தொடர்கள்
தொடர்கள்
கைலாஷ் புனித பயணம் - இரண்டாவது வாரம் திபெத்தை நோக்கிய நீண்...ட இரயில் பயணம்.- ராம்

20230622065415441.jpeg

சென்ற வாரம் இரயில் பிடிக்க நானும் பேராசிரியரும் டாக்சியில் விரைந்ததிலிருந்து தொடருவோம்…..

ஷின்னிங் இரயில் நிலையத்தில் சென்று டாக்சி நிற்கும் போது இரயில் கிளம்ப இன்னும் 15 நிமிடங்கள் இருந்தது.

அசகாய சூரத்தனம் செய்து எமெர்ஜென்சி. லேனில் வண்டி ஓட்டி வந்த அந்த ஓட்டுனரை சாதாரண சமயமாக இருந்தால் ஒரு போட்டோ எடுத்து வைத்திருப்பேன். கட்டிப் பிடித்து நன்றி சொல்லியிருப்பேன். ஆனால் இங்கே இமாலய அவசரம். நேரமில்லை. இருந்தாலும் அந்த முகத்தில் தெரிந்த ஒரு சாதித்த உணர்வு. என் கஸ்டமர்களை நேரத்தில் கொண்டு வந்து சேர்த்த பெருமிதம் தெரிந்தது. அதை மேலும் கொஞ்சம் மகிழ்ச்சிப்படுத்த மீட்டரை விட மூன்று மடங்கு பணம் கொடுத்தேன். அந்த நொடியில் அதை விட நன்றி சொல்ல எங்களுக்கு நேரம் சுத்தமாக இல்லை.

20230622065931680.jpeg

சீனாவில் சாதாரணமாக இரயில் பிடிக்க இந்த நேரம் போதுமானது. காரணம் அப்போது தான் பிளாட்பாரத்திலேயே விடுவார்கள். தேவையில்லாமல் இரயில் ஏறும் பயணிகளை வழியனுப்பும் கூட்டமோ பிளாட்பார டிக்கெட்டோ கிடையாது.

பதினைந்து நிமிடங்கள் தாராளம். அதாவது ஒரு இரயில் 18வது பிளாட்பாரத்தில் வருகிறது என்றால் முதல் மாடியில் 18A, 18B என்று எதிர் எதிரே இரண்டு பக்கம் பயணிகள் நுழையலாம். 1 - 10 வரை உள்ள பெட்டிகளுக்கு A 11 முதல் கடைசி பெட்டி வரை B என்று இரு புறமும் பயணிகள் அனுமதிக்கப்பட்டு பத்து நிமிடங்களில் எல்லோரும் செட்டிலாகி விடுவார்கள்.

20230622065955899.jpeg

ஆனால் ஷின்னிங்கில் வெறும் பயணச் சீட்டு மட்டுமல்லாது திபெத் செல்ல பர்மிட் இருக்கிறதா என்று சோதிக்க இன்னொரு 5 நிமிடங்களாவது வேண்டும்.

20230622070017275.jpeg

(ஷென்ஜன் இரயில்வே நிலையம். சும்மா ஒரு மாதிரிக்கு)

எல்லாம் முடிந்து பிளாட்பாரத்தில் நுழைந்து எங்கள் பெட்டிக்கருகே செல்லும் போது தான் எங்கள் குழுவின் மற்ற நான்கு பேர்களும் ஏறிக் கொண்டிருந்தார்கள். அவர்களை B க்கு பதிலாக A வழியாக அனுப்பியிருக்கிறான் யாரோ ஒரு பிரகஸ்பதி. மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்க பெட்டிகளையெல்லாம் தள்ளிக் கொண்டு ஒரு வழியாக முதல் வகுப்பு பெட்டிக்குள் ஏறி அமர்ந்ததும் ஒரு யுகம் கடந்ததைப் போல ஒரு உணர்வு.

பெட்டியைப் பார்த்ததும் தான் சங்கீதாவுக்கு ஒரு நிம்மதி. (முதல் வகுப்பு பெட்டி, தொலைந்து போன பெட்டி இரண்டும் தான்). பேராசிரியருக்கும் தான். தொலைந்து போல பெட்டியில் அப்படி என்ன இருக்கிறது என்று தெரியவில்லை ஆனால் ஏதோ இருக்கிறது என்று சிரித்தார்….

