தொடர்கள்
தொடர்கள்
சாஹித்ய டகாடமியில் சுப்புசாமி - 11 புதுவை ரா.ரஜனி ஓவியம் : மணி ஶ்ரீகாந்தன் இலங்கை

20230621000227837.jpeg

கருநீல 3/4 கால்சட்டை மற்றும் மஞ்சள் டீ சர்ட் அணிந்த நான்கு உருவங்கள் தமிழ்நாடு எக்ஸ்பிரசில் ஏறினர். சக பயணிகள் அவர்களை வியப்பாகப் பார்த்தனர்.


எம். பி. என்று சொல்லலாம் என்றால் அதற்கான களையோ,அலட்சணமோ ஏதுமின்றி இருந்தார் சுப்புசாமி.


ஒரு நாதஸ்வரக் கலைஞர் என்று சொல்ல, ஜோடனைகள் கொண்ட பீப்பியைக் காணோம்.


நடிகர் என்றும் சொல்வதற்கில்லை. ஒரு நடிகையின் அதிகப்பிரசங்கி மாமாவைப் போல கிழவர் காட்சியளிக்கிறார்.

’டெல்லியில் ஏதேனும் கிழவர்கள் மாநாடு நடைபெறுகிறது போலும்.
தாத்தாவுக்கு உதவ அவரது நண்பர்கள் உடன் செல்கிறார்கள்' என்று நினைத்தனர்.


'யாரிவரோ...என்ன பேரோ...எந்த ஊரோ...?' என்று யோசிக்கும்போதே...விசில் சத்தம்...அதனைத் தொடர்ந்து ரயிலின் சில யானைகளுக்குச் சமானமான கூவல் சத்தம்...!


“ஜீ கூ...ஜிகூ...ஜிக்...” ரயில் புறப்பட ஆயத்தமாகி விட்டது.

மெல்ல...மெல்ல... வேகமெடுத்து ஓடும்போது...
சென்னை அகாடமியின் தபால் சிப்பந்தி ஒருவர் மூச்சிரைக்க ஓடிவந்து, ரயிலையும் மயிரிழையில் தவற விட்டார்.


'போச்சுடா... அர்ஜென்ட் அர்ஜென்ட்டா ஓடிவந்தும் இப்பிடி ஆர்டினரி போஸ்ட் சமாச்சாரம் ஆயிடுச்சே!' என்று தலையில் கையை வைத்து, வித்தியாசமான இரசாயன நெடியடிக்கும் பிளாட்பாரத்தில் அமர்ந்து பெருமூச்சு விட்டார். அவர் விட்ட மூச்சில் அடுத்த டிரெயின் புறப்படுகிறதோ என்று நினைத்த சிலர் தாறுமாறாய் ஓடினர்.


சிப்பந்தி, பாட்டிலைத் திறந்து தாகம் தணித்துக் கொண்டார்.
அவரது செல்போனும் சிணுங்கியது.


"ஆமா, சார். லெட்டரைக் கொடுக்கலை சார். ரயில் வேகமா போயிடுச்சு சார்...எழுத்தாளரும் அவரோட கூட்டாளிகளும் போய்ட்டாங்க சார்…வழியிலே டிராபிக் சார்...!" என்று பல சார்களை செலவழித்து, தலையைச் சொறிந்தார்.


பின்னர், அதிகாரியிடம் சில வசவு பெற்றதால், சோக நடை பயின்று, நடை மேடையிலிருந்து வெளியேறினார்.


பிளாட்பாரத்தில் நடந்த கூத்தை அறியாத சுப்புசாமி, ஒரு குழந்தை மனதோடு விரைந்து செல்லும் வண்டியிலிருந்து வெளியே ஓடும் கட்டிடங்களையும் மரங்களையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.

குண்டு ராஜாவுக்கு ரயில் கிளம்பியதும் ஸ்நாக்ஸ் தாகம் எடுக்க ஆரம்பித்து விட்டது. கிராமத்துப் பாட்டியான கீதாப்பாட்டி, பேரன் ரயில் பெட்டியில் போகப் போகிறான் என்று, மூட்டையில் பிரத்யேகமாகக் கொண்டு வந்த, நிலக்கடலை, சோளக் கதிர், தட்டைப் பயிறு வகைகள் அவனுக்காக வரிசையில் காத்திருந்தன.


“தாதா, புதுசா என்ன பிளான்?” என்று கேட்டான் அப்பாராவ்.


“எழுத்தாளன் ஒருத்தனுக்கு கிடைக்கிற விருது அனுபவத்தை வெச்சு ஆயிரம் பக்க நாவல் ஒண்ணு எழுத எண்ணமிருக்கு...!”


“என்னைப் பத்தி நாலு வரி எயுது நைனா...!” என்றான் பிளேடு கருணா.


“அதுக்கு நீ எதுனா சாதனை… இல்ல தியாகம் பண்ணியிருக்கனும்...!“ என்றான் குண்டு, நிலக் கடலை பொட்டலத்தை பிரித்தபடி.


“தியாகம்னா...?”


“அதுசரி, திருட்டுப் பயலுக்கு தியாகம் பத்தி என்ன தெரியும்?”


“டேய், குண்டு மூதி. திருடறது சும்மா குழா பேண்ட் போடறதுண்ணு நென்ச்சியா? அதுக்கும் ரோசனை வோனும்...!”


“களவாடறதே தப்பு. இதுல ரோசனைவேற வேணுமா?”


“நைனா, இந்தக் குண்டனை டென்சன் பண்ண வோனாம்னு கூவு...!”


“நிறுத்துங்கடா. மனுஷனை சிந்திக்க விடறீங்களா?” ஒரு குத்து கடலையை அள்ளிக் கொண்டார் தாத்தா.


“என்னாடா குண்டு, உங்க கீதாப்பாட்டிக்கு நான் அவார்டு வாங்குறது தெரியுமாடா?” - கேட்டார் சுப்புசாமி.


“அவார்டை, மனுஷனை கக்கத்திலே வெச்சுக்க சொல்லு…ஒரு முப்பது ரூபா கடனா கொடுத்தா, பயிறு போட தோதா இருக்கும். வட்டி போட்டு தருகிறதா பாட்டி சொல்லுச்சு...!”


”நான் ஏற்கெனவே அந்தக் கிழவிக்கு வெள்ளிக் குழவியை வெச்சு கடன் கொடுத்து, என் கிழவிகிட்டே பட்ட அனுபவம் போதாதா? அதோ பார் தூரத்திலே ஒரு பெரிய மலை…!” என்று பேச்சை திசை மாற்றினார், தாத்தா.


அப்பாராவ் யாதும் அறியாதவனாகி ரயில் தாலாட்டுக்குத் துயில ஆரம்பித்திருந்தான்.


”கவலையில்லாத ஒரே மனிதன், இவன்தான்...!” என்ற சுப்புசாமிக்கு
புது டெல்லி ரயில் நிலையத்தில் பேரிடி ஒன்று காத்திருந்தது...!

(அடாவடி தொடரும்…)