ஒரு அகால மரணம் நிகழ்ந்திருக்கிறது. பன்னிரெண்டு வயது சிறுமி. மனதில் என்ன போராட்டமோ, முடிவை தேடிக் கொண்டாள். மற்றவர்களின் பரிதாபங்களோ அனுதாபங்களோ அர்த்தமற்றவையாக இருக்கும் தருணங்கள் இது. என்ன சொன்னாலும் ஈடுகட்ட முடியாத இழப்பு.
இந்த நிலையில் ஊடகங்கள் என்ன செய்ய வேண்டும். கேமராவையும், மைக்கையும் வைத்துக்கொண்டு, முண்டி அடித்து ஆம்புலன்ஸ் உள்ளே கூட வரமுடியாமல் வழியில் நிற்க வேண்டும். தன் தோழியை இழந்த குழந்தையிடம் அக்கணமே ஒரு byte வாங்க வேண்டும். முடிந்தால், அழும் பெற்றோர்களை வீடியோ எடுக்க வேண்டும். அப்பொழுதுதான் அவரவர்களின் சேனல்களின் பார்வையாளர்கள் எண்ணிக்கை கூடும். கூடினால் ஒரு தனி நிருபராக அவருக்கு பெருமைகூடும்.
இதில் காலகாலமாக இருக்கும் செய்தி நிறுவனங்களைக் காட்டிலும் இப்பொழுது செய்தி விமர்சகர்களாக உதித்து இருக்கும் youtubers, influencers தான் மிக மிக ஆர்வமாக இருக்கிறார்கள், மக்களிடம் செய்தியை சுட சுட சொல்ல.
அவர்களுக்கு, ஒரு மரணத்தை சுற்றி நிகழும் அனுமானங்களும், சந்தேகங்களும் எதோ துப்பரிவாளர்கள் போல் ஆராய்ச்சி செய்து தீர்ப்பும் குடுத்து முடித்து விட வேண்டும்.
பெரும்பான்மையாக அவர்களுக்கு இதழியலும் தெரியாது, விதி முறையும் தெரியாது. சமூக வலை தளங்களில் பேசி மக்களை கவருவதே அவர்கள் நோக்கம். தவறான செய்தியாக இருந்தாலென்ன, பின்னாடி மாற்றிக்கொள்ளலாம் என்ற அலட்சிய போக்கு. இப்பொழுது தேவை செய்தி சொல்லுவது மட்டும். அதுவும் எப்படி? உடனுக்குடனே.
கொஞ்சம் கவலையாகத் தான் இருக்கிறது. இதழியல் பொருள் வரையறை மாறி விட்டது. தொழில் நுட்பம் வளர வளர தொழில்களும் மாறுகிறது. எப்படி வளர்ந்தாலும் மாறக்கூடாத சில கொள்கைகளும் கோட்பாடுகளும் இருக்க வேண்டும்.
எது செய்தித் தளம் என்று புரிய வேண்டும். செய்தி சேகரிக்கும் பொருட்டு மனிதத்தை இழக்கக் கூடாது. ஒரு செய்தியாளருக்கு செய்தி முக்கியம், அதற்காட்டிலும் முக்கியம் செய்தியின் உண்மைத் தன்மை, அதனிலும் முக்கியம் செய்தியின் தன்மை அறிந்து, சூழல் புரிந்து ஒரு பொறுப்பான மனிதனாய் நேயத்துடன் நடந்து கொள்ள வேண்டியது. இதன் தீவிரம் பகிர்வோருக்கும் நுகர்வோருக்கும் புரிகிறதா என்று தெரியவில்லை.
ஒரு மரணம் நிகழ்ந்த இடம் எத்தனையோ சிந்தனைகளால், வருத்தங்களால், கண்ணீரால் பின்னப்பட்டிருக்கும். அங்கு அப்போதைய தேவை ஊடகத்தின் பரிதாபம் அல்ல அதன் மௌனம்.
விஜய் ஆண்டனி எழுதிய கடிதம் இங்கே.....
தங்கள் தவறை உணர்ந்து இந்த சூழ்நிலையில் செய்து விட்ட மிகப் பெரிய தவறை இனியும் செய்ய மாட்டோம் என்று அறைகூவல் விடுத்த பிஹைண்ட் உட்ஸுக்கு பெரிய பாராட்டு.
இதை அத்தனை ஊடகங்களும், குறிப்பாக தமிழ் ஊடகங்களும் பின் பற்றுமா ???
Leave a comment
Upload