தொடர்கள்
கவர் ஸ்டோரி
விகடகவியார் ஸ்பெஷல் ரிப்போர்ட் INDIA vs NDA

20230622001259484.jpeg

பாரதிய ஜனதா எதிர்க்கட்சிகள் இரண்டுமே 2024 பாராளுமன்றத் தேர்தலுக்கு கிட்டத்தட்ட ரெடியாகி விட்டன என்றே சொல்லலாம். கூட்டணிக்கு பெயர் அதற்கு விளக்கம் என்று எல்லா அரசியல் கட்சிகளும் சுறுசுறுப்பாக களத்தில் இறங்கி விட்டன. முதலில் எதிர்க்கட்சிகள் வியூகம் என்ன என்று பார்ப்போம்.

எதிர்க்கட்சிகள்

20230622075638174.jpg

நன்றி : தினமணி

எதிர்க்கட்சிகளை பொறுத்தவரை அவர்கள் 2022 முதல் பாராளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதாவை தோற்கடிக்க நாம் ஒன்றிணைய வேண்டும் என்று பேசிக் கொண்டிருந்தார்கள். ஆனால், பாட்னாவில் பீகார் முதல்வர் நிதீஷ் குமார் ஏற்பாடு செய்த எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் தான் 2024 பாராளுமன்றத் தேர்தல் வியூகம் சூடு பிடிக்க ஆரம்பித்தது என்று சொல்லலாம். எதிர்க்கட்சிகளில் ஒன் லைன் அஜண்டா 2024 பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவை தோற்கடிக்க வேண்டும் என்பதுதான். இதற்குக் காரணம் எதிர்க்கட்சியில் எல்லாமே ஒரு வகையில் பாரதிய ஜனதா கட்சியால் பாதிப்புக்கு ஆளானது என்பதுதான் காரணம்.

உதாரணமாக காங்கிரஸ் கட்சி எங்கள் கட்சியின் பிரதமர் ராகுல் காந்தி என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தது. இப்போது அவதூறு வழக்கில் ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டு அவர் இன்னும் ஆறு ஆண்டுகளுக்கு தேர்தலில் நிற்க முடியாமல் போய்விட்டது. இது பாரதிய ஜனதாவின் பழி வாங்கும் நடவடிக்கை என்று இன்று வரை காங்கிரஸ் பேசிக் கொண்டிருக்கிறது.

மம்தா பானர்ஜியின் திருணாமுல் காங்கிரஸ் பாரதிய ஜனதாவால் கடும் பாதிப்புக்கு ஆளானது. அந்தக் கட்சியில் முக்கிய தலைவர்களை தன் பக்கம் இழுத்தது. இது தவிர அமலாக்கத்துறை சிபிஐ மூலம் மம்தா பானர்ஜி கட்சியினர் வழக்குகள் மூலம் கைது ஜாமீன் என்று அலைக்கழிக்கப்படுகிறது. இது தவிர ஆளுநர் மூலம் சங்கடங்கள் மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் தாமதப்படுத்துவது என்று மம்தா பானர்ஜி பலவிதங்களில் பாதிக்கப்பட்டுள்ளார். அதே சமயம் மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்ட் கட்சி செல்வாக்குடன் ஆளுங்கட்சியாக இருந்தது. இதேபோல் காங்கிரஸ் கட்சி செல்வாக்குடன் ஆளும் கட்சியாக இருந்தது. இவர்கள் இருவரையும் பின்னுக்கு தள்ளி முன்னுக்கு வந்தவர் மம்தா பானர்ஜி. இப்போது மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி கட்சிக்கு அடுத்து செல்வாக்குடன் இருப்பது பாரதிய ஜனதா கட்சி தான் சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் கூட மம்தா பானர்ஜி கட்சிக்கு அடுத்து அதிக இடங்களை கைப்பற்றியது. பாரதிய ஜனதா தான். இப்போதைக்கு மம்தா பானர்ஜிக்கு சவாலாக இருப்பது பாரதிய ஜனதா தான்.

