தொடர்கள்
ஆன்மீகம்
தீராத நோய் தீர்க்கும் வீரபாண்டி கௌமாரி அம்மன்!! - சுந்தரமைந்தன்.

Veerapandi Kaumari Amman who cures incurable diseases!!

சாக்த வழிபாடு எனப்படும் சக்தி வழிபாட்டில், சப்த மாதாக்கள் அல்லது சப்தகன்னியர் வழிபாடு என்பது ஒரு முக்கிய அங்கமாகவே காணப்படுகின்றது. அதில் கௌமாரி என்பவர் கௌமாரனாகிய முருகனின் அம்சமாவார். இவர் நான்கு கரங்களையும், பின் இரு கைகளில் வஜ்ரம் மற்றும் சக்தி ஆயுதங்களையும் தரித்துக் காணப்படுகிறார். மயிலை வாகனமாகக் கொண்டவர். சேவல் கொடியினை கைகளில் தாங்கியிருப்பவர்.
தேனி என்றாலே வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் தான் நம் நினைவிற்கு வரும். வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் அருகிலேயே கண்ணீசுவரமுடையார் கோயில் உள்ளது. தேனி மாவட்டம் முல்லையாறு பாய்ந்தோடும் பகுதியில் அமைந்துள்ள வீரபாண்டியில் கொலுவீற்றிருக்கும் கௌமாரியம்மன் இந்த மாவட்ட மக்களுக்குக் காவல் தெய்வமாக விளங்குகிறாள். தமிழ்நாட்டில் உள்ள 108 அம்மன் கோவில்களில் இதுவும் ஒன்றாகும். தீராத நோய் தீர்க்கும் வீரபாண்டி கௌமாரியம்மன் ஒரு 'ஸ்வயம்பு' (இயற்கையாக வளர்ந்த தெய்வம்)
பாண்டிய மன்னனுக்குக் கண் பார்வை பெற்று தந்த இந்தக் கோயிலில் வணங்கிச் செல்பவர்களுக்கு அம்மை மற்றும் கோடைக்கால அனைத்து வெப்ப நோய்களும் நீங்கி விடும். இக்கோயிலில் அம்மன் கன்னி தெய்வமாகக் காட்சி அளிக்கிறார்.

Veerapandi Kaumari Amman who cures incurable diseases!!


ஸ்தல புராணம்:
ஆதிகாலத்தில் ஒரு அசுரனை வெல்வதற்காகப் பார்வதி தேவியின் அம்சமான கௌமாரியம்மன் வைகை நதி கரையின் அடர்ந்த காட்டுப் பகுதியில் சிவலிங்கம் செய்து அதன்முன் தவம் புரிந்து வந்தார், தன்னை அழிக்க கௌமாரியம்மன் தவம் செய்கிறாள் என்பதை அறிந்த அசுரன், அவரை கடத்தி செல்லும் நோக்கோடு நெருங்கினான். இதைத் தன் ஞானதிருஷ்டியால் உணர்ந்த கௌமாரி அருகிலிருந்த அருகம்புல்லை எடுத்து அவனை நோக்கி வீசினாள். முருகன், சூரபத்மனை இரண்டாகப் பிளந்தது போல, தேவியின் சக்தியால் அந்த அறுகம்புல் அசுரனை இரண்டாகப் பிளந்தது. அசுரன் மாண்டான். இதைப் பார்த்த தேவர்கள் வானிலிருந்து மலர்களைத் தூவினர். கௌமாரி தான் பூஜித்து வந்த சிவலிங்கத்திற்கு "திருக்கண்ணீஸ்வரர்" எனப் பெயரிட்டார். இந்த ஸ்தலம் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. சிவனை நோக்கி கன்னியாகத் தவமிருந்ததால் கௌமாரியம்மன் எனப் பெயர் பெற்றதாகக் கூறப்படுகிறது. இங்கே அம்மன் சுயம்புவாக காட்சி தருகின்றார். கௌமாாரி அம்மனை மனதார வேண்டத் தீராத நோய் மட்டுமின்றி, தீராத துன்பங்களும் விலகும், குறிப்பாக கண்பார்வை குறைந்தோர் நல்ல பலன் பெறுவர், மேலும் வாழ்வில் நல்ல முன்னேற்றம் பெற்றுச் செல்வ வளம் பெறுவர் என்பது ஐதீகம்.

