தொடர்கள்
தமிழ்
கத கேளு கத கேளு தமிழோட கத கேளு - 26 - பரணீதரன்

20230621180251893.jpg2023062118033820.jpg20230621180413515.jpg2023062118043833.jpg

சொல் கட்டுமானம் பற்றி தொடர்கிறார் நமது பரணீதரன்.

ஒரு சொற்றொடருக்கு (பல சொற்கள் சேர்ந்து கூட்டாக அமைக்கப்பட்ட ஒரு தொடர்) சில அடிப்படையான விஷயங்கள் தேவை. அவை எழுவாய், பயனிலை மற்றும் செயப்படுபொருள். எழுவாய் என்பது ஒரு பெயர்ச் சொல்லாக அமையும். பயனிலை என்பது ஒரு வினைச் சொல்லாக அமையும். செயப்படுபொருள் என்பது ஒரு பெயர்ச்சொல்லாக அமையும்.

எடுத்துக்காட்டாக, கந்தன் மனந்தான் வள்ளியை என்பதில் கந்தன் என்ற சொல் எழுவாய், மணந்தான் என்ற சொல் பயனிலை, வள்ளியை என்ற சொல் செயப்படுபொருள். இந்த மூன்றையும் இந்திய மொழிகளில் எப்படி போட்டாலும் அர்த்தம் மாறாது. எடுத்துக்காட்டாக,

கந்தன் வள்ளியை மணந்தான்,

மணந்தான் கந்தன் வள்ளியை,

மணந்தான் வள்ளியை கந்தன்,

வள்ளியை கந்தன் மணந்தான்,

வள்ளியை மணந்தான் கந்தன்.

சில இடங்களில் எழுவாய் மற்றும் பயனிலை மட்டுமே வரும். எடுத்துக்காட்டாக கந்தன் மணந்தான், அவன் நடந்தான் போன்றவை. இந்த சொல் கட்டுமானங்களில் சில பிழைகள் வரக்கூடும். சில குறிப்புகள் மறைந்து வரும். இவைகளே தொகைகள், சந்திப்பிழைகள் மற்றும் மயங்கொலிப் பிழைகள். அவற்றை நாம் இன்று முதல் பார்ப்போம். இலக்கணக் குறிப்புகள் கூட பெரும்பாலானவை இதிலேயே வரும்.

தொகைகள்

தொகை என்ற சொல்லிற்கு மறைவது அல்லது மறைதல் என்று பொருள். இந்தத் தொகைகள் ஆறு வகைப்படும். அவை :

1. வேற்றுமைத்தொகை - வேற்றுமை உருபும் அதன் பயனும் மறைந்து வருதல்.

2. வினைத்தொகை - காலங்கள் ஆகிய இறந்தகாலம் நிகழ்காலம் எதிர்காலம் மறைந்து வரும்.

3. பண்புத்தொகை - குணம் அல்லது பண்பு மறைந்து வரும்.

4. உவமைத்தொகை - உவம உருபுகள் மறைந்து வரும்.

5. உம்மைத்தொகை - ஒரு சொல்லில் கடைசியில் வரும் உம் என்ற விகுதி மறைந்து வருவது. எடுத்துக்காட்டு சேரன் சோழன் பாண்டியன் வந்தனர். இதை சேரனும் சோழனும் பாண்டியனும் வந்தனர் என்று கூற வேண்டும். ஆனால் உம் மறைந்து வருவதால் இது உம்மை தொகை

6. அன்மொழித்தொகை - ஒரு பொருளை நேராக கூறாமல் வேறு ஒரு தொகையை வைத்து கூறுவது. எடுத்துக்காட்டு பூங்குழலி வந்தாள். இதில் பூவை உடைய குழலை உடைய மங்கை வந்தாள் என்பதையே இது காட்டுகிறது. இதில் பூவை என்று கூறுவதால் இது இரண்டாம் வேற்றுமை தொகை கலந்து வருகிறது. இதுவே அண்மொழித்தொகை ஆகும்.

வேற்றுமை தொகைகள்

இப்பொழுது நாம் வேற்றுமை தொகைகளின் வகைகளை பார்ப்போம் :

இரண்டாம் வேற்றுமை தொகை - பால் குடித்தான் - பாலைக் குடித்தான்.

இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை - பால்குடம் - பாலை உடைய குடம்

மூன்றாம் வேற்றுமைத்தொகை- தலைவணங்கினான் - தலையால் வணங்கினான்.

மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை - பொற்குடம் - பொன்னாலான குடம்

நான்காம் வேற்றுமைத்தொகை - அலுவலகம் போனான் - அலுவலகத்திற்கு போனான்

நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை - குழந்தை பால் - குழந்தைக்கான பால்

ஐந்தாம் வேற்றுமைத் தொகை - ஊர் நீங்கினான் - ஊரினின்று நீங்கினான்

ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை - மலையருவி - மலையினின்று விழும் அருவி

ஆறாம் வேற்றுமைத்தொகை - அவன் வண்டி - அவனது வண்டி

ஏழாம் வேற்றுமைத்தொகை - ராமன் சொல்வேன் - ராமன்கண் சொல்லுவேன்

ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை - வயிற்றுத்தீ - வயிற்றின்கண் தோன்றிய தீ.

