தொடர்கள்
ஆன்மீகம்
சநாதன தர்மம் - அழிவில்லாத பேரானந்தம் என்பது சனாதன தர்மம் காட்டும் மோட்சம். அது எப்படி?- ஆர் சங்கரன்

20231030163441150.jpg

அழிவில்லாத பேரானந்தம் என்பது சனாதன தர்மம் காட்டும் மோட்சம். அது எப்படி? என்ற கேள்வியோடு சங்கரனை அடைகிறோம்.

அவர் தரும் பதில் இதோ கீழே.

கர்மா என்ற கட்டு நம்மைப் பிணைத்திருக்கிறது. நமது இன்ப துன்பங்களுக்கு அதுவே காரணமாகிறது என்பதைப் பார்த்தோம். இதனை அறுத்து விடுபட்டால், அதுவே அழிவில்லாத பேரானந்தம் என்பது சனாதன தர்மம் காட்டும் மோட்சம். அது எப்படி?

கர்மா அல்லது வினைப்பயன் என்பதை மூன்றாகப் பிரிக்கிறார்கள்.

இந்தப் பிறவி எடுக்கும்போது இதில் அனுபவிக்க வேண்டியது என்று அமையப் பெற்றது ப்ராரப்தம் என்பர். அதனை இந்த பிறவியில் அனுபவித்தே தீர்க்க வேண்டும்.

அது போக நமது கணக்கில் மிச்சம் இருப்பது சஞ்சிதம் என்று சொல்லப்படும்.

பிறந்ததுமுதல் இறக்கும்வரை நமது செயல்களால் ஏற்படுவது ஆகாமி எனப்படும். இந்த ஆகாமியில் சில இந்தப் பிறவியிலேயே அனுபவிக்கப் படலாம். அது போக மிச்சமிருப்பது சஞ்சிதத்தில் சென்று சேர்ந்துகொள்ளும். இந்த சஞ்சிதம் அடுத்த பிறவிகளில் ப்ராரப்தமாக அனுபவிக்கப்படும்.

ஆக வினைப்பயன்களிலிருந்து விடுபடுவது என்பது மூன்று விதத்தில் மும்முனைச் செயல்பாடுகளால் அடையப்பெறுகிறது.

ப்ராரப்தம் என்பதை அனுபவித்தே தீர வேண்டும். சனாதன தர்மத்தில் சொன்ன வழிகளால் அந்த அனுபவத்தைத் தாங்கக் கூடிய மன வலிமையும் உடல் வலிமையும் கிடைக்குமே தவிர, அனுபவம் விலகாது. தாய்மை என்ற உயர்ந்த நிலையை அடைய ஒவ்வொரு பெண் உயிரினமும் பிரசவ வலி என்பதை அனுபவிக்கிறது ஆனால் அதைத் தாங்கும் வலிமையை – உடல் மனம் என்ற இரண்டு நிலையிலும் – அந்தப் பெண்மை பெறுகிறது. அதுபோல ப்ராரப்த வினைப்பயனை அனுபவிக்கும் வலிமையை நாம் பெற முடியும்.

ஆகாமி என்பது நம் கையில் உள்ளது. நாம் செய்யும் செயல்களின் பலனே அந்த ஆகாமி என்பதாகும். செய்வது நான் என்ற எண்ணமே அந்த பலன் நம்மை வந்து ஒட்டிக் கொள்ளச் செய்கிறது. என் செயல்கள் எல்லாம் எனது அல்ல அதனால் அதன் பலன்களும் எனது அல்ல என்று கர்ம பலன்களைத் தியாகம் செய்தால், இந்த ஆகாமி என்பது அறவே தவிர்க்கப் படும். கர்ம யோகம் என்று கீதையில் மிக விரிவாகச் சொல்லப் படுவது இதுவே. இதில் நல்வினை தீவினை என்ற பாகுபாடு இல்லாமல் எல்லாச் செயல்களையும் ஒரே போலப் பலன்களைத் துறந்தாலே ஆகாமி என்பது இல்லாமல் போகும்.