நாங்கள் எடுத்துச் சென்ற பெட்டிகள்….

அதிகமில்லை…இதோ இவ்ளோ தான்…..

கைலாஷ் பயணத்திற்கு இது மிக மிக அதிகம். அது புரிவதற்கு ஒரு கைலாய பயணம் செல்ல வேண்டியிருந்தது….

ஒரு வழியாக முதல் வகுப்பு பெட்டியில் ஏறியாகி விட்டது. அதென்ன ஆன்மீகப் பயணம் செல்லும் போது முதல் வகுப்பு?? இரண்டாம் வகுப்பு ஆவாதோ என்று கேள்வி எழலாம்.....

சீனாவின் நீண்ட தூர இரயிலில் இரண்டாம் வகுப்பு ஸ்லீப்பர் என்பது உட்கார்ந்து கொண்டு போவதை விட செளகரியம் தான் ஆனால் எங்களைப் போல் ஏகத்திற்கும் பெட்டி எடுத்துச் செல்பவர்களுக்கு அங்கு படு அவஸ்தை. பெட்டி வைக்க இடம் இருக்காது. ஒரு அறையில் ஆறு பேர். நம்மூர் 3 டயர் பெர்த் போலத்தான். ஆனாலும் படு அசெளகரியமாக இருந்திருக்கும்.

கழிவறைகளைப் பொறுத்தவரை முதல் வகுப்பு தான் தேறும் இரண்டாம் வகுப்பு தேறாது. அதை விலாவாரியாக விவரிக்க இயலாது என்றால் புரிந்து கொள்ளுங்கள்.

ஆக முதல் வகுப்பு கிடைத்ததற்கு https://www.chinatrainbooking.com என்ற வலைதளத்தை சேர்ந்த கேர்ரி என்ற பெண்மணிக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும்.

20230622070517404.jpg

எப்படியோ இதை வாங்கிக் கொடுத்திருக்காவிட்டால் மிக மிக மிக கஷ்டப்பட்டிருப்போம்.

சரி ஒரு வழியாக இரயிலில் ஏறியாகி விட்டது. இனி இரவு தூங்கி விட்டு காலையில் இயற்கையை ரசிக்கும் முன் கொஞ்சம் இந்த இரயிலைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

ஷின்ஹாய் திபெத் இரயில்வே.

20230622070555500.jpg

உலகின் மிக மிக உயரமான இரயில் இது தான்.

பீடபூமியில் ஓடும் மிக நீளமான இரயில்வேயும் இது தான்.

உறைபனி பூமியில் போடப்பட்ட நீளமான இரயில்வே பாதை.

உறைபனி பூமியில் ஓடும் வேகமான இரயில்வே.

இப்படி சில சிறப்புக்கள் இந்த இரயில்வேக்கு இருக்கிறது.

ஒரு காலத்தில் திபெத் என்பது உலகிலிருந்து துண்டாக தனித்திருந்தது.

1950ல் இந்த இரயில்வே திட்டம் போடப்பட்டு 1958ல் துவங்கப்பட்டது 845 கிலோ மீட்டர்கள் முடித்து இயக்கம் துவங்கப்பட்டது 1984ல்.

பின்னர் 2001ல் கோல்முட் முதல் லாசா வரை 1142 கி.மீட்டர்கள் இரயில்வே பாதை 2005ல் முடிவடைந்தது. இதோடு விட்டார்களா 2010ல் லாசாவிலிருந்து துவங்கி 2014ல் ஷிகாட்சே வரை முடித்து விட்டார்கள்.

இன்னமும் இரயில்வே வேலைகள் ஓய்ந்த பாடில்லை. 2025க்குள் நேபாள எல்லை வரை இரயில்வே பாதை விரிவடையும். கைலாஷ் பயணம் மேலும் லாசாவிலிருந்து எளிதாகும்.

இந்த திட்டம் துவங்கும் போது உலகமே இதை எள்ளி நகையாடியது.

இப்படி ஒரு உயரத்தில் இரயில்வே கட்டுவது மனிதனால் முடியாத காரியம் என்றே அனைவரும் கருத்து தெரிவித்தனர்.

