கார்த்திகை மாதம் என்றவுடன் நினைவுக்கு வருவது கார்த்திகை தீபம், ஐயப்ப பக்தர்கள் சபரி மலைக்கு மாலை போட்டுக் கொள்வது, மற்றும் கரு மேகங்களைக் கொண்டு, அடை மழை பொழிவது. இம்மாதத்தில் திருமணங்கள் அதிகம் நடத்தப்படும் அதனால் திருமண மாதம் என்றும் சிறப்பிக்கப்படுகிறது.
இந்த கார்த்திகை மாதத்திற்கு மேலும் மெருகூட்டும் வகையில், 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான சோளிங்கரில் பதினோரு மாதங்கள் யோகநிலையில் இருந்து வரும் நரசிம்மர் இந்த மாதம் முழுவதும் பக்தர்களுக்காகக் கண்திறந்து அருள்பாலிக்கின்றார்.
சோளிங்கர் மலையில் சப்த ரிஷிகளும் தவம் செய்து யோக நரசிம்மரின் காட்சியைப் பெற்றனர். சப்த ரிஷிகள் அருள் பெற்றது போலவே பக்தர்களும் அருள் பெற நரசிம்மரைத் தரிசனம் செய்ய கார்த்திகை மாதத்தில் உள்ள ஐந்து வாரமும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் சோளிங்கருக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை லட்சத்தைத் தாண்டுகிறது.
ஸ்தல புராணம்:
ஶ்ரீ மகாவிஷ்ணு எடுத்த அவதாரங்களிலேயே ஒப்பற்று உயர்ந்து நிற்பது நரசிம்ம அவதாரம். ஏனெனில் இறைவன் எல்லா இடங்களிலும் நிறைந்துள்ளார் என்ற உண்மையைக் கண் கூடாக வெளிப்படுத்திய அவதாரம். பிரகலாதனுக்காக ஸ்ரீ மகாவிஷ்ணு மேற்கொண்ட இந்த நரசிம்மாவதாரத்தைத் தரிசிக்க விரும்பிய சப்த ரிஷிகள், புண்ணியத் தலமொன்றில் தவம் செய்ய ஆரம்பித்தனர். சப்த ரிஷிகளின் தவத்தினை மெச்சிய ஶ்ரீ மகாவிஷ்ணு தவம் செய்ய ஆரம்பித்து ஒரு நாழிகைக்குள் அவர்களது விருப்பப்படி நரசிம்ம மூர்த்தியாக காட்சி கொடுத்தார். எனவே நேரத்தைக் குறிக்கும் சொல்லான கடிகை என்பதையும், மலை என்பதைக் குறிக்கும் அசலம் என்றும் சொல்லையும் இணைத்துக் கடிகாசலம் எனப் பெயர் கொண்டது இத்திருத்தலம்.
விஸ்வாமித்திரர் இம்மலையில் ஒரு நாழிகை (24 நிமிடம்) நேரம் நரசிம்மரைத் துதித்து பிரம்ம ரிஷி பட்டம் பெற்றார். இத்தலத்தில் ஒரு நாழிகை நேரம் இருந்தாலே அனைத்து துன்பமும் நீங்கும். இங்கு ஒரு நாழிகை நேரம் (24 நிமிடம்) தங்கியிருந்து நரசிம்மரைத் தரிசித்தால் அனைத்து புண்ணிய பலன்கள் கிடைக்கும் எனப் புராண நூல்கள் கூறுகின்றன.
கடிகாசலம்:
காசி, கங்கை, கயா போன்ற புண்ணிய தலங்களுக்குச் சமமாக இத்தலம் போற்றப்படுகிறது. சோளிங்கரின் புராணப்பெயர் கடிகாசலம், சுமார் ஒரு கடிகை (நாழிகை – 24 நிமிடம்) இங்குத் தங்கியிருந்தாலே மோட்சம் கிடைக்கும் என்று ஐதீகமிருப்பதால் இதற்கு திருக்கடிகை என்னும் பெயர் வந்தது. கடிகாசலம் இன்று சோளிங்கர் என வழங்கப்படுகிறது. நரசிம்மர் குடிகொண்டுள்ளதால் சிம்மபுரம் எனவும் சோழர்கள் நாட்டின் எல்லையாக ஒரு காலத்தில் இது இருந்ததால் சோழசிம்மபுரம் என அழைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஆழ்வார்கள் மங்களாசாஸனம்:
பேயாழ்வார், திருமங்கையாழ்வார், நாதமுனிகள், திருக்கச்சி நம்பிகள், இராமானுஜர், மணவாளமாமுனிகள் ஆகியோர் ஶ்ரீயோக நரசிம்மரை மங்களாசாஸனம் செய்துள்ளனர்.
“மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை என்னுள்
புக்கானை புகழ்சோ் பொலிகின்ற பொன்மலையைத்
தக்கானை கடிகைத் தடங்குன்றின் மிசையிருந்த
அக்காரக் கனியை அடைந்து உய்ந்து போனேனே!” திருமங்கையாழ்வார் ‘அக்காரக்கனி’ என இந்த நரசிம்ம மூர்த்தியைப் போற்றிப் பாடியுள்ளார். சுவை மிகுந்த கனி போன்றவராம் இந்த நரசிம்மர்.
“பண்டெல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம்,
கொண்டங் குறைவார்க்குக் கோயில்போல் – வண்டு
வளங்கிளரும் நீள்சோலை வண்பூங் கடிகை,
இளங்குமரன் றன்விண் ணகர்.”
