தொடர்கள்
கவர் ஸ்டோரி
மோதல் 4. கனிமொழி vs. உதயநிதி

20230822170555840.jpg

பாராளுமன்றத்தில் மகளிருக்கான இட ஒதுக்கீடு மசோதா தீர்மானத்தில் திமுக எம்பி கனிமொழி பேசியது திமுகவில் இப்போது பேசும் பொருளாகி இருக்கிறது.

அவர் பேசியது இதுதான். "ஆண் தைரியத்தை வெளிப்படுத்தினால் அதை நமது சமூகம் ஏற்கிறது. அதுவே ஒரு பெண் தைரியத்தை வெளிப்படுத்தினால் அதை ஏற்க மறுக்கிறது. ஏன் பெண்கள் தைரியமானவர்களாக இருக்கக் கூடாதா ? பெண்கள் சுதந்திரத்திற்காக போராடவில்லையா ? நமது நாட்டின் பிரதமராக இருந்த இந்திரா காந்தி தைரியமானவராக இருக்கவில்லையா ? ஏன் ஜெயலலிதா, மாயாவதி, மம்தா பானர்ஜி, சோனியா காந்தி, சுஷ்மா சுவராஜ் போன்ற பெண் தலைவர்கள் தைரியமாகவும் முன்மாதிரியாகவும் இருக்கவில்லையா ? ஆம் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா ஒரு வலிமையான தலைவர் தான் இதை ஏற்றுக் கொள்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை "இவ்வாறு கனிமொழி எம்பி பேசினார்.

​சென்ற மாதம் நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சட்டசபையில் ஜெயலலிதாவை திமுக பெண் என்றும் பாராமல் மானபங்கம் படுத்தியது. அப்போது ஜெயலலிதா நான் இனிமேல் முதல்வராக தான் இந்த சபைக்குள் நுழைவேன் என்று சபதம் ஏற்று முதல்வராக சட்டசபைக்கு வந்தார் என்று பேசிய போது கனிமொழி உட்பட ஒட்டுமொத்த திமுக எம்பிக்கள் கண்டித்து வெளிநடப்பு செய்தார்கள்.இப்போது அதே ஜெயலலிதாவை வலிமையான தலைவர் என்று புகழ்ந்து பேசி இருக்கிறார் கனிமொழி. இத்தனைக்கும் ஜெயலலிதா கருணாநிதியை தீய சக்தி என்று தொடர்ந்து விமர்சனம் செய்து கொண்டிருந்தவர். அவரைத்தான் வலிமையான தலைவர் என்று கனிமொழி சொல்லி இருக்கிறார். தேசியவாத காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் சரத்பவார் மகள் சுப்ரியா சுலோ கனிமொழியின் நெருங்கிய தோழி. எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு உங்கள் சகோதரருடன் நீங்கள் ஏன் வருவதில்லை. நான் என் அப்பாவுடன் வருகிறேனே என்று கேட்டபோது கனிமொழி அதற்கெல்லாம் எனக்கு அனுமதி இல்லை என்று சொல்லி இருக்கிறார்.

​உதயநிதி ஸ்டாலின் மீதும் கடும் அதிருப்தியில் இருக்கிறார் கனிமொழி. அவரும் தன்னை வேண்டுமென்றே புறக்கணிப்பதாக நெருங்கிய வட்டாரத்தில் சொல்லி வருகிறார். செப்டம்பர் நான்காம் தேதி தூத்துக்குடிக்கு வந்தார் உதயநிதி ஸ்டாலின் அரசு நல திட்ட உதவிகள் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் என்று அன்று முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அவருடன் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன் மாவட்ட பொறுப்பாளர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டார்கள். ஆனால் தொகுதி எம் பி கனிமொழிக்கு அழைப்பில்லை. இத்தனைக்கும் மூன்றாம் தேதி இரவு வரை பல்வேறு நிகழ்ச்சிகளில் தூத்துக்குடியில் கனிமொழி கலந்து கொண்டிருக்கிறார். அன்று இரவு சென்னை திரும்பி விட்டார். கனிமொழியை உதயநிதி ஸ்டாலின் புறக்கணிப்பதை அங்கு நடந்த நிகழ்ச்சிகள் எல்லாம் வெளிப்படையாக தெரிவித்தன. தூத்துக்குடியை பொறுத்தவரை திமுக நிர்வாகிகள் கனிமொழியை பெரிதும் விரும்புவார்கள். காரணம் அவர்கள் கேட்கும் எல்லா உதவிகளையும் கனிமொழி முகம் சுளிக்காமல் செய்து தருவார் என்பதுதான். கனிமொழியை உதயநிதி ஸ்டாலின் புறக்கணித்ததின் விளைவாக அவர் கலந்து கொண்ட அரசு நிகழ்ச்சியும் சரி,கட்சிக் கூட்டத்திலும் சரி பெரிய அளவு கூட்டமில்லை காலியான நாற்காலிகள் அதை வெளிப்படையாக உதயநிதி ஸ்டாலினுக்கு சுட்டிக்காட்டியது. அதன் விளைவாக நிகழ்ச்சிகளை சுருக்கமாக பேசி அவசர அவசரமாக முடித்துக் கொள்ள வேண்டிய நிலைக்கு உதயநிதி ஸ்டாலின் தள்ளப்பட்டார்.

இப்போது கனிமொழியின் ஜெயலலிதா புகழ் பேச்சு திமுகவில் அவருக்கான இடைவெளியை இன்னும் அதிகரிக்கவே செய்யும் என்கிறார்கள் திமுக முக்கிய பிரமுகர்கள்.