தொடர்கள்
தமிழ்
கத கேளு கத கேளு தமிழோட கத கேளு - 46-பரணீதரன்

போன வாரம், தவறு செய்யும் ஒரு மன்னனை சரி செய்வதற்கு புலவர்களுக்கும் பங்கு இருக்கிறது என்று சொல்லி இருந்தேன் அல்லவா. அதைப்பற்றி இந்த வாரம் சில சம்பவங்களைக் கூறுகிறார் நமது பரணீ.

20231107203253857.jpg

ஒருமுறை பல யாகங்களை செய்த பெரிய குடுமியை உடைய மற்றும் மூத்த குடி ஆகிய பாண்டிய குலத்தைச் சேர்ந்த பல்யாகசாலை முதுகுடுமி பெருவெழுதி மன்னர் அவர்கள் தன்னுடைய பட்டத்து யானையில் வீதி உலா வருகிறார். அவர் வரும் காட்சியை பார்த்து மக்கள் அனைவரும் குதூகலித்து வணக்கம் செய்கின்றனர். அவர்களைப் பார்த்து புன்முறுவல் பூத்தபடி மன்னர் செல்கிறார். இந்த காட்சியை புலவர் காரிகிழார் அவர்கள் பார்த்து பாண்டியனிடம் பின்வருமாறு வாழ்த்துப்பா பாடுகிறார்

எப்பொழுதும் நிமிர்ந்த தலையும் நேர்கொண்ட பார்வையும் கொண்ட நீ சில இடங்களில் மட்டும் தலை வணங்க வேண்டும். அவை : சிவபெருமான் ஊர்வலம் வரும்போது உன் குடை வணங்க வேண்டும்.நான்மறை ஓதும் வேதியர்கள் உன்னிடம் கையேந்தும்போது நீ தலைவணங்க வேண்டும். நீ தலையில் சூடியுள்ள பூ நீ பகைவர் நாட்டை எரிக்கும் புகையால் மட்டுமே வாடவேண்டும். மிகுந்த ஈகைப் பண்பை கொண்ட குடுமியே, நீ நிலவைப் போலவும் சூரியனை போலவும் பல காலம் நீடூடி வாழ வேண்டும். ஒரு மன்னனுக்கு புத்திமதி சொல்லி அவருக்கு வாழ்த்து பாடக்கூடிய வல்லமை அந்த காலத்தில் புலவர்களுக்கு இருந்துள்ளது.

அந்த செய்யுள் இதோ:

பணியியர் அத்தை நின் குடையே; முனிவர்

முக்கண் செல்வர் நகர்வலஞ் செயற்கே!

இறைஞ்சுக, பெரும! நின் சென்னி; சிறந்த

நான்மறை முனிவர் ஏந்துகை எதிரே!

வாடுக, இறைவ நின் கண்ணி! ஒன்னார்

நாடுசுடு கமழ்புகை எறித்த லானே!

தண்டா ஈகைத் தகைமாண் குடுமி!

தண்கதிர் மதியம் போலவும், தெறுசுடர்

ஒண்கதிர் ஞாயிறு போலவும்,

மன்னிய, பெரும! நீ நிலமிசை யானே! - புறநானூறு - 6

20231107203216396.jpg

கரிகால வளவனுக்கு பிறகு வந்த சோழர்களில் நெடுங்கிள்ளியும் நலங்கிள்ளியும் முதன்மையானவர்கள். இவர்கள் இருவருக்கும் இடையில் தவிர்க்க முடியாத காரணங்களால் போர் உருவாகிறது. நலங்கிள்ளி தன்னுடைய படையை திரட்டி கொண்டு நெடுங்கிள்ளியின் உறையூர் கோட்டையை முற்றுகை இடுகிறார். இதை கேள்விப்பட்ட புலவர் கோவூர் கிழார் உடனடியாக போர் நடக்கும் இடத்திற்கு செல்கிறார். அங்கு அவர் கண்ட காட்சி அவரை மிகவும் வருத்தம் அடையச் செய்கிறது. இரண்டு சோழர்களுக்கும் பொதுவாக இந்த பாடலை அவர் பாடுகிறார். அதன் பொருள் என்னவென்றால் :̀

