தொடர்கள்
தொடர்கள்
குலம் காக்கும் குழந்தை வளர்ப்புக் கலை - ரேணு மீரா

2023103016354915.jpg

குழந்தையை கண்டிக்க குரலில் அமைதி தேவை.

மனித மனநலம் தடுமாறுவதற்கு பெரிய அளவு முக்கிய காரணமாக இருப்பது எந்த குழப்ப சூழலையும் அடுத்தவர் நிலையில் இருந்து பார்க்க தவறுவது. இப்படி பார்ப்பதன் மூலம் பாதிக்கும் மேல் சிக்கல் நீங்கிவிடும். குறிப்பாக குழந்தைகளை கண்டிக்கும் பெற்றோர்கள் தன். குழந்தை செய்யும் தவறை. குழந்தையாய் நின்று பார்ப்பது அவசியம். குழந்தைகள் தவறு செய்தவுடன் சில பெற்றோர்கள் அவர்களை பெரியவர்கள் பார்வையில் நின்று பார்த்து கோபமடைந்து தண்டனை கொடுக்கிறார்கள் இது முற்றிலும் தவறு என்பேன் நான்.

2023103016362921.jpg

அந்த நிமிடத்திற்கு சிறியதாய் ஒரு கண்டிப்பு, அதாவது அதை செய்ததில் உங்களுக்கு உடன்பாடு இல்லை என்று உங்கள் செயல்களால் தெளிவுபடுத்துதல் வேண்டும். பின் பொறுமையாய் அதன் விளைவுகளை அவர்கள் வயதிற்கு இறங்கி வந்து எடுத்து சொல்லுங்கள், அவர்களை உணர வையுங்கள். இது எப்படி சாத்தியப்படும் என்று நீங்கள் நினைப்பது புரிகிறது, அதற்கு உங்கள் வார்த்தையில் அமைதியும் நிதானமும் இருந்தால்தான் குழந்தைகள் நம் பேச்சை நிதானமாக கேட்டு புரிந்து கொள்ள முன்வருவார்கள்.

மனித மனநலம் தடுமாறுவதற்கு பெரிய அளவு முக்கிய காரணமாக இருப்பது எந்த குழப்ப சூழலையும் அடுத்தவர் நிலையில் இருந்து பார்க்க தவறுவது தான. இந்த நேரத்தில் அவர்களை பெரியவர்கள் போல் நாம் நடத்த வேண்டும். அவர்களுக்கு சில ஒழுங்கை கற்பிக்க சிறந்த வழி எதுவென்றால். குழந்தைகளை மரியாதையுடன் நடத்துவதும் அவர்களுக்கு பெரும் பொறுப்பு இருக்கிறது என்பதை உணரச் செய்வது அவசியம். "உனக்கு இவ்வளவு பொறுப்புக்கள் இருக்கும்போது இப்படிப்பட்ட சிறு தவறுகளை கூட நீ செய்யாமல் இருப்பதே சிறந்தது" என்ற ஒரு பெரிய விஷயத்தை அவர்களுக்கு அமைதியான குரலில் சொல்லும்போது அவர் தம் தவறை உணர வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

20231030163707103.jpg

இரண்டாம் முறை அந்த தவறை செய்து விட்டால் மீண்டும் ஒருமுறை சிறிது அழுத்தமாக விளக்குங்கள். மூன்றாம் முறை செய்து விட்டால் உடனே தடுத்து விட்டு பின் அமைதியாய் ஒன்றும் பேசாமல் உட்கார்ந்து கொள்ளுங்கள். உங்கள் வருத்தத்தை வார்த்தையால் அல்ல செயலால் காட்டுங்கள். அதாவது அவர்களை கண்டு கொள்ளாமலும் உங்களுக்குள் ஏற்பட்ட ஒரு சலிப்பயோ ஒரு வெறுப்பையோ ஒரு கோபத்தையோ சிறு செயலாக அவர்கள் கவனிக்கும் வண்ணம் செய்துவிட்டு வார்த்தை ஏதும் பேசாமல் அமைதியாக இருங்கள். சிறிது நேரத்தில் அருகில் வந்து குழந்தை ஏன் இப்படி அமைதியாக இருக்கிறீர்கள் என்பதை நம்மை தொட்டோ, அருகில் வந்தோ, நம் முகத்தை பார்த்தோ கேட்டால்" நான் உன்னுடைய செயலால் வருத்தம் அடைந்துள்ளேன் நான் சொல்வதை ஏன் நீ கேட்கவில்லை என்று மிகவும் ஆழ்ந்த குரலில் சோகமாக சொல்லுங்கள். இனி செய்ய மாட்டேன் என்று குழந்தை சொல்லிவிட்டால் மெல்ல, மெல்ல நீங்கள் சாதாரண மன நிலைக்கு திரும்புவதை அந்த குழந்தை உணரும் வண்ணம் நீங்கள் நடந்து கொள்ள வேண்டும்.

