தொடர்கள்
தமிழ்
கத கேளு கத கேளு தமிழோட கத கேளு - 45 - பரணீதரன்

சேர சோழ பாண்டியர்கள் தமிழ் அறிஞர்களை எவ்விதம் மதித்து ஆதரித்தனர் என்பதற்கு சான்றுடன் விளக்க ஆரம்பிக்கிறார் நமது பரணீதரன்.

20231030172013800.jpg

மேற் காணும் படத்தில் அரசு முரசுக் கட்டிலில் மீது படுத்திருப்பவர் மோசிக்கிரனார். அவருக்கு கவரி வீசுபவர் மன்னர் சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை. ஒருமுறை மோசிகீரனார் பல நாட்கள் நடந்து சேர நாட்டிற்கு வருகிறார். அப்போது சேர நாட்டை ஆண்டு கொண்டிருந்தவர் சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை. மோசிகீரனார் மிகவும் கஷ்டப்பட்டு நடந்து சேர நாட்டின் தலைநகரத்திற்குள் வருகிறார். பல நாட்கள் நடந்து வந்த களைப்பில் புலவரால் மேலும் நடக்க முடியவில்லை. கோட்டை வாசலில் ஒரு அழகான மண்டபம் இருந்தது. அந்த மண்டபத்தின் நடுவில் நல்ல திடமான ஒரு கட்டில், அதன் மேலே எண்ணெய் நுரையை போல மிகவும் மிருதுவான பூம்பட்டால் ஆன மெத்தையும் இருந்தது. அந்தக் கட்டிலில் சுற்றி தங்கத்தால் ஆன உழிஞைப் பூக்கள் (கொற்றான், முடக்கொற்றான், முடக்கத்தான்) சிதறிக் கிடந்தன. இவை அனைத்தையும் வைத்து பார்த்தாலே அந்த மேடையும் கட்டிலும் வழிபாட்டுக்குரிய இடம் என்று நமக்கு புரியும். ஆனால் புலவருக்கோ மிகுந்த களைப்பு. அதனால் இவை எதையும் கண்டு கொள்ளாமல் அந்த கட்டிலில் சென்று படுத்து, உடனே தூங்கியும் விடுகிறார்.

களைப்பு தீர நன்றாக தூங்கி முழிக்கும் பொழுது அவர் எதிரில் கண்ட காட்சி அவரை திகைக்க வைக்கிறது. சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை அவர்கள் நமது புலவருக்கு மயில் பீலிகளால் ஆன கவரியைக் கொண்டு விசிறிக் கொண்டு இருக்கிறார். இதில் அதிர்ச்சியான நமது புலவர் உடனடியாக எழுந்து சுற்றி உள்ள விஷயங்களை கவனிக்கிறார். அப்போதுதான் அவருக்கு ஒரு விஷயம் புரிகிறது. மன்னனுக்கு அருகிலே முரசனை தூக்கிக்கொண்டு வீரர்கள் நின்று கொண்டிருக்கிறார்கள். அதை பார்த்தவுடன், தான் தூங்கியது முரசுக் கட்டில் என்று புரிந்து கொள்கிறார். அன்றைய முறைப்படி, முரசு கட்டிலில் தூங்குபவர்களை மன்னர் தலையை வெட்டி சிரச்சேதம் செய்வது வழக்கம். இதை மன்னர் செய்யாததை கண்ட நம் புலவர் மன்னரிடம் அதற்கான காரணத்தைச் கேட்க, மன்னரோ இது புலவருக்கும், புலவரின் தமிழுக்கும் தான் செய்யும் மரியாதையென்று கூறுகிறார்.

போர்முரசினை இரத்தத்தில் குளிப்பாட்டுவதற்காக (அதாவது அப்பொழுது அங்கு ஒரு போர் நடந்து முடிந்திருக்கிறது என்பதை இது காட்டுகிறது) வீரர்கள் எடுத்து சென்றிருந்த சமயத்தில் புலவர் அங்கு தூங்கி இருந்திருக்கிறார். போர் முரசு கட்டிலில் ஒருவர் தூங்கினால் அது மன்னனை அவமானப்படுத்துவதற்கு சமமாகும். அதனாலேயே அந்த காலத்தில் அப்படி ஒரு சட்டம் இருந்தது. எதேச்சையாக மன்னர் அந்த பக்கம் வரும்பொழுது யாரோ ஒருவர் முரசு கட்டில் தூங்குவதை பார்த்து மிகவும் கோபத்துடன் தன்னுடைய வாளை உருவிக்கொண்டு தூங்குபவரின் அருகில் வருகிறார். அருகில் வந்து பார்த்தவுடன் மோசிகீரனாரை அடையாளம் கண்டு கொண்ட மன்னனோ அவருக்கு கவரி வீசியது மட்டுமில்லாமல் முரசு கொண்டு வந்தவர்களையும் சத்தம் போடாமல் இருக்கச் சொல்லி பணிந்தார். இப்படி அந்த காலத்தில் மன்னர்கள் புலவர்களுக்கு மிகுந்த மரியாதையை கொடுத்தனர். இதை பார்த்து நெகிழ்ந்து போன மோசிகீரனார் பின்வரும் செய்யுளை பாடினார் :