2023062207073089.jpg

உறைபனி, ஆக்ஸிஜன் குறைவு, கடுங்குளிர், நிலச்சரிவு, படு பயங்கர மலை முகடுகள் இத்தனை சவாலையும் எதிர்த்து ஏராள மனித உயிர்களை கொடுத்துத் தான் இந்த இரயில்வே பயணம் சாத்தியமாகியிருக்கிறது.

எப்படி உறைபனியை, கடுங்குளிரை சமாளித்து இந்த இரயில்வே பாதை அமைத்திருக்கிறார்கள் என்று தொழில்நுட்ப ரீதியாக எழுதுவது இந்த கட்டுரையின் நோக்கத்தை திசை திருப்பும்.

வாழ்க்கையில் முடிந்தால் அனைவரும் இந்த இரயிலில் இந்த திபெத்திற்கு ஒரு முறை பயணம் செய்ய வேண்டும். இது போன்ற பல பாதைகள் நம் நாட்டிலும் இருக்கிறது. ஆனாலும் இத்தனை நீளமாக ஒரே போன்ற காட்சிகளை பார்ப்பது அரிது.

20230622070842616.jpeg

(இரயில்வே சிப்பந்தி எங்களுடன் ஆசைஆசையாக படம் எடுத்துக் கொண்ட போது)

ஷின்ஹாய் திபெத்தின் அதிகபட்ச வேகம், உறைபனி பூமியில் 100 கி.மீ மற்ற இடங்களில் 120 கி.மீ.

தூங்கி விட்டு காலையில் எழுந்து பார்க்கலாம் எப்படி அந்த காட்சி விரிகின்றது என்று……

காட்சிகள் இப்படி இரண்டு புறமும் ஓடிக் கொண்டிருக்க சங்கீதாவுக்குத் தான் பாவம் அத்தனை அடி உயரத்தில் ஆல்டிடுயூட் சிக்னஸ் என்று சொல்லப்படும் அதிஉயர பாதிப்பு அதிகமாகத் துவங்கியது.

20230622071225363.jpeg

பேச முடியவில்லை. மூச்சு சாதாரணமாக முடியவில்லை. சிரமம்பட வேண்டியிருந்தது.

ஷின்ஹாய் திபெத் இரயில்வேயில் இந்த உயரத்திற்காகவே 23.5 சதவிகித ஆக்சிஜனை இரயில் பெட்டியில் ஏர்கண்டிஷன் போல அனுப்புகிறார்கள். அதுவும் பத்தவில்லை என்றால் ஆக்சிஜன் டியூப் வைத்து இப்படி நாம் வைத்துக் கொள்ளலாம்.

சுதா சும்மா போஸ் தான். ஆக்சிஜன் அவருக்கு தேவையிருக்கவில்லை.

20230622071150477.jpeg

எனக்கு எந்த வித பிரச்சினையும் இல்லை என்று தான் உணர்ந்தேன். இன்னொரு காரணம் இருக்கிறது. நானும் பார்த்தாவும் மட்டும் தான் தனியாளாக வந்திருக்கிறோம். மற்ற அனைவரும் தம்பதிகளாகத்தான் வந்திருக்கின்றனர்.

நமக்கு தலைவலி வந்தா நாம தான் பாத்துக்கணும் என்ற உணர்வே இந்த உயரத்தையும், ஆக்சிஜன் பற்றாக்குறையும் மனதில் ஏற்றிக் கொள்ளாதே என்று சொல்லியிருக்கக் கூடும்.

இறைவன் அருளில் பயணம் மொத்தமும் கொஞ்சம் தலை லேசாக இருப்பது போல அவ்வப்போது தோன்றினாலும், உயரத் தாக்கம் எதுவுமில்லை.

அதனால் யாருக்கும் வராது என்றோ வரும் என்றோ உத்திரவாதமும் கொடுக்க முடியாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு முறை ஒவ்வொரு அனுபவமாகத்தான் இருக்கும்.

மாலை ஏழு மணி நாற்பது நிமிடத்திற்கு லாசா உள்ளே நுழைந்தது இரயில்.

சாண்டில்யனாகவோ அல்லது பாலகுமாரனாகவோ இருந்திருந்தால் இந்த இரயில் பயணத்தின் வர்ணனைகள் வேறு மாதிரி தாறுமாறாக இருந்திருக்கும்.

