தொடர்கள்
கவர் ஸ்டோரி
மோதல் 2. அதிமுக Vs. பாஜக

அதிமுக vs பாஜக

20230822173742551.jpg

அண்ணாமலை தமிழக பாரதிய ஜனதா தலைவராக பொறுப்பேற்றது முதல் அவருக்கும் அதிமுகவுக்கும் உள்ள உறவு சுமூகமாக இல்லை என்பது தான் உண்மை. அதனால் தான் அவரது நடை பயணத்துக்கு அதிமுக ஆதரவு இல்லாமல் போனது. ஏற்கனவே நான் என் கட்சியை தான் வளர்ப்பேன் என்னால் எடப்பாடி வாழ்க என்றெல்லாம் கோஷம் போட முடியாது என்றெல்லாம் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் அண்ணாமலை பேசியது அதிமுக காதுக்கும் ஏற்கனவே எட்டி இருக்கிறது. அதே சமயம் அண்ணாமலையும் சர்ச்சை பேச்சும் ஓருயிர் ஈருடல் என்ற நிலையில் தான் இன்றளவும் இருக்கிறது. அவர் சர்ச்சையாக பேசாத விஷயங்களை இல்லை ஜெயலலிதா பற்றி அவர் பேசிய பிறகு நான் அப்படி பேசவில்லை இப்படி பேசவில்லை ஜெயலலிதா மிகப்பெரிய தலைவர் என்று சப்பை கட்டு கட்ட வேண்டிய நிலைக்கு அண்ணாமலை ஆளாக்கப்பட்டார். இப்போதும் கிட்டத்தட்ட அதே நிலை தான். 1956-இல் நடந்த தமிழ் மாநாட்டில் கடவுளை கேலி செய்து அண்ணாதுரை பேசினார். அப்போது முத்துராமலிங்க தேவர் ஆவேசம் அடைந்ததும் அண்ணாதுரையும், பி.டி.ராஜனும் மன்னிப்பு கேட்டுவிட்டு ஓடிவிட்டனர் என்று சமீபத்தில் அண்ணா பற்றிய பேச்சு சர்ச்சையானது. அண்ணா பெயரில் நாம் கட்சி வைத்திருக்கும் போது அண்ணாவை அண்ணாமலை விமர்சனம் செய்வதை நாம் எப்படி பொறுத்துக் கொள்வது என்று முன்னாள் அதிமுக அமைச்சர் டி ஜெயக்குமார் அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சொன்னார். முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் அண்ணாமலை போவது பாதயாத்திரை அல்ல வசூல் யாத்திரை அண்ணாவைப் பற்றி இவருக்கு என்ன தெரியும் என்று அவரும் அண்ணாமலையை கடுமையாக சாடினார்.

ஆனால், அண்ணாமலை நான் மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது. இந்த செய்தி ஏற்கனவே இந்து பேப்பரில் வந்திருக்கிறது. அந்த பேப்பர் என்னிடம் இருக்கிறது என்று சொல்ல அது மேலும் சர்ச்சையாகி எடப்பாடி சொல்லி அதிமுக கூட்டணியில் இப்போதைக்கு பாரதிய ஜனதா இல்லை கூட்டணி பற்றி நாங்கள் தேர்தல் நேரத்தில் முடிவு செய்வோம் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்தார். இதன் நடுவே இந்து நாளிதழ் அண்ணாமலை சொல்வது போல் நாங்கள் அப்படி எந்த செய்தியும் வெளியிடவில்லை அப்போ என்ன செய்தி வெளியிட்டார்களோ அந்த செய்தியை மறுபிரசுரம் செய்தார்கள். .அதில் அண்ணாமலை சொன்னது போல் எதுவும் இல்லை .இதை தொடர்ந்து சிவி சண்முகம் அண்ணாமலை திமுகவின் கைக்கூலி என்று வர்ணித்தார். முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அண்ணாவைப் பற்றி யார் தவறாக பேசினால் நாக்கு அழுகிவிடும் என்று கடுமையாக விமர்சனம் செய்தார்.

​அண்ணாமலையோ நான் யாருக்கும் கூழைக் கும்பிடு எல்லாம் போட முடியாது.தமிழ்நாட்டில் பாரதிய ஜனதாவை ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்பதற்காக தான் நான் நியமிக்கப்பட்டு இருக்கிறேன். பாரதிய ஜனதா கூட்டணியில் அதிமுக இல்லை என்றால் லஞ்ச ஒழிப்புத்துறை வரும் பரவாயில்லையா என்று மறைமுகமாக அமலாக்கத்துறை வரும் என்று எச்சரித்தார் அண்ணாமலை. நான் என் கட்சியை தான் வளர்க்க முடியும் இன்னொரு கட்சியை வளர்க்க என்னை தலைவனாக இங்கு அனுப்பவில்லை நான் எல்லாம் முடிவு செய்துவிட்டு தான் பேசுகிறேன். நான் ஒரு ரிபெல் என்னைப் பொருத்தவரை தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வர வேண்டும். அண்ணாவைப் பற்றி நான் தவறாக எல்லாம் பேசவில்லை எனவே மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது என்று சொல்லி இருக்கிறார் அண்ணாமலை.

ஆனால் டெல்லி பாரதிய ஜனதா இந்த சம்பவம் நடந்து ஒரு வாரமாக வேடிக்கை தான் பார்க்கிறது கருத்து எதுவும் சொல்லவில்லை என்பதுதான் இன்னொரு ஆச்சரியம்.