வீரபாண்டி பெயர் வரக் காரணம்:
மதுரையைத் தலைநகராகக் கொண்ட பாண்டிய நாட்டின் மன்னன் வீரபாண்டியன் தனது ஊழ்வினைகளால் இரண்டு கண்களின் பார்வையை இழந்தான். தன் செயலுக்கு மனம் வருந்தி சிவனை வேண்ட, மன்னன் கனவில் தோன்றிய இறைவன், இன்றைய வீரபாண்டி தலங்கள் இருக்கும் இடத்தை சுட்டிக்காட்டி, நீ வைகைக்கரை ஓரமாகச் சென்று, நிம்பா ஆரணியத்தில் முருகன் அம்சம் பெற்ற கௌமாரி தவம் புரிகின்றாள். அங்குச் சென்று அவளை வணங்கு. அவள் அருளால் உனக்குப் பார்க்கும் திறன் கிடைக்கும் எனக் கூறி மறைந்தார், அதன்படி மன்னன் வீரபாண்டியனும் இந்தப் பகுதிக்கு வந்து கெளமாரியை வணங்கி ஒரு கண்ணின் பார்வையும், கெளமாரி பூஜித்து வந்த சிவலிங்கமான கண்ணீஸ்வரமுடையாரை வணங்கி மற்றொரு கண்ணின் பார்வையையும் பெற்றார். அதன் பின்பு பாண்டிய மன்னன் வீரபாண்டியன் அவர்கள் அம்மனையும், கண்ணீஸ்வரமுடையாரையும் பிரார்த்தனை செய்து கண் பார்வை மீண்டும் பெற்றதன் நினைவாக கி.பி.14-ஆம் நூற்றாண்டில் இத்தலத்தில் ஸ்ரீகௌமாரியம்மன் திருக்கோவிலைக் கட்டியுள்ளார். இந்த மன்னரின் பெயரால் இந்த தலமும் வீரபாண்டி என்ற பெயர் பெற்றது. இக்கோயிலின் தல வரலாறு குறித்து சின்னமனூர் அரிகேசரி நல்லூர் தல புராணத்தில் பதினான்காம் படலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்தல அமைப்பு:

Veerapandi Kaumari Amman who cures incurable diseases!!


இத்திருக்கோயிலின் முன் கருப்பண்ணசாமி கோயில் அமைந்துள்ளது. இவரே இங்குக் காவல் தெய்வமாக உள்ளார். காவல் தெய்வத்தை அடுத்துள்ள முன் மண்டபத்தைக் கடந்து பிரதான வாசல் வழியாக உள்ளே நுழைந்தவுடன் கம்பத்தடி மண்டபம் அமைந்துள்ளது. இந்த கம்பத்தடி மண்டபத்தில் தான் சித்திரைத் திருவிழாவிற்காகக் கம்பம் நடப்படுகிறது. கம்பத்தடி மண்டபத்தைக் கடந்து சென்றால் மகா மண்டபம் உள்ளது. இந்த மகா மண்டபத்தினை கடந்து முன் செல்லும் போது கருவறையில் நமக்கு கெளமாரி அம்மன் கன்னி தெய்வமாக சுயம்புவாக காட்சி தருகிறார். அவருக்குப் பின்புறம் கெளமாரி அம்மன் கைகளில் உடுக்கை, வாள், கடகம், கபாலத்துடன் காட்சியளிக்கிறார்.
பிரகாரத்தைச் சுற்றி வரும் பொழுது தெற்கே விநாயகர், கன்னிமார் தெய்வங்களும். வடக்கே நவக்கிரக சந்நிதியும் அமைந்துள்ளது.
ஸ்தலவிருட்சமாக வேப்பமரம் உள்ளது. இந்த கோயிலின் முன்பு உள்ள கிணற்று நீரே இந்த கோயிலின் புண்ணிய தீர்த்தமாகும். இந்த தீர்த்தம் அபிஷேகத்திற்கும், பக்தர்களுக்கும் வழங்கப்படுகின்றது. இத்தீர்த்தத்திற்கு நோய் தீர்க்கும் சக்தியும் உண்டு.
கௌமாரி அம்மன் திருக்கோவிலில் இருந்து 100 மீட்டர் தூரம் சென்றால் முல்லை ஆற்றின் வலதுபுறம் திருக்கண்ணீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.
மூலவர் திருக்கண்ணீஸ்வரர் கிழக்கு நோக்கி அமைந்துள்ளார். இடதுபுறம் உள்ள சந்நிதியில் அறம் வளர்த்த நாயகி அமர்ந்து அருள்பாலிக்கின்றார். மூலவரின் வலது புறம் சமயக்குரவர்கள் சந்நிதி அமைந்துள்ளது. வெளிப்பிரகாரத்தில் விநாயகர், முருகன் வள்ளி தெய்வானையுடன் தனிச்சந்நிதியில் உள்ளனர். சண்டிகேஸ்வரர், தக்ஷிணாமூர்த்தி, பைரவர், துர்க்கை, நவகிரகங்களுக்கும் தனி சந்நிதிகள் உள்ளன. முல்லை நதியின் தீர்த்தமும் திருக்கோவிலின் தீர்த்தமாகவும் தல விருட்சமாக வேம்புவும் உள்ளன. இந்த தலம், மலையின் அடிவாரத்தில், சுருளி மலை, தேக்கி ஆகியவற்றைக் கடந்து வரும் நீர் மூலிகைச் செடிகளின் மருத்துவ குணத்துடன் வருவதால் நோய் தீர்க்கும் சக்தியுடன் உள்ளது. அன்னை வழிப்பாட்டிற்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்பதற்காகவே இத்தலம் வருபவர்கள் கெளமாரி அம்மனை முதலில் வழிபட்டு அடுத்து திருக்கண்ணீஸ்வரமுடையாரைத் தரிசிக்கின்றனர்.

