தொடர்கள்
தொடர்கள்
சென்னை  மாதம்  --  பாகம்  92- ஆர் . ரங்கராஜ்

20230622083701563.jpg

சமணச் சமயம் முற்காலத்தில் பெருநகர் முழுவதும் பரவியிருந்தது.

சமய நிலை

சமணம்

சமணச் சமயம் முற்காலத்தில் பெருநகர் முழுவதும் பரவியிருந்தது. செட்டித்தெரு அருகேயுள்ள அழிந்து விட்ட சமணப்பள்ளியில் காணப்படும் சிதைந்த சமணச் சிற்பங்களிலிருந்து அக்காலத்தில் சமணச் சமயத்தின் செல்வாக்கு அதிக அளவில் இருந்தது என்பதை அறியலாம். இவ்வூரில் சமண சமயத்தைப் பின்பற்றுவோர் ஒரு சதவீத பேர் மட்டுமே உள்ளனர்.

சைவ சமயம்

இந்து சமயப் பிரிவுகளில் தொன்மையான் சைவ சமயத்தைச் சார்ந்தோர் இங்கு பெரும்பான்மையாக உள்ளனர். இவர்கள் சிவனை முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபடுகின்றனர். இவ்வூரில் சைவ சமயத்தை பின்பற்றுவோர் 65 சதவீதம் பேர் உள்ளனர்.

வைணவ சமயம்

விஷ்ணுவை முழு முதற் கடவுளாகக் கொண்டுத் திகழும் பாகவத சமயமான வைணவச் சமயத்தைச் சார்ந்தோர் இவ்வூரில் 34 சதவீதம் பேர் உள்ளனர்.

கிறிஸ்துவம்

தற்காலத்தில் இப்போது தான் கிறிஸ்துவம் இவ்வூரில் நுழைந்துள்ளன.

பொருளாதார நிலை

விளைநிலங்களும்-பரப்பளவும்

விவசாயம் பெருநகரின் முக்கிய தொழிலாக உள்ளது . இங்கு 35648 ஏக்கர் நன்செய் நிலமும், 52458 ஏக்கர் புன்செய் நிலமும் விளைநிலங்களாக உள்ளன. இந்நிலங்களில் ஏரி மற்றும் கிணற்றுப் பாசனத்தின் மூலம் பயிர் செய்து இரு போக விளைச்சலைப் பெறுகின்றனர். இது தவிர 0.550 ஏர்ஸ் புஞ்சை தரிசு நிலமும், 9174 ஏர்ஸ் புறம்போக்கு நிலமும் உள்ளன. இங்கு நெல், கரும்பு, கேழ்வரகு, மணிலா, கோரை, பருத்தி முதலானவை பயிரிடப்படுகின்றன.

தொழில்

இங்குள்ள மக்களில் பெரும்பான்மையோர் வேளாண்மைத் தொழிலை அடிப்படையாகக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் கிணறு, ஏரிப்பாசனங்களின் மூலம் நெல், கரும்பு, மணிலா, பருத்தி, கம்பு, கேழ்வரகு, கோரை போன்றவற்றை பயிர் செய்து வருகின்றனர்.

இங்கு நெசவுத் தொழிலும் நடைபெறுகின்றன -- பருத்தி நெசவு மட்டும் நடைபெறுகின்றன.

ஏரி, குளங்களில் மீன் பிடிக்கும் தொழிலை மீனவர்கள் செய்து வருகின்றனர்.

கலை வளர்ச்சி

பெருநகரில் கூத்து என்னும் நாடகக்கலை இன்றும் வழக்கில் உள்ளன. கூத்து இங்கு நல்ல வளர்ச்சி பெற்றிருந்தது. தற்போது நாடகக் கலைஞர்கள் குறைந்து காணப்பட்டாலும் இந்தக் கலை இன்றும் வழக்கில் உள்ளது .

நாட்டிய மகளிர்

தேவதாசி என்ற வடமொழிச் சொல்லின் தமிழ் வடிவமே தேவரடியார் என்பதாகும். இசை, நடனம் ஆகிய கலைகளின் மூலம் ஆலயத்திற்கான உழவாரப்பணி சேவையாற்றும் தேவரடியார் என்ற நாட்டிய மகளிரை சைவ மற்றும் வைணவ ஆகமங்கள் ருத்திர கன்னிகை என்று பெயரிட்டு அழைக்கின்றன. தேவரடியார்களின் சிறப்பான பணிகளைப் பற்றி பல்வேறு கல்வெட்டுகளில் குறிப்புகள் காணப்படுகின்றன. தேவரடியாரான வாச்சனூரைச் சார்ந்த ராஜகுமாரி என்ற நாட்டிய மகளிர் இங்குள்ள சிவன் கோயிலில் 50 வருடங்களுக்கு முன்னர் நாட்டியமாடினார். இவளுக்கு தேவரடியாள் என்ற பெயரில் கோயில் மான்யம் அளித்துள்ளது.

நன்றி: அ. ரஷீத் கான், தமிழ் நாடு அரசு தொல்லியல் துறை.

(தொடரும்)

- ஆர் . ரங்கராஜ், தலைவர், சென்னை 2000 ப்ளஸ் அறக்கட்டளை,
9841010821 rangaraaj2021@gmail.com)