மாசற விசித்த வார்புறு வள்பின்

மைபடு மருங்குல் பொலிய மஞ்ஞை

ஒலிநெடும் பீலி ஒண்பொறி மணித்தார்

பொலங்குழை உழிஞையொடு பொலியச் சூட்டிக்

குருதி வேட்கை உருகெழு முரசம்

மண்ணி வாரா அளவை எண்ணெய்

நுரைமுகந் தன்ன மென்பூஞ் சேக்கை

அறியா தேறிய என்னைத் தெறுவர

இருபாற் படுக்கும்நின் வாள்வாய் ஒழித்ததை

அதூஉம் சாலும்நல் தமிழ் முழுது அறிதல்

அதனொடும் அமையாது அணுக வந்துநின்

மதனுடை முழவுத்தோள் ஒச்சித் தண்ணென

வீசி யோயேவியலிடம் கமழ

இவணிசை உடையோர்க் கல்லது அவணது

உயர்நிலை உலகத்து உறையுள் இன்மை

விளங்கக் கேட்ட மாறுகொல்

வலம்படு குரிசில் நீ ஈங்கிது செயலே! (புறநானூறு - 50)

20231030172127403.jpg

இதோ இந்த படத்தில் சேக்கிழார் அவர்களை மன்னர் அநபாயச் சோழன் என்கிற இரண்டாம் குலோத்துங்க சோழன் தன்னுடைய பட்டத்து யானையின் மீது வைத்து அவர் பின்னால் அமர்ந்து வெண்சாமரம் வீசும் காட்சியாகும். சேக்கிழார் அவர்கள் பெரியபுராணத்தை எழுதி அதை அரங்கேற்றம் செய்தவுடன் பெரிய புராணத்தில் மனதினை பறிகொடுத்த இரண்டாம் குலோத்துங்க சோழன் அவர்கள் சேக்கிழார் அவர்களை தன்னுடைய பட்டத்து யானையின் மீது அமர வைக்கிறார். அதன் பிறகு அது மட்டும் போதாது என்று தானும் அவர் பின்னால் அமர்ந்து அரசன் எப்பொழுதும் இறைவன் தொண்டு செய்பவர்களின் பின்னால் தான் இருப்பான் என்பதை அனைவருக்கும் விளங்க வைக்கிறார். பிறகு இன்னும் ஏதேனும் செய்ய வேண்டும் என்று நினைத்த மன்னன் சேக்கிழார் தனக்கு வீசப்படும் வெண்சாமரத்தை வாங்கி அதை தானே வீசி சேக்கிழாருக்கும், சேக்கிழாரின் தமிழுக்கும், பெரிய புராணத்திற்கும் மிகுந்த மதிப்பை கொடுக்கிறார்.

20231030172250980.jpg

விஷ்ணு சித்தர் என்று புகழப்பட்ட பெரியாழ்வாரை வல்லப தேவ பாண்டியன் அவர்கள் தன்னுடைய பட்டத்து யானையின் மீது ஏற்றி தன்னுடைய அரச சின்னங்களை பெரியாழ்வாருக்கும் கொடுத்து மன்னர் தரையில் நடந்து, பெரியாழ்வாரை சிறப்புச் செய்கின்ற காட்சியே மேலே உள்ள படமாகும். பாண்டியனுக்கு எழுந்த ஐயத்தை போக்கி, சமய வாதில் வென்று, அனைவரும் அவருடைய வாதத்தை ஏற்றுக் கொள்ள வைத்து, பாண்டியனின் மனம் மகிழும்படி செய்ததால் வல்லப தேவ பாண்டியன் அவர்கள் தன்னுடைய பட்டத்து யானையில் பெரியாழ்வார் அமர வைக்கிறார். மன்னர் புலவர்களுக்கும் தெய்வத் தொண்டர்களுக்கும் பணியாளரே என்பதை காட்டுவதற்காக தான் தரையில் நடந்து வருகிறார். அது மட்டும் போதாது என்று தன்னுடைய அரச சின்னங்களையும் யானையின் முன்னால் செல்ல வைத்து பெரியாழ்வாரை அரசருக்கு நிகராக மதுரை வீதிகளில் உலா வரச் செய்கிறார். இவ்வாறு வல்லப தேவ பாண்டியன் அவர்கள் பெரியாழ்வருக்கும், பெரியாழ்வாரின் தமிழுக்கும், நாலாயிர திவ்ய பிரபந்தத்திற்கும் மிகுந்த மதிப்பை கொடுக்கிறார்.

நாம் மேலே பார்த்த மூன்று சம்பவங்களும் தமிழகத்தை ஆண்ட மூன்று பெரிய அரச குடும்பங்களைச் சேர்ந்த மன்னர்கள், புலவர்களுக்கு கொடுத்த மதிப்பையும் மரியாதையையும் நமக்கு தெரியப்படுத்துகிறது. முதலில் சேரன், அதன் பின் சோழன், அதன்பிறகு பாண்டியன் என்று மூன்று மன்னர்களின் வரலாற்றுச் செய்திகளையும் நம்மால் பொருள் இலக்கணத்தில் பார்க்க முடிகிறது.

போன வாரம் தவறு செய்யும் ஒரு மன்னனை சரி செய்வதற்கு புலவர்களுக்கும் பங்கு இருக்கிறது என்று கூறி இருந்தார். அதாவது பிள்ளை தவறு செய்யும் பொழுது அதை தட்டிக் கேட்கக் கூடிய உரிமை தந்தைக்கு உள்ளது என்பதாகும்.

ஆதலால், வரும் வாரம் அப்படிப்பட்டதான மன்னர்கள் மற்றும் புலவர்களைப் பற்றிய கதைகளையும் அதற்குரிய செய்யுள்களையும் பார்ப்போமே என்று விடை பெற்றார். இங்கு கூறப்படும் கதைகள் வரலாறுகளே.

தொடரும்....