காஷ்மீரை பொருத்தவரை காஷ்மீரை இரண்டாகப் பிரித்து ஜம்முவை யூனியன் பிரதேசமாக மாற்றியது. 370 சிறப்பு சட்டத்தை காலாவதி ஆக்கியது. இதெல்லாம் உமர் அப்துல்லா மெகபூபா இருவரும் பாரதிய ஜனதாவை எதிர்ப்பதற்கான காரணங்கள். காஷ்மீரில் தொடர்ந்து ஆளுநர் ஆட்சி தான் நடைபெறுகிறது. தேர்தல் இதோ வரும் அது வரும் என்று சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால், வந்த பாடில்லை அதே சமயம் தீவிரவாதிகளை எதிர்த்து பாரதிய ஜனதா அரசு எடுத்த நடவடிக்கை காஷ்மீரில் தீவிரவாதிகள் நடமாட்டத்தை அதிக அளவு குறைத்து இருக்கிறது என்பதும் உண்மை. இதனால் தான் பாகிஸ்தான் அரசு பாரதிய ஜனதாவை கடுமையாக விமர்சனம் செய்கிறது. உமர் அப்துல்லா மெஹபூபா ஆட்சியில் இந்திய சுதந்திர தினம் கொண்டாட்டங்கள் எல்லாம் பெரிதாக இருக்காது. இப்போது பாரதிய ஜனதாவின் செல்வாக்கால் காஷ்மீரில் தேசியக்கொடி உயரே பறக்கிறது என்பதும் உண்மை.

பீகாரைப் பொறுத்தவரை நிதீஷ்குமார் கட்சிக்கு பெரும்பான்மை இல்லாவிட்டாலும் அவரை முதல்வராக பாரதிய ஜனதா ஆதரித்து முதல்வர் ஆக்கியது. அதன் பிறகு காலப்போக்கில் இரண்டு கட்சிகளுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனவே நிதீஷ்குமார் பாரதிய ஜனதா கூட்டணி வேண்டாம் என்று சொல்லி லல்லு பிரசாத்தின் ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் கூட்டணி வைத்து முதல்வர் பதவியை தக்க வைத்துக் கொண்டார். அதேசமயம் நிதீஷ்குமாருக்கு தேசிய அரசியல் பிரதமர் பதவி ஆசை இதெல்லாம் இருந்ததும் பாரதியஜனதா கட்சியை கூட்டணியில் இருந்து விலகியதற்கு ஒரு காரணம் லல்லு பிரசாத்தின் மகன் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வர் ஆகும்போது நான் தேசிய அரசியலுக்கு சென்று விடுவேன். வருங்கால முதல்வர் நீங்கள்தான் என்ற உத்தரவாதத்தை அவருக்கு வழங்கியதால் லல்லு பிரசாத் கட்சி விழுந்து விழுந்து நிதீஷ்குமாரை ஆதரிக்கிறது. நிதீஷ்குமாரும் தேசிய அளவில் உள்ள பாரதிய ஜனதாவை எதிர்க்கும் தலைவர்களை சந்தித்து அவர்களை ஒருங்கிணைக்கும் வேளையில் ஈடுபட்டார், ஈடுபட்டு வருகிறார்.

திமுகவை பொருத்தவரை ஆளுநர் திமுக மோதல் இப்போதைக்கு உச்சத்தில் இருக்கிறது. இவை எல்லாமே பாரதிய ஜனதா சொல்லி தான் நடக்கிறது என்பதை திமுக நன்கு தெரிந்து கொண்டு விட்டது. இது தவிர இவர்கள் மீதும் அமலாக்கத்துறை நடவடிக்கை எல்லாம் சேர்ந்து பாரதிய ஜனதாவை தீவிரமாக எதிர்க்க திமுக துணிந்து விட்டது.