உன்னோடு போர் செய்பவன் பனை மரத்தின் பூவை சூடிய சேரனோ அல்லது வேப்ப மரத்தின் பூவை சூடிய பாண்டியனோ இல்லை. அவனும் உன்னை போலவே ஆத்தி மரத்தின் பூவை சூடியவன். ஒருவர் தோற்றாலும் தோற்கப் போவது நீங்கள் இல்லை உங்களுடைய சோழர் குலமே ஆகும். இருவரும் ஒரே நேரத்தில் ஒருவரை ஒருவர் வெற்றி பெறுவது முடியாத காரியம். நீங்கள் சண்டையிடுவது உங்களுடைய குலத்தையோ குடியையோ காப்பதற்காக இல்லை. தேரிலே கொடியை வைக்கக்கூடிய புகழை உடைய உங்களை போன்ற அரசர்கள் இப்படி செய்தால் இந்த உலகமே உங்களை பார்த்து கேலி செய்து சிரிக்கும் என்று தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்.

அந்த செய்யுளை கீழே கொடுத்துள்ளேன்.

இரும்பனை வெண்தோடு மலைந்தோன் அல்லன்;

கருஞ்சினை வேம்பின் தெரியலோன் அல்லன்!

நின்ன கண்ணியும் ஆர்மிடைந் தன்றே; நின்னொடு

பொருவோன் கண்ணியும் ஆர்மிடைந் தன்றே;

ஒருவீர் தோற்பினும், தோற்ப நும் குடியே;

இருவீர் வேறல் இயற்கையும் அன்றே; அதனால்,

குடிப்பொருள் அன்று, நும் செய்தி; கொடித்தேர்

நும்மோர் அன்ன வேந்தர்க்கு

மெய்ம்மலி உவகை செய்யும், இவ் இகலே! - புறநானூறு - 45

புலவர் கோவூர் கிழார் மிகுந்த இரக்க குணம் கொண்டவர். தன்னுடைய அனைத்து செய்யுள்களிலும் பல அரசர்களை தவறான வழியில் இருந்து சரி செய்துள்ளார். சோழன் நலங்கிள்ளி, சோழன் நெடுங்கிள்ளி, சோழன் குளமுற்றத்து துஞ்சிய கிள்ளிவளவன், சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளி வளவன் போன்ற சங்க கால சோழ மன்னர்களை பல நன்னெறிச் செய்யுள்களால் நல்வழிப்படுத்தி உள்ளார். இவரது மற்ற செயல்களை அடுத்த வாரம் பார்ப்போம்.

20231107203039376.jpg

அடுத்ததாக போன வாரம் நாம் பார்த்த மோசிகீரனார் அவர்கள், நாட்டை ஆளும் மன்னர்களுக்கு பொதுவான அறிவுரையை கூறுகிறார். மக்கள் உண்ணக்கூடிய நெல்லும் மக்களுடைய உயிரை வளர்ப்பதில்லை. அதுபோல மக்கள் குடிக்கின்ற தண்ணீரும் மக்களின் உயிரை வளர்ப்பதில்லை. மக்களின் உயிரை வளர்க்கக் கூடியவன் மன்னனே ஆகும். எப்படியென்றால் தேவையில்லாமல் படையெடுத்து தன்னுடைய மக்களையும் எதிரி நாட்டு மக்களையும் கொல்லாமல் இருப்பவன் நல்ல மன்னன். அதேபோல தேவையில்லாமல் படையெடுத்து வரும் எதிரி நாட்டு மன்னனையும் புறமுதுகிட்டு ஓட வைத்து தன் மக்களையும் காத்து எதிரி நாட்டு மக்களையும் காப்பவன் நல்ல மன்னன். மக்களை கொன்று வாட்டி விதைக்கின்ற திருடர்களும் கொள்ளையர்களும் ஒரு நாட்டில் இல்லாமல் செய்ய வேண்டிய கடமை மன்னனையே சாரும். அதிக வரியை விதித்தால் மக்கள் இரவு பகல் பார்க்காமல் வேலை பார்க்க வேண்டும். அப்படி வேலை பார்க்கும் மக்களின் உயிர் விரைவில் அழிந்து போகும். அப்படி ஆகாமல் இருக்க ஒரு மன்னனாகப் பட்டவன் குறைந்த அளவு வரியை போட்டு மக்களை தன் உயிர் போல பாதுகாக்க வேண்டும். இப்படி நியாயமில்லாத போருக்கு செல்லாமல், இரக்கமில்லாதவர்களை தன்னுடன் கொள்ளாமலும், நியாயமான வரியை போட்டு மக்களை பாதுகாத்து மக்களுக்கு உயிரை கொடுப்பதே மன்னனுடைய கடமை. அந்த செய்யுள் இதோ :