Veerapandi Kaumari Amman who cures incurable diseases!!

வழிபாட்டுப் பலன்கள்:
குழந்தை வரம், திருமண யோகம், நோய்களுக்கு நிவாரணம், வேலைவாய்ப்பு எனப் பலவற்றுக்கும் இங்கு வந்து பக்தர்கள் வேண்டிக் கொள்கின்றனர். வேண்டுதல்கள் விரைவில் நிறைவேறுவதாகவும், கண்நோய் கண்டவர், அம்மை வந்தவர்கள் அம்மனைத் தூய உள்ளத்துடன் வழங்கி, தீர்த்தம் பெற்றுச்சென்றால் தீராத நோயும் தீர்ந்து விடுகிறது என்றும் பக்தர்கள் நம்புகின்றனர்.
வேண்டிய வரம் கிடைத்ததும் அக்னிச் சட்டி எடுத்தும் ஆயிரம் கண் பானை சுமந்தும் மாவிளக்கு எடுத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். அம்மை குணமாக வேண்டுவோர் சேற்றை உடலில் பூசி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

Veerapandi Kaumari Amman who cures incurable diseases!!

திருவிழாக்கள்:
சித்திரைத் திருவிழா, வைகாசி விசாகம், ஆடி அமாவாசை, ஆடி வெள்ளி, விநாயக சதுர்த்தி, நவராத்திரி உற்சவம், தீபாவளி, கார்த்திகை, மார்கழி தனுர்பூஜை, தைப்பொங்கல், தைப்பூசம், மகாசிவராத்திரி, பங்குனி உத்திரம், மகா சிவராத்திரி, போன்ற விழாக்கள் சிறப்பாக கொண்டாடுகின்றது.
சித்திரைத் திருவிழா: தேனி மாவட்டத்தில் நடக்கும் திருவிழாக்களிலேயே மிகவும் பிரசித்தி பெற்றது சித்திரைத் திருவிழா. இங்கு 28 நாட்கள் திருவிழா நடைபெறும். இங்குத் தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வருகை புரிவர். அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் பக்தர்கள் இக்கோவிலுக்கு வருகை புரிவது உண்டு. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் முதல் செவ்வாய்க்கிழமை கொடி ஏற்றத்துடன் 22 நாட்கள் சிறப்பாக நடைபெறும். கொடியேற்ற நாள் முதல் திருவிழா முடியும் வரை கொடிக் கம்பமாக நடப்படும் அத்தி மரத்தாலான முக்கொம்புக்கு மண் கலயத்தில் முல்லைப் பெரியாற்றில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து ஊற்றுவது முக்கிய ஐதீகமாக கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த அத்திமர முக்கொம்பையே அம்மன் சிவனாகப் பூஜிக்கிறார். இந்தக் கோயிலில் சித்திரைத் திருவிழாவின் போது மட்டும் 24 மணி நேரமும் கோயிலில் வழிபாடு நடத்தப்படுகிறது. இந்த சமயத்தில் பக்தர்கள் அம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர். விழாக்காலங்களில் அம்மன் தினமும் ஒரு பட்டு உடுத்தி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். சித்திரைத் திருவிழாவின் போது கோயில் தேர்த் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.

Veerapandi Kaumari Amman who cures incurable diseases!!

கெளமாரியின் மூல மந்திரம்....
“ஓம் சிகித்வஜாய வித்மஹே வஜ்ர ஹஸ்தாய தீமஹி
தன்னோ கௌமாரீ ப்ரசோதயாத்.”
மயில் வடிவம் பொறித்த கொடியை உடையவளும் வஜ்ரம், சக்தி ஆகிய ஆயுதங்களை ஏந்தியவளுமான கௌமாரி தேவியைத் தியானிக்கிறேன். அவள் என்முன்னே வந்து வெற்றியையும் பாதுகாப்பையும் அருள்வாளாக.....

கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை: காலை 5.00 மணி முதல் 12.30 மணி வரை
மாலை: மாலை 3.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை
செவ்வாய் -வெள்ளி - விசேஷ நாட்களில் திருக்கோயில் நடை காலை 5.00 முதல் இரவு 8.30 மணி வரை திறந்து இருக்கும்.

கோயிலுக்குச் செல்லும் வழி:
அருள்மிகு ஸ்ரீகௌமாரியம்மன் திருக்கோயில் முல்லை பெரியார் ஆற்றுப்படுகையில், வீரபாண்டி கிராமத்தில் தேனியிலிருந்து மேற்கில் 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. மதுரையிலிருந்து 86 கி.மீ. தொலைவில் உள்ளது. திண்டுக்கல்லில் இருந்து, வத்தலக்குண்டு, பெரியகுளம் வழியாகத் தேனி வந்தும் இங்கு வரலாம்.

தீராத நோய் தீர்க்கும் வீரபாண்டி கெளமாரி அம்மனை சென்று தரிசனம் செய்வோம்!!

ஓம் சக்தி.. பராசக்தி…