பகிர்ந்து வருகிறேன்.
இதைப் பற்றிய புரிதல், பெரும் அளவில் மக்களைச் சென்றடைய வேண்டும்.
அதற்கான சிறந்த தளமாக நான் பார்ப்பது,
நம் விகடகவி இணைய இதழ்.
மக்களிடம் இதைப் பற்றிய புரிதலைக் கொண்டு வரும் நோக்கத்துடன், அடுத்த சில கட்டுரைகளை, இதன் அடிப்படையில் எழுத இருக்கிறேன்.
வுமன் எம்பவர்மென்ட் என்றால் என்ன ?
வுமன் எம்பவர்மென்ட் என்பது ஆங்கிலச் சொல். அதற்கான தமிழாக்கம் - பெண்களுக்கு அதிகாரமளித்தல் அல்லது பெண்கள் சுய-நிர்ணய உரிமை பெறுதல்.
இச்சொல்,
சில வருடங்களாகவே பரவலாக உச்சரிக்கப்பட்டு வருகிறது.
அடிப்படையில், பெண்கள், அனைத்து நிலைகளிலும், தங்களை மேம்படுத்திக்கொள்ளத் தேவையான அம்சங்களை வளர்த்துக் கொள்வதுதான் பெண்கள் சுய- நிர்ணய உரிமை.
இதை வலியுறுத்திச் சொல்வதற்கான முக்கிய காரணம்,
சமூகத்தில்,
ஆண் பெண் சம உரிமை இல்லாமல் போனது தான்.
இதை, அடிப்படையிலிருந்து நாம் புரிந்துகொள்ளவேண்டும்.
முதலில், பாலினம் (sex) என்றால் என்ன,
சமூகப் பாலினம் (gender) என்றால் என்ன,
என்பதைத் தெரிந்து கொள்வோம்.
பாலினம் (sex) :
பாலினம் என்பது கருத்தரிக்கும் தருணத்தில் தீர்மானிக்கப்படும் ஒன்றாகும்.
இரண்டு X குரோமோசோம்களுடன் ஒரு பெண்ணும், ஒரு X குரோமோசோம் மற்றும் ஒரு Y குரோமோசோமுடன் ஒரு ஆணும் பிறக்கிறார்கள். இந்த அடிப்படை மரபணு வேறுபாட்டிலிருந்து,
பிற உயிரியல் (biological) மற்றும் உடற்கூறியல் (body parts) வேறுபாடுகள் உருவாகின்றன.
இந்த உடற்கூறியல் மற்றும் பிற உயிரியல் வேறுபாடுகளைக் குறிக்கும் சொல் தான் பாலினம்.
சமூகப் பாலினம் (gender) :
சமூகப் பாலினம் என்பது, ஆணா பெண்ணா என்ற அடிப்படையில் ஒதுக்கப்படும் சமூக மற்றும் கலாச்சார வேறுபாடுகளைக் குறிக்கும் சொல்லாகும்.
அதாவது,
நாம் வளரும்போது,
நமது பாலின அடையாளத்தை வைத்து, இந்தச் சமூகத்தின் எதிர்பார்ப்பின் படி,
சில நம்பிக்கைகள் விதைக்கப்படுகின்றன.
இந்த நம்பிக்கைகள், எதிர்பார்ப்பாக மாறுகின்றன.
இந்த எதிர்பார்ப்பு தான், பெண்மை மற்றும் ஆண்மை என்று அழைக்கப்படுகின்றது.
மொத்தத்தில்,
பாலினம் என்பது உயிரியல் கருத்து என்றால்,
சமூகப் பாலினம் என்பது இந்தச் சமூகத்தின் கருத்து.
சமூகப் பாலினத்தின் விளைவு :
ஒரு பெண்ணாக, ஒரு ஆணாக, நாம் எப்படிச் சிந்திக்க வேண்டும், எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும், என்பது நமது வாழ்வியலில் பொறிக்கப்படவில்லை.
மாறாக,
பாலினத்தின் அடிப்படையில்,
நாம் எப்படிச் சிந்திக்க வேண்டும்,
எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று சமூகம் எதிர்பார்க்கிறது.
பெண்மை என்ற சொல்லே, மென்மை, நிதானம், பாசம், பொறுமை, போன்ற சமூக, கலாச்சார எதிர்பார்ப்பு அம்சங்களை உள்ளடக்கியது.
ஆண்மை என்பது வலுவான,
உறுதியான,
தைரியமான, சுறுசுறுப்பான, சுதந்திரமான போன்ற சமூக எதிர்பார்ப்புச் சொற்களைக் கொண்டுள்ளதாகும்.
உதாரணத்திற்கு - “பொம்பளையா அடக்க ஒடுக்கமா இரு; ஆம்பளை மாதிரி ஓடாதே..” என்பதும், “ஆம்பளைச் சிங்கம் நீ; பொம்பளை மாதிரி அழாதே..” என்று சொல்வதும், சமூகப் பாலின வேறுபாடுகளாகும். அடக்கமும் ஒழுக்கமும், அனைவருக்கும் தேவை. பெண்ணிடம் மட்டும் வலியுறுத்தத் தேவை இல்லை.
அதேபோல,
அழுகை,
சந்தோஷம்,
சோகம்,
காதல் போன்ற உணர்வுகளும் பொதுவானவை.
இதன் விளைவு, இச்சமூகமும் கலாசாரமும், ஆண் குழந்தையையும் பெண் குழந்தையையும் வெவ்வேறாக மதிப்பிடுகிறது.
வெவ்வேறு பொறுப்புகளையும், குணங்களையும் நிர்ணயிக்கிறது.
இந்தச் சமூக வரையறை, காலத்திற்குக் காலம், இடத்திற்கு இடம் மாறுபடும்.
அந்தச் சமூகத்தில் உள்ள அதிகாரம் வாய்ந்த குழுவால் இது நிர்ணயிக்கப்படுகிறது.
பாலினம் (sex), சமூகப் பாலினம் (gender), இரண்டையும் பிரித்துப் பார்க்கத் தெரிய வேண்டும். எப்படி?
அடுத்த கட்டுரையில் இதைப் பற்றிய விளக்கத்துடன் சந்திக்கிறேன்.
தொடர்ந்து பேசுவோம்...
Leave a comment
Upload