வினைத்தொகை

வினைத்தொகை என்பது மூன்று காலங்களையும் மறைத்து வரும் சொல்லாகும். இது ஒரே சொல்லாக வரும். முன்னால் ஒரு வினைச் சொல்லும் பின்னால் ஒரு பெயர் செல்லும் சேர்ந்தே வரும். உதாரணமாக

ஊறுகாய் - ஊறிய காய், ஊறுகின்ற காய், ஊறும் காய். இது மூன்று காலங்களையும் மறைத்துக் காட்டுகிறது.

அதுபோல குடிநீர் - குடித்த நீர், குடிக்கின்ற நீர், குடிக்கும் நீர்

அலைகடல் - அலைந்தகடல், அலைகின்ற கடல், அலையும் கடல்

பண்புத்தொகை

ஒரு சொற்றொடரில் பண்பு மறைந்து வந்தால் அது பண்புத்தொகை ஆகும்.

எடுத்துக்காட்டாக செந்தாமரை - செம்மை + தாமரை. இதில் செம்மை என்பது ஒரு நிறம். அந்த நிறத்தின் உடைய பண்பை இது குறிக்கிறது. அதுபோல

குணம்(நன்மை, தீமை) - நன்னெறி - நன்மை + நெறி, தீஞ்சொல் - தீமை + சொல்

உருவம்(வட்டம், சதுரம்) - வட்ட நிலா - வட்டம் + நிலா, சதுரப் பெட்டி - சதுரம் + பெட்டி

நிறம்(நீலம், பசுமை) - நீல வானம் - நீலம் + வானம், பைந்தமிழ் - பசுமை + தமிழ்

எண்ணம்(மூன்று, நான்கு) - முத்தமிழ் - மூன்று + தமிழ், நான்மறை - நான்கு + மறை

சுவை(இனிப்பு, காரம்) - இன்சொல் - இனிமை + சொல், காரப்பொடி - காரம் + பொடி

இதுபோல பண்புத்தொகையில் மற்றொரு வகையான இருபெயரொட்டுப் பண்புத்தொகை உள்ளது. சிறப்புப்பெயர் முன்பும் பொதுப்பெயர் பின்னும் இருந்தால் அது இரு பெயரொட்டுப் பண்புத்தொகை.

எடுத்துக்காட்டு தென்னைமரம், பலாமரம், மாமரம் போன்ற சொற்களில் மரம் என்பது பொதுவான பெயர். தென்னை பலா மா என்பது சிறப்புப் பெயர். இப்படி வரும் சொற்றொடர்கள் அல்லது சொற்கள் இருபெயரொட்டு பண்புத்தொகை ஆகும்.

உவமைத்தொகை

ஒரு சொல்லில் உவம உருபு மறைந்து வந்தால் அது உவமைத்தொகை. எடுத்துக்காட்டு தேன்மொழி என்கிற இந்த சொல்லில் தேன் போன்ற மொழி என்று வந்திருக்க வேண்டும். ஆனால் போன்ற என்ற உவம உருபு மறைந்து வந்துள்ளது அதுவே உவமைத்தொகை ஆகும். மேலும் சில எடுத்துக்காட்டுகள் :

மான்விழி

மயில்விழி

மலரடி

மதிமுகம்

கயல்விழி போன்றவை.

உம்மைத்தொகை மற்றும் எண்ணும்மை

ஒரு சொல்லில் ‘உம்’ என்ற விகுதி (சொல்லின் கடைசி பகுதி) வெளிப்படையாக வராவிட்டால், அந்த இரண்டு சொற்களுக்கும் சம்பந்தம் இருந்தால் அது உம்மைத்தொகை ஆகும். எடுத்துக்காட்டு தாய் தந்தை - தாயும் தந்தையும். மேலும் சில எடுத்துக்காட்டுகள் கொடுப்பது வாங்குவது - கொடுப்பதும் வாங்குவதும், வயல் வாழ்வு - வயலும் வாழ்வும், உண்பது உடுப்பது - உண்பதும் உடுப்பதும், எண் எழுத்து - எண்ணும் எழுத்தும்

அதேபோல் ஒரு சொல்லில் உம் என்கிற விபூதி வெளிப்படையாக வந்தால் அதற்கு பெயர் எண்ணும்மை. எடுத்துக்காட்டு சேரனும் சோழனும் பாண்டியனும், அன்னையும் பிதாவும், காலையும் மாலையும், கண்டதும் கேட்டதும் போன்றவை ஆகும்.

அடுத்த வாரம் மீதி உள்ள தொகைகளையும் மற்ற பகுதிகளையும் பார்ப்போம்.