தொடர்கள்
பொது
நீங்களும் வெல்லலாம் ஆயிரம் கோடி. ! - மாலா ஶ்ரீ

20230822144354347.jpeg

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே நெய்க்காரன்பட்டி பகுதியை சேர்ந்தவர், 28 வயதான ராஜ்குமார். தற்போது சென்னை கோடம்பாக்கத்தில் தங்கி, கார் டிரைவராக வேலைபார்த்து வருகிறார். இவர் பழனியில் இருந்தபோது, அங்குள்ள ஒரு தனியார் வங்கியில் கணக்கு இருந்துள்ளது. அதில், ராஜ்குமார் வெறும் ₹105 மட்டுமே வைத்திருந்தார்.

கடந்த 9ம் தேதி மாலை ராஜ்குமாரின் தனியார் வங்கி கணக்கில் பலகோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டதாக ராஜ்குமாரின் செல்போனுக்கு குறுந்தகவல் வந்துள்ளது. இதை பார்த்ததும் ராஜ்குமார் அதிர்ச்சியாகி, அத்தொகையில் உள்ள ‘0’ (பூஜ்யம்) எண்ணி பார்த்துள்ளார். அதில், தனது வங்கி கணக்கில் ₹9 ஆயிரம் கோடி வரவு வைக்கப்பட்டு இருப்பதை பார்த்து இன்ப அதிர்ச்சி ஏற்பட்டது. பிறகு, ‘இது மோசடி வேலையாக இருக்கலாம்’ என்று எண்ணி, தனது நண்பருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இவற்றை பரிசோதிக்க, தனது வங்கி கணக்குக்கு ₹1000ஐ அனுப்பும்படி நண்பர் கூறியுள்ளார். அதன்படியே ராஜ்குமார் அனுப்பிவைக்க, அப்பணம் நண்பரின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. எனினும் நண்பருக்கு சந்தேகம் தீராததால், தனது வங்கி கணக்குக்கு ₹20 ஆயிரத்தை அனுப்பும்படி கூறியுள்ளார். அதன்படி ராஜ்குமார் அனுப்பிய பணம், நண்பரின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டதை அறிந்ததும், ‘ராஜ்குமாரின் வங்கி கணக்கில் ₹9 ஆயிரம் கோடி வரவு நிஜம்தான்’ என்பதை எண்ணி இருவரும் இன்ப அதிர்ச்சியில் மூழ்கிவிட்டனர்.

ராஜ்குமாரின் வங்கி கணக்கில் ₹21 ஆயிரம் எடுத்தது போக, ₹899999709,105.18 கோடி மீதமாக இருந்துள்ளது. எல்லாமே 34 நிமிடங்கள்தான்…! பின்னர் ராஜ்குமாருக்கு எவ்வித முன்னறிவிப்பு தகவல், அனுமதியின்றி அவரது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு இருந்த மொத்தப் பணத்தையும் டெபாசிட் செய்த வங்கி திரும்ப எடுத்துக் கொண்டது. பின்னர் கடந்த 2 நாட்களுக்கு முன் ராஜ்குமாரை செல்போனில் தொடர்பு கொண்டு, ‘‘உங்கள் வங்கி கணக்கில் தவறுதலாக வரவு வைக்கப்பட்ட ₹9 ஆயிரம் கோடியில், நீங்கள் ஆன்லைன் மூலமாக ₹21 ஆயிரம் எடுத்துள்ளீர்கள். அவற்றை உடனடியாக திருப்பி தரவேண்டும்…’’ என்று வங்கி அதிகாரிகள் மாறி மாறி டார்ச்சர் கொடுத்துள்ளனர்.

அதற்கு வங்கி அதிகாரிகளிடம், ‘‘எனது வங்கி கணக்கில் தவறுதலாக ₹9 ஆயிரம் கோடி டெபாசிட் செய்தது நீங்கள். எனது அனுமதியின்றி, வங்கி கணக்கிலிருந்து அப்பணத்தை நீங்கள் எப்படி திரும்ப எடுக்கலாம்? இதுகுறித்து நான் சென்னை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப் போகிறேன்!’’ என கார் டிரைவர் ராஜ்குமார் கறாராகக் கூறியுள்ளார். உடனே சரண்டரான வங்கி அதிகாரிகள், ‘‘சார், இது தொழில்நுட்பக் கோளாறினால் ஏற்பட்ட தவறு. இதுகறித்து நீங்கள் போலீசில் புகார் அளிக்க வேண்டாம். சென்னை தி.நகரில் உள்ள வங்கி அலுவலகத்துக்கு நேரில் வாருங்கள், பேசலாம்…’’ என ராஜ்குமாரிடம் சமாதானமாக கூறியுள்ளனர். இதை ஏற்று தி.நகர் வங்கி அலுவலகத்துக்கு ராஜ்குமார் சென்றுள்ளார்.