சோளிங்கபுரம் இறைவன் திரு வேங்கடம், திருப்பாற்கடல் என்ற தலங்களில் உள்ளான் என்று சொல்லிக் கொண்டே வருகின்ற பேயாழ்வாா் “வண்பூங்கடிகை இளங்குமரன்” என்று பெருமானைப் போற்றுகின்றார்.
பிள்ளைப் பெருமாளய்யங்காா் தமது நூற்றெட்டு திருப்பதியந்தாதியில்,
“சீரருளால் நம்மைத் திருத்தி நாம் முன்னறியாக்
கூரறிவும் தந்தடிமை கொண்டதற்கே−நேரே
ஒரு கடிகையும் மனமே உள்ளுகிலாய் முத்தி
ஒரு கடிகை மாயவனைத் தான்”
என்று கூறுகின்றார்.
திருக்கடிகை செல்ல முடியாதவர்கள் ஒரு நாழிகை திருக்கடிகை யோக நரசிம்மரை நினைத்தாலே அவர்களுக்கு அனைத்து யோகங்களும் கைகூடும் என்று நம்பிக்கையோடு கூறியுள்ளார் பிள்ளைப் பெருமாளய்யங்காா்.
கார்த்திகை மாதத்தில் கண் திறக்கும் நரசிம்மர்:
ஆண்டு முழுவதும் கண் மூடிய நிலையில் தியானத்தில் இருக்கும் யோக நரசிம்மர், கார்த்திகை மாதத்தில் மட்டும் கண் திறந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பதால் தமிழகத்தின் பிற பகுதிகள் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்தும் கார்த்திகை மாதம் நரசிம்ம பெருமாள் கண் திறந்து பார்ப்பதைத் தரிசனம் செய்ய, எவ்விதப் பாகுபாடுமின்றி அனைத்துத் தரப்பு மக்களும் இந்தக் கோயிலுக்கு வருகை தருகின்றனர். இதனால் இம்மாதம் முழுவதும் இந்தக் கோயில், லட்சக் கணக்கான பக்தர்களின் தரிசனத்தால் நிரம்பி வழியும்.
கார்த்திகை மாதம் வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இந்த கோவிலில் சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெறும். இந்த நாட்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். அன்று கண் திறந்து கேட்ட வரத்தை அருள்வார் என்ற நம்பிக்கை பக்தர்களிடத்தில் உண்டு.
கார்த்திகையில் கோயில் நடைதிறக்கும் நேரம் :
கார்த்திகை மாதம் வெள்ளிக்கிழமைகளில் அதிகாலை 5 மணிக்கு நடைதிறந்து சுப்ரபாதம் பூஜை நடைபெறும். அது முடிந்ததும் தர்ம தரிசனத்துக்குப் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். காலை 7மணி வரை தர்ம தரிசனத்துக்கு அனுமதி உண்டு. காலை 7 மணி முதல் 9 மணி வரை அபிஷேகம் ஆராதனைகள் நடைபெறும். காலை 10 மணி முதல் பிற்பகல் 7 மணி வரை தரிசனத்துக்குப் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அதன் பிறகு பிரார்த்தனை உற்சவம் நடைபெறும். ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் இருக்கும் என்பதால் சனிக்கிழமை இரவு 2 மணிக்கே பெரிய மலைக் கோவில் நடையைத்திறந்து விடுவார்கள். ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணி வரை சாமி தரிசனம் செய்யலாம். சிறிய மலையில் உள்ள ஆஞ்சநேயரை கார்த்திகை வெள்ளிக்கிழமைகளில் காலை 6 மணி வரை தரிசிக்கலாம். சனிக்கிழமைகளில் காலை 7 மணி முதல் மாலை 6.30 மணி வரை தரிசிக்கலாம். ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை பக்தர்கள் தரிசிக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.
கோயிலுக்குப் போவது எப்படி:
இக்கோயில் சென்னையிலிருந்து 100 கி.மீ. தொலைவிலும், வேலூரிலிருந்து 54 கி.மீ. தொலைவிலும், அரக்கோணத்திலிருந்து 30 கி.மீ. தொலைவிலும், திருத்தணியிலிருந்து 27 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. சென்னையிலிருந்து இரயிலில் வருபவர்கள், அரக்கோணம் சென்று அங்கிருந்து பஸ் மூலம் சோளிங்கர் யோக நரசிம்மர் கோயிலைச் சென்றடையலாம்.
இங்கு கார்த்திகை மாதம் நரசிம்மர் கண் திறப்பதால் வெள்ளி, மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் திருவிழா போல் விசேஷங்கள் நடைபெறும். வேலூர், அரக்கோணம், திருத்தணி, சித்தூர்,திருப்பதி, சென்னை உள்படப் பல நகரங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் விடுகிறார்கள். தனியார் போக்குவரத்து நிறுவனங்களும் சோளிங்கருக்குச் சிறப்பு பஸ்கள் இயக்குவது குறிப்பிடத் தக்கது.
கார்த்திகை மாதத்தில் கண்திறந்து இருக்கும் யோக நரசிம்மரை நம் கண் குளிர தரிசித்து வேண்டிய வரங்களைப் பெறுவோம்!!
திருகடிகை ( சோளிங்கர்) "ஸ்ரீ யோக நரசிம்மர் திருவடிகளே சரணம் "
https://youtu.be/ZY1mbjIAyj0?si=e0mmpcrbSjJUYQLC
Leave a comment
Upload