பெங்களூரில் காங்கிரஸ் கட்சி கூட்டிய எதிர்க்கட்சிகள் கூட்டம் ஒரு முக்கிய திருப்புமுனை என்று சொல்லலாம். இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி எங்களுக்கு பிரதமர் பதவியில் நாட்டமில்லை என்று சொல்லிவிட்டது. இந்த கூட்டத்தில் சோனியா காந்தி கலந்து கொண்டது எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு அவர் விருந்து இதெல்லாம் அதி முக்கியமான அரசியல் நிகழ்வுகள். மம்தா பானர்ஜிக்கு இப்போதும் காங்கிரஸ் கட்சியை பிடிக்கவில்லை கம்யூனிஸ்ட் கட்சியை வேண்டவே வேண்டாம் என்கிறார். கேரளாவில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு எதிர்க்கட்சி காங்கிரஸ் கட்சி தான். மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் சிவசேனா இரண்டும் இரண்டாகி விட்டன. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தீவிர பாரதிய ஜனதா ஆதரவாளராக இருந்தவர். தீவிர பாரதிய ஜனதா எதிர்ப்பாளராக மாறிவிட்டார். தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பாவரை பொருத்தவரை அவரை எதிர்க்கட்சிகள் சந்தேக கேசில் தான் வைத்திருக்கின்றது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக பலம் வாய்ந்த கட்சி என்றாலும் கடுமையான போராட்டத்திற்கு பிறகு அதிமுகவை தன் வசம் தக்க வைத்துக் கொண்டு விட்டார் எடப்பாடி. தமிழ்நாட்டில் அவர் தவிர்க்க முடியாத சக்தி என்று ஆகிவிட்டது. இந்த தேர்தலில் திமுக எல்லா இடங்களிலும் வெற்றி பெறும் என்று சொல்ல முடியாது. எடப்பாடிகான வெற்றி வாய்ப்பும் பிரகாசமாக இருக்கிறது என்பது உண்மை. இதனால் தான் பிரதமர் அவருக்கு மரியாதை தந்துதேசிய ஜனநாயகக் கட்சிக் கூட்டத்தில் எடப்பாடியை தன் பக்கத்தில் அமர வைத்துக் கொண்டார்.

காங்கிரஸ் பிரதமர் பதவியில் நாட்டமில்லை என்று சொல்லி விட்டதால் மம்தா பானர்ஜி நிதீஷ்குமார் ஆகியோர் இப்போதே பிரதமர் கனவு காண ஆரம்பித்து விட்டார்கள். அதேசமயம் தேசியக் கட்சியான காங்கிரஸ் கட்சி தயவு அவர்களுக்கு வேண்டும் என்பதால் இருவரும் இப்போது திடீரென சோனியா மீது பாச மழை பொழிய ஆரம்பித்து விட்டார்கள். அதிலும் மம்தா பானர்ஜி சோனியாவிடம் அதிக நெருக்கம் காட்ட ஆரம்பித்து இருக்கிறார்.

எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா என்று பெயர் சூட்டி இருக்கிறார்கள். அதாவது ஐ - இந்தியன் என் - நேஷனல் டி - டெமாக்ரடிக் ஐ - இன்குளூசிவ் ஏ - அலையன்ஸ் என்று சேர்த்து இந்தியா என்று கூட்டணிக்கு பெயர் வைத்திருக்கிறார்கள். இந்தப் பெயரை தேர்ந்தெடுத்தது மம்தா பானர்ஜி. அடுத்த கூட்டம் மும்பையில் நடக்க இருக்கிறது. அப்போது இன்னும் பரபரப்பு கூடும்.

