தொடர்கள்
கவர் ஸ்டோரி
மோதல் 1. மோடி VS. ட்ருடோ

மோடி vs ஜஸ்டின் ட்ருடோ

20230822171431274.jpg

காலிஸ்தான் தனி நாடு கோரும், பஞ்சாபின் பிரிவினை ஆதரவாளர் ஹர்திப் சிங் நிஜார் 1997-ஆம் ஆண்டு கனடாவுக்கு குடிப்பெயர்ந்தார். இவருக்கு மனைவி மட்டும் இரண்டு மகன்கள் உள்ளனர். கனடா குடியுரிமை பெற்றவரான இவர் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். மீண்டும் காலிஸ்தான் கோஷத்தை முன்னிலைப்படுத்தினார் நிஜார்.இந்த நிலையில் ஜூன் மாதம் 18-ஆம் தேதி கனடாவில் சர்ரே நகர் குருத்வாரா அருகே அடையாளம் தெரியாத இருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் சுட்டுக் கொல்லப்பட்ட மூன்று மாதங்களுக்கு பிறகு அவரது கொலையில் இந்தியாவிற்கு பங்கு இருப்பதாக ஒரு அப்பட்டமான பொய்யை கன்னட பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ பாராளுமன்றத்தில் பேசும் போது குறிப்பிட்டிருக்கிறார். கன்னட பிரதமரின் இந்த குற்றச்சாட்டு இந்தியாவிற்கு மிகப்பெரிய அதிர்ச்சி. இது போதாது என்று கனடாவில் இருந்த இந்திய தூதரக அதிகாரி பவன்குமார் ராய் என்பவரை உடனே கனடாவை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டார் கனடா பிரதமர். கனடா பிரதமரின் இந்த குற்றச்சாட்டை படு அபத்தம் என்று வர்ணித்தார். இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர். இது தவிர இந்தியாவில் உள்ள கனடா தூதரகத்தில் பணியாற்றும் ஆலிவர் சில்வர் ஸ்டாரை ஐந்து தினங்களுக்குள் இந்தியாவை விட்டு வெளியேறுமாறு வெளியுறவுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.

இந்தியா கனடா இடையே தூதரகரீதியாக பிரச்சனை எழுந்துள்ளது. இந்தியாவில் மணிப்பூர் காஷ்மீர் போன்ற இடங்களில் பிரச்சனைகள் இருப்பதால் கனடா நாட்டினர் இந்தியாவிற்கு போக வேண்டாம் என்று அந்த நாட்டு மக்களுக்கு அந்த அரசு அறிவித்து இருக்கிறது. நிர்வாக காரணங்களுக்காக கனடா மக்களுக்கு விசா வழங்கும் நிறுத்தப்பட்டிருப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அறிவித்திருக்கிறது. கொலை செய்யப்பட்ட ஹர்திப் சிங் நிஜார் இந்தியாவில் ஏற்கனவே தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டிருந்தார். அவரைப் பற்றி தகவல் சொல்பவருக்கு 10 லட்சம் ரூபாய் சன்மானம் தரப்படும் என்றும் தேசிய புலனாய்வு நிறுவனம் அறிவித்திருந்தது. இந்தியாவுக்கு எதிரான அவரது நடவடிக்கைகள் கனடா அமெரிக்கா ஜெர்மன் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வெளிப்படையாக தெரிந்தன. தவிர கனடாவில் இந்தியாவுக்கு எதிராக காலிஸ்தான் ஆதரவாளர்கள் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். இது தவிர இந்துக்கள் கோயில் காலிஸ்தான் தீவிரவாத ஆதரவாளர்களால் சேதப்படுத்தப்பட்டது. இதை இந்தியா பலமுறை கனடா நாட்டுக்கு எடுத்து சொல்லியும் அந்த நாட்டு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கனடாவில் குடியுரிமை பெற்ற சீக்கியர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. மொத்த ஜனத்தொகையில் 2.1 சதவீதம் சீக்கியர்கள் இவர்கள் பெரும்பாலோர் காலிஸ்தான் ஆதரவாளர்கள். இவர்களின் வாக்கு வங்கிக்காகத்தான் கனடாபிரதமர் இந்தியா மீது வீண் பழி சுமத்துகிறார் என்ற விமர்சனம் அந்த நாட்டிலேயே எழுந்திருக்கிறது. இந்தியா மீது சொல்லும் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் எங்கே என்று எதிர்க்கட்சிகள் பிரதமரை பாராளுமன்றத்தில் கேள்வி கேட்டன. அதற்கு கனடா பிரதமர் பதில் மழுப்பலாக தான் இருந்தது. கனடாவில் 15 எம்பிக்கள் சீக்கியர்கள் அதில் 6 பேர்கள்சீக்கியர்களின் பாரம்பரிய தலைப்பாகையான டர்பன் அணிந்திருப்பார்கள். நிஜார் கொலை செய்யப்பட்டபோது காவல்துறை புலனாய்வில், இது இரண்டு கோஷ்டிகளுக்குள் ஏற்பட்ட தகராறில் நடந்த கொலை என்று தான் சொன்னது.

​காலிஸ்தான் ஆதரவு குரல் இப்போது வெளிப்படையாக பஞ்சாபில் கேட்கத் தொடங்கி இருக்கிறது. இதற்கு காரணம் வெளிநாட்டில் உள்ள காலிஸ்தான் ஆதரவாளர்கள் தூண்டுதல் தான் காரணம். ஏற்கனவே மத்திய அரசு காலிஸ்தான் டைகர் போர்ஸ் என்ற அமைப்பை தீவிரவாத அமைப்பாக அறிவித்து தடை செய்திருக்கிறது. இந்த அமைப்பு பஞ்சாபில் உள்ள இளைஞர்களை மூளை சலவை செய்து காலிஸ்தான் ஆதரவாளர்களாகவும், இந்தியா எதிர்பாளர்களாகவும் மாற்றும் வேலையை செய்கிறது. இவர்களுக்கான பண உதவி, ஆயுத உதவி போன்றவற்றை வெளிநாட்டில் உள்ள காலிஸ்தான் ஆதரவு அமைப்புகள் அனுப்பி வைக்கின்றன என்பது தேசிய புலனாய்வு அமைப்பான என் ஐ ஏ வின் குற்றச்சாட்டு.