இயற்கை காட்சிகள் ஒரு புறமெனில், ஒரு குழுவாக, நாங்கள் பேசி சிரித்துக் கொண்டு கலாய்த்துக் கொண்டு அவ்வப்போது, சூடான திடீர் உப்புமா, தேப்லா, இட்லி, இப்படி பல ஐட்டங்களை அவ்வப்போது கொறித்துக் கொண்டு பேராசிரியும், சுதாவும் கலந்து கொடுக்கும் காபி, டீ என்ற வஸ்துக்களை வகை தொகை தெரியாமல் சாப்பிட்டுக் கொண்டு போனது இன்னொரு குதூகலம்.

20230622071356574.jpeg

(பயண முடிவில் திடீர் உப்புமாவே வெறுத்து விட்டது அனைவருக்கும்)

இரண்டு பக்கமும். மலைகள், மலைகள், மலைகள், ஏரிகள், பனிப் பாறைகள், நீல வானம், புத்தம் புதிய போஸ்கார்டு போன்ற கண்ணுக்கு குளிர்ச்சியான அழகோ அழகு காட்சிகள் இத்தனையும் நிஜமாகவே திகட்ட திகட்ட பார்த்து களைத்து. லாசா வரும் போது ஏதோ ஒரு கனவுலகிலிருந்து பிளாட்பாரத்தில் இறங்குவது போலத் தான் இருந்தது.

20230622071512316.jpeg

எங்களை வரவேற்க தாஷி காத்திருந்தார்.

திபெத் ஸ்டைலில் எல்லோருக்கும் ஒரு வெள்ளை அங்கியை அணிவித்து அறிமுகப்படுத்திக் கொண்டு வரவேற்றார்.

2023062207153120.jpeg

தாஷி அடுத்த சில தினங்களில் எங்கள் மனதை கொள்ளை கொள்ளப் போகிறார் என்று தெரியாமல் அவருடன் விடுதிக்கு சென்றோம்.

அடுத்த நாள் முழுக்க ரெஸ்ட் தான் நாளை மறு நாள் தான் பொட்டாலா பேலஸ் என்று சொல்லப்படும் தலாய் லாமாவின் கோட்டையை சுற்றிப் பார்க்க போகிறோம்.

அப்படியே சீன இராணுவத்திடம் உங்களுக்கெல்லாம் கைலாஷ் போக பெர்மிட் வாங்க வேண்டும் என்றார் சிரித்துக் கொண்டே. (அங்கு ஏற்படப் போகும் சோகம் அறியாமலே நாங்களும் சிரித்த்தோம்)

கைலாஷ் பயணத்தை ஏற்கனவே மினி தொடர் என்று தான் சொல்லியிருக்கிறோம்.

அடுத்த வாரம் லாசாவின் பொடாலா பேலஸ் பார்த்து விட்டு நீண்ட சாலை பயணத்தை கடந்து எவரெஸ்ட் அடிவாரம் செல்லும் வரை பார்த்து விடலாம். கைலாஷ் பயணத்தில் எவெரஸ்ட் அடிவாரம் அத்தனை முக்கியமில்லை தான். ஆனாலும் அவ்வளவு தூரம் செல்கிறோம் அந்த எவரெஸ்டையும் பார்த்து விடலாம் என்ற யோசனை தான்.

எவரெஸ்ட் நேபாள் பக்கமும், சீனா பக்கமும் அணுகலாம். ஆனால் சீனாவிலிருந்து தான் அது அழகாக தெரியும். நிச்சயம் அடுத்த வாரம் பார்க்கத்தானே போகிறீர்கள். இந்த ஷின்னிங் லாசா இரயில்வே பயணத்தை கொஞ்சம் யூடியூப் உதவியுடனும், நமது வீடியோவுடனும் சுருக்கமாக இங்கே......

அப்புறம் மானசரோவர் ஏரி. அங்கு பல அற்புதங்கள் இருக்கிறது.

ஏனெனில் எப்படியும் நான்காவது வாரம் கைலாஷ் மலைக்கு செல்ல வேண்டும். அந்த சிலிர்ப்பான தினம் தான் க்ளைமேக்ஸ்.

அது வரை.... பயணம் தொடரும்......

கைலாஷ் புனித பயணம் - முதல் வாரம் படிக்க இங்கே..