இது ஒரு உதாரணம் தான். இது வயதை பொறுத்தது, செய்யும் தவறை பொறுத்தது. எப்படி இதை நடைமுறைப்படுத்த வேண்டுமோ அப்படி செய்யுங்கள். கடும் சொற்களால் குழந்தைகளை கண்டிப்பதால் பலன் கிடைக்காது.

ச்சீ நீ ஒரு முட்டாள்.... அறிவில்லாத முண்டம்., மடையன், மக்கு, இப்படிப்பட்ட சொற்கள் அவர்கள் இனி தவறு செய்வதை தடுக்கும் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. இத்தகைய சொற்கள் அப்படியே ஆழ் மனதில் பதிவுகளாய் படிந்து பிற்காலத்தில் அவர்களது வாழ்க்கையை பாதிக்கும். அவர்கள் உங்களை வெறுக்க காரணமாக அமையும்.

ஒரு காலத்தில் கூட்டு குடும்ப முறையில் பெற்றவர்கள் கண்டித்தால், தாத்தா பாட்டி மாமா அத்தை என்ற உறவுகளிடம் சென்று அவர்கள் அடைக்கலம் அடைந்தனர்.ஆனால் இன்று பெற்றோரே அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டும் அதாவது இப்போதெல்லாம் கூட்டுக் குடும்ப முறை இல்லாததால். குழந்தைகளுக்கு அனைத்து உறவுகளின் பொறுப்பையும் பெற்றோரே எடுத்து செய்யும் நிலை உண்டாகி உள்ளது.

கடும் சொற்களுக்கு பதிலாக குழந்தைகள் செய்தவற்றின் விளைவுகளை எடுத்து சொல்லுங்கள். நீங்கள் எந்த அளவுக்கு அந்த செயலால் பாதிப்பு அடைந்திருக்கிறீர்கள் என்பதை எடுத்து கூறுங்கள். ஒரு பொருளை உடைத்தால் அந்த உடைந்த பொருளின் விலை அதை உருவாக்குவதற்கு ஏற்பட்ட கடின நிலை அனைத்தும் அந்த குழந்தைக்கு எடுத்து சொல்ல வேண்டும் இதற்கு பொறுமை அவசியம்.குழந்தைகள் இனி தவறு செய்ய கூடாது என்பதற்காக எதிர்மறை வார்த்தைகளைக் கொண்டு திட்டுவது சரியல்ல.

நாம் அழுத்தம் கொடுக்கும் வார்த்தைகள் மிகவும் ஆபத்தானதாக முடிந்து விடக்கூடும். குழந்தைகளை நாம் எப்படி நடத்துகிறோமோ அப்படியே ஆகிறார்கள் என்று மனோ தத்துவ நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். எனவே நல்லபடி எதிர்பார்த்து நடத்துவோம் மீண்டும் மீண்டும் நம்பிக்கை உடன் நடத்தி நிலையான தீர்வு காண்போம்.

அதாவது அவர்கள் தவறு செய்யும் பொழுது நாம் குழந்தையாக மாறி அவர்கள் தவறை புரிந்து கொண்டு பின் அவர்களை பெரியவர்களாக கருதி பொறுமையாக எடுத்துரைப்பது சால சிறந்ததாகும்.

20231030163827638.jpg

குழந்தைகள் அவர் தம் தவறை உணர்ந்து தானே முடிவெடுக்கும் நிலையை உருவாக்கும் பொறுப்பு பெற்றோருடையது..

இதற்கு நமக்கு வேண்டியது பொறுமையும் நம் குரலில் மென்மையும் மனதில் நிதானமும்…

(தொடர்ந்து பேசுவோம் )