தொடர்கள்
ஆன்மீகம்
அய்யப்பனின் மூலமும் பலர் அறியாத வரலாறும் - 4 : தேவ ரகசியம்

20231106230921329.jpg

அய்யப்பனின் மூல அவதாரமான சாஸ்தாவைப் பற்றிய புராணங்களைத் தான் இங்கு அலசுகிறோம்.

அவதார ரகசியம்

பரித்ராணாய ஸாதூனாம் விநாசாய ச துஷ்க்ருதாம் ।

தர்மஸம்ஸ்தாபனார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே।।

இது பகவத் கீதையில் 4ஆவது அத்தியாயத்தில் 8ஆவது ஸ்லோகத்தில் பகவான் கிருஷ்ணர்.

அவர் கூறுவதாவது :

எப்போதெல்லாம் தர்மத்திற்கு வீழ்ச்சி நிகழ்கிறதோ, அஹிம்சை, சத்யம், திருடாமை, பிரம்மச்சர்யம் முதலான மனித தர்மங்களையும், யாகம், தானம், தவம், கற்பித்தல், மக்களைக் காப்பது முதலான தத்தம் வர்ணாஸிரமங்களுக்குரிய ஸ்வதர்மங்களையும் நல்ல முறையில் கடைப் பிடிப்பவர்களைக் காப்பதற்காகவும், அப்போதெல்லாம் தர்மத்தை நிலைநாட்ட நான் யுகம் தோறும் அவதாரம் எடுப்பேன்...

இதிலிருந்து ஒன்று தெளிவாகிறது.

இந்த இருபத்தியெட்டு யுகங்களாக இந்த உலக இயக்கத்தில் அவரது அவதாரங்கள் காரணமின்றி நடந்ததில்லை. ஆமாம், இல்லத்திலோ கோவிலிலோ நடைபெறும் பூஜை முறையில் சங்கல்பம் என்ற தொடக்க நிகழ்வில் பஞ்சாங்கத்தில் இன்றைய நாளின் குறிப்புக்களை கூறுகையில் இன்றைய நாள் எந்த யுகத்தினது என்று கூறுகையில் ஒரு இடத்தில்அஷ்டாவிம்சதி என்று வரும். அதாவது, இந்த காலம் இருபத்தியெட்டாவது யுகம் என்று குறிப்பிடப்படுகிறது. அதாவது நாம் ஏழாவது சதுர் யுகத்தின் கலியுகத்தில் இருக்கிறோம் என்று பொருள். போன இதழில் ஒரு சதுர் யுகத்தின் கால அளவு என்பது பூமியின் 43,20,000 வருடங்களாகும்.

இப்போது ஒரு இயற்கையான கேள்வி எழுகிறது அல்லவா?

தற்போது நாம் கலியகத்தின் 5124 ஆம் வருடத்தில் இருக்கிறோம். அதாவது வேத கால அளவுக்குள் 432000 வருடங்களில் இப்போது வெறும் 5124 வருடங்களே கடந்துள்ள நிலையில் முறையற்ற நடப்பவைகளைக் கண்டு ஓ ..

இது கலியின் களி...ஆனா இப்பவே இப்படியிருக்கே இன்னும் நாலு லட்சத்தி இருபத்தைந்து ஆயிரம் சொச்சம் வருஷங்கள் இந்த கலியுகத்தில் எப்படியிருக்கப் போகிறதோ என்று சமூகத்தின் மீது அக்கறை கொண்டவர் குமுறுவார்கள்.

கண்ணுக்கெதிரேயே அதர்மத்தில் ஈடுபட்டிருப்பவர், பணத்தை சுருட்டுபவராகவும் இருந்தும் நன்றாகவும் சுகமாகவும் இருப்பதைக் கண்டு பாமர மக்களும் குமுறுவார்கள்.

தம்மால் ஒன்றும் செய்ய இயலவில்லையே என்றும் நிலை குலைந்து தலையெழுத்தென்று நொந்து கொண்டு வாழ்வை நடத்துவார்கள்.

மதில் மேல் பூனையாயிருக்கும் மக்களோ அவனை நல்லாத்தானே இருக்கான் நாமும் அவன்படி நடந்து நல்லா இருக்கலாமே என்று அந்த அதர்மத்துக்கு ஒத்துப்போவார்கள். விட்டில் பூச்சிபோல மாண்டும் போவார்கள்.