சஞ்சிதம் என்பது நம்முடன் இதுவரை ஒட்டாமல் – ஆனால் நமது ஆன்மாவுடன் சம்பந்தப் பட்டதாக இருப்பது. படைக்கப் பட்ட உயிரினம் என்ற நிலையில் நமது ஆன்மாவானது கர்மா என்ற கட்டுக்கு உட்பட்டதாக இருக்கிறது. ஆனால் பரம்பொருள் என்று சொல்லப்படும் கடவுள் அந்த கர்மா என்ற கட்டுக்கு அப்பாற்பட்டவன். நமக்கு நமது ஆன்மாவும் பிரம்மம் என்று சொல்லப் படும் பரம்பொருளின் ஒரு அம்சமே ப்ரதிபலிப்பே என்ற ஞானம் விழிப்புணர்வு வந்தால், அந்த கர்மா என்ற அந்த கட்டு அறுந்துபோகும். ஞானம் என்பது ஒரு தீ போலச் சஞ்சிதம் என்ற கர்ம மலைகளைப் பஞ்சுப் பொதிகள் போல எரித்துவிடும் என்று சனாதன தர்ம நூல்களில் சொல்லப் பட்டுள்ளது.

இப்படி மூன்று விதங்களில் நமது கர்மா என்ற மூன்று தொகுப்புகளை நாம் அழிக்கும்போது, நாம் அதன் பந்தத்திலிருந்து விடுபட்டு வீடுபேறு என்று சொல்லப்படும் மோட்சத்தை அடைகிறோம். மோட்சம் என்பது சனாதன தர்மத்தில் ஒரு நம்பிக்கையின் அடிப்படையிலே அல்லது என்றோ நடக்கும் ஒரு தேவ தூதனின் தீர்ப்பினாலோ வருவதல்ல. ஒவ்வொருவரின் தனிப்பட்ட முயற்சியால் அவர்க்கு அவரே பெறும் வெற்றியாகும். ஒவ்வொரு ஆத்மாவிற்கும் நிச்சயம் மோட்சம் உண்டு. ஆனால் அதன் இந்த முவ்வழி கர்மாக்களால் அந்த மோட்சப் பேரு அடையும் காலம் கணிக்கப்படுகிறது.

இந்த மும்முனைத் தாக்குதலுக்கு நம்மைத் தயாராக்குவது, நமக்கு வலிமை சேர்ப்பது, அந்தத் தாக்குதலில் நாம் முழு வெற்றி பெற்று மோட்சத்தை அடையும்வரை நம்முடன் இருந்து வழிகாட்டுவது என்பதே சனாதன தர்மத்தின் குறிக்கோள், சிறப்பு. இந்தத் தனிமனித மோட்சம் என்பதுடன், சமுதாய ஜீவியான மனிதன் அந்த சமுதாயத்தையும் மதித்து வாழவேண்டும் என்பதை ஒருங்கே சேர்த்து, இந்த இரண்டு குறிக்கோள்கள் என்ற தண்டவாளத்தில் செல்லும் ஒரு ரயிலாக சனாதன தர்மம் அமைகிறது. அந்த வண்டி நகரில் ஓடும் லோகலா, மெட்ரோவா, நீண்ட தூர விரைவு வண்டியா அல்லாது வந்தே பாரத் ரயிலா என்பதைத் தீர்மானிப்பது நாம். அந்த சுதந்திரத்தைத் தருவது சனாதன தர்மம் மட்டுமே.

மேலே மிக எளிதாகச் சொல்லப் பட்ட மும்முனைத் தாக்குதல் என்பது உண்மையில் மிகப் பெரிய ஒரு கோட்பாடு, போராட்டம். அவை ஒவ்வொன்றையும் தனித்தனியாக அலசி அறிந்து கொண்டால்தான் அவை ஒவ்வொன்றையும் நம்மால் வெற்றி கொள்ள முடியும். அதைச் சொல்வதாலேயே, அந்த வழியில் சென்று வென்றவரின் விளக்கமாக அமைவதாலேயே சனாதன தர்மத்தின் நூல்கள் பலப் பலவாகவும் பல விதமாகவும் இருக்கின்றன.