பாரதிய ஜனதா

பாரதிய ஜனதாவை பொறுத்தவரை அது என்றும் கூட்டணிக் கட்சி நம்பி அரசியல் செய்யாது. அது எப்போதும் தனது சொந்த காலில் நிற்கவே விரும்பும். இதுவரை அவர்கள் மோடி என்ற பிம்பத்தை முன்னிறுத்தி தான் அரசியல் செய்து கொண்டிருந்தார்கள். தேர்தலை சந்தித்தார்கள். ஆனால், கர்நாடக தேர்தல் முடிவுகள் இப்போது பாரதிய ஜனதாவை யோசிக்க வைத்திருக்கிறது. நேற்று வரை மோடி அரசு என்று சொல்லிக் கொண்டிருந்தவர்கள். இப்போது தேசிய ஜனநாயக கூட்டணி என்று பேசத் தொடங்கி இருக்கிறார்கள். இந்த ஒன்பது ஆண்டுகளில் தேசிய ஜனநாயக கட்சி கூட்டணி எத்தனை முறை கூடியிருக்கிறது. அதன் கன்வீனர் யார் என்ற கேள்விகளுக்கெல்லாம் பாரதிய ஜனதாவிடம் பதில் இல்லை. காரணம் அப்படி எதுவும் நடக்கவில்லை என்பதுதான். உண்மையான தேசிய ஜனநாயக கூட்டணி என்பது கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு முன்பு வாஜ்பாய் ஏற்படுத்தியது அதன் கன்வீனராக ஜார்ஜ் பெர்னாண்டஸ் இருந்தார்.

இந்த வாரம் டெல்லியில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகள் கூட்டத்தில் 38 கட்சிகள் கலந்து கொண்டனர். 2019 தேசிய ஜனநாயக 21 கட்சிகள் இருந்தன. இப்போது 38 ஆக உயர்ந்திருக்கிறது. இந்த 38 கட்சிகள் எண்ணிக்கை பற்றியும் விமர்சனம் வரத் தொடங்கி இருக்கிறது. உதாரணமாக தமிழகத்திலிருந்து தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சிகள் அதிமுக பாட்டாளி மக்கள் கட்சி தமிழ் மாநில காங்கிரஸ் புதிய தமிழகம் புதிய நீதி கட்சி இந்திய ஜனநாயக கட்சி இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் என்று எட்டு கட்சிகள் தமிழ்நாட்டில் இருந்து கலந்து கொண்டனர். இப்போதைய நிலவரம் எப்படி அதிமுகவுக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் யாரும் கிடையாது. ராஜ்யசபா உறுப்பினர்கள் மட்டுமே இருந்த ஒரே ஒரு பாராளுமன்ற உறுப்பினரான ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் அதிமுக உறுப்பினர் இல்லை என்று சபாநாயகருக்கு அதிமுக கடிதம் எழுதி இருக்கிறது. தவிர சமீபத்தில் உயர் நீதிமன்றம் அவர் தேர்தல் செல்லாது என்று சொல்லி மேல்முறையீடு செய்ய 30 நாள் அவகாசம் தந்திருக்கிறது. ஜி.கே.வாசன் அதிமுகவில் ராஜ்யசபா எம்பி ஆனவர் பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணி பற்றி இன்னும் தீர்க்கமாக முடிவெடுக்கவில்லை. அதனால்தான் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொள்வதற்கு பதில் ஏகே முர்த்தியை அனுப்பி வைத்திருக்கிறார். இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர் எம்பி தான் இருந்தாலும் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டவர் மீதி இரண்டு கட்சிகளும் லெட்டர் பேடு கட்சிகள் தான்.

பாரதியஜனதா கட்சி கூட்டிய கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் பெரும்பான்மைக் கட்சிகளுக்கு பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் இல்லை என்பது எதிர்க்கட்சிகள் விமர்சனம். ஆனால், இது எதிர்க்கட்சி கூட்டணிக்கும் பொருந்தும் இப்போதைய நிலவரம் படி சிவசேனா தேசியவாத கட்சி என்று இரண்டு கட்சிகளுமே இல்லவே இல்லை என்பதுதான் தேர்தல் ஆணைய கணக்கு. இதேபோல் காங்கிரஸ் திமுக மம்தா பானர்ஜி நிதீஷ்குமார் லல்லு பிரசாத் ஆகியோர் கட்சிக்கு மட்டுமே எம்பிக்கள் இருந்தனர். மற்ற கட்சிகளுக்கும் எம்பிக்கள் இல்லை என்பதை எதிர்க்கட்சிகள் தங்கள் சௌகரியத்துக்காக மறந்து போய்விட்டன.