அங்கு வங்கி உயர் அதிகாரிகளை ராஜ்குமார் சந்தித்தபோது, ராஜ உபசாரம் வழங்கப்பட்டது. பின்னர் அவரிடம் ‘இது, உங்கள் வங்கி கணக்குக்கு தவறாக மாற்றப்பட்டுவிட்ட பணம். நீங்கள் ₹9 ஆயிரம் கோடியில், ₹21 ஆயிரம் எடுத்துள்ளீர்கள். அதை நீங்கள் திருப்பித் தரவேண்டாம். ஆனால், வங்கிமீது மட்டும் போலீசில் புகார் அளிக்க வேண்டாம்!’’ என்று வங்கி அதிகாரிகள் தரப்பில் கெஞ்சியுள்ளனர். அதற்கு ராஜ்குமார் ‘பிகு’ குறையாமல் ‘எனது அனுமதியின்றி, என் வங்கி கணக்கிலிருந்து பணம் எடுத்தது தவறு. இதுபற்றி போலீசில் புகார் அளிப்பேன்…’ என வங்கி கடன்தொகை வசூல் அதிகாரிகளை மிரட்டியுள்ளார்.

இதில் ‘டோட்டல்’ சரண்டரான வங்கி அதிகாரிகள், ராஜ்குமாருக்கு கூடுதல் போனஸாக – ’’நீங்கள் கார் டிரைவர் என்பதால், உங்களுக்கு கார் லோன் மற்றும் பர்சனல் லோன்கூட குறைந்த வட்டியில், முன்பணமின்றி முழுமையாகத் தருகிறோம்!’’ என்று ராஜ்குமாரை சமாதானப்படுத்தி அனுப்பிவைத்து பெருமூச்சு விட்டுள்ளனர். இதுதொடர்பான தகவல்கள் பல்வேறு சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து ஓய்வு பெற்ற மூத்த வங்கி அதிகாரி எஸ்.முரளியிடம் தொடர்பு கொண்டு பேசியதில் அவர் சொன்ன விஷயங்கள் இது.

20230822193833950.jpeg

எப்படி இவ்வளவு பெரிய தொகை ஒரு தனிப்பட்ட நபருக்கு வந்தது என்று ஆச்சரியமாக இருக்கிறது.

சாதாரணமாக வங்கிகளில் ஒருவர் எண்ட்ரி போட்டால் மேலே இருப்பவர் அதை அப்ரூவ் செய்ய வேண்டும். இவ்வளவு பெரிய தொகையில் இப்படி தவறியது மகா ஆச்சரியம். இது ஒரு புறம் இருக்கட்டும்.

சட்டம் என்ன சொல்கிறது என்றால் அடுத்தவரின் தவறால் வரும் லாபத்தை நாம் ஈட்டக் கூடாது என்கிறது.

வங்கியே தவறு செய்திருந்தாலும் நீங்கள் சட்டத்தை மதிப்பவராக இருந்தால் உடனடியாக வங்கிக்கு தெரியப்படுத்த வேண்டும்.

இன்னொரு சிக்கல் வங்கி தவறாக உங்களை கிரெடிட் செய்தாலும் அதை ஆட்டோமேட்டிக்காக டெபிட் செய்ய முடியாது. உங்கள் அனுமதி வேண்டும். கார் ஓட்டும் இவருக்கு திடீரென எப்படி வழக்கறிஞர் எல்லாம் வந்தார்கள் என்று புரியவில்லை. அது புறமிருக்க சமீபத்தில் ஒரு ஏ.டி.எம் மெஷினில் 500 கட்டுக்களுக்கு பதிலாக 2000 வைத்து விட்டார்கள். இது தவறு தான். மனிதர்கள் தவறு செய்வது சகஜம் தானே.

ஆனால் நல்ல வேளையாக அது ஒரு நியாயமான வாடிக்கையாளருக்கு நேர்ந்து உடனடியாக தெரியப்படுத்தியதில் வங்கி தப்பித்தது.

சரி இந்த 21 ஆயிரம் ரூபாயை யார் கட்டுவார்கள் என்ற கேள்விக்கு "நான் வங்கி பொறுப்பாளராக இருந்தால் அதையும் அந்த வாடிக்கையாளரிடமிருந்து தான் வாங்க முயற்சிப்பேன். இதுவே நல்ல வேளையாக 21 லட்சமாக இருந்தால் என்னாகியிருக்கும்' இந்த கேசில் வங்கி அதை ஒரு மெமோ கொடுத்து விட்டு விடும் என்றே நினைக்கிறேன்.

ஆனால் இதோடு இந்த கதை முடியாது. தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி சின்ன வங்கி. இத்தனை பெரிய தொகை எங்கே யாருக்கு அனுப்பப்பட்டது இனிமேல் தான் குடைந்து எடுத்து விடுவார்கள். அது வங்கியின் தலைவலி. மொத்தத்தில் அடுத்தவர்களின் தவறினால் வரும் லாபத்தை பெற நினைக்காமல் இருப்பது தான் ஒரு நல்ல குடிமகனின் கடமை" என்று முடித்துக் கொண்டார் முரளி.

மனிதர்கள் நேர்மையையும், நாணயத்தையும்,ஒழுக்கத்தையும் சோதிக்கும் ஒரே விஷயம் பணம் தான்.