தொடர்கள்
புத்தக விமரிசனம்
தேஜோவதி - புத்தக விமரிசனம்

20230621214623408.jpg

படைத்தல் காத்தல் அழித்தல் புரியும் முறையே ப்ரஹ்மா விஷ்ணு சிவன் ஆகிய இறைவர்களின் இத் தொழிலகளுக்கு ஆதாரமே சாஸ்தா தான் என்பது ஸ்காந்தம் கோடி ஸம்ஹிதை கூறுகிறது.

இந்த நிலை சாஸ்தாவுக்கு உண்டு .

இதுவே பிற்காலத்தில், மஹிஷி என்ற அரக்கி கேட்ட வரத்தின் மூன்றில் ஒன்றானதுவும், அதுவும் கடவுள் சங்கல்பம் என்பதும் விளங்கும். சக்தியிடமிருந்து தான் முத்தொழிலும் வந்தன. சாஸ்தா அச் சக்தியின் மானசீக புத்திரன் ஆவார்.

மஹிஷியின் வரங்களாவன: ப்ரஹ்மா, விஷ்ணு ,சிவன் ஆகியோரை விட உயர்ந்த ஸ்தானத்தில் இருப்பவராகவும், இரு ஆடவர்க்கு பிறந்த மகனாகவும் (சக்தியைக் குறித்து தவமிருந்த சிவனும் விஷ்ணுவும் அச் சக்தியின் மானசீக புத்திரன் தனக்கு மகனாய் பிறந்திடல் வேண்டும் என்று மனதில் எண்ணிட சக்தியும் வரம் தந்திட்டாள். பிற்காலத்தில் விஷ்ணுவின் மோஹினி அவதாரமும் சிவனும் என்ற இரு சக்திகளின் சங்கமமாய் சாஸ்தா சத்ய லோகத்தில் பிறக்கிறார்), பூலோகத்தில் ஒரு நரனுக்கு பதினாறு ஆண்டுகள் சேவகம் புரிந்தவனே (ராஜசேகர பாண்டியனுக்கு சிவனால் பம்பை ஆற்றில் விடப்பட்ட மணிகண்டன் புலிப்பால் கொணரும் வரை சேவகம் செய்தவராவார்) என்னை மாய்ப்பவனாவான். ஆக பூலோக அவதாரமே மணிகண்டன், அய்யப்பனாய் அமைந்திட்டது.

இந்நூல் சாஸ்தா அய்யப்பன் என்ற இறையனாரப் பற்றிய தகவல்கள் அமைந்திருக்கிறது.

நூலின் தலைப்பு தேஜோவதி ஏன்?

அய்யப்பனின் மூல அவதாரம் சாஸ்தா. சாஸ்தாவைப்பற்றிய தகவல்களும் இதிலடங்கும். இது வரையிலும் ஒரு சிலருக்கே இந்த தலைப்பு தெரிந்திருந்தது. சாஸ்தாவைப்பற்றிய தகவல்களும், முக்கியமாக சாஸ்தாவின் வாஸஸ்தலம் பற்றிய தகவல்களும் அடங்கியிருப்பதால் இந்த தலைப்பு இன்னூலுக்கு வைத்தேன் என்று கூறுகிறார் நூலாசிரியர் ராதாகிருஷ்ணன்.

சென்ற இதழில் குறிப்பிட்டிருந்தபடி தேஜோவதி என்பது சாஸ்த்தா வசிக்கும் பட்டினம். விஷ்ணுவின் உறைவிடம் வைகுண்டம், ஆதி சிவனாரின் உறைவிடம் கைலாசம் போன்றே சாஸ்த்தாவின் உறைவிடம் தேஜோவதி.

ஸ்ரீதர்ம சாஸ்தா பெயர்காரணம் என்ன?

தர்மத்தை நிலை நாட்டுபவன். எல்லா உலகையும் ஆள்பவன் என்ற சிறப்புடையவனாயிருப்பதால் அவருக்கு ஸ்ரீ தர்மசாஸ்தா என்ற பெயராகும்.

பல நூல்களிலும் பாடல்களிலும் இவருக்கிருகின்ற பற்பல பெயர்களைத் தொகுத்து பட்டியலிட்டிருக்கிறார்.

ஆதலால் பாரத தேசமெங்கும் குறிப்பாக தென்னகத்தில் இப்பெயர்களால் இவரழைக்கப்படுகிறார். இடச்சிறப்பையும், காரணப்பெயர்களும் இதிலடங்கும். இவற்றில் தமிழ் நிகண்டுகளில் காணப்படும் பெயர்களும் உண்டு.

பகவான் ஸ்ரீ மஹாசாஸ்தா அவதாரமானவுடன் அவரை சிவனார் தனது கைலாயத்தின் ஒரு பகுதியில் ஒரு அழகிய உலகம் ஒன்றை நிர்மாணித்துத் தருகிறார். தேவ தச்சன் இதை கட்டித் தருகிறார். அதை ஏற்று தனதிருப்பிடமாக கொலுவிருக்குமிடமே மஹா காளம் என்று அறியப்படுகிறது. இதுவே சாஸ்த்ரு லோகமாகும்.இன்னும் சிலரோ பகவால் வீற்றிருக்கும் காந்த மலையே இந்த மஹாகாளம் என்பர்.

பரமேஸ்வரன் ஆணைப்படி விலை மதிப்பிடமுடியாத அரிய உலோகங்கள் கற்களால் பெரிய மாளிகைகலும் விசாலமான வீதிகளையும் கொண்டதும், நீர்நிலைகளும், நதிகளும் நந்தவனங்களும் கொண்ட பட்டினத்தை பரமசிவன் தேஜோவதி என்று பெயரிட்டார்.