நெல்லும் உயிர்அன்றே நீரும் உயிர்அன்றே

மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்

அதனால் யான்உயிர் என்பது அறிகை

வேல்மிகு தானை வேந்தற்குக் கடனே - புறநானூறு - 186

20231107202918320.jpg

மேலே கூறிய மோசிகீரனாரின் அறிவுரையை பின்பற்றாமல் பாண்டிய நாட்டை அறிவுடைய நம்பி என்ற ஒரு அரசன் ஆண்டு வந்தான். நியாயமான வரியை இட்டு மக்களை உயிர் போல காப்பாற்ற வேண்டிய மன்னன் நியாயமற்ற வரியை போட்டு மக்களை மிகவும் துன்பம் அடையச் செய்தான். இதைக் கண்டு வருத்தப்பட்ட பிசிராந்தையார் என்ற புலவர் பாண்டியனுக்கு இவ்வாறாக அறிவுரையை கூறுகிறார் :

ஒரு யானை இருக்கிறது. அதனுடைய பசி நேரத்தில் அதற்கு நாம் நன்றாக அறுவடை செய்த நெல்லை அரைத்து அரிசியாக்கி அதை சமைத்து நல்ல கவனமாக உருட்டி கொடுத்தால் அந்த தந்தை யானை அந்த உணவை வீணாக்காமல் அப்படியே சாப்பிடும். நம்முடைய நிலம் சிறியதாக இருந்தால் கூட அதில் வரும் அரிசியே அந்த யானைக்கு பல நாட்கள் போதுமானதாக இருக்கும். இதை செய்யாமல் அந்த யானையை அவிழ்த்து அந்த நிறத்தில் அதையே மேய விட்டால் அது சாப்பிடுவதை விட அதன் காலால் மிதிபட்டு அழியும் அரிசி நிறைய இருக்கும். அது போல ஒரு அரசனாகப்பட்டவன் குறைந்த வரியை விதித்தால் மக்களும் சந்தோஷமாக அவன் நாட்டில் நீண்ட காலம் இருந்து அவனுக்கு உதவி புரிவார்கள். அவனே நிறைய வரியை போட்டால் அவனுடைய நாட்டு மக்கள் அவன் நாட்டை விட்டு வெளியேறுவார்கள் மற்றும் அவன் நாட்டிலேயே இறந்தும் போவார்கள். அவன் நாடும் அழிந்து அவனும் அழிந்து போவான் என்று பிசிராந்தையார் தன்னுடைய மனக் குறையை கூறி பாண்டியனை நல்வழிப்படுத்துகிறார். அந்தச் செய்யுள் இதோ

காய்நெல் அறுத்துக் கவளங் கொளினே,

மாநிறைவு இல்லதும், பன்நாட்கு ஆகும்;

நூறுசெறு ஆயினும், தமித்துப்புக்கு உணினே,

வாய்புகு வதனினும் கால்பெரிது கெடுக்கும்;

அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே,

கோடி யாத்து, நாடுபெரிது நந்தும்;

மெல்லியன் கிழவன் ஆகி, வைகலும்

வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு,

பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின்,

யானை புக்க புலம்போலத்

தானும் உண்ணான், உலகமும் கெடுமே. - புறநானூறு - 184

ஏற்கெனவே சொன்னது போல அடுத்த வாரம் இன்னும் சில புலவர்களின் அறிவுரைகளையும், அந்த அறிவுரைகளால் மனமாற்றமடைந்த மன்னர்களையும் பற்றி பார்ப்போம்