பிரதமர் என் டி ஏ என்பதற்கு புதிய விளக்கத்தை தற்சமயம் கொடுத்திருக்கிறார் என் -நியூ இந்தியா -டி டெவலப்மெண்ட் அதாவது வளர்ச்சி -ஏ -ஆஸ்பிரேஷன் மக்கள் விருப்பம் என்கிறார் பிரதமர் மோடி. அதேசமயம் எதிர்க்கட்சிகளை சாடி எதிர்க்கட்சிகள் ஊழல் கட்சி குடும்பக் கட்சி என்ற விமர்சனத்தை வைத்து தான் இந்த பாராளுமன்றத் தேர்தலை மோடி சந்திக்க இருக்கிறார். 10 ஆண்டுகள் ஆட்சி செய்திருக்கிறார் மோடி உலக அளவில் அவரை எல்லோரும் கொண்டாடுகிறார்கள் என்று பெருமை பேசும் மோடி அவரது ஆட்சி சாதனைகளை சொல்லி ஏன் ஓட்டு கேட்க மாட்டேன் என்கிறார் என்று கேட்கிறார்கள். இந்த கேள்விக்கு பாரதிய ஜனதா சரியான பதில் இதுவரை சொல்லவில்லை.

தவிர கடந்த சில மாதங்களாக பாராளுமன்றத் தேர்தல் பற்றி பாரதிய ஜனதா நடத்தும் ஆலோசனைக் கூட்டங்களில் ஆர் எஸ் எஸ் தலைவர்களும் கலந்து கொண்டு பல்வேறு கருத்துக்களை சொல்லி வருகிறார்கள். பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா இருவரும் மூத்த தலைவர்கள் ஆன ராஜ்நாத் சிங் நிர்மலா சீதாராமன் நிதின் கட்காரி போன்ற அமைச்சர்களை கட்சிப் பணிக்கு அனுப்பி மந்திரி சபையில் மாற்றம் செய்ய விரும்பினார்கள். ஆனால், இதை ஆர்எஸ்எஸ் ஏற்கவில்லை. எனவே அமைச்சரவை மாற்றம் அப்படியே நின்று போனது. இதேபோல் ஆர்எஸ்எஸ் முக்கிய இலாக்காக்களை பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறும் உறுப்பினர்களுக்கு தான் வழங்க வேண்டும். ராஜ்யசபா உறுப்பினர்களுக்கு வழங்க கூடாது என்றும் சொல்லி இருக்கிறது. நடப்பு பாராளுமன்ற கூட்டத் தொடரில் பொது சிவில் சட்டம் மசோதாவை கொண்டுவர தீர்மானத்தில் இருந்தார்கள்.

பிரதமர் மோடி இப்போதைக்கு அது தேவையில்லை என்று ஆர்எஸ்எஸ் சொல்லிவிட்டது. எனவே வரும் பாராளுமன்ற கூட்டத்தில் பொது சிவில் சட்டம் மசோதா வராது. 10 நாட்கள் நீலகிரியில் ஒரு தனியார் பள்ளியில் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. அங்கு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. ஆனால், அவை என்ன என்பதையெல்லாம் பத்திரிகைகளில் நிருபர்கள் சந்திப்பை அழைத்து சொல்லும் வழக்கமெல்லாம் என்றைக்குமே ஆர் எஸ் எஸ்க்கு கிடையாது. ஆர்எஸ்எஸ் எப்போதும் பேசாது செய்து காட்டுவார்கள். இப்போதைக்கு பாரதிய ஜனதாவின் டிரைவர் சீட்டில் ஆர் எஸ் எஸ் உக்காந்து விட்டது. அவர்கள் வியூகம் எப்போதும் யாரும் யோசிக்காத படி தனியாக இருக்கும் அதுதான் அவர்கள் பலமும் கூட பாரதிய ஜனதாவின் அதீத நம்பிக்கையே கூட்டணிக் கட்சிகள் எல்லாம் இல்லை ஆர்எஸ்எஸ் இயக்கம் தான் அதுதான் இதுவரை அவர்களுக்கு வெற்றியைத் தேடித் தந்திருக்கிறது.

2024 தேர்தல் சூடு பிடிக்கத் துவங்கி விட்டது.

இனி நாடு முழுவதும் அமளி துமளி தான்.