மகனுக்கு பட்டாபிஷேகம் செய்தார். திவ்யாஸ்திரங்கள அருளினார். நால் வேதங்களே நான்கு தந்தங்களையுடைய கஜேந்த்ரனாக ஸ்ரீமஹா சாஸ்தாவின் வாகனமாகியது.

இந்த பட்டினத்தின் பெருமைகளும் சிறப்புகளும் சாஸ்தா வீற்றிருக்கும் சபையின் அழகு, ஆபரணங்களும் அணிகலங்களும், குறிப்பாய் நாகாபரணங்கள் என்பதைப் பற்றி ஆகாச பைரவகல்பம் , ஸ்ரீமஹாசாஸ்தா திரிசதி ஸ்தோத்திரம் போன்ற பண்டைய நூல்களிலிருந்து மேற்கோள் காட்டியிருக்கிறார். தன் தாய் வழி மூதாதையரான கம்பங்குடி வம்சத்துத் திலகம் மணிதாசர் அவர்களின் வர்ணணையையும் தவறாது ஆங்காங்கே குறிப்பிடுகிறார். இதுவே நூலின் அடித்தளமும் ஆகும். படிப்பவற்கு வேண்டிய மேற்கோள்கள் ஒருங்கே ஓரிடத்தில் அமைத்து தந்திருக்கும் நூலாசிரியரின் முயற்சி பாராட்டுக்குரியது.

குறிப்பாக இண்டும் மகரஜோதியன்று தனது தந்தையிடமிருந்து வரும் திருவாபரணங்கள் பற்றி விவரமாக எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சாஸ்தாவின் வாத்யங்கள் பதினெட்டாம். இதனை பல பண்டைய நூல்களின் மூலம் எடுத்துகாட்டுகிறார்.

பூதனாத உபாக்யானம், ஸ்காந்த புராணம் போன்ற ஆதாரங்களை உரிய இடங்களில் லாவகமாக கையாள்கிறார்.

ஸ்ரீ காடந்தேத்தி மஹா சாஸ்த்தா புராணம் சாஸ்தா ரைவத மலையில் எழுந்தருளியது பற்றி கூறுவதையும் இங்கு குறிப்பிடுகிறார். அதைச் சுற்றியுள்ள கதைகளையும் அங்கு விளக்கப்பட்டுள்ளன.

மஹாசாஸ்தாவின் அருளின் படியே ரைவதன் பதினாங்கு மன்வந்திரங்களில் ஐந்தாவது மன்வந்திரத்திற்கு அதிபதியாகும் பாக்கியம் அந்த ரைவதனுக்கு கிட்டியது. இங்கு மன்வந்திரம் என்பது 5,18, 40,000 (ஐந்து கோடியே பதினெட்டு லட்சத்து நாற்பதாயிரம்) வருடங்களாகும். இதிலிருந்தே சாஸ்தாவின் பழமை தெரிந்துகொள்ளலாம்.

இவ்வாறாய் 125 தலைப்புகளில் பற்பல அரிய தகவல்களைத் தொகுத்து கொடுத்திருக்கிறார். இதற்கென ஸ்ரீதர்ம சாஸ்தாவினைப்பற்றி புராணங்கள் மற்றும் அய்யனின் நேரடி அருள் பெற்ற கம்பங்குடி வம்சத்தினரின் பாடல்கள் ஆகியவற்றின் மேற்கோள்களையும் தந்திருக்கின்றார். இது ஸ்ரீதர்ம சாஸ்தா ஐய்யப்பன் பற்றிய ஒரு அகராதி என்றே சொல்லலாம். .

நூலாசிரியர்திரு இராதாகிருஷ்ணன் அவர்கள் ஐயப்பனைப் பற்றியும் கரந்தையர்பாளையம் குளத்தூரிலையன் ஶ்ரீதர்மசாஸ்தா பற்றியும் ஏற்கெனவே பனிரெண்டு நூல்களை எழுதியவர்.

ஶ்ரீ சாஸ்தாவின் மகிமையை பறை சாற்றும் நிகழ்வுகள் யட்சிணிகள், மாடன்கள்,சேனைகள் பற்றியும் இந்த நூலில் உள்ளன.

கணியான் கூத்து, கரகாட்டம், பறைகொட்டிப் பாட்டு, வில்லுப் பாட்டு என பல பண்டைக்கால தெய்வீக கலைகளைப் பற்றியும் குறிப்புகள் உள்ளன.

இராதாகிருஷ்ணன் அவர்களின் இந்த அரிய முயற்சி ஐயப்ப பக்தர்களுக்கும், ஆன்மீக நாட்டம் கொண்டவர்க்கும் ஒரு வரப்ரசாதமாய் அமைவது உறுதி.

இது போன்று சாஸ்தா சம்பந்தமுடைய 12 புத்தகங்களை வெளியிட்டுள்ளார். அனைத்துமே பக்தர்களுக்கு இலவசமாக அளிக்கப்படுகிறது.

இளம் சந்ததியினருக்கு சாஸ்தா அய்யனார் பற்றிய எந்த கேள்விகளுக்கும் இந்த நூலும் அவரது ஏனைய பிற நூல்களும் விடையாக அமைந்துள்ளன. போற்றி ஆதரித்து காக்கப் படவேண்டிய நூலிது.

இவரது நூல்கள் சாஸ்தா அய்யப்பன் பற்றிய சரியான விவரங்களைத் தருவதால், இடைச் செருகல்கள் பல தானாக நீங்கும் என்ற நம்பிக்கையும் பிறக்கிறது.

நூலாசிரியரின் தொடர்புக்கு : R Radhakrishnan 9903109006