மனித வாழ்க்கையின் முக்கிய குறிக்கோள் மோட்சத்தை அடைவது என்பதே சநாதன தர்மத்தின் கோட்பாடு என்று பார்த்தோம். இந்த கோட்பாட்டில் சுவர்க்கம் என்பது ஒரு தாற்காலிக சுகம் தரும் ரிசார்ட் போல, அது நிரந்தரம் அல்ல என்றும் போர்த்தோம். மோட்சத்தை அடைய நமது கர்ம வினைகளை இல்லாது செய்ய வேண்டும் என்றும் பார்த்தோம் என்று ஆரம்பித்த சங்கரனை
அப்படியானால், இந்த கோட்பாட்டில் கடவுள் என்பவர் எங்கே? அவர் எப்படி இருப்பார்? எங்கே இருப்பார்? அவரது வேலை என்ன? அவரை எங்கே பார்ப்பது? இப்படிப் பல கேள்விகளை அவர் முன் வைக்க சங்கரன். அதற்கு விடையளிக்கிறார்.
சநாதனத்தில் கடவுளுக்கு உருவம் பெயர் குணம் என்ற எதுவும் இல்லை. அவர் காலத்தைக் கடந்தவர், அதாவது இறந்த காலத்தும் இருந்தார், இப்போதும் இருக்கிறார், எதிர்காலத்தும் இருக்கிறார். நமது புரிதலுக்காக, ஒரு அடையாளத்திற்காக அவர் ப்ரம்மம் என்று சொல்லப் படுகிறார்.
அப்படியானால், அவரை எப்படி வழிபடுவது?
வேண்டுதல் வேண்டாமை இலாதான் என்று வள்ளுவன் சொன்ன அந்த கடவுளுக்கு எது பிடிக்கும் எது பிடிக்காது என்று எப்படி அறிவது? அப்படி நமது வழிபாடுகளுக்கு உதவியாக இந்த ப்ரம்மம் பற்பல வடிவத்தை எடுத்துக் கொள்கிறது. மனிதர்கள் பலவிதம் அவர்கள் அறிவும் சக்தியும் பலவிதம் அதனால் எல்லாவித மனிதர்களுக்கும் பயன்படுவதற்காக ப்ரம்மம் பலவித வடிவங்களைத் தாங்குகிறது.
விடை தெரியாத x y z என்று மேல் நிலை கணக்கியலைச் சொல்லித்தருமுன் நிஜமான எண்களைக் கொண்டு கூட்டல் கழித்தல் எல்லாம் கற்பித்து, மாணவனை அதற்குத் தயார் செய்யும் கணக்கு வாத்தியார் போல சநாதனம் செயல்படுகிறது.
தெரிந்த தெய்வங்களையும் சடங்குகளையும் கொண்டு நமது மனதைத் தூய்மைப்படுத்தி, நமது அறிவைக் கூர்மைப்படுத்தி தெரியாத ப்ரம்மத்தைத் தெரிந்துகொள்ளும் வழியைச் சொல்வது சநாதன தர்மம்.
ஒரு கட்டிடம் கட்டும்போது சாரம் கட்டப்படுகிறது. அதைப் பார்க்கும் ஒரு சிறுவனுக்கு அந்தக் கட்டிடமே சாரத்தால் நிற்கிறது என்று தோன்றும். கட்டி முடிந்து சாரம் எடுக்கப்பட்டால்தான் அவனுக்கு அட ! கட்டிடம் தானே நிற்கிறது என்று தெரியும். ஆனால் வளர்ந்த ஒருவருக்கோ அந்த சாரம் கட்டிடம் நிற்பதற்கல்ல அதைக் கட்டுவதற்காக என்பது தெரியும். அதுபோல ப்ரம்ம ஞானம் என்ற கட்டிடத்தைக் கட்டும்வரை வழிபாடுகள் தேவை, கட்டிவிட்டால் அவற்றை எடுத்துவிடலாம். சிறுவனுக்கும் வளர்ந்தவருக்கும் அந்த சாரத்தின் புரிதல் வேறுபடுகிறது. சநாதனத்தின் வழிமுறைகளில் புரிதல் வேறுபடவும் இதுவே காரணமாகிறது.
அப்படி ஒரு கடவுள் இருப்பதை நான் எப்படி நம்புவது? வேறு பல மதங்கள் போல சநாதனம் கடவுள் நம்பிக்கையின் அடித்தளத்தில் அமைக்கப் படவில்லை. சிறு வயதில் ஒரு பிடிமானத்திற்காக அப்படிச் சொல்லப் பட்டாலும் வளர்ந்த நிலையில் கடவுளை அறிவதே குறிக்கோள், நம்புவது அல்ல.
நம்பினால் சுவர்க்கம் இல்லாவிட்டால் நரகம் என்ற நிலை சநாதனத்தில் இல்லை.
நல்வினையால் சுவர்க்கம், தீவினையால் நரகம், வினைகள் அழிந்தால் மோட்சம் என்பதே சநாதனம். வினைகள் அழியும்போது நாம் கடவுள் எனப்படும் ப்ரம்மத்தை அறிவோம். அதனாலேயே அது ப்ரம்ம ஞானம் என்று சொல்லப்படுகிறது.
ஆக சநாதன தர்மம் என்பது சமுதாயமாக வாழும் மனிதன் அந்த சமுதாயத்தின் ஒரு பொறுப்பான அங்கமாக இருந்து அதனை நடத்துவது மற்றும் வினைப்பயன்களை அறவே ஒழித்து மோட்சம் என்பதை அடைவது என்று இரண்டு பெரும் பகுதிகளைக் கொண்டு விளங்குகிறது. இவை மனிதனாகப் பிறந்த எல்லாவருக்கும் பொருந்துவதாகச் சொல்லப்பட்டுள்ளது.
முதலாவது, என்னால் இந்த சமுதாயத்திற்கு என்ன பயன் என்ற நிலையில் மதிப்பிடப்படுகிறது.
இரண்டாவது ஞானி என்ற நிலையில் மதிக்கப்படுகிறது.
இன்றைய காலகட்டத்தில் முதற்பகுதி முக்கியத்துவம் பெறுகிறது. உடல் சுகங்களும், பண அதிகார வெறியும், தவறான கொள்கைகளும் உலகின் அமைதியைக் குலைக்கத் தீவிரமாக இருக்கும் நேரத்தில் அமைதி, திருப்தி, மரியாதை என்ற அஸ்திவாரத்தில் எழுந்த சநாதன தர்மத்தின் சமுதாய நெறியின் சிறப்புகளை நினைவு கூர்வது அவசியமாகிறது. பல அங்கங்களைக் கொண்ட இந்த சமுதாய நெறியை, அதன் சிறப்பை, அதன் தேவையை, அதன் பலன்களை சற்றே விரிவாக வரும் வாரங்களில் காணலாம். அதன் பின் மோட்சம் ஞானம் என்ற பாதையையும் விரிவாகக் காண்போம்.
Leave a comment
Upload