மூல அதர்மிகள் ஏன் எப்படி இன்னும் அந்த அதர்மத்தில் திளைத்தும் நன்றாக இருக்கிறான் என்று பார்க்கையில் ஒரு விஷயம் நன்றாக புலப்படும்.

இதை இரணியகசிபு என்ற அரக்கனின் கதை மூலமே தெரிந்து கொள்ளலாம்.

கேட்ட வரத்தின்படி தன்னைக் கொல்ல வருபவனின் தகுதிகள் எப்படியெல்லாம் இருக்கணும் சூழ்நிலை எப்படியெல்லாம் இருக்கணும்னு ஒரு லிஸ்ட் போட்டு வரம் வாங்கி செய்யாத ஒரு அட்டூழியம் கூட பாக்கி வைக்காமல் ஆட்சி செய்தான். அதையும் ஏற்றுக்கொண்டு அந்த கண்டிஷன்களை பூர்த்திசெய்து பகவான் எடுத்தது தான் ஸ்ரீநரசிம்ம அவதாரம்.

இதிலிருந்து தெரிந்து கொள்வது பூலோக அவதாரம் எடுக்க தருணமும் தகுதியும் கொண்டு இறைவனே இறங்கி வருகிறான்.

சாம,பேத,தானம் என்பது சமரசம் பேசுவதற்கான மூன்று வழிகள். இந்த மூன்று வழிகளும் அடைபடும்போது தண்டத்தை தூக்குவது என்று பொருள்.

கொஞ்சம் பளிச்சென்று சொல்ல வேண்டுமென்றால் அடி உதவுவது போல அண்ணன் தம்பி கூடஉதவ மாட்டான். ஒரு அரசன் ஒரு பிரச்னையைத் தீர்க்க, சாம, தான, பேத, தண்டம் என்ற 4 முறைகளை, ஒவ்வொன்றாய் முறையாக கையிலெடுத்து முதல் மூன்றும் தோல்வியெனில் தண்டனை ஒன்றே என்பதுதான் காலங்காலமாய் வரும் அட்டூழியம் அகற்றும் நடைமுறை.

ஆக வரம் வாங்கியவன் பெற்ற வரத்தை துர் உபயோகம் செய்ய முற்படும்போது, அரசன் அன்று கொல்வான் இறைவன் நின்று கொல்வான் என்பதற்கேற்ப இறைவனின் களையெடுப்பு நிகழ்கிறது.

எனில், இறைவனும் அந்த வரங்களையும் மீறாது அதே சமயம் அவற்றிலிருந்தும் உத்தமமாக ஒரு அவதாரமாக கீழிறங்கய நோக்கம் நிறைவேறிட ஒரு முனைப்புடன் வருகிறார்.

அப்படி எதற்காக போயும் போயும் ஒரு மகிஷியை வதம் செய்ய இறைவனே அவதாரமெடுப்பதா என்ற கேள்விக்கு பதில் தரும் விதமாகத்தான் இதற்கு முன் வந்த பத்திகள் ஒரு முன்னுரை தந்தன.

ஆ...அப்படியென்ன வரம்?

வரமா வரங்களா?

ஆமாம்...அந்த மஹிஷி கேட்ட வரங்கள் ஒன்றல்ல...மூன்று.

என்னைக் கொல்பவன் இரு ஆண்களுக்குப் பிறந்தவனாக இருக்க வேண்டும்

அவன் படைத்தல் காத்தல் அழித்தல் செய்யும் மும்மூர்த்திகளுக்கும் மேலானவனாயிருக்க வேண்டும்.

மூன்றவதாக அவன் பூலோகத்தில் ஒரு மனிதனுக்கு 12 வருடங்கள் சேவகம் செய்திருக்க வேண்டும்.

இந்த மூன்றும் ஒரு சேர பூர்த்தி செய்பவன் என்பது நடவாது ஒன்று என்று நினைத்து மகிஷி பூலோகம் உட்பட மூன்று லோகங்களிலும் அதர்மத்தை நிலைநாட்டினாள்.

ஆக, இந்த வரங்களை பூர்த்தியாக்கும் விதமாக எங்கு எப்போது உருவம் கிடைத்தது என்று வரும் இதழில் பார்ப்போம்.