பழயதையே பின்பற்றி வந்தால் நாம எப்பத்தான் முன்னேறுவது என்ற கேள்வியை சங்கரனிடம் வைத்தோம்.
அவர் அதற்கு அளித்த பதில் தான் இது.
சனாதனம் என்றால் மிகப் பழமையானது என்று பொருள்.
பழமையான பலவும் அழிந்து பட்டுள்ளன.
ஆனால்,
சனாதனமான தர்மம் மட்டும் இன்றும் அழியாமல் இருக்கிறது. நமது பாரத நாட்டில் சனாதன தர்மம் என்று நாம் குறிப்பிடுவதும், அயல் நாட்டாரால் இந்துமதம் என்று சொல்லப் படுவதுமான இது முன்னை பழமைக்கும் முன்னைப் பழமையான் பின்னைப் புதுமைக்கும் புதிதாய் நிலைத்திருக்கிறது. இதற்குக் காரணம், நாம் முன்னமே பார்த்தது போல அது மனிதனை மேம்படுத்தும் கட்டமைப்பாக இருக்கிறது.
பசித்தபோதெல்லாம் சாப்பிடலாம், நினைத்த நேரம் தூங்கலாம், அன்னை தந்தை அக்காள், மகன், மகள் மனைவி நண்பன் என்றெல்லாம் உறவுகள் இல்லை, எனக்கு வேண்டியதை எடுத்துக் கொண்டால் அது திருட்டு அல்ல, என் சுகத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்றெல்லாம் ஒவ்வொரு மனிதனும் எண்ண, எண்ணியதைச் செயல்படுத்தத் தொடங்கி விட்டால் நம்மைவிடக் கொடிய விலங்குகள் இல்லை என்ற நிலை வரும்.
இவ்வாறு வராமல் தடுப்பதைச் சொல்வது மேற்சொன்ன தருமம். அது அதன் கடமையும் ஆகிறது.
சுருக்கமாக,
ஐந்து கட்டுப்பாடுகளுடன் சொல்லப் பட்டது பின்னர் விரிவாக மாந்தர் எல்லாரும் கடைப்பிடிக்கத் தக்கதாகச் சொல்லப் பட்டது.
ஒரு மாங்கொட்டையிலிருந்து மரம் முளைத்து வளர்ந்து பூத்துக் காய்த்துக் கனி தந்து பயனாகிறதோ அதுபோல சுருக்கமாகச் சொல்லப் பட்டது பலவாறாக விவரிக்கப் பட்டது. எவ்வாறு மாங்கனி, தான் மா என்ற இயல்பை விடுவதில்லையோ அதுபோல விவரித்துக் கூறப்பட்ட தர்மமும் அதன் அடிப்படையிலிருந்து இம்மியும் விலகவில்லை. அதனாலேயே அது காலங்களை, கலாசாரங்களை, எதிர்ப்புகளை, படையெடுப்புகளை, குற்றச் சாட்டுகளை மீறி நிற்கிறது.
ஒரு கொட்டையிலிருந்து வளர்ந்த மரத்திலிருந்து, கொட்டைகள் மூலம் அதனைச் சுற்றிலும் பல மாமரங்கள் வளர்ந்து அதுபோலவே கனிகளைத் தந்து பயன் தருகின்றன. அவற்றில் ஒரு மாமரத்தின் கனிகளில் சிலவற்றில் புழுவோ வண்டோ வந்ததால் அந்த மாந்தோப்பே சரியில்லை என்று சொல்வது எவ்வளவு தவறோ அதுபோல இடையில் செருகப் பட்ட சில வெளிவழக்கங்களைக் கொண்டு சனாதன தர்மமே சரியில்லை என்று சொல்வதும் தவறே. இயல்பிற்கு மாறான இடைச் செருகல்களை நீக்கி நீண்ட நெடுங்காலமாகியும் இன்றும் பொருத்தமாக இருக்கும் தர்மங்களைக் கடைப் பிடிப்பதே அறிவுடைமை.
இந்த காலம் எப்படி போய்க் கொண்டிருக்கிறது என்றால், பேச்சு சுதந்திரம் கருத்து சுதந்திரம் போர்வையில் ஏதோ முன்னேற்றப்பாதையில் செல்வது போல் தோற்றமளித்தாலும் அது கிளையில் அமர்ந்து அடிமரத்தை வெட்டுவதற்கு சமமானதுதான்.
எங்களுக்கு தர்மம் தேவையில்லை. எங்களுக்குத் தேவையான கட்டுப் பாடுகளை நாங்கள் சட்டம் மூலம் வரையறுத்துக் கொள்கிறோம் என்று சொல்பவரும் நம்மிடையே உண்டு. மனிதனை நல்வழியில் நடத்திப் பண்படுத்துவது என்பது இளமையில் அதிலும் குழந்தை மற்றும் சிறுபிள்ளைப் பருவத்தில் எளிது. அவ்வயதில் சட்டமும் நீதியும் விளங்காது. ஆனால், அவற்றையே தர்மம், வாழ்க்கை நெறி என்ற நிலையில் பழக்கப்படுத்தும்போது அவர்கள் மிக நல்ல குடிமக்களாகவும், பின்னாளில் நல்ல மனிதர்களாகவும் மாறுகிறார்கள்.
ஒழுக்கம் என்பது தன்னாலேயே ஒவ்வொருவரின் இயல்பிலும் வந்துவிட்டால் அந்த நாட்டின் மேன்மை உயரும். சட்டம் மட்டுமே என வந்துவிட்டால் அதனை நிலை நாட்டுவதற்கு ஒரு துறை அதன் சுமை என்று வந்துவிடும். அகப்பட்டவனே கள்ளன் என்ற சிந்தனை வந்து விட்டால் அந்நாட்டின் முன்னேற்றம் தடைப்படும். அதிலும் அகப்படாத கள்வன் கண்ணுக்கெதிரில் சுகமாய்த் திரிகிறான் என்றால் அவன் நல்லாத்தானே இருக்கான். அவன் என்ன தர்மமா பாக்கிறான் என்ற கருத்துச் சுதந்திரத்தில் அவனை பின்பற்ற முயல, அநீதியே வளர்கிறது. சமூகத்தில் குழப்பம் சூழ்கிறது.
காலத்தினால் அழியாது நிலைத்து இருக்கிறது எனில் அதன் தூய்மைத்தன்மை தான் நமக்கு தெளிவாகிறது. தொன்மையானதுதான் நமது தமிழ் அதற்காக நாம் அதை விட்டு விட்டோமா? காலம் கடந்தும் அழியாது இன்றும் இளமையாய் அன்றோ நிற்கிறாள்.
அடுத்த கேள்வி பதிலில் சந்திப்போம்.